மோசடியில் சர்வதேச சாதனை செய்த இந்திய தேர்தல் ஆணையம்!
அறம் இணைய இதழ்
இந்தியாவில் காலடி வைத்திராத எங்கோ பிரேசிலில் வசிக்கும் பெண் லாரிசா நேரி இந்திய வாக்காளர் பட்டியலில் சரஸ்வதி, லஷ்மி, சீமா.. என 22 பெயர்களில் இடம் பெறுகிறார். இந்த தில்லாலங்கடியை சாத்தியப்படுத்த எத்தனை போலி ஆவணங்களை உருவாக்கித் தயார் செய்திருப்பார்கள்..! மிரட்டும் தேர்தல் ஆணையச் சாதனைகள்;
இந்திய தேர்தல் ஆணையத் திருவிளையாடல்களை தற்போது இந்த உலகமே வியந்து பார்க்கிறது!
இத்தகைய திருப்புகழை இந்தியாவிற்கு தேடித் தந்த கனவான்களை எந்தப் பெயரிட்டு அழைப்பதென்று தெரியவில்லை.!
பலே திருடன், பாக்தாத் திருடன், எமகாதகத் திருடன், எதற்கும் அஞ்சாத பஞ்சமா பாதகன் என…இன்னும் என்னென்ன வார்த்தை பிரயோகங்கள் உண்டோ.., அதை அத்தனையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அந்த அத்தனை திருடர்களையும் விஞ்சும் அசல் அக்மார்க் திருடன் ஒருவனை உருவாக்கி உள்ளனர், நம் ஒன்றிய சங்கிகள்!
அந்த திருடனுக்கு உதவ இன்னும் இரண்டு பலே திருடர்கள் இருவரையும் பக்க பலமாக கொடுத்துள்ளனர். இவர்கள் தயவில் தான் இந்தியாவில் தேர்தல் நடக்குமாம். இவர்கள் அங்கீகரித்தால் தான் நாம் வாக்காளர்களாம்!
இவர்கள் அயோக்கியத் தனத்தின் உச்சகட்ட ஆட்டத்தை ஆடி வருகிறார்கள். இவர்கள் என்ன குற்றங்கள் செய்தாலும், இவர்களை கைது செய்யவோ, தண்டிக்கவோ முடியாத வகையில் ஒரு புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாம்!
இந்தியாவில் முதலமைச்சர்கள் முறைகேடு செய்தாலும் சிறையில் தள்ள முடியும் . பிரதமரே முறைகேடுகள் செய்தாலும் உள்ளே வைக்க முடியும்..என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த தேர்தல் என்ற பெயரிலே ஜனநாயகத்தையே திருடும் அயோக்கியர்களை ஒரு போதும் தண்டிக்க முடியாது என சட்ட பாதுகாப்பு தந்து தான் அவர்களை அதிகாரப்படுத்தி சதிராட்டம் ஆட வைத்துள்ளனர், சங்கிகள்!
இவர்கள் ஹரியாணாவில் அப்படி 25 லட்சத்திற்கு மேற்பட்ட போலி வாக்காளார்களை உருவாக்கி அநீதியான ஆட்சி மாற்றத்தையே நடத்திவிட்டனர் என்பதைத் தான் தற்போது ராகுல் காந்தி அம்பலப்படுத்தி உள்ளார். ஹரியாணாவில் எச் பைல்ஸ் என்ற பெயரில் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், 25,41,144 போலி வாக்காளர்களை பாஜகவிற்கு சாதகமாக உருவாக்கி தந்து தேர்தல் ரிசல்டையே திருப்பி போட வைத்துள்ளனர், தேர்தல் ஆணைய அதிகாரிகள்! தவறான, பொய்யான முகவரிகள், போலிப் பெயர்கள், அதற்கான போலி ஆவணங்கள், ஒரே முகவரியில் நூற்றுக்கு மேற்பட்ட கும்பல் வாக்காளர்கள் என கூச்ச நாச்சமில்லாமல் அட்டூழியங்களை அரங்கேற்றி உள்ளது, தேர்தல் ஆணையம்.
பிரேசிலில் ஒரு பியூட்டி பார்லரில் சிகை அலங்காரம் செய்யும் ஒரு பெண்ணின் பழைய புகைப்படத்தை எப்படியோ இணையத்தில் திருடிப் பயன்படுத்தி, இந்தியாவில் 22 போலி வாக்காளர் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ள. பிரேசிலில் அவரது ஒரிஜினல் பெயர் லாரிசா நேரி. இந்தியாவின் வாக்காளர் அட்டையில் அவரது ஒரே புகைப்படம் சரஸ்வதியாக, லஷ்மியாக, சீமாவாக, ஸ்வீட்டி…என்பதாக என 22 பெயர்களில் உள்ளது!
தென்கிழக்கு பிரேசிலில் பெலோ ஹொரிசாண்டே நகரில் வசிக்கும் அந்த 29 வயதுப் பெண் லாரிசா நேரி, ’’இந்தியாவிற்கே நான் போனதில்லை. சுமார் எட்டாண்டுகளுக்கு முன் என் நண்பரான பெர்ணாண்டோ என்னை ஒரு போட்டோ எடுத்தார். அதை அவர் சோசியல் மீடியாவில் போட்டு இருந்தார். அந்த என் போட்டோவை பயன்படுத்தி அங்கே மோசடி செய்து கொண்டிருக்கிறார்கள். என்னை இந்தியராக சித்தரித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்! இது பற்றி விளக்கம் கேட்க ஏகப்பட்ட பேர் எனக்கு போன் செய்கிறார்கள். எனக்கு ஆச்சரியமாகவும், அச்சமாகவும் உள்ளது. இது என்ன பைத்தியக்காரத்தனம்? எந்த மாதிரியான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?’’ எனப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய தேர்தல் முறைகேடுகள் சர்வதேச அளவில் பிரபலமாகி சந்தி சிரிக்கிறது.
எங்கோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வேறொரு நாட்டில் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் இந்திய வாக்காளர் பட்டியலில் 22 பெயர்களில் இருந்ததற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்..?
அவருக்கு 22 முகவரிகளையும், 22 தாய், தந்தையர்களையும் உருவாக்கி வாக்காளர் அடையாள அட்டை உருவாக்க, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட எத்தனை போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்….?
உண்மையான வாக்களார்களின் ஆதார் அட்டையை ஏற்கமாட்டோம், ரேஷன் கார்டுகளை ஒத்துக் கொள்ள மாட்டோம்.. என சர்ச்சை செய்யும் தேர்தல் அதிகாரிகள் அத்தனை போலி ஆவணங்களுக்கு எப்படி உடன்பட்டனர்?
இத்தனை தில்லாலங்கடிகளை தில்லாக செய்து தர தங்களை சுற்றிலும் எத்தனை கேடிகளை இவர்கள் தயார்படுத்தி வைத்திருக்கின்றனர்…?
இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் கல்லூளி மங்கனாக இருப்பவர்களை இந்திய சட்டப்படி தண்டிக்க வழியில்லை என்ற திமிரில் அவர்கள் குற்றசாட்டுகள் வைத்த ராகுல் காந்தியையே குற்றவாளியாகச் சித்தரிக்க மிரட்டுகிறார்கள். எழுத்துபூர்வமாக நான் கூறுவது எல்லாம் உண்மை தான் என உறுதி மொழியுடன் புகார் தரச் சொல்லி கேட்கிறார் தேர்தல் ஆணைய அதிகாரி. திருடியவனிடமே நீதி கேட்டால், அவன் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
(சாவித்திரி கண்ணன்)
அறம் இணைய இதழ்
https://aramonline.in/23234/fraudlent-election-commission/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு