மோசடி கார்ப்பரேட்களுக்காக கடன் விதிகளை தளர்த்தும் ஆர்.பி.ஐ
செந்தளம் செய்திப்பிரிவு
தகுதியிருந்தும் கடனைத் திருப்பித் தராதவர்களுக்கும் (wilful defaulters) ஏமாற்றுப்பேர்வழிகளுக்கும் (fraudsters) ஒரு நற்செய்தியை ஆர்.பி.ஐ மூலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏமாற்றுப் பேர்வழிகள்/கடனை வேண்டுமென்றே தராமல் இழுத்தடிப்பவர்கள்/ மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் போன்ற குற்றவாளிகள் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்றுதான் 2019 வரையிலும் கூட தனது தலைமைச் சுற்றறிக்கைகள் வாயிலாக ஆர்.பி.ஐ கூறிவந்துள்ளது.
கடந்த 8.06.2023-ல் வெளியிட்ட அறிவிக்கையில் இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. அதாவது சமரச பேச்சுவார்த்தைகள் மூலமோ அல்லது ஹேர்கட் என்ற பெயரில் கடனை தள்ளுபடி செய்வதன் மூலமாகவோ கடன் கொடுத்த வங்கிகள் வாராக் கடன் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்த புதிய தீர்வு காணும் நடைமுறையில் நிபந்தனை என்று ஏதாவது இருக்க வேண்டுமென்பதற்காக சில விதிகள் இருப்பதாக அந்த அறிக்கையிலே சிலவற்றை கூறியுள்ளார்கள். குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை பாதிக்காத வகையில் சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். ஏமாற்றுப் பேர்வழிகளான பெரு முதலாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஏதாவது கடந்த காலங்களில் வெற்றி கண்டுள்ளதா? இந்த புதிய அறிவிப்பின் மூலம் நாணயமற்றவர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் என்ற முத்திரை துடைக்கப்படுவதோடு அவர்களின் சிபில் ஸ்கோர் உயர்ந்து மென்மேலும் மக்கள் பணத்தை குறைந்த வட்டிக்கு சுருட்டுவதற்கே வழியமைத்து தரப்போகிறதே தவிர தண்டனை பெற்றுத் தராது.
இதுமட்டுமல்லாது, எல்லா வழக்கிலும் இயக்குநர் குழுவின் ஒப்புதல் என்பது இன்றியமையாததாகும் என்கிறார்கள். பெரு முதலாளிகள், அதுவும் ஏய்த்து, மோசடியில் ஈடுபட்ட திருட்டு முதலாளிகளுடனான சமரச பேச்சு வார்த்தை என்பது எப்படி நடக்கும் என்பதை யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. தேசிய கம்பனி சட்ட தீர்ப்பாயத்தில்(NCLT) கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதே இதற்கு சான்று. நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நாடாளுமன்ற நிலைக்குழுவே தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின் நடைமுறைகளை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. கடன் வழங்கிய வங்கியின் இயக்குநர் குழுவின் வெளிப்படையற்ற தன்மை, மத்திய அரசின் நியமன உறுப்பினர்கள் மூலமான அரசியல் தலையீடு, அந்தந்த வங்கியைச் சேர்ந்த அதிகாரி மற்றும் அதிகாரியல்லாத பணியாளர்களின் பிரதிநிதிகளை கடந்த 2014 முதல் இயக்குநர்கள் குழுவில் சேர்க்காமலிருப்பது போன்ற குறைபாடுகள் களையப்பட வேண்டும் என ஆர்.பி.ஐயின் தற்போதைய துணை கவர்னர் எம்.கே. ஜெயின் சமீபத்தில் நடந்த இயக்குநர்களுக்கான கருத்தரங்கில் வேறுவழியின்றி உடைத்து பேசியுள்ளதையும் இந்த விவகாரத்தோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.
- செந்தளம் செய்திப்பிரிவு