சாம்சங் தொழிலாளர் பிரச்சினையும் திமுக அரசும்!

அறம் இணைய இதழ்

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையும் திமுக அரசும்!

”திமுக அரசின் காவல்துறை சாம்சங் நிறுவனத்தின் ஏவல் துறையா? அமைச்சர்கள் சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகளா? தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறைகளை ஏவினால், இந்த அரசு அவமானங்களுக்கு ஆளாகும்…” என தலைவர் அ.சவுந்திரராஜன் பேச நேர்ந்தது என்றால், இதன் வரலாறும், வலியும் என்னவென பார்க்க வேண்டும்;

நள்ளிரவில் தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி கைது செய்வது, அவர்களின் குடும்பங்களை அச்சுறுத்துவது, தனியார் நிலத்தில் அனுமதி பெற்று போட்ட போராட்ட பந்தலை இரவோடு இரவாக பிய்த்து எறிவது, பொய் வழக்குகள் போட்டு தொழிலாளர்களை கைது செய்வது என்பதெல்லாம் ஒரு மக்கள் நல அரசு நினைத்து பார்க்கவே முடியாத கொடூரங்களாகும். பாசிச சிந்தனை ஊறித் திளைத்த  பாஜக ஆட்சியாளர்கள் இவ்வாறு செய்வதை புரிந்து கொள்ளலாம். ஆனால், வார்த்தைக்கு வார்த்தை ‘திராவிட மாடல்’ என்றும், ‘சமூக நீதி’ என்றும் பேசும் திமுக ஆட்சிக்கு போராடும் தொழிலாளர்கள் மீது இத்தனை வன்மம் ஏன்?

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வந்து தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதை தடுக்கத் தானே இந்த அராஜாக் நடவடிக்கை. இந்த தொழிலாளர்கள் தானே உங்களுக்காக வீடுவீடாக சென்று வாக்கு கேட்டனர். எந்த பாஜகவிற்கு பயந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்களோ.., தற்போது அந்த பாஜக அரசின் பாசிச சித்தாந்தத்தை செயல்படுத்துவதே உங்கள் தலையாய சேவையாக செயல்படுகிறீர்களே..!

# போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தர வேண்டிய  ஓய்வூதிய பலாபலன்களை  ஆண்டுக் கணக்கில் தராமல் இழுத்தடிக்கும் அரசு, போக்குவரத்து துறையை படிப்படியாக தனியாருக்கு தாரை வார்த்து வரும் அரசு..

#  மத்திய அரசின் போக்குவரத்து சட்டங்களை அமலாக்கும் வகையில் சாலை விதிகளை மீறல் என்ற பெயரில் அநீதியான பெரும் அபராதத் தொகையை வழிப்பறி கொள்ளையனைப் போல பிடுங்கும் அரசு..

# மின் உற்பத்தில் அதானி நிறுவனத்தை அனுமதித்து அதிக விலை கொடுத்து அதானி நிறுவனத்திடம் மின்சாரம் வாங்கி, பெரும் நஷ்டத்திற்கு தமிழக மின்சாரத் துறையை தள்ளி, அதன் பலனாக ஊழியர்களை ஒப்பந்தக் கூலிகளாகவே ஆண்டுக் கணக்கில் அடிமாட்டுச் சம்பளத்திற்கு வேலை வாங்குவது…

# உள்ளாட்சிகளின் துப்புரவு தொழிலாளர்கள் தொடங்கி பள்ளி, கல்லூரிகளின்   ஆசிரியர்கள் வரை நிரந்தர பணியின்மையை ஏற்படுத்தி ஒப்பந்த கூலிகளாகவே வேலை வாய்ப்புகளை ஒழித்துக் கட்டும் அரசு.

# கல்வித் துறையில் சனாதன கருத்தாக்கங்கள் கொண்ட தேசிய கல்விக் கொள்கைகளை அச்சு பிறழாமல் அமலாக்கி வரும் அரசு..

# பரந்தூரிலும், மேல்மாவிலும் இன்னும் பல இடங்களிலும் விவசாயிகளின் விளை நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்காக ஈவு இரக்கமின்றி பறிக்க முயலும் அரசு..

எப்படி ஒரு மக்கள் நல அரசாக முடியும்? 12 மணி நேர உழைப்பை சட்டமாக்க சட்டமன்றத்தில் முயற்சித்த அரசு, தற்போது அதை சட்டமாக்காமலே, சகல இடங்களிலும் ஜரூராக அமல்படுத்தி வருவது அநீதியிலும் அநீதி அல்லவா?

முதலாளிகள் குறைந்த சம்பளத்துக்கு உழைப்பை எதிர்பார்ப்பதும், தொழிலாளிகள் ”கட்டுப்படி ஆகாதுங்க, கொஞ்சம் உசத்திக் கொடுங்க” எனக் கேட்பதும், காலங்காலமாக நடப்பது தான்.

சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்தை பொறுத்த வரை அவர்கள்,’தொழிற்சங்கமே கூடாது’ என்பதை ஒரு அடிப்படை நிபந்தனையாக்குகிறார்கள். தொழிற்சங்கம் இல்லை என்பதை சாதக அம்சமாக்கிக் கொண்டு நடைமுறை சாத்தியமில்லாத அளவு டார்கெட்  நிர்ணயித்து நிர்பந்தப்படுத்தி வேலை வாங்குகிறார்கள். தொழிலாளர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளைக் கூட நிறைவேற்ற மறுக்கிறார்கள். உச்சபட்ச லாபத்தை பார்ப்பவர்கள், குறைந்தபட்ச கூலி உயரவு கேட்பதை குற்றமாக அறிவிக்கிறார்கள்.  நியாயம் கேட்டால் வேலை இல்லை. ஆகவே பணிந்து போவது தவிர, வேறு வழியில்லை என தொழிலாளர்களும் 14 வருடங்கள் தாக்கு பிடித்துப் பார்த்தார்கள்.

இதன் பிறகும் அடிமைப்பட்டு இருந்தால் விமோசனமே இல்லை என்பதால் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை கட்டமைக்கிறார்கள். உடனே நிர்வாகம் தனக்கு ‘ஆமாம் சாமி’ போடும் சில தொழிலாளர்களை அழைத்து, ”நீங்க தொழிற்சங்கம் உருவாக்குங்க. உங்ககிட்ட பேசுறோம்”ங்கிறாங்க.

இது அவங்களுக்கு ரொம்ப சவுகரியமாக போயிடுச்சு. ”தொழிற்சங்கத்தை நாங்க அங்கீகரிச்சுட்டோம். அவங்களோட பேச்சு வார்த்தையும் நடத்துகிறோம். அதனால சி.ஐ.டி.யூ சங்கத்துக்கு இங்க வேலையில்லை” அப்படிங்கிறாங்க.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை அங்கு வரவழைத்ததே நிர்வாகம் தானே. ‘தாங்கள் நியாயமாக நடத்தப்படுகிறோம்’ என்ற உணர்வை தொழிலாளர்களுக்கு நிர்வாகம் தந்திருந்தால் அங்கே சிஐடியூவிற்கு  என்ன வேலை..?

நிரந்தரமாக்கப்பட்ட  தொழிலாளர்களில் 85 சதவிகிதத்தினர்  ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி, அதை பதிவு செய்து தர வேண்டும் என விண்ணப்பித்தால், அதை பதிவு செய்து தருவது தானே அரசின் கடமை. இப்படி விண்ணப்பிக்கும் தொழிற்சங்க பதிவை 45 நாட்களுக்குள் செய்து தர வேண்டும் என்பது விதி. ஆனால், நூறு நாட்களைக் கடந்தும் பதிவு செய்ய மறுப்பது என்பது விதிகளை மீறி வில்லத்தனங்களுக்கு துணை போகிறது தமிழக அரசு என்பதற்கு முதல் அத்தாட்சியாகும்.

அடுத்ததாக தொழிற்சாலை தரப்பு, தொழிலாளர் தரப்பு, தொழிலாளர் நலத் துறை என அரசு தரப்பு என ஐந்து கட்டப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

வழக்கமாக இது போன்ற பேச்சு வார்த்தைகளில் அரசு தரப்பு தொழிற்சாலை நிர்வாகத்தை நியாயமான கோரிக்கைகளுக்கு உடன்படச் சொல்லும். அதே சமயம் தொழிலாளர் தரப்பையும் கட்டுப்பாடு காக்கச் சொல்லும். ஆனால், ஐந்த ஐந்து கட்டப் பேச்சுவார்த்தையிலும், தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறையானது நிர்வாகத் தரப்பின் மைண்ட் செட்டில் நின்று கொண்டு தொழிலாளர்களை பணிந்து போகச் சொல்லி பரிந்துரை தருவது அடுத்த கட்ட அநீதியாகும்.

ஒரு தொழிற்சங்கத்திற்கு வெளியில் உள்ளவர்கள் தலைமை தாங்கலாம் என்பது நம்மை அடிமைகளாக வைத்திருந்த பிரிட்டிஷ் அரசே உருவாக்கிய தொழிற்சங்க சட்டத்தின்( 1926) முகவுரையில் குறிப்பிட்ட அம்சமாகும். அதனால் தான் அன்று தமிழ் தென்றல் திருவிக , கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம், சர்க்கரை செட்டியார் போன்ற பெரும் தலைவர்கள் தொழிற்சங்க தலைவர்களாக வலம் வந்தனர். ஏறத்தாழ நூறாண்டு கால நடைமுறையாகவும், அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவும் நிலை பெற்றுவிட்ட தொழிற்சங்க உரிமையை தற்போது கேள்விக்கு உள்ளாக்குவது திமுக அரசானது முழுக்க, முழுக்க பாஜகவின் அடியொற்றி நடக்கிறது என்ற புரிதலையே நமக்குத் தருகிறது.

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளையும், கைதையும் நியாயப்படுத்த முதல்வர் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் “சமூக விரோதிகள், மாவோயிஸ்ட்கள், தொழிலாளர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து அரசுக்கு எதிரான போராட்டமாக திசை திருப்பி, வன்முறையை தூண்டிவிட முயற்சிப்பதால் இந்தச் சோதனைகளையும், கைதுகளையும் செய்கிறோம் ” என்றால், இந்த ஆட்சியாளர்கள் யாருக்கு விசுவாசிகள்? சொந்த மண்ணின் மைந்தர்களுக்கா? வட நாட்டு பார்ப்பன, பனியா அரசுக்கா? அந்நிய நாடான கொரியாவின் முதலாளிகளுக்கா..?

சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை மாநில திமுக அரசு எளிதில் தீர்த்து வைக்க முடியும். ஆனால், அதற்கான தார்மீகத் தகுதி இந்த ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை… என்பது தான் தொடர் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கிடைத்துள்ள படிப்பினை.

(சாவித்திரி கண்ணன்)

- அறம் இணைய இதழ்

https://aramonline.in/19444/samsung-workers-arrest/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு