தமிழகத்தில் பின்வாசல் வழியாக பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்!
அறம் இணைய இதழ்
கேரளாவில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்கும் முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டார் பினராய் விஜயன். ஆனால், ”தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அனுமதியோம்” என்று சொல்லிக் கொண்டே, பின்வாசல் வழியாக அதை உருவாக்கி வெற்றிகரமாக ஸ்டாலின் செயல்படுத்தும் தந்திரத்தை அவர் விரும்பவில்லை;
பள்ளிக் கல்வித் துறைக்கான நிதியை பெறுவதற்காக கேரளாவில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் கடுமையான எதிர்ப்பால், அது பின்வாங்கப்பட்டது. ஓரு இடதுசாரி கூட்டணி அரசில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியே தடம் புரண்டாலும், அதை சமூகத்தின் நன்மைக்காக – தயங்காமல் தட்டிக் கேட்டு – நல்வழிப்படுத்திய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு நன்றி. இடதுசாரி ஒற்றுமை ஓங்கட்டும்.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்பது ஒரு நவீன தீண்டாமைக்கான கல்வித் திட்டம்.
அதாவது ஹைடெக் முறையில் கண்டுபிடிக்க முடியாத வகையில் செய்யும் சனாதனக் கல்வி முறையாகும்!
இதில் அரசு பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் பிரித்தெடுத்து, அவர்களுக்கு என தனியாக ஹைடெக் வசதிகளோடு தனிப் பள்ளிகளை உருவாக்கி ஆகச் சிறந்த கல்வியைத் தருவதாகும்.
இன்றைக்கு ஒருபுறம் அரசு பள்ளிகள் பாழடைந்த கட்டிடங்கள், மழை பெய்தால் ஒழுகும் வகுப்பறைகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை, மரத்தடி வகுப்பறைகள், கழிப்பறை வசதி கூட இல்லாமை , துப்புரவுப் பணியாளர் இல்லாத அவலமான சுகாதாரச் சூழல்…போன்ற பல பிரச்சனைகளோடு அழிவு நிலையை நோக்கி நகர்கின்றன. ஆண்டுக்காண்டு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
ஆனால், மாவட்டத்திற்கு ஒன்றோ, இரண்டோவென தொடங்கப்படும் பி.எம்.பள்ளிகளோ.. உயர்தர பள்ளிக் கட்டிடங்கள், ஹைடெக் லேப் , ஸ்மார்ட் கிளாஸ் ரூம், காஸ்ட்லி நாற்காலி, பெஞ்சுகள், ஸ்மார்ட் கம்யூட்டர்ஸ், அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், சோலார் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், கண்ணாடி இழைகளாலான கரும்பலகைகள், ஹைடெக் விளையாட்டுத் திடல்..இன்னும் எக்ஸ்டரா..என அனைத்து வசதிகளுடன் நடக்குமாம்!
தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் இயங்கும் விதம்
தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு மாடல் பள்ளிகள் ஐஐடி போல் மிக பரந்துபட்ட பரப்பளவில் அதிசயத்தக்க வசதிகளுடன் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் மிகவும் டாப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர முடியும். அதுவும் தகுதித் தேர்வின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
திருச்சியில் சுமார் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் 56.4 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன மாடல் பள்ளி.
அரசு மற்றும் பிற தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 சேர்ந்த, ‘டாப்பர்’ மாணவர்கள் பொறுக்கி எடுத்து, மாதிரி பள்ளிகளில் சேர்க்கிறாரகள். அரசு மாதிரி பள்ளிகளில், பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே இலக்காக வைத்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் நடத்தும் முதுநிலை ஆசிரியர்களில் மிகவும் திறமையான ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு மாதிரி பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு உயர்தரமான வகுப்பறை, தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சேர அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களே மாதிரி பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள்.. இந்த மாணவர்களுக்கு உணவு, உறைவிட வசதி விளையாட்டு மைதானம், கலை, இலக்கிய வகுப்புகள் என பலவகை வாய்ப்புகள் மிகத் தரமான முறையில் வழங்கப்படுகிறது.
இந்த பள்ளிகளை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்
நன்றாக படிக்கும் மாணவர்களும், சுமாராக படிக்கும் மாணவர்கள், படிப்பே வராத மாணவர்கள் எல்லாம் கலந்ததாக ஒரு வகுப்பறை இருக்க வேண்டும். அப்போது தான் காலப் போக்கில் சுமாராக படிப்பவனும், கடை நிலையில் இருப்பவனும் மேல் நிலைக்கு வருவதற்கான உந்துதல் உருவாகும். நல்லா படித்தாலும், மிக சுமாராக படித்தாலும் எல்லா குழந்தைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் தான் நாம் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை எதிர்க்கிறோம்.
மற்ற பள்ளிகளில் உள்ள திறமையான ஆசிரியர்கள் இங்கே அழைத்துக் கொள்ளப்படும் போது அந்தப் பள்ளி மாணவர்களின் கல்வி நிலைமை கடுமையாக பாதிப்படைகிறது. ஒரு பள்ளி ஒன்பதாம் வகுப்பு வரை ஒரு திறமையான மாணவனை உருவாக்க எவ்வளவு பாடுபட்டிருக்கும். அந்த மாணவனை அங்கிருந்து தூக்கி வேறொரு இடத்தில் போட்டுவிட்டால் அந்தப் பள்ளியும் பாதிப்படையும். அதே பள்ளியில் 10,11,12 வகுப்பில் படித்து முதல் மதிப்பெண் வாங்கும் போது அந்தப் பள்ளியும், அவனோடு படிக்கும் மாணவர்களும் அடையும் சந்தோஷம் இதனால் பறிக்கப்படுகிறது.
தோழர் பினராய் விஜயன் ஒரு வகையில் நேர்மையானவர். சூழலின் அழுத்தம் காரணமாக பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்க முன்வந்தாரே அன்றி, கொள்கை ரீதியில் அதற்கு உடன்படவில்லை. ஆகவே, பின்வாங்கிவிட்டார்.
ஆனால், தமிழ் நாட்டிலோ பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்கமாட்டோம், எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டே மாதிரி பள்ளிகள் என்ற பெயரில் ஹைடெக்காக தனிப் பள்ளிகளை உருவாக்கி பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தையே அப்படியே அமல்படுத்துகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதை இங்குள்ள ஆசிரியர் சங்கங்கள் சிலவும், முற்போக்கு அமைப்புகளும் கடுமையாக எதிர்த்த போதிலும் சைலண்டாக செயல்படுத்தி வருகிறது ஸ்டாலின் அரசு.
இதுமட்டும் என்றில்லை, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன், இணைய வழிக் கல்வி, போட்டித் தேர்வுகள், எமிஸ் முறை என சகலமும் பாஜக அரசின் சனாதனக் கல்வி திட்டத்தை வெவ்வேறு பெயர்களில் அமல்படுத்தப்படும் வழிமுறைகளே! இவை அனைத்தும் சமூகச் சூழலில் சமவாய்ப்பை வழங்க மறுக்கும் சனாதனச் சதி திட்டங்களாகும்.
என்னைப் போன்றவர்கள் திமுக அரசோடு முரண்படுவது பாஜகவை எதிர்ப்பதாக பசப்பிக் கொண்டு, மறைமுகமாக அவர்கள் செயல் திட்டங்களை நிறைவேற்றித் தரும் நரித்தனதினால் தான்.
சனாதனமாக்கட்டும், சமஸ்கிருதமாகட்டும், பார்ப்பனிய ஆதரவு நிலைபாடாக்கட்டும். பாஜக எதையும் மறைப்பதில்லை. பட்டவர்த்தனமாகவே செயல்படுகிறார்கள். அந்த வகையில் அவர்கள் நம் கண் எதிரே தோன்றும் ஒரு நேர்மையான எதிரி. ஆனால், தற்போதைய திமுகவோ பேசுவதெல்லாம் சமூக நீதி. கண்டே பிடிக்க முடியாமல் செய்வதெல்லாம் அதற்கு எதிராவையே.
2010 கலைஞர் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார். அதை 2011 ல் ஜெயலிதா ஆட்சிக்கு வந்ததும் மாற்றி அமைத்தார். அப்போது சமச்சீர் கல்வியை மாய்ந்து, மாய்ந்து ஆதரித்தும், ஜெயலிதாவை தாக்கியும், ’’அரசியலாக்கப்பட்ட சமச்சீர் கல்வி உண்மை நிலை என்ன?’’ என்ற நூலைக் கொண்டு வந்தேன். அந்த நூலை தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தமிழகம் முழுமையும் உள்ள ஆசிரியர்களிடம் கொண்டு சேர்க்க உதவினார். நண்பர் பாக்கெட் நாவல் அசோகன் மலிவு விலையில் ரூ 10க்கு கிடைக்கும்படி பெட்டிக் கடைகள் எங்கும் விற்பனை செய்தார்.
ஸ்டாலின் அவர்கள் கலைஞர் வழியில் பயணிக்கவில்லை. ஜெயலலிதா, மோடி பாணியைத் தான் பின்பற்றுகிறார். ஸ்டாலின் பேசுவதோ, திராவிட மாடல். பின்பற்றுவதோ, சனாதன மாடல்.
(சாவித்திரி கண்ணன்)
அறம் இணைய இதழ்
https://aramonline.in/23135/pm-sri-schools-in-tamilnadu/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு