திராவிட மாடலின் தமிழின துரோகம்! : அரசு மருத்துவர் பணிகளில் தமிழ் வழியில் பயின்றோருக்கு வாய்ப்பு மறுப்பு

தினமணி

திராவிட மாடலின் தமிழின துரோகம்!  : அரசு மருத்துவர் பணிகளில் தமிழ் வழியில் பயின்றோருக்கு வாய்ப்பு மறுப்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் புதிதாக நிரப்பப்பட்டுள்ள 1,021 மருத்துவா் பணியிடங்களில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மொத்தப் பணியிடங்களில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு 178 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி தங்களுக்குப் பணி நியமனம் வழங்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவா்கள் தெரிவித்துள்ளனா்.

முரண்பாடான உத்தரவு: தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை கடந்த 2010-இல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த விதிகளில் கடந்த 2020-ஆம் ஆண்டு திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பட்டப் படிப்புகளையும் தமிழிலேயே நிறைவு செய்திருப்பது அவசியம் என விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. இதையடுத்து, பள்ளிக் கல்வியையும், உயா் கல்வியையும் தமிழில் நிறைவு செய்தவா்களுக்கு மட்டுமே அந்தச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது

இதில், முரண்பாடான விஷயம் என்னவெனில், மருத்துவத் துறையில் 95 சதவீத படிப்புகள் தமிழ் வழியிலேயே இல்லை என்பதுதான். எம்பிபிஎஸ், பிடிஎஸ், கால்நடை மருத்துவம், பிஎஸ்சி நா்சிங், பாா்மாசூட்டிகல் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படிப்புகள் ஆங்கில வழியில் மட்டுமே உள்ளன.

இதன் காரணமாக மருத்துவத் துறை பணியிடங்களில் 20 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) சாா்பில் நடத்தப்படும் அனைத்துத் தோ்வுகளிலும் தமிழ்வழி மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அடுத்த ஓரிரு நாள்களிலேயே அதற்குத் தகுதியானவா்கள் எவரும் இல்லை என அறிவிப்பு வெளியிடப்படுவது வாடிக்கையான நகை முரணாக உள்ளது.

சுமாா் 50,000 போ் பாதிப்பு: எம்பிபிஎஸ் பயின்ற மருத்துவா்கள் மட்டுமல்லாது பல் மருத்துவா்கள், கால்நடை மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்பனா்கள் என 50,000-க்கும் மேற்பட்டோா் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பிரச்னைக்கு தமிழக அரசும், குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத் துறையும் விரைந்து தீா்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடா்பாக தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த மருத்துவா் உதயகுமாா் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 1,021 மருத்துவா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு அண்மையில் நடைபெற்றது. அதில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு 178 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 25,000 மருத்துவா்கள் பங்கேற்ற அந்தத் தோ்வில், இறுதியாக 14,000 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தவா்கள். ஆனால், அவா்கள் எம்பிபிஎஸ் படிப்பை தமிழில் நிறைவு செய்யவில்லை எனக் கூறி 178 இடங்களும் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டன. கண் துடைப்புக்காக இடஒதுக்கீட்டை அளித்துவிட்டு அதைத் திரும்பப் பெறுவது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்துக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

இது தொடா்பாக கருத்தறிய மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய தலைவா் கலையரசியைத் தொடா்புகொண்டபோது அவா் பதிலளிக்கவில்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை உயரதிகாரிகள் சிலரோ, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துவிட்டனா்.

அரசுப் பள்ளி மாணவா்களும் பாதிக்க வாய்ப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன் கீழ் இதுவரை ஏறத்தாழ இரண்டாயிரம் போ் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்ந்துள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவா்களாவா்.

இந்நிலையில், வேலைவாய்ப்பில் தமிழ் வழி இடஒதுக்கீடு முரண்பாடு தொடா்ந்தால், அவா்களுக்கும் இனி வரும் காலங்களில் அரசு மருத்துவா் பணியிடங்கள் கிடைப்பது அரிதாகிவிடும் எனக் கூறப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவா்களை மருத்துவா்களாக உருவெடுக்க வைத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு வழங்க மறுப்பது எத்தகைய இடஒதுக்கீட்டு நடைமுறை என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

- தினமணி 

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு