பயங்காட்டுகிறது, பாஜகவின் தேர்தல் அறிக்கை!

அறம் இணைய இதழ்

பயங்காட்டுகிறது, பாஜகவின் தேர்தல் அறிக்கை!
மோடியின் சங்கல்பத்ராவாம்! அடாவடித்தனம், அராஜகம், அநீதியை சட்டமாக்கல் என்ற இலக்கை நோக்கி பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்ப்புகள் என்னவென்றே தெரியாமல் தங்கள் மனதில் உள்ள குரூரங்களையே தேர்தல் வாக்குறுதிகளாக தரும் ஒரே கட்சி, பாஜக தான்;

எதைக் கொண்டு இந்த நாட்டில் பிளவையும், பிரிவுகளையும் உருவாக்க முடியுமோ அதை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வாக்குறுதி தான், ‘நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்பதாகும். இப்ப, பொது சிவில் சட்டம் இல்லாமல் இருப்பதால் இந்த நாட்டில் என்ன குறைந்துவிட்டது…? ஒரு குறிப்பிட்ட செக்‌ஷனை பதற்றப்படுத்த வேண்டும். பயங்காட்ட வேண்டும் என்பதைத் தவிர, இந்த சட்டத்தின் நோக்கம் வேறென்னவாக இருக்க முடியும்? அவரவருக்கான வாழ்க்கை முறையில் அவரவர்கள் சுதந்திரமாக வாழ்வதை உத்திரவாதப்படுத்துவது தான் அரசின் வேலையாக இருக்க வேண்டுமேயன்றி, உங்க விருப்பத்திற்கு மற்றவர்களின் வாழ்க்கையில் குறுக்கிடக் கூடாது. இந்த இங்கிதம் தெரியாமல் இம்சைத் திலகமாக இருக்கும் கட்சி தான் பாஜக என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துவிட்டனர்.

அடுத்ததாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்படுமாம்! இதை யார் கேட்டது? மக்கள் வசதிக்கு தான் அரசு அமைப்புகளே அன்றி, அரசு அமைப்புகளுக்காக மக்கள் இருக்க முடியாது. தேர்தல் கமிஷனின் செளகரியத்திற்காக தேர்தல் நடத்துவது என்றால், இங்கு நடப்பது மக்களாட்சியா? என்ற கேள்வி தான் எழுகிறது.

இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படுமாம். திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் ஆரம்பிக்கபடுமாம்! ஐயா, இந்தி வாலாக்களே.., தமிழ் மொழி ஏற்கனவே நன்றாக வளர்ந்த மொழி தான்! அதை கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் ஏற்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதற்கு இந்த அறிக்கையில் பதில் இல்லையே!

திருவள்ளுவர் கலாச்சார மையங்களில் என்ன செய்யப் போகிறீர்கள்? வள்ளுவருக்கு காவியை கட்டிவிட்டதைப் போல, ‘வள்ளுவர் சனாதனத்திற்கானவர்’ என எக்குதப்பாக பிரச்சாரம் செய்யும் திட்டமா? தமிழ் மொழியை வளர்ப்பது இருக்கட்டும். ‘இந்தியை, சமஸ்கிருதத்தை திணிக்காமல் இருப்பேன்’ என்று ஒரு ஒற்றை வாக்குறுதி தந்தால் போதுமே!

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, தேசிய வளங்களை தனியாருக்கு தூக்கித் தருவது ஆகியவற்றை  கைவிடுவீர்கள் என்பதற்கு இந்த தேர்தல் அறிக்கையில் உத்திரவாதம் இல்லை.ஆக, அடுத்த தேர்தலுக்குள்ளாக அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் எடுத்து அதானி,. அம்பானிக்கு தந்து விடுவீர்கள் தானே!

மாநிலங்களின் சுயாட்சி உரிமையையும், அதிகாரத்தையும் பறிப்பதற்கு கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து உங்களிடம் குறைந்தபட்ச சுய விமர்சனம் கூட இல்லையே! நீங்க மீண்டும் வந்துவிட்டால், மாநிலங்களே இல்லாமல் அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசமாகக் கூட ஆக்கிவிடுவீர்கள் போலும்.

சி.பி.ஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ போன்றவற்றை சுயாதீனமாக செயல்பட வைக்க வாக்குறுதி தந்திருந்தால், உங்களை நாங்கள் வணங்கி போற்றி இருப்போம். இல்லையே!

விவசாய நிலங்களை அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கும் சட்ட திருத்ததையும், விவசாயிகளுக்கு எதிராக பாஜக கொண்டு வந்துள்ள அனைத்து சட்டங்களையும் வாபஸ் பெற எந்த உத்திரவாதத்தையும் தரவில்லையே!

அரசு பணியிடங்களை ‘அவுட் சோர்ஸ்’ முறையில் நிரப்புகின்ற அக்கிரம் குறித்து உங்களுக்கு எந்தக் குற்றவுணர்வும் இல்லையே! தொழிலாளர்களையும், அலுவலர்களையும் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஓப்பந்த கூலியாக்கிவிட்டு அரசு வேலை வாய்ப்புகளையே அழித்து வருவது குறித்து உங்களுக்கு எந்தக் குற்றவுணர்வும் இல்லை என்பதை இந்த தேர்தல் அறிக்கை உறுதி செய்கிறது.

‘3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற இலக்காம்’. அப்ப, ‘கட்சிக்கார பெண்களுக்கு இருக்கு அதிர்ஷடம்’ என்று தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்குது..! அனைவருக்கும் உழைக்கும் வாய்ப்பை உத்திரவாதப்படுத்துவதைவிட்டுவிட்டு, லட்சாதிபதியாம்! பெண்களுக்கு முதலில் பாதுகாப்பு இல்லையே. மணிப்பூர் கலவரத்தை உருவாக்கி எத்தனை பெண்களை மானபங்கபடுத்தினீர்கள்!

தேசிய ஊரக வேலைத் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை காலி செய்து கொண்டிருக்கிறீர்களே..! காங்கிரஸ் அறிக்கை இதற்கான தினக்கூலி 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்றது. நீங்களோ எந்த வாக்குறுதியும் தரவில்லையே!

‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கப் போகிறேன். முக்கிய வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தருவேன்’. 10 வருடத்திற்கு முன்பே 2014 மற்றும் 2019 தேர்தல் அறிக்கைகளிலும் இந்த வாக்குறுதி இருந்தது. ஆக, எப்போதுமே உங்களுக்கு நிறைவேற்ற விருப்பமில்லாதவற்றை நிரந்தர வாக்குறுதியாக வைத்துக் கொள்வீர்கள் போலும்!

சிறு, குறு நடுத்தர தொழில்களை இந்த 10 ஆண்டுகளில் படுகுழிக்கு தள்ளினீர்கள்! உங்களை மேலும் தொடரவிட்டால், உள்ளதையும் காலி செய்துவிடுவீர்கள் என்பதை அறியாதவர்களா மக்கள்?

இந்தியாவின் ஒற்றுமைக்கு அடித்தளமாக விளங்கும் கூட்டாட்சி முறையை சிதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்!  மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி போன்றவற்றை பொதுப் பட்டியலுக்கு மாற்றி தேசியக் கல்வி கொள்கையை திணித்து வருகிறீர்கள்! அதைத் தான் இந்த தேர்தல் வாக்குறுதிகளும் உறுதிபடுத்துகின்றன!

மாநிலங்களுக்கு தரப்படும் வரி பகிர்வு நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றப்படும். டெல்லி, புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து  வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் கூறியதே! உங்களிடம் அவ்வளவு நேர்மையை எதிர்பார்க்க முடியுமா என்ன?

மோடியின் ‘சங்கல் பத்ரா’ என்பது,

ஜனநாயகத்தை சாய்ப்போம்.

சமய நல்லிணக்கத்தை மாய்ப்போம்.

ஏழை, எளியவர்களை ஏய்ப்போம்…!

சிறு, குறுந்தொழில்களை ஓய்ப்போம்!

என்பதன்றி வேறல்ல.

(சாவித்திரி கண்ணன்)

- அறம் இணைய இதழ்

https://aramonline.in/17505/bjp-election-manifesto-2024/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு