அரசு நிறுவனங்களை அலட்சியப்படுத்தி, தனியார் காப்பீடுகள் வளர்ப்பு

அறம் இணைய இதழ்

அரசு நிறுவனங்களை அலட்சியப்படுத்தி, தனியார் காப்பீடுகள் வளர்ப்பு

தனியார் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை தாரை வார்த்து, அரசு காப்பீட்டு நிறுவனங்களை அதிகாரமற்றதாக்குகிறது பாஜக அரசு. பொதுத் துறை நிறுவனங்களை காப்பாற்ற இனி என்ன செய்ய வேண்டும்? என விளக்கும் பொதுக் காப்பீட்டு தொழிலாளர் சங்கச் செயலாளர் எஸ். சவரிமுத்து நேர்காணல்;

காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று கோரி வருகிறீர்களே ஏன் ?

இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மக்களுக்கு ஆதரவான கொள்கைகள் எடுக்கப்பட்டன. 1956 – இல், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ( LIC) அரசுடமை ஆக்கப்பட்டது. 1969 – ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி வங்கிகளை நாட்டுடமையாக்கினார். 108 தனியார் பொது காப்பீடு நிறுவனங்களையும் அரசுடமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. காப்பீடு நிறுவனங்கள் ஊழலிலும், முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்தன. இவைகளை அப்போது எங்கள் தலைவர்கள் அம்பலப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து, பிரதமர் இந்திரா காந்தி, தனியார் காப்பீட்டு நிறுவனங்களை, 1971 ஆம் ஆண்டு, மே மாதம் 13 ம் நாள் அரசுடமையாக்கினார்.

இது ஒரு முக்கியமான முடிவாகும். சென்னையை மையமாகக் கொண்டு யுனைடெட் இந்தியாவும், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு நியூ இந்தியாவும், கல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு நேஷனல் காப்பீடும், தில்லியை தலைமை இடமாகக் ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் அகற்றப்பட்ட பிறகு, ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்பதற்காக காப்பீட்டு நிறுவனங்கள், நான்கு பெருநகரங்களில் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது தனியாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டு,  30 க்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அவைகளை எதிர்கொள்ள அரசினுடைய நான்கு நிறுவனங்களும் ஒன்றாக இணைய வேண்டும். தென்னாட்டில் அதிகமாக இயங்கி வரும், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில்  1,425 கிளைகள் உள்ளன. நான்கு நிறுவனங்களும் சேர்ந்து, இந்தியாவில் 6,500  கிளைகள் வைத்துள்ளன.

காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைத்தால் ஊழியர்களுக்கு இடமாற்றம் வரலாம், பதவி உயர்வில் இடையூறு வரும். ஆனாலும், நாட்டின் நலனுக்காக நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்களையும் ஒன்றாக்க வேண்டும். அரசு நிறுவனங்கள் தமக்குள்ளேயே போட்டி போட்டுக் கொண்டு, குறைவாக விலைப் புள்ளி கோருகின்றன.

காப்பீடு நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன ?

வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும், ரூ.20 பிரிமியத்தில் இரண்டு இலட்சம் வரை விபத்து  காப்பீடு கிட்டுகிறது. இது போன்று குறைந்த பிரிமியத்தில் காப்பீடு செய்வதில் அரசு நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன. 70 % விவசாயக் காப்பீடுகளைச் செய்வது அரசு நிறுவனங்கள் தான். பிரதம மந்திரி சுகாதார காப்பீட்டு திட்டம் போன்ற அரசுத் திட்டங்களை  நிறைவேற்றுவதில் முதலிடம் வகிப்பவை அரசு நிறுவனங்கள் தான்.  தனியார் நிறுவனங்கள் நகரங்களில் செயல்படுகின்றன. அவை நன்கு படித்த, மேல்தட்டு் மக்களுக்கே சேவை செய்வதை இலக்காக வைத்துள்ளன. சாதாரண மக்கள் அணுக முடியாத அளவுக்கு தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளருக்கான பதிலைக் கூட இயந்திரங்கள் தான் சொல்லும்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், மூன்றாம் நபர் காப்பீட்டிற்கு (Third party insurance) வழங்கப்படும்   இழப்பீட்டிற்கு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்ய வேண்டும். இறந்தவருடைய 60 மாத சம்பளம் இழப்பீடாக வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர் இங்கு இறந்தால் அவருக்கு மூன்றுகோடி ரூபாய் கூட தர நேரிடுகிறது. சிலர் போலியான ஆவணங்களை தயார் செய்து ஒரு சாதாரண மரணத்தை, விபத்து மரணமாகக் காட்டி பல கோடி இழப்பீடு பெற்றதை மத்திய புலனாய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது. இன்னும் தீவிரமாக இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

1971 ல் பொது காப்பீட்டுத் துறை நாட்டுடமையான போது, இந்திய அரசு ரூ.19.5 கோடி மட்டுமே முதலீடு செய்தது. ஆனால், இன்றைக்கு நியூ இந்தியா காப்பீடு நிறுவனத்திற்கு மட்டுமே 1,08,000 கோடி ரூபாய் சொத்து உள்ளது. சந்தையில் 35 % வியாபாரத்தை அரசு நிறுவனங்களே செய்கின்றன. கிராமங்களில் குடிசைகள் எரிந்து போனால், தாமாக முன்வந்து, காப்பீடு இல்லையென்றாலும், காப்பீட்டு நிறுவனங்கள் மக்களுக்கு இழப்பீடு அளித்தன. பொதுத் துறையில் இருந்ததால் மட்டுமே இத்தகைய சேவைகள் சாத்தியமாயிற்று.

தற்போது சிங்கப்பூரிலும்,  கென்யா நாட்டோடு இணைந்தும் (கென் இந்தியா) செயல்படுகின்றன. ஓர் ஆண்டிற்கு, காப்பீட்டு நிறுவனங்கள் வசூலிக்கும் பிரிமியத் தொகை ரூ.3,07,000 கோடி என்றால், அதில் ரூ.1,06,000 கோடியை அரசு நிறுவனங்கள் வசூலிக்கின்றன.  கடந்த நான்கு மாதங்களில் பொதுத் துறை நிறுவனங்களின் வியாபாரம் 1.44 % , அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி 300 இலட்சம் கோடி. இதில் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு 1 %, அப்படியென்றால், இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

அரசு காப்பீடு நிறுவனங்கள் நன்றாக செயல்படவில்லை என்று சொல்கிறார்களே ?

சர்வதேச அளவு கோல் அடிப்படையில் பார்த்தால் கூட, நாங்கள் நன்கு செயல்படுகிறோம். அடிமட்டம் வரை ( penetrate)  செல்ல வேண்டும் என்று அரசு சொல்கிறது. 140 கோடி மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் அரசு பொது துறையான எங்கள் நிறுவனங்களை மேம்படுத்தினால், பிரிமிய வருவாய் எங்கேயோ போய்விடும். தனிநபர்  வருமானத்தைப் பொறுத்தே பொதுக் காப்பீட்டின் ( ஆடு, மாடு, வீடு, வயல், நகை,  விவசாயம்…)  வளர்ச்சி இருக்கும். வாகனக் காப்பீடு வாங்குவது கட்டாயம் என்று மோட்டார் வாகனச் சட்டம் சொல்லுவதால் வாகனக் காப்பீடு நடைபெறுகிறது. எனவே மக்களின் வாங்கும் சக்தியையும், தனிநபர் வருமானத்தையும் உயர்த்தும் வேலைகளை அரசு செய்ய வேண்டும். அரசின் கொள்கைகளைப் பொறுத்தும் வியாபாரம் மாறுபடும். இந்தியாவில் அரசு மருத்துவமனைகள் நன்கு செயல்படுகின்றன. கொரோனா காலத்தில் அரசு நிறுவனங்களின் மேம்பட்ட சேவையை மக்கள் நேரடியாக கண்டனர்.

எனவே, வெளிநாடுகளைப் போல சுகாதாரத்திற்காக மக்கள் இந்தியாவில் காப்பீடுகளை அதிகம் செய்வதில்லை. கிரிகெட் விளையாட்டு நின்று போனால் காப்பீடு, வெளிநாட்டுப் பயணத்திற்கு காப்பீடு ( குறுகிய நாட்களாக இருந்தாலும்) , நகைகளுக்கு, விலைமதிப்பற்ற பொருட்களுக்கு என பலவித காப்பீடுகள் உள்ளன.

காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்குவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

தனியார் நிறுவனங்கள் மருத்துவ காப்பீட்டீல் 54% முதல் 84 % வரை இழப்பீடு (claim settlement) கொடுத்துள்ளன. ( ஒவ்வொரு நிறுவனத்தின் இழப்பீட்டு சதவீதமும் வேறுபடும்). ஏனெனில் தனியார் நிறுவனங்கள், இழப்பீட்டு மனுவை எப்படி நிராகரிப்பது என்ற மனோபாவத்திலேயே செயல்படும்.  அமெரிக்காவில் காட்டுத் தீ வெகுவாகப் பரவியது. அப்போது காப்பீடு செய்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்காமல், காப்பீடுகளையே அந்த நிறுவனங்கள் ரத்து செய்துவிட்டன.

அவர்களுக்கு வியாபார அறம் இல்லை. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நிலைத்து இருப்பதில்லை. இப்படிப்பட்ட தனியார் நிறுவனங்களுக்குத் தான் நமது நாட்டின் சந்தையை திறந்து விடப் பார்க்கிறார்கள். ஆனால், பொதுத் துறை நிறுவனங்கள், இழப்பீடு கோரிக்கைகளில் 89% முதல் 99% வரை நிறைவேற்றுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறையவில்லை. காப்பீடு என்பது நம்பிக்கை, வாக்குறுதி, நிபந்தனை ஆகியவைகளைக் அடிப்படையாகக் கொண்டது. இதில் சிறப்பு என்னவென்றால், ஆயிரம் கோடி பிரிமியத் தொகை கட்டினாலும் நாங்கள் தருவதோ நான்குப் பக்க காகிதத்தில் உள்ள வாக்குறுதிகளைத் தான்.

ஏற்கெனவே, ஒரு காப்பீடு நிறுவனத்தில், குறைந்தது 51 %  பங்குகள் அரசின் வசம் இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது.  ஆனால், தனியார் 100 சதம் வரை பங்குகள் வைத்துக் கொள்ளலாம் என்று பாஜக அரசு 2021ஆம் ஆண்டு GIBN சட்டத்தில் திருத்தம் ( General Insurance Business Nationalisation Amendment act) கொண்டுவந்து விட்டது. இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று நிதி அமைச்சர் கூறியது நூறு சதம் தவறாகும். தனியார் நிறுவனங்கள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, குறைந்த நபர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் நாடு வளர்ச்சி அடையாது.

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் 35,000 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இன்னமும் 20,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.  இதனால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. மக்களின் சேவையும் குறைகிறது. ஓர் ஆண்டிற்கு, இரண்டரை கோடி ரூபாய் பிரிமியத்திற்கு, ஒரு தொழிலாளி என்ற விகிதத்தில் பணி புரிகிறார். கொரோனா காலத்தில்( 2022-23) ரூ.10,406 கோடி நட்டம் வந்தது. ஆனால் மறு ஆண்டே ரூ.480 கோடி இலாபம் கிடைத்தது.

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?

கஜா புயலின் போதும், தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலின் போதும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டன. தூத்துக்குடியில் வெள்ளம்  ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பிடத்திற்கே யுனைடெட் இந்தியா நிறுவன ஊழியர்கள் சென்று, சிறப்பு முகாம் நடத்தி விரைவாக நிவாரணத்தை தந்தார்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்திலேயே இதனைப் பாராட்டினார். எங்களுடைய ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் ஆகஸ்டு, 2022 லேயே முடிந்துவிட்டது. 36 மாதங்கள் கடந்தாலும் பேச்சுவார்த்தை முற்றுப்பெறவில்லை. நிதி அமைச்சரின் கீழ் உள்ள வங்கி ஊழியர்களுக்கும், ஆயுள் காப்பீட்டு ஊழியர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. எங்கள் ஊதிய உயர்வை விரைவாக முடிக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு ஈடான சம்பள உயர்வை எங்களுக்கும் தர வேண்டும்.

காப்பீட்டு முகவர்களுக்குத் தர வேண்டிய கட்டணத்தை, இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) நெறிமுறைகளுக்கு விரோதமாக அரசுத்துறை நிறுவனங்கள் தர முடியாது. ஆனால், தனியார் நிறுவனங்கள் இதையெல்லாம் பார்ப்பதில்லை. ஏற்கனவே காப்பீட்டு நிறுவனங்களில், வளர்ச்சி அதிகாரிகள் இருந்தார்கள். அவர்களுடைய பணி வியாபாரத்தை பெருக்குவது. அந்தப் பதவிகளை மீண்டும் உருவாக்க வேண்டும்.

சவரிமுத்து அவர்களை நேர்காணல் செய்யும் பீட்டர் துரைராஜ்.

40,000 மக்கள் தொகைக்கு ஒன்று என்ற விகிதத்தில், ஒரு நபர் அலுவலகங்களை கிராமங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் தொடங்கின. தற்போது மூடிவிட்டார்கள். அவைகளை மீண்டும் தொடங்க வேண்டும்.  இரயில் பயணிகளுக்கு (பயணச்சீட்டு  எடுக்கும்போதே)  காப்பீடுகள் செய்யப்படுகின்றன.

இதனால், தனியார் நிறுவனங்களும் பலன் அடைகின்றன. ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி, வங்கி, இரயில்வே போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனங்களில் தான் காப்பீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். 2047 வது ஆண்டில், ஒரு நபருக்கு ஒரு காப்பீடாவது இருக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதனை அமலாக்கும் முதன்மை நிறுவனமாக தில்லியில் உள்ள லிபர்டி ஜெனரல் என்ற நிறுவனத்தையும், சென்னையில் எச்டிஎஃப்சி எர்கோ என்ற நிறுவனத்தையும் அரசு தேர்வு செய்துள்ளது. விளம்பரம், பரப்புரை போன்ற பணிகளை அந்த முன்னோடி நிறுவனமே செய்யும். சென்னையில் இருக்கும் யுனைடெட் இந்தியாவிற்கும், தில்லியில் இருக்கும் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்திற்கும் இத்தகைய அரசு சார்ந்த பணிகளைத் தர வேண்டும்.

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

- அறம் இணைய இதழ்

https://aramonline.in/22576/insurance-public-sector-govt/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு