பாரதி எனும் பெயரை நினைக்கையிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!
செந்தளம்
கலகம் செய்ய நிமிர்ந்து விட்டவனுக்கு உதவி புரிவதே இலக்கியத்தின் பணி என்று வரையறுத்துக் கூறினார் மாக்சிம் கார்க்கி. அதற்கொப்ப இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தனது கவிதைகளாலும் எழுத்துக்களாலும் விடுதலை தீ மூட்டியவன் பாரதியாவான்.
அவன் கவிதைகாரன் மட்டுமன்று. அவனே ஒரு கலகக்காரன் தான்!
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மதில் சுவரின் கற்களை இந்த விடுதலைக் கவிஞனின் கவிதைகள் பெயர்த்தெறிந்தது.
இன்றும் அடிமைத்தனத்திற்கு எதிராய் ஆர்ப்பரிக்கும், நமது உள்ளங்களை இவனது கவிதை நெருப்புகள் எஃகு போன்று வார்த்தெடுக்கிறது.
39 வயதிலேயே மாண்டு போன அவன் விட்டு சென்றுள்ளது எழுத்துக்கள் அல்ல. நமக்கான விடுதலைக்கான ஆயுதங்கள்!
தன்னையே இழந்து விடும் ஒவ்வொருவரும் கூட அவனிடம் சென்று மீண்டு விடலாம். அவனது எழுத்து இன்றும் ஏகாதிபத்தியத்தின் மீது விழுந்து கொண்டிருக்கும் பாஸ்பரஸ் குண்டுகள் தான்!
அவன் பாடி சென்ற அடிப்படை நிலைமைகள் சாயம் பூசிக்கொண்டு, அப்படியே தான் தொடர்கிறது. நாட்டின் மீது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பழைய காலனியாதிக்கத்திற்கு பதிலாய், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய ஆதிக்கம் இன்று. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்டிட நாட்டில் புதிய ஜனநாயகம் படைத்திட மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் பாரதியின் நினைவு நாளில் சபதம் ஏற்போம்! அவனது கனவினை மெய்ப்போம்!
பாரதியிடம் கடவுள் நம்பிக்கை இருந்ததாலேயே அவரை பிற்போக்குவாதியாக இங்கு பல கொச்சை நாத்திக வாதிகள் கூறுகிறார்கள். உண்மையில் இவர்கள் இப்படி கூறுவதுதான் பிற்போக்குத்தனமாகும். இப்படி பாரதியை இடித்துரைப்பவர்கள் அன்றும் இன்றும் ஏகாதிபத்திய தாசர்களாகவே இருக்கின்றனர். கடவுளை கல் என்பதாலே அவர்கள் முற்போக்குவாதிகள் ஆகிவிடுவதில்லை. சமுகத்தின் வளர்ச்சிப் போக்குகளுக்கான வழியில் முற்போக்கின் பக்கம் பாரதி நின்றானா? இல்லையா? என்பதே முக்கியமாகும். பிரிட்டீசின் காலைப் பிடித்துக்கொண்டு நாட்டை விட்டு அவனை வெளியேற வேண்டாம் என கெஞ்சிக் கொண்டிருந்த கூட்டதினை போல் அல்லாமல், பாரதி வெள்ளை ஏகாதிபத்தியத்தை சமரசமின்றி எதிர்த்து சமர் புரிந்தான். பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே! வெள்ளை பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே! என்று பாடியவனை அவன்சார்ந்த பார்ப்பன சாதி முத்திரைக்குத்தி ஒதுக்குவது கேடுகெட்ட மடமைத்தனமாகும். பார்ப்பான் காலை விட வெள்ளைகாரன் கால் சுத்தமானது அதை நக்கலாம் என கூறிய பெரியார் கூட்டத்தார்க்கு வெள்ளையனை விரட்டுவதற்காக போராடிய பாரதி போன்ற பார்ப்பனர்கள் எதிரியாகி விடுவது ஒன்றும் வியப்பல்ல. அதே வேளையில் வருணாசிரமத்தை கடைபிடித்த ராஜகோபாலச்சாரியார்களை நண்பர்களாக்கி கொள்ள பெரியாரால் முடிகிறது.
பெண்களின் விடுதலை பேசுவதாக கூறி குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்பதும் பல கணவன் முறை தப்பில்லை என்று கூறும் அராஜகவாதிகளுக்கு அன்றே விடுதலை காதல் என்ற பெயரில் ஐரோப்பாவில் மேலோங்கிய பண்பாட்டுச் சீரழிவினை எதிர்த்து ஆண்பெண் சமத்துவமும் பெண்விடுதலைக்கான வழியையும் வைத்த பாரதி இவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவராக இருப்பது ஆச்சரியமல்ல.
பாரதி எனும் மகாகவியின் பெருங்கடல் வாழ்வின் சிறு துளிகளை காண்போம்
கோயில் யானையால் தூக்கி எறியப்பட்டு மாண்டு போன பாரதியின் வாழ்வு, பாதியோடு நின்று போனதற்காய் காலம் தன்னை எப்போதும் கவலையிலேயே தோய்த்துக் கொள்ளும்.
சுயராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை எனும் கோஷத்துடன் பிறப்பெடுத்த, தீவிரவாத தேசிய இயக்கத்தின் மாபெரும் கர்ஜனைக் குரல் இவனுடையது. எங்கும் எழுந்த சுதந்திர கோஷத்துடன் அரசியல் சமுதாய பொருளாதார சுதந்திரத்திற்கான கனலினை நெருப்பு பந்துகளாக்கி கவிதைகளாக எழுத்துகளாக எரிந்தவன் பாரதி. மத்தியதர ஐயர் வீட்டுப் பிள்ளையாக பிறந்தவனான அவன், தனது 11 வது வயதிலேயே பாரதி என்ற பட்டத்தை பெற்று விட்டான். தனது பால்ய பருவத்திலேயே வைதீக வரம்புகளை மீறி தனது குடும்பத்திற்கு தெரியாமல் சூத்திர பிள்ளைகளுடன் சுதந்திரமாக சுற்றித் திரிந்தான்.
தந்தையின் மரணம் அவனது படிப்பிற்கு தடை போட்டது. நெல்லையில் ஐந்தாம் பாரம் வரை படித்தவனை பின்னர் காசியின் சர்வ கலாச்சாலை அழைத்துக் கொண்டது. பள்ளி வாழ்க்கை அங்கேயே முடிவுற்றது. ஆங்கில கவிஞர்களை கற்றறிந்தவன் பைரன், ஷெல்லி, கிட்ஸ் ஆகியவர்களால் கவர்ந்திழுக்கப்பட்டான். இதில் ஷெல்லியே பாரதியை ஆக்கிரமித்துக் கொண்டான். தனது இலக்கிய வாழ்வில் தனக்கு முதன்முதலாக பாரதி சூட்டிக்கொண்ட பெயர் ஷெல்லிதாசன்.
உலக கவிஞர்கள்பால் ஈடுபாடுக் கொண்டிருந்த பாரதி அமெரிக்க விட்மன் கவிதைகளையும் சீனா, ஜப்பான் நாட்டு கவிதைகளையும் தமிழுக்கு தன்மொழியாக்கி தந்தான்.
தேசியக்கவியாக உயர்ந்த பாரதி 1906 ஆம் ஆண்டில் அவன் துவக்கிய இந்தியா பத்திரிக்கையின் தலைப்பிலேயே சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற வார்த்தைகளை பொறித்து தனது கொள்கையை பிரகடனப்படுத்திக் கொண்டான். உலகெங்கும் காணும் ஏகாதிபத்திய கொடுமைகள், அடிமைத் தளைகளைக் கண்டு கொதிப்படைந்தான் பாரதி. ஏகாதிபத்திய படையெடுப்பிற்கு எதிராய் போராடி வீழ்ந்த பெல்ஜியத்தின் துணிவினை தனது கவிதையால் பாடினான். ஆப்பிரிக்க அடிமைத் தனம் கண்டு ஆத்திரம் கொண்டான். ருசியாவில் வீசிய புரட்சி புயலால் ஜார் ஆட்சி வீழுந்தது கண்டு மகிழ்ந்து கொண்டாடியவன், புதுமை காண வாரீர் என கரம் நீட்டி அழைத்தான்.
ஒடுக்கப்பட்டோருக்காய் உருகிப் போனவன்
"ஈனப்பறையர்களேனும் -அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?" என்று பாடி அவர்களை அணைத்துக் கொண்டான்.
நடிப்பு சுதேசிகளை தனது கவிதைகளால் சுட்டவன். 1907இல் தனது பாடல்களை நூல்களாக வெளியிட்டு நிதி உதவியும் செய்தவரான வி.கிருஷ்ணசாமி ஐயர் 1909 இல் உயர்நீதிமன்ற நீதிபதியாய் வெள்ளை அரசோடு ஐக்கியமாகிப் போனபோது, கொந்தளித்த பாரதி தன்னை ஆசிரியராக கொண்டு இயங்கிய விஜயா நாளேட்டில் எழுதினான். ”வஞ்சனை, நடிப்பு, ஏமாற்று, பாவனை, வேஷம், பொய்! வி கிருஷ்ணசாமி ஐயரே…! …என்ன ஜென்மம் எடுத்து விட்டீர்?” என்று கிருஷ்ணசாமி அய்யரை ஒருமையில் அழைத்து பாரதி தனது கோபத்தை கொட்டித் தீர்த்தான்.
நாட்டில் ஜனங்கள் படும் பாட்டை பார்த்து நெஞ்சம் பொறுக்காமல் பாடினான் பாரதி.
"கஞ்சி குடிப்பதற் கிலார் -அதன் காரணங்கள் இவையென்னும்- அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே- நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின்றாரே…
எண்ணில்லா நோயுடையார் -இவர் எழுந்து நடப்பதற்கு வலிமையிலார். புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள் போல் வாழ்வார்"
என்று நெஞ்சம் வெதும்பினான் பாரதி.
"ஏற்பாரை பணிகின்ற காலமும் போச்சே- நம்மை
எய்ப்போர்க் கேவல் செய்யும் காலமும் போச்சே!
நல்லோர் பெரியோரென்னும் காலம் வந்ததே
கெட்ட நயவஞ்சக காரருக்கு நாசம் வந்ததே!"
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- வீணில்
உண்டு கலித்திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும்
வீணுருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்"
என தனது சுதந்திரப்பள்ளு பாட்டில் மக்களுக்கு புது தெம்பூட்டினான்.
சுரண்டலுக்கு எதிராக
"மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?"
என்று பாடியவன் பல்வேறு வகைகளில் சமத்துவ கொள்கையை வலியுறுத்தி வந்தான்.
"எப்பதம் வாய்த்திடுமேனும்- நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்…
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துக்கு ஒரு புதுமை"
என தான் கானும் சமுதாய அமைப்பை உருவகப்படுத்திக் காட்டினான்.
ருசிய ஜார் மன்னின் வீழ்ச்சியை முதன் முதலில் வரவேற்ற முதற்பெரும் கவிஞனான பாரதி,
"ஜாரை இரணியன் போல அரசாண்ட கொடுங்கோலன், ஜார் எனும் மூடன்"
என்று பாடி தீர்த்தான்.
"மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில் கடைக்கண் வைத்தாள் அங்கே; ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி! கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்"
என்று எழுதியவன் ருசிய புரட்சி வெற்றியை கொண்டாடினான்.
"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மிற குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார்; குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார்
அடிமைக்கு தலையில்லை; யாரும் மிப்போது அடிமை இல்லை அறிக"
என்றுரைத்தான் பாரதி.
சாதியை ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் வருணாசிரமத்திற்கு எதிராகவும் முழங்கினான் பாரதி
"சூத்திரனுக்கு ஒரு நீதி -தண்ட
சோறுன்னும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின்- அது சாத்திரம் அன்று; சதி என்று கண்டோம்!"
என்று பொங்கி எழுந்தான்.
பாரதி இறுதிவரை கடவுள் நம்பிக்கையோடு இருந்தாலும் ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று அறிவதற்கு அவன் நாத்திகனா ஆஸ்திகனா என பார்ப்பது உரைகல்லாக அமையாது என்பதே பாரதியின் கருத்தாகும் என்று கொள்ளலாம்.
கோவிலுக்கு போனாலும் சரி போக விட்டாலும் சரி தெய்வத்தை கும்பிட்டாலும் சரி கும்பிடா விட்டாலும் சரி பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வம் அருள் புரியும் துளிகூட ஒரு அணு கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில் அவனே ஈஸ்வரன் என்றான்.
பிரிட்டிஷ் ராஜ்யத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக அவன் கட்டுரையில் பேசும்போது
குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நிலவரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி, கொடுக்கல்வரி, வாங்கல் வரி, வருமான வரி, தொழில்வரி, டோல்கேட் வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, ஆட்டு வரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதிவரி இன்னும் எண்ண முடியாத வரிகளைப் போட்டு வீடு, வாசல், நிலம் தரை, ஆடு, மாடு, சட்டி, பெட்டி இவைகளை ஜப்தி செய்து ஏலம் கூறி கொள்ளையடித்துப் போகும் சர்க்கார் பணத்தை, நாம் ஏன் திரும்ப கொள்ளையடிக்கப்படக்கூடாது என்ற கேள்வியும் பாரதி முன்வைத்தான்.
அவனிடம் மத நம்பிக்கை இருந்தாலும் மறு உலகம் மாயவாதத்தை கண்டித்தான்
"காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதெல்லாம் உறுதி இல்லை காண்பது சத்தியம் இந்த காட்சி நித்தியமாம்..."
"செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திலா வென்றெண்ணி இருப்பார் பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம்!"
மறு வாழ்வெனும் சுரண்டல் கூட்டத்தின் ஏய்ப்பை மறுத்தான் பாரதி.
ஐரோப்பாவில் விடுதலை காதல் என்ற பெயரில் வளர்ந்து வந்த கட்டற்ற பாலுறவு போக்கினை பாரதி கண்டித்தான் பாரதி குடும்ப வாழ்க்கையையும் ஆண் பெண் கற்பு நிலையையும் போற்றினான்
பெண்கள் ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது. அவர்களுக்கு இஷ்டம் இல்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது என்றும் தனது தெளிவானக் கண்ணோட்டத்தை பாரதி வைத்தான்.
வரலாற்றில் முற்போக்கு சக்திகளின் பக்கம் நின்று காலனியாதிக்கத்தை வீழ்த்துவதற்காக தனது நெருப்பு வரிகள் மூலம் விடுதலை தீ மூட்டிய முற்போக்கு கவியான பாரதியின் நினைவை போற்றுவோம்! அவன் கனவு நனவாக களம் காண்போம்!
- செந்தளம்