சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சி... ஒரு பேரழிவு அல்ல
indian express
சிந்து சமவெளி நாகரிகம் எப்படி அழிந்தது என்பது குறித்த பல நூற்றாண்டுகால மர்மத்திற்கு இறுதியாகத் தீர்வு கண்டுள்ளதாக ஒரு அறிவியல் ஆய்வு கூறியுள்ளது. இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்த கோட்பாடுகளை மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த பண்டைய நகர நாகரிகத்தின் வீழ்ச்சி என்பது ஏதோ ஒரே ஒரு பேரழிவால் திடீரென்று நிகழவில்லை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. மாறாக, சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் சமூக மாற்றங்களின் கூட்டு விளைவால் இது படிப்படியாக நிகழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தொடர் வறட்சியால் வீழ்ந்த ஹரப்பா
'கம்யூனிகேஷன்ஸ் எர்த் & என்விரோன்மென்ட்' (Communications Earth & Environment) இதழில் வெளியான சர்வதேச ஆராய்ச்சிக் குழுவின் ஆய்வு, கி.மு. 3000 முதல் கி.மு. 1000 வரையிலான பருவநிலைத் தரவுகளைக் கணினி மாதிரிகள் மூலம் ஆய்வு செய்தது. இதில், சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரமான ஹரப்பாவின் வீழ்ச்சிக்கு ஏதோ ஒரு பெரிய பேரழிவு காரணமல்ல. மாறாக, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த நீண்டகால வறட்சியே முக்கியக் காரணமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
85 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தொடர்ச்சியான பெரும் வறட்சிகள், சிந்து சமவெளி நாகரிகத்தின் இறுதி வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வறட்சியால் ஆறுகள் மற்றும் மண் வறண்டு போனது. இது விவசாயத்தையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. வறட்சி தீவிரமடைந்த நிலையில், மக்கள் நீர் ஆதாரங்கள் உள்ள பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர்.
இருப்பினும், அந்தப் பிராந்தியத்தின் நகரங்கள் ஒவ்வொன்றாகச் சிதையத் தொடங்கியுள்ளது. சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நூற்றாண்டு கால வறட்சி, முக்கிய நகரங்களின் வீழ்ச்சி மற்றும் மக்கள் நகரங்களை விட்டு வெளியேறிய காலத்தோடு ஒத்துப்போகிறது என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
சிந்து சமவெளி நாகரிகம் செழித்தோங்கிய பகுதிகளில், 5,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து 3,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை எவ்வாறு மாறியது என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி குழுவினர் உலகளாவிய பருவநிலை உருவகப்படுத்துதல்களை (Global climate simulations) பயன்படுத்தினர். அதில், 5000 முதல் 3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மழைப்பொழிவு தொடர்ந்து குறைந்து கொண்டே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
indian express
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு