திண்டுக்கல்லை தீர்த்து கட்டவோ, மாலிப்டினம் சுரங்கம்!
அறம் இணைய இதழ்

திண்டுக்கல் மாவட்ட மண்ணுக்குள் ‘மால்ப்டினம்’ கனிமம் இருப்பதாக மத்திய புவியியல் மற்றும் கனிமவள அமைச்சகத்தினர் நீண்ட நெடிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மாலிப்டினம் இருக்கிறதாம்…! இனி, சூறையாடப்படவுள்ளது திண்டுக்கல். பழனி மலைக்கே மொட்டையாம்! என்ன செய்யப் போகிறோம் நாம்?
இது தமிழகத்தின் முந்தைய ஆட்சியாளர்கள், இன்றைய ஆட்சியாளர்கள் ஒத்துழைப்புடன் இந்த மிகப் பெரிய அய்வுகள் நடந்துள்ளதான தகவலே தற்போது தான் வெளியாகி உள்ளது.
இந்த மாலிப்டினம் என்ற கனிமத்தை ராணுவத் தளவாடங்கள், வாகனங்கள் துருப்பிடிக்காமல் இருக்க பயன்படுத்துவார்களாம்,. ஏற்கனவே இது தருமபுரி பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதில் அப்பகுதி மாலிப்டினம் சுரங்கங்களால் அல்லோகல்லோலப்படுகிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்திலோ அதைவிட பல மடங்கு கொண்ட சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவை சுரங்கமாக்கப் போகிறார்களாம்.
இந்த ஒரு லட்சம் ஏக்கருக்குள் தான் உலகின் மிகப்பெரிய பல்லுயிர் தளங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சில பகுதிகள் வருகின்றன. குறிப்பாக பழனிமலை, இடும்பன், ஐவர் மலை உள்ளிட்ட பல மலைகள் வருகின்றன. மேலும் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரவிமங்கலம், ஐவர் மலையில் உள்ள தொல்லியல் சின்னங்கள், சமணப் படுகைகள்..பல்லாயிரம் ஏக்கர் இயற்கை வளங்கள், விவசாய நிலங்கள் போன்றவை வருகின்றன. இவை யாவற்றையும் நாம் இந்த மாலிப்டினம் சுரங்கத்திற்காக இழக்கப் போகிறோம்…என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை.
திண்டுக்கல்லின் பசுமையான சில பகுதிகள்!
ஏற்கனவே உள்ள சுரங்கங்களே நம் சுற்றுச் சூழல்களுக்கு பெரிய சவால்களை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மிகவும் ஆழமாகவும், அகலமாகவும் அதுவும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் ஏற்படுத்தப்படும் இந்த மாலிப்டினம் சுரங்கத்தால் திண்டுக்கல் மாவட்டம் முழுமையுமே திட்டவட்டமாக மக்கள் வாழமுடியாத இடமாக்கப்பட்டுவிடும் என்பது திண்ணம்.
ஏனென்றால், இந்த சுரங்கத்திற்காக ஏராளமான மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள் நாட்டு அகதிகளாக்கப்படுவார்கள். பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், நீர் நிலைகள், மலைக் குன்றுகள் சுரங்க நோக்கத்திற்காக சூறையாடப்படும்.
பள்ளத்தாக்குகள் போன்ற சுரங்கங்களைத் தோண்ட உபயோகப்படுத்தும் வெடிபொருட்கள், ரசாயனங்கள் ஆகியவற்றால் நிலவளம் நிர்மூலமாக்கபடும். அத்துடன் மண்ணைத் தோண்டும் போது, வெளியே கொட்டப்படும் மண்ணே பல மலைகளைப் போன்ற அளவில் இருக்கும். அவற்றை கொட்டுவதற்கே மேலும் இதைவிட இரண்டு மடங்கு இடம் தேவைப்படும். அந்த வகையில் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் நிலங்களை முழுங்கப் போகிறது இந்தத் திட்டம்.
டங்ஸ்டன் சுரங்கத்திற்காக 5,000 ஏக்கர் நிலத்தை பகரிக்க மத்திய அரசு முயன்ற போது மதுரை மக்கள் ஆர்ப்பரித்து எழுந்து அந்த திட்டத்தை முறியடித்தார்கள் எனில், அதைவிட பேரபத்தை விளைவிக்கும் இந்த திட்டத்தை மக்கள் அனுமதிப்பார்களா என்ன?
அதே போல மலைகளை தகர்க்கும் போது கற்கள் மற்றும் துகல்களை போடவே பெரும் இடம் தேவைப்படும். இந்த செயல்பாடுகளால் நிலவளம் கெட்டு அங்கு புல் பூண்டு கூட முளைக்கவியலாத நிலைமைகள் தோன்றிவிடும். நீரில் கனிம தாதுக்களும், ரசாயனங்களும் எளிதில் கலந்து விடுவதால், மாசு கலந்த நீர், குடிக்க தகாத நீராக மக்களுக்கு பயன்படாது.
சுரங்க தோண்டுதலாலும், அதன் கழிவுகளாலும் காற்று மண்டலத்தில் மாசுக்கள் கலந்து காற்று சுவாசிக்க இயலாததாகிவிடும். இது சுற்றுவட்டாரத்தில் பல சுவாச கோளாறு நோய்களையும், புற்று நோய்களையும் உருவாக்கும். அப்பகுதிகளில் பறவைகள் கூட பறக்க முடியாது. ஆடு,மாடு, நாய், கோழி போன்ற விலங்கினங்களே வாழ இயலாது.
இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைவிட நூறு மடங்கு ஆபத்தானவர்கள். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், தஞ்சை மண்ணுக்கடியில் மீத்தேன் திட்டம், கன்னியாகுமரியில் உள்ள கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கு 1,114 ஹெக்டேர் பரப்பளவில் கனிம சுரங்கம், திருவண்ணாமலைப் பகுதியை சூறையாடக் கூடிய பிளாட்டினம் எடுக்கும் திட்டம்.. என தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து, மக்கள் வாழ்விடங்களை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைக்க துடிக்கிறார்கள்.
மண்ணையும், மக்களையும் காப்பாற்ற இன்று அரசியல் கட்சிகள் கூட குரல் கொடுப்பதில்லை. களம் காண்பதில்லை. மக்களே தங்களை தற்காத்துக் கொள்ளும் நிலக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ் நாடு சுற்றுச் சூழல் இயக்கம் மாலிப்டினம் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து களமாடி வருகிறது. பழனிமலை முருகனையே பஸ்பமாக்கத் துடிக்கும் இந்த பகாசூர திட்டத்தை எப்படி முறியடிக்கப் போகிறோம்….? என்பதே தற்போது மக்கள் முன்புள்ள கேள்வியாகும்.
(சாவித்திரி கண்ணன்)
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/22025/dindigul-molybdenum-mine/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு