பாஜக அரசு பக்கபலமாக இருக்கும் வரை ஊழல் செய்த எந்த திமுக அமைச்சர் மீதும் தவெக அரசால் நடவடிக்கை எடுக்க முடியாது
சாவித்திரி கண்ணன்
ஒருவித தெனாவட்டலுடன் சிங்கப்பூரில் இருந்து வந்த எவ.வேலு நடந்து வந்த போது வெளிப்பட்டதே ஓரு உடல் மொழி…!
அதற்கான விடை நேற்று தெரிந்துவிட்டது.
மேலிடத்தில் பாஜக அரசு எங்களுக்கு பக்கபலமாக இருக்கும் வரை ஊழல் செய்த எந்த திமுக அமைச்சர் மீதும் தவெக அரசால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது உச்ச நீதிமன்றத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
முகுல்ரோத்தகி; பிரதமர் மோடியின் மிக நம்பிக்கைக்குரியவர். மோடி அரசின் முதல் அட்டர்னி ஜெனரல். இவர் தான் இன்று உச்ச நீதிமன்றத்தில் எ.வ.வேலு வழக்கில் ஆஜரானவர்.
முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இவ்வாறு பேசியுள்ளார்;
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது; இப்போது இது ஆரம்பம்தான். ஆட்சி மாறிய அடுத்த நிமிடம் முதல் எஃப்ஐஆர்கள் பதியப்படுகின்றன. இன்னும் பல வழக்குகள் வரும். எ.வ.வேலு, முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்; பழிவாங்கும் நோக்கத்துடன் இதனைச் செய்கின்றனர். இந்த விளையாட்டு எல்லாம் எங்களுக்கும் தெரியும்; நாங்களும் தயாராகவே இருக்கிறோம்’’ என்றார்.
முன்னதாக எ.வ.வேலுவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு எதிராக சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுத்தது கவனிக்கத்தக்கது;
# விசாரணைக்காக நேரில் ஆஜராகும் நபரை ஏன் ’தேடப்படும் குற்றவாளி’ என அறிவிக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்?
# லுக் அவுட் நோட்டீஸ் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என தமிழக அரசு நினைப்பது ஏன்?
நீதிபதிகளின் இந்தக் கேள்விகள் நியாயமானவை தான்.
விசாரணைக்கு நேரில் ஒருவர் ஆஜராகிவிட்ட நிலையில், லுக் அப் நோட்டீஸ்க்கு அவசியமில்லை தான்.
அதே சமயம் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி வைத்த வாதம் கவனிக்கத்தக்கது.
''ஏற்கனவே தன்னை விசாரணைக்கு உட்படுத்த போகிறார்கள் என்ற நிலையில் சிங்கப்பூர் போனவர். ஆகவே நாளையே தீடீரென்று அவர் வெளிநாடு போகலாம். ஆகவே, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாவது உத்தரவு போட வேண்டுகிறேன்’’ என்பதையும் நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
''எ.வ.வேலு மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏன் வாசிக்க வேண்டும். அது, இந்த லுக் அப் நோட்டீஸ் விவகாரத்திற்குள் வராது'' எனக் கூறிவிட்டனர்!
எ.வ.வேலு விவகாரத்தில் தவெக அரசின் முதல் தவறு அவரை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அருண் அவர்களை நியமித்தது. தற்போது அவரது செயல்பாடுகள் தெரிய வந்து தூக்கிவிட்டாலும், லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டு தொடர்பாக எ.வ.வேலுவுக்கு முன்னதாக தெரிவித்தது, பிறகு அவர் சிங்கப்பூருக்கு விமான டிக்கெட் எடுத்த தகவல் தெரிய வந்த போதும் அமைதி காத்தது..என அருண் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை செய்த திருவிளையாடலின் விளைவை தவெக அரசு தற்போது அனுபவிக்கிறது.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் எ.வ.வேலு கைது செய்யப்படுவதற்கு தடை போட்டார்.
அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ''நீதிபதி இளந்திரையன் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மனுவில், கைது நடவடிக்கைக்கு முழுமையான தடையை (blanket embargo) வழங்கியது தவறு. இது குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரும் மனுக்களை முன்ஜாமீனுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் கூறியதை மீறியுள்ளது’’ என்றார்.
செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பிக்கும் முன் ஜாமீன் வழங்கியதும் இளந்திரையனே. இவரும் ஜி.ஆர்.சுவாமிநாதனைப் போல காவி ஆதரவுக்கு பேர் போனவர் என்கிறார்கள், நீதிமன்ற வட்டாரத்தில்!
ஆக, மத்திய பாஜக அரசின் அரவணைப்பும், நீதித் துறையின் கருணைப் பார்வையும் திமுகவுக்கு பரிபூரணமாக இருப்பதால், திமுகவின் எதிர்கால அரசியல் பாதையை பாஜக தான் தீர்மானிக்கும்.
சரியாகச் சொல்வதென்றால், திமுக தோற்றது தொடங்கி, அதற்கு கட்டளையிட்டு இயக்கும் அதிகாரத்தை பாஜக தானே எடுத்துக் கொண்டது. அதன் விளைவே எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க திமுக ஒத்துக் கொண்டது.
மீண்டும் அப்படி ஒரு கட்டளையை பாஜக திமுகவிற்கு தரலாம் என்பதைத் தான் சூசகமாக பாஜகவின் தொங்குசதையான டி.டி.வி.தினகரன் ''வருங்காலத்தில் திமுகவும், அதிமுகவும் கைகோர்க்க வாய்ப்புள்ளது’’ எனப் பேசியதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஏனெனில், 35 சதவிகிதம் கொண்ட தவெக தற்போது காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக்.. என மேலும் 10 சதவிகிதம் சேர்ந்து 45 சதவிகிதமாகும் போது முறையே 20,22 சதவிகிதம் மட்டுமே உள்ள அதிமுக அணியில் திமுகவும் சேர்ந்தால் தான் சமாளிக்க முடியும் எனக்கூறி நியாயம் கற்பிக்கும். இந்த அணிக்குள் பாஜகவும் ஏற்கனவே உள்ளது.
இதன் மூலம் திமுக எதிர்ப்பு அரசியலில் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருந்த அதிமுக நிச்சயம் மேலும் பலம் இழக்கும்.
பாஜக எதிர்ப்பில் மட்டுமே பலமாகத் திகழ்ந்த திமுகவும் வலுவிழக்கும்.
அதே சமயம் பாஜக, திராவிட இயக்கங்கள் மற்றும் தவெக என மூன்றுக்கும் எதிரான வாக்கு வங்கியை குறி வைத்து செயல்பட அண்ணாமலைக்கு பாஜக பின்னிருந்து துணை புரியும்.
ஆம், கடந்த ஆட்சி காலத்தில் பாஜக எதிர்ப்பு அரசியலை பேசிக் கொண்டே திமுக செய்த பாசாங்கு அரசியலை வருங்காலத்தில் அண்ணாமலை செய்வார்.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/38027427596848000/?rdid=AYlofE936q8mIMSk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு