பொருளாதார அவசரநிலை மற்றும் மந்தநிலையை நோக்கி நாட்டை நகர்த்தும் மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

பொருளாதார அவசரநிலை மற்றும் மந்தநிலையை நோக்கி நாட்டை நகர்த்தும் மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

சென்ற மாதத்தின் (மே 2026) மத்தியில் மோடி தனது 12 ஆண்டுகால ஆட்சியின் தோல்விகளை ஒப்புக்கொள்ளும் விதமான கருத்துக்களைப் பேசினார். இந்த தசாப்தமே நெருக்கடிகளால் சூழ்ந்துள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் இந்தியாவில் மட்டுமின்றி உலகில் பெரும்பகுதியினர் வறுமையை நோக்கி செல்வார்கள் என்பதையும் ஒப்புக் கொண்டார். இந்த நெருக்கடியானது இந்தியாவிற்கு மட்டும் பிரத்தியேகமானதன்று; இது உலகு தழுவியது. 

ஏகாதிபத்தியங்கள் தங்களின் நெருக்கடிகளை தீர்த்துக் கொள்ள காலனி நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்றவும் அவற்றின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் மூர்க்கமான போட்டியில் ஈடுபடுகின்றன. உடன்படிக்கை ஒப்பந்தங்கள் மூலமும் - உடன்படாத நாடுகள் மீதான யுத்த நடவடிக்கைகள் மூலமும் காலனிகளை மறுபங்கீடு செய்து வருகின்றன. வழக்கமான மற்றும் நவீன ஆற்றல் சக்திகள் மீதான ஏகபோகத்தை நிலைநாட்டவும், இன்றைய அதி நவீன தொழில்நுட்பங்களுக்கு தேவையான அரிய கனிம வளங்களுக்காகவும், சிப் - செமிகண்டக்டர் உற்பத்திக்காகவும், அவற்றின் சந்தைக்காகவும் உலகை மறுபங்கீடு செய்ய அமெரிக்காவும் சீனா-ரஷ்யாவும் மிக தீவிரமான பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. அதன் பகுதியாக மத்திய கிழக்கில் கொட்டிக் கிடக்கும் எரிசக்தி ஆற்றலுக்கான மேலாதிக்கப் போட்டியில் அப்பிராந்தியத்தை யுத்தக் களமாக மாற்றியுள்ளது. அரிய கனிம வளம், சிப் - செமிகண்டக்டர் மீதான மேலாதிக்கப் போட்டியில் இந்தோ பசிபிக் பிராந்தியத்தையும் - ஆர்டிக் பிரேதசங்களையும் யுத்த தயாரிப்பு களமாக மாற்றி வருகின்றன. வெனிசுலா, உக்ரைன் போன்ற லத்தீன் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் மீதும் கூட தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. ஏகாதிபத்தியங்களின் மீ-லாபத்திற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே தவிர்க்க முடியாமல் நெருக்கடிக்கும் யுத்த தயாரிப்புக்கும் இட்டுச் செல்கின்றன. உலகை போர்க்களமாக மாற்றும் இவர்களின் கொள்கைகள் மிகை உற்பத்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மேலும் ஆழப்படுத்துகின்றன. உலக நாடுகள் அனைத்தையும் மந்தநிலைக்கும் நெருக்கடிக்கும் இட்டுச் செல்கின்றன. 

ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கும் இத்தகைய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை மோடி அரசு தடையின்றி இறக்குமதி செய்து அமல்படுத்துவதன் காரணமாக இந்தியாவும் அத்தகையதொரு பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டை அமிர்த காலத்திற்கு அழைத்துச் செல்வதாக வாய்ச்சவடால் அடித்த மோடி அரசு இருண்ட காலத்திற்குள் தள்ளி வருவதைப் பார்த்து வருகிறோம். அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடிகளை இந்திய உழைக்கும் மக்களின் தலையில் சுமத்தி பாசிச காட்டாட்சியை அரங்கேற்றி வருவதையும் எதிர் கொள்கிறோம். மென்மேலும் நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவுக்கு தாரைவார்த்து பொருளாதார அவசரநிலை மற்றும் மந்தநிலையை நோக்கி நாட்டை நகர்த்தி வருகிறது. 

வறுமை, விலைவாசி உயர்வு, கடன் சுமை, வேலையின்மை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்கள்

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி - GDP per capita) வீழ்ச்சியடைந்து பங்களாதேசத்தை விட மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இவர்கள் கூறும் ஜிடிபி வளர்ச்சி என்ற பொய்யான கட்டமைப்புகளுக்கும் கள யதார்த்தத்திற்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது என்பதையும் கீழுள்ள தகவல்கள் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

கார்ப்பரேட்களுக்கான வரிச் சலுகையாக பல லட்சம் கோடியைத் தாரை வார்த்தாலும் இவர்கள் எதிர்பார்த்த அந்நிய முதலீடுகள் வரவில்லை. மார்ச் 2026 - ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 13.3 பில்லியன் டாலர் நிகர அந்நிய முதலீடுகள் சரிந்துள்ளன. (அதாவது புதிய முதலீடுகள் வெறும் 0.4 பில்லியன் டாலர்தான் வந்துள்ளன. 13.7 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளன). இந்திய பங்குச் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. சுயசார்பு உற்பத்திமுறையைச் சாராமல் அந்நிய ஊகமூலதனத்தையே நம்பி இயங்கும் இந்திய பொருளாதார வளர்ச்சி பிம்பங்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. 

உலக வங்கி நிர்ணயம் செய்துள்ள வறுமைக் கோடு மதிப்பீடானது நாளொன்றுக்கு 3 டாலராகும் (சுமார் ரூ300 ஆகும்). உலக வங்கி கூறும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட இந்திய மக்கள் தொகையில் சுமார் 35 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே தான் வாழ்கின்றனர். ஆனால் இந்தியாவில் ஏற்கெனவே சுமார் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் ரேஷன் அரிசியை நம்பியே தங்கள் பசியை போக்கிக் கொள்ளும் அவல நிலையில் வாழ்கின்றனர் என்பதும் நாம் அறிந்ததே. கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.35 செலவிடுவோரும், நகர்ப்புறங்களில் ரூ.43 செலவிடுவோரும் வறுமைக் கோட்டிலிருந்து விடுபட்டவர்களாகவும், இதனால் இந்தியாவில் வறுமைக் கோடு 5% சதவிகிதத்திற்கும் கீழே சென்றுவிட்டதாகவும் - இது மோடியின் கடந்த தசாப்த கால ஆட்சியின் சாதனையாகவும் தனக்குத் தானே புகழ் பாடிக் கொண்டது இந்த மோசடி அரசு. இந்திய குழந்தைகளில் 35% சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் போதிய வளர்ச்சியின்றி சிக்கித் தவிக்கின்றனர். பெண்களில் 55% சதவிகிதம் பேர் ஊட்டச்சத்தின்மையில் நொடிந்து போகின்றனர். அதேபோல் சரிவிகித உணவின்மையால் மறுபுறம் உடல்பருமன் நோயிலும் வயதுவந்தோர் சிக்கித் தவிக்கின்றனர். ஏழ்மையை ஒழிப்பதாகக் கூறி ஏழைகளை பசி, பட்டினி, நோய்நொடிகளினால் கொன்றொழித்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களையும் கூட ஏழ்மை நிலைக்குத் தள்ளி வருகிறது பாஜக அரசு. 

2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு மொத்த விலை பணவீக்கம் (Wholesale price index) 8.3% சதவிகிதம் அளவிற்கு சர்ரென்று உயர்ந்துவிட்டது. இதைத் தொடர்ந்து மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதங்களுக்குள்ளாக பெட்ரோல் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது ரூ.100 லிருந்து ரூ.110ஐ தொட்டுவிட்டது. டீசல் விலை பெட்ரோலுக்கு இணையாக ரூ.100 ஐ தொட்டுவிட்டது. சமையல் காஸ் விலை 2 முறை உயர்த்தப்பட்டு சிலிண்டருக்கு ரூ.90 உயர்ந்துவிட்டது. வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டரின் தட்டுப்பாடு காரணமாக அதன் விலை கள்ளச்சந்தையில் இரட்டிப்பாகி விட்டது. சரக்கு போக்குவரத்து செலவினங்களும் லாரி வாடகைகளும் அதிகரித்துவிட்டன. இதனை தொடர்ந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும், கட்டுமானப் பொருட்களின் விலையும் ஜெட் வேகத்தில் - குறிப்பாக ஒட்டுமொத்த உணவு தானியங்கள் 12.4% சதவிகிதம், சமையல் எண்ணெய் 18.2% சதவிகிதம், மருந்துப் பொருட்கள் 7.3% சதவிகிதம், கட்டுமானப் பொருட்கள் 15.1% சதவிகிதம் உயர்ந்துவிட்டன. மக்கள் தங்கள் வருமானத்தில் 60% சதவிகிதம் வரை செலவழித்தாலும் கூட 3 வேளையும் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள முடியாத மோசமான நிலை உள்ளது. மேலும் ஈரான் போர்ச் சூழலால், உலக அளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி (Energy crisis) மற்றும் பணவீக்கத்தின் காரணமாக இந்த விலையேற்றங்கள் வரும் நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. 

இந்தியாவில் குடும்பத்தின் மாத வருமானம் ரூ.15000க்கும் மேல் உள்ளவர்களை நடுத்தர வர்க்கத்தினர் என அரசு மதிப்பீடு செய்கிறது. ஆனால் மாத வருமானம் ரூ.40000க்கும் மேல் இருக்கும் குடும்பங்கள் கூட தங்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நெருக்கடியான சூழலில் வாழ்கின்றனர். இந்திய விவசாயம் முற்றாக ஒழிக்கப்பட்டதால் கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு புலம்பெயரும் மக்கள் இருப்பிட வாடகையைக் கூட தங்களின் வருமானத்தின் மூலம் செலுத்தும் சக்தியின்றி தவிக்கின்றனர். பணவீக்கமும் - கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வும் அவர்களின் உண்மையான ஊதியத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது. 12 மணி நேரத்திற்கு மேல் உழைத்தாலும் அவர்களால் சேமிக்கவே முடியாத மோசமான சூழலை உருவாக்கியுள்ளது மோடி அரசு. கல்விக் கட்டணங்கள், மருத்துவ செலவினங்கள் இவற்றைக் கூட சமாளிக்க முடியாமல் கடன்வலையில் பல நடுத்தர குடும்பங்கள் சிக்கித் தவிக்கின்றனர். நிச்சயமற்ற வேலைப் பாதுகாப்புச் சூழலும் இவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

மத்திய புள்ளிவிவர அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படியே வேலையின்மை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 5.2% சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. இவர்கள் கணக்கிடும் வேலையின்மை கணக்கீடு முறையே மோசடியானதாகும். ஒரு வாரத்தில் 1 மணி நேரம் ஒருவர் வேலை செய்தாலே அவர் வேலைவாய்ப்பு பெற்றவராகக் கணக்கிடுகிறது மோடி அரசின் இந்த புள்ளிவிவர அமைச்சகம். அப்படி வாரத்திற்கு 1 மணி நேரம் கூட வேலை கிடைக்காதோரின் எண்ணிக்கைதான் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 5.2% சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துவிட்டது எனில், இந்த ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையின் அவல நிலையை என்னவென்று சொல்வது(?!). 

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள "State of working india 2026" அறிக்கையின் படி, கடந்த 20 ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் இரட்டிப்பாகி உள்ளது. 25 வயதுக்குட்பட்ட படித்த இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 40% சதவிகிதம் நிலவுவதாகத் தெரிவிக்கிறது. அத்தகையோரில் பட்டதாரிகளின் பங்கு 67% சதவிகிதத்துக்கும் அதிகமாகும். ஒரு பக்கம் உயர்கல்விக்காக ஒவ்வொரு மாணவனிடமிருந்தும் லட்சக்கணக்கான பணங்களை கொள்ளையடிக்கின்றன கல்வித்துறை கார்ப்பரேட்கள்; கடன் வாங்கி வயிற்றைக் கட்டிப் படித்தாலும் படித்த பட்டதாரிகளில் 3ல் 2 பேருக்கு வேலை கிடைப்பதில்லை. அவர்களுக்கு போதிய திறன் இல்லை என்று கூறி நிராகரிக்கிறது - இது எவ்வளவு பெரிய ஊழல்(?!). மேலும், ஒட்டு மொத்த வேலைவாய்ப்பில் வெறும் 6.7% சதவிகிதம் மட்டுமே நிரந்தர வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். அதிலும் வெறும் 3.7% சதவிகிதம் மட்டுமே கடுமையான பணிச்சுமையில்லாத பாதுகாப்பான வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அப்படியெனில் வேலையில் பங்கேற்கும் சக்திகளில் (Labour force) 93.3% சதவிகிதம் பேரை எவ்வித பணி உத்திரவாதமும் இல்லாத மிக மோசமான அவலநிலையில் தள்ளியுள்ளது மோடி அரசு. 

இந்த லட்சணத்தில்தான் மோடி அரசின் 12 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள்(??) இருக்கும் நிலையில், "வரும் காலம் இந்த சாதனைகளை துடைத்தெறிந்து நாட்டை மேலும் வறுமைக்குத் தள்ளும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக" மோடியே பீதியூட்டுகிறார். அவ்வாறெனில் நாடு பஞ்சம், பட்டினி நிறைந்த இருண்ட காலத்தை நோக்கி செல்வதை உணர முடிகிறது. 

இந்தியாவை அமெரிக்காவின் முழுமையான புதிய காலனியாக மாற்றி வரும் பாஜக அரசு 

90களில் இந்தியாவில் உலகமய - தனியார்மய - தாராளமயக் கொள்கைகளை காங்கிரசு அரசு அமல்படுத்தத் துவங்கியது. அமெரிக்காவுடன் காட், டங்கல் உள்ளிட்ட அடிமைசாசன ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றியது. 2008ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி உலகமயக் கொள்கைகளின் தோல்விகளை அப்பட்டமாக்கியது. தோல்வியிலிருந்து இந்திய அதிகார வர்க்கம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. முந்தைய காங்கிரசு அரசின் அதே அரசியல் - பொருளாதாரக் கொள்கைகளையே 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் தொடர்ந்தது. சொல்லப்போனால், அதானி - அம்பானிகளுக்காக அமெரிக்காவை நக்கிப் பிழைக்கும் தனது திருப்பணியைத் தீவிரமாக்கியது. 

அமெரிக்க கார்ப்பரேட்களின் நெருக்கடிகளை இந்திய உழைக்கும் மக்களின் தோள்களில் மேலும் சுமத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி அமலாக்கம், பொதுச்சொத்துகளை விற்று பணமாக்கல் திட்டம், கதிசக்தி உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற பொருளாதார கட்டமைப்பை சீர்செய்யும் திட்டங்கள் எனும் பெயரில் அமெரிக்காவிற்கான உற்பத்திக் கூடாரமாக இந்தியாவை மாற்றியமைத்தது மோடி அரசு. இந்திய பாதுகாப்புத் துறையையே அமெரிக்காவின் அடியாள்படையாக மாற்றும் 4 அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களிலும் ஈடுபட்டது. அவற்றின் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு "காம்பாக்ட்" திட்டம் எனும் அடுத்த 10 ஆண்டிற்கான அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு நாட்டை அமெரிக்காவின் முழுமையான புதிய காலனியாக மாற்றியுள்ளது. இதன் மூலம் மோடி அரசு முக்கினால் கூட டிரம்ப் மாமாவிடம் கேட்டுவிட்டுத்தான் முக்க வேண்டும் என்ற அவலநிலையை உருவாக்கியுள்ளது. 148 கோடி மக்களின் இறையாண்மையை அமெரிக்க சிறுகும்பல் (ஏகபோக கார்ப்பரேட்களின்) அதிகாரத்தின் காலடியில் சாஷ்டாங்கமாக கிடத்தியுள்ளது "விஷ்வகுரு" மோடி அரசு. 

காம்பாக்ட் - குவாட் திட்டங்களின் அடிப்படையில் நாட்டை ஒட்டச்சுரண்டும் ஒப்பந்தங்கள் 

சென்ற பிப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட "காம்பாக்ட்" திட்டத்தின் முக்கியமானதொரு அம்சமான 500 பில்லியன் டாலர் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பல்வேறு கட்ட பேரங்கள் நடைபெற்றன. டிரம்பின் வரி பயங்காரவாதம், அதானி மீதான வழக்குகள் மூலம் மோடி அரசை மண்டியிட வைத்தது டிரம்ப் கும்பல். முழுமையானதொரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஒரு இடைக்கால ஒப்பந்தத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்றுக்கொண்டு பிப்ரவரி முதல் நடைமுறைப் படுத்த துவங்கிவிட்டது. இதன் பிறகே அதானி மீதான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன; இந்திய கார்ப்பரேட்களின் ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் தண்டனை வரிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதானி - அம்பானி போன்ற சிறு கும்பலுக்காக ஒட்டுமொத்த நாட்டின் வர்த்தகம் - விவசாயம் - இறையாண்மையையும் அமெரிக்காவிற்கு தாரை வார்த்துள்ளது. ஜூலை மாதம் இறுதிக்குள் இந்த ஒப்பந்தத்தை நிரந்தமான ஒன்றாக இறுதி செய்வதற்கான முயற்சிகளில் இரு அரசுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

அமெரிக்காவின் தொழிற்துறை மற்றும் விவசாயப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையை முழுமையாக திறந்துவிடவுள்ளது. கோதுமை, அரிசி, மக்காச்சோளம் போன்ற முக்கிய உணவுப் பயிர்கள், பால் பொருட்கள், கோழி இறைச்சி ஆகியவை அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாக பாஜக கூறினாலும், பருத்தி, உலர் தானியங்கள், உலர் பருப்புகள், பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், எத்தனால், கால்நடை தீவனத்திற்கான சிவப்பு சோளம் ஆகியவை இந்த தற்காலிக ஒப்பந்தத்தின் மூலம் வரியின்றி (பூஜ்ஜிய வரியுடன்) இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. (இந்திய ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் மார்கரின், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட தாவர எண்ணெய்கள், பழச்சாறுகள், ரொட்டி, பிஸ்கட், சாக்லேட், பாஸ்தா, ஆட்டிறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை வரியின்றி இங்கு கொட்டிக் குவிக்கப்படவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது). இதன் மூலம் கால்நடை உள்ளிட்ட இந்திய விவசாயத் துறை முற்றிலுமாக நாசமாக்கப்படவுள்ளது. ஏற்கெனவே பல லட்சம் விவசாயிகளை கொன்று புதைத்த மோடி அரசு மிச்சமீதமிருக்கும் வர்த்தகத் தடைகளையும் அகற்றி ஒட்டுமொத்த விவசாயிகளையும் கூண்டோடு கொன்று புதைக்கத்தான் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா நினைத்தால் இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை ஒரு சில நாட்களுக்குள் ஏற்படுத்திவிட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது மோடி அரசு.

உயிர்காக்கும் மருத்துவத் துறையிலும் இதே நிலைதான். மருத்துவ உபகரணங்களையும் மருந்துப் பொருட்களையும் எவ்வித வரி தடையுமின்றி இறக்குமதி செய்ய இந்திய மருத்துவச் சந்தையைக் கட்டுப்படுத்தவும் இந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. அதேபோல், உயர்கல்வி மேம்பாடு, புதிய தொழில்நுட்பக் கூட்டுறவு எனும் பெயரில் இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கல்வியும் முக்கிய வர்த்தகப் பொருளாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளிலும் அமெரிக்காவின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை புகுத்தவும் இந்த வர்த்தக ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. 

மேலும் தொழிற்துறையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய அளவிலான கொள்முதல் பொருட்களில் அமெரிக்கப் பொருட்களுக்கே முன்னுரிமை (Buy American Policy) அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கும் கட்டுப்பட்டுள்ளது மோடி அரசு. இதன் மூலம் ஏ.ஐ. உள்ளிட்ட இன்றைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு தேவையான சிப், செமிகண்டக்டர் உள்ளிட்ட அனைத்து மின்னணு உபகரணங்களுக்கும் பாதுகாப்புக்கும் அமெரிக்காவை நம்பியே இருக்க வேண்டும் என்ற நிலையையும் உருவாக்கியுள்ளது.

மறுபுறம், இத்தகைய சிப் போன்ற உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்ய தேவையான அதிமுக்கிய கனிமங்களை இந்தியச் சுரங்கங்களில் இருந்து கொள்ளையடிக்கவும், அவற்றை மெருகேற்றி பதப்படுத்தவும், அதனால் உருவாகும் கழிவுகளை இங்கு கொட்டிக் குவிக்கவும், அதை மறுசுழற்சி செய்யவும், இதற்காக அருமண் தனிம வழித்தடங்கள் (Rare Earth corridors) அமைக்கவுமானதொரு முக்கிய ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது பாஜக அரசு. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஏற்கெனவே பைடன் ஆட்சியிலேயே கனிமங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு (Mineral Security Partnership - MSP) உருவாக்கப்படிருந்தது. அது "குவாட்" கூட்டமைப்பின் திட்டங்களுக்கு உட்பட்டு துவங்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு குவாட் கூட்டமைப்பு செயலற்று இருந்தது. டிரம்ப் அரசு உக்ரைனிலும், ஈரானிலும், தைவானிலும் தனதுக் கவனத்தை குவித்து வந்தது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட குவாட் திட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி அமெரிக்காவை குவாட் கூட்டமைப்பின் திட்டங்களை புதுப்பிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. லித்தியம், கோபால்ட், நிக்கல், அருமண் தாதுக்கள் போன்ற அதிமுக்கிய கனிமங்களில் 80% சதவிகிதத்திற்கும் மேலானவற்றை சீனா ஏகபோகமாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இது அமெரிக்காவின் ஏகபோகத்திற்கு சவாலாக விளங்குவது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் சிப் உற்பத்தியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாகவும் சீனாவின் இந்த ஏகபோகம் விளங்குகிறது. ஆகையால்தான் மீதமுள்ளவற்றையாவது தனது கட்டுக்குள் கொண்டு வர பாக்ஸ் சிலிக்கா (Pax silica) என்ற கொள்கைத் திட்டத்தை கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா உருவாக்கியது. பைடன் முன்வைத்த MSP கூட்டமைப்பின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளை கொண்டு போர்ஜ் (FORGE - Forum on Resource Geostrategic Engagement) எனும் கூட்டமைப்பை இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் உருவாக்கியது. இக்கூட்டமைப்பின் மூலம் துவங்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில்தான் சென்ற மாதம் (மே 2026ல்) இந்தியாவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பின் வெளியுறத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில், இந்திய அதிமுக்கிய கனிமங்களை அமெரிக்கா கட்டுப்படுத்தும் வகையிலான முக்கிய கனிமங்கள் ஒப்பந்தத்தில் பாஜக அரசு கையெழுத்திட்டது. 

இவ்வாறு இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவுக்கு முழுமையாகத் தாரைவார்க்கும் புதிய காலனிய ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு.

இந்தியாவைப் பாதிக்கும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியும் மோடி அரசின் டாலர் சார்பு கொள்கைகளும்

2026 பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது தொடுக்கப்பட்ட அமெரிக்க -இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து மத்தியகிழக்குப் போர் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாத துவக்கத்தில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஜூன் 10-12 தேதிகளில் மீண்டும் தாக்குதல்கள் துவங்கின. அதைத்தொடர்ந்து ஜூன் 17 அன்று ஓர் இடைக்கால புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டிருந்த ஹார்மூஸ் நீரிணை மீண்டும் பகுதியளவு மூடப்பட்டுள்ளது. இறுதியான அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த நிலை நீடிக்கும் அபாயமும் உள்ளது. ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை 3 மடங்கு உயர்ந்து இருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேலும் கச்சா எண்ணெய் விலையேற்றத்துக்கு வித்திடுவதோடு, பெட்ரோல், டீசல், எரிவாயு, உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளது. உலகளாவிய எரிசக்தி நெருக்கடியாக மாறியுள்ளது. 

அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மோடி அரசின் பிரிக்ஸ் கூட்டமைப்பு ஈடுபாடுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது. வரி பயங்கரவாதத்தை ஏவி ரஷ்யாவுடனான எண்ணெய் - எரிவாயு வர்த்தகத்தை முடக்கியது. அமெரிக்கா கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களிடமிருந்தே எண்ணெய் - எரிவாயு வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அம்பானியையும் மோடி கும்பலையும் மிரட்டி கட்டுப்படுத்தியது. இதை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்ட இந்தக் கும்பல் ரஷ்யாவுடன் ரூபாய் நாணயத்தில் ஈடுபட்ட வர்த்தகத்தை முற்றிலுமாகக் கைவிட்டது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் பெட்ரோ டாலர் நாணயத்திலான வர்த்தகத்தில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. டாலர் சார்புக் கொள்கைகளின் காரணமாக ரூபாய் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய நாணயத்தின் மதிப்பு ரூ.97ஐ தொட்டது. அது விரைவில் ரூ.100 ஐ தாண்டும் அபாய நிலையில் உள்ளது. உலக வங்கி, ஐஎம்ப், உலக வர்த்தகக் கழகம் போன்ற புதிய காலனிய நிறுவனங்களின் மூலம் டாலர் ஆதிக்கத்தை இந்தியா மீது சுமத்தி வருகிறது அமெரிக்கா. கச்சா எண்ணெயின் விலை உயர்வாலும் ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சியாலும் நாட்டின் அந்நிய செலாவணி (டாலர்) கையிருப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. கச்சா எண்ணெய் - எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்காவையும் டாலரையும் நம்பி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது. இது பணவீக்கத்திற்கும் அனைத்துப் பொருட்களின் விலையேற்றத்துக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இதனை ஈடுகட்ட நாட்டின் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் அமெரிக்காவுக்கு தாரை வார்த்து அவற்றை டாலராக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. 

எனவே தான் மோடி அரசு, விவசாயிகள் உர பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், மக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், பயணங்களைக் குறைக்கவும், எண்ணெய் - எரிவாயு பயன்பாட்டைக் குறைக்கவும், வீட்டிலிருந்தே வேலை செய்யவும், நாட்டிற்காக தங்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும் என இந்திய மக்களுக்கு போதனை செய்கிறது. ஏற்கெனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும், கொரோனா காலத்திலும் கூட இவ்வகையான அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை நடைமுறைப்படுத்தியது. தற்போதும் அத்தகைய எமெர்ஜென்சியை அமல்படுத்தியுள்ளது. நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் தேவைகளை குறைத்துக் கொண்டு தியாகங்களை செய்யக் கோரி நீலிக்கண்ணீர் வடிக்கிறது 

ஆனால், இதே மோடி அரசுதான் நாட்டில் எண்ணெய் -எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் எண்ணெயை சுத்திகரித்து நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்குமே அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. மேலும் நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவின் பெட்ரோ டாலர் வர்த்தகத்திற்காக இந்தியாவை பெட்ரோலிய சுத்திகரிப்பு மையமாக மாற்றுகிறது. இதன் மூலம் அம்பானி - அதானிகளும் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். அதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கித் தருவது, கார்ப்பரேட்களுக்கான மானியங்களை வாரி வழங்கி கார்ப்பரேட்களுக்கான வரியைக் குறைப்பது என இவர்களின் கொள்ளைக்கு சேவை செய்கிறது. மேலும் பெட்ரோல் - டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வராமல் அநியாய வரியை விதித்து மக்களை கொள்ளையடிக்கிறது. கார்ப்பரேட்களுக்கு வரிக் குறைப்பு மக்களுக்கு வரித் திணிப்பு என பல்வேறு மறைமுக வரிகளின் மூலம் மக்களின் இரத்தத்தை அட்டைப்போல் உறிஞ்சுகிறது. இந்தியாவில் இயங்கும் எரிசக்தி துறை கார்ப்பரேட்கள் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் உள்ளங்கையில் பொத்தி வைத்து பாதுகாக்கிறது மோடி அரசு. நாட்டு மக்களின் தியாகங்களையும் உழைப்பையும் அம்பானிகளின் லாபமாக மாற்றுகிறது. எரிசக்தி நெருக்கடி உள்ளிட்ட அனைத்து நெருக்கடிகளின் சுமைகளையும் உழைக்கும் மக்களின் தலையிலேயே சுமத்துகிறது. அமெரிக்கா - அம்பானி - அதானிகளுக்காக நாட்டு மக்களை காவு வாங்குகிறது. 

அமெரிக்கா - அதானி - அம்பானிகளுக்காக பாசிச ஆட்சியைக் கட்டியமைக்கும் பாஜக 

2016ல் அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்புகளால் இந்திய சிறுகுறு தொழில்களும், சில்லறை வர்த்தகமும் நொறுங்கியது. இந்தியாவின் பிரதான உற்பத்தி துறையாக விளங்கிய இந்த முறைசாரா சிறுகுறு உற்பத்தி துறை முழுமையாக முடங்கியது. நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளையும் கூட திவால் மற்றும் நிறுவன கையகப்படுத்தும் (Merger and acquisition) சட்டங்களை திருத்துவதன் மூலம் அம்பானி - அதானி போன்ற ஒரு சில பெரும் கார்ப்பரேட்களின் கையில் குவித்தது. பணமாக்கல் திட்டங்கள் மூலம் பொதுச் சொத்துக்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் கூட விட்டுவைக்கவில்லை. அவற்றையும் அதானிகளின் ஏகபோக வளையத்திற்குள் கொண்டு வந்தது. இதன் காரணமாக அமெரிக்காவை அண்டி பிழைக்கும் ஒரு சில கார்ப்பரேட்களின் கையில் நாட்டின் ஒட்டு மொத்த செல்வமும் வேகமாக குவியத் துவங்கியது. உலக பணக்காரர்களின் வரிசையில் அம்பானியும் - அதானியும் வேகமாக முன்னேறினர். நாட்டின் 90% சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களின் ஒட்டுமொத்த செல்வமும் சேர்த்தாலும் கூட இந்த ஒரு சில கார்ப்பரேட்களின் செல்வத்திற்கு இணையாகாது. அந்த அளவிற்கு செல்வக் குவிப்பும் பொருளாதார மையப்படுத்தலும் பாஜக ஆட்சியில் வேகமாக நடந்தேறியது. இந்த பொருளாதார மையப்படுத்துதலே அரசியல் மையப்படுத்துதலுக்கும் பாசிசத்திற்கும் வித்திட்டது. ஆகையால், அமெரிக்க நிதிமூலதனத்திற்கும் - அம்பானி - அதானிகளுக்கும் சேவை செய்யும் விதமாக பாஜகவால் பாசிச காட்டாட்சி கட்டியமைக்கப்பட்டு வருகிறது - விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட மக்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவிவருகிறது. இந்த சட்டவிரோத ஆட்சியை சட்டபூர்வமானதாகவே மாற்றியமைக்க பல்வேறு பாசிசச் சட்டங்களை அனுதினமும் கொண்டுவந்து அமல்படுத்துகிறது. அவற்றுள் குறிப்பாக:

  • நீட், கியூட், தேசியக் கல்விக் கொள்கை போன்றவற்றின் மூலம் மக்களின் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தையும் சந்தைப் பொருளாக்கி கல்வியை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கி அதை ஏகபோகப் பொருளாக மாற்றியுள்ளது. இத்தகைய தகுதித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பில் இருக்கும் தேசியத் தேர்வு முகமை மிகப் பெரிய ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகி வருகிறது. 
  • தூய்மை இந்தியா - ஸ்மார்ட் சிட்டி எனும் பெயரில் பெரு நகரங்களின் நிர்வாகத்தை தனியார் - பெரும் கார்ப்பரேட் மயமாக்கி உள்ளது. சிறிய நகரங்களும் - ஊராட்சிகளும் நிதி ஒதுக்கீடின்றி சுற்றுச்சூழல் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றன. நோய்கள் பெருகும் கூடாரமாக மாறியுள்ளன. மருத்துவத் துறையை உயிர்காக்கும் சேவைத்துறை என்பதிலிருந்து விலக்கி பணம் கொழிக்கும் சந்தையாக மாற்றியுள்ளது.
  • சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக CAA -NRC -SIR, வக்ஃபு வாரியச் சட்டம், பொது சிவில் சட்டம் போன்ற பாசிசச் சட்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களை நாடற்றவர்களாகவும் இரண்டாம் தர குடிமக்களாகவும் மாற்றுகிறது. 
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தையும் சட்ட மன்றத்தையும் எதிர்கட்சிகளில்லாத மன்றங்களாக மாற்றி ஒற்றைக் கட்சி சர்வாதிகார ஆட்சிமுறையை நிறுவத் துடிக்கிறது.
  • தகவல் தொழில்நுட்ப சட்ட திருத்தங்கள், ஒளிபரப்பு சட்ட திருத்தங்கள், குற்றவியல் சட்ட திருத்தங்கள் மூலம் ஜனநாயகக் குரல்களை நசுக்கி வருகிறது. ஜனநாயக சக்திகளுக்கும் இருந்த சட்ட பாதுகாப்புகளை செல்லாக் காசாக்கியுள்ளது. 
  • டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா எனும் பெயர்களில் தமிழ்நாடு, உத்திரபிரேதசம் (குறிப்பாக தலைநகரை சுற்றியுள்ள NCR மண்டலம்), கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களை அமெரிக்காவின் டிஜிட்டல் தேவைக்கான உற்பத்திக் கூடங்களாக (Hub) மாற்றி வருகிறது. உள்கட்டமைப்புத் திட்டங்களும் இத்தகைய உற்பத்திக்காகவும் இவற்றுக்கான கனிமவள சுரண்டலுக்காகவுமே துரிதகதியில் (கதிசக்தி) நடைமுறைப்படுத்தப் படுகிறது.  
  • வனப் பாதுகாப்புச் சட்டம், கனிமவளச் சட்ட திருத்தங்கள் மூலம் இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளங்களை வேதாந்தா, அதானி குழுமம் போன்ற பெரும் கார்ப்பரேட்களின் ஏகபோகமாக்கி வருகிறது. பழங்குடிகளையும் மலைவாழ் மக்களையும் மாவோயிஸ்ட்கள் அழிப்பு எனும் பெயரில் வேட்டையாடி வருகிறது. 
  • இந்திய விவசாயத்தை முற்றிலும் காவு வாங்க வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதை எதிர்த்த விவசாயிகளின் போராட்டத்தால் அதை பின் வாங்கியது. ஆனால் அதன் முக்கிய அம்சங்களை மறைமுகமாக வெவ்வேறு சட்டத் திருத்தங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. விதைச் சட்ட மசோதா, மின்சார சட்டத் திருத்தங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியங்களை வெட்டியுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டியுள்ளது. விவசாயிகளின் அடிப்படை கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்காமல் ஏமாற்றி வருகிறது. மாறாக அமெரிக்காவில் மானியங்களை கொட்டி விளைவிக்கப்படும் விவசாய - பால் பொருட்களை இந்திய சந்தையில் கொட்டிக் குவித்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது. அப்பொருட்களுடன் போட்டிப் போட முடியாமல் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன அல்லது நிலங்களை பெரும் கார்ப்பரேட்கள் கைப்பற்றி வருகின்றன.
  • தொழிலாளர் சட்டங்களை திருத்தி அவர்களின் தொழிற்சங்க உரிமைகள், 8 மணி நேர வேலை, வேலை உத்திரவாத சூழல், கூட்டுப் பேர உரிமை, பணியிடப் பாதுகாப்பு, ஓய்வூதியம் என அனைத்து தொழிலாளர் உரிமைகளையும் பறித்து அவர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றி வருகிறது. குறிப்பாக கிக் (Gig), ஆன்லைன் பிளாட்ஃபார்ம் (Online Platform) தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கும் இச்சட்டங்களை விரிவுபடுத்தி அவர்களையும் கொடுமையான சுரண்டலுக்குள் கொண்டுவந்துள்ளது. ஏஐ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் வரவால் தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைத்து அவர்களிடமிருந்து 4 மடங்கு அதிக உழைப்பை சுரண்டுகிறது. ஆனால் அவர்களின் அடிப்படை பணிப்பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்ற உரிமைகளை நிராகாரிக்கிறது. 

இவ்வாறு பல்வேறு சட்ட திருத்தங்கள் மூலம் பாசிசத்தை நாடாளுமன்ற வழியிலேயே சட்டபூர்வமானதாகவே மாற்றி வருகிறது. மென்மேலும் நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீதே சுமத்தி அவர்களை நசுக்கி வருகிறது. 

நாடு முழுவதும் அதிகரித்து வரும் தன்னெழுச்சியான போராட்டங்கள் 

பாஜக ஆட்சி மக்கள் மீது சுமத்தி வரும் நெருக்கடியின் சுமை தாளாமால் விவசாயிகளும், தொழிலாளர்களும் தன்னெழுச்சியானப் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டம் கடந்த தசாப்தத்தின் எழுச்சியான போராட்டமாக அமைந்தது. 

கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால் தொழிலாளர்களின் வாழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் தொழிலாளர் சட்டங்களை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப் படுத்துவதைக் கட்டாயமாக்கியது மத்திய பாஜக அரசு. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, ஏப்ரல் 2026 டெல்லிக்கு அருகிலுள்ள உத்திரபிரதேசம் மாநில நொய்டா தொழிற்பேட்டையில் அடிப்படை ஊதிய உயர்வு கோரியும், 4 தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராகவும் தனியார் நிறுவனங்களால் சுரண்டப்படும் தொழிலாளர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம் தலைநகர் சுற்றியுள்ள NCR மண்டலம் முழுவதும் பரவியது. 4 நாட்கள் அமைதியான கோரிக்கைப் போராட்டமாகவே இப்போராட்டங்கள் தொடர்ந்தன. தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய - மாநில பாஜக அரசுகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கானப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மாறாக, அவர்களின் போராட்டத்தை வன்முறையாக மாற்றியது. நொய்டாவை கலவரப் பூமியாக மாற்றியது. போராடிய தொழிலாளர்களை கைது செய்து சிறையிலடைத்தது. 

கடந்த மாதம் (மே 2026) உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் "வேலையில்லாத இளைஞர்கள், சமூகத்தில் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போலச் செயல்பட்டு, ஊடகம் மற்றும் சமூக ஆர்வலர்களாக மாறி ஒட்டுமொத்த அமைப்பையும் தாக்குகிறாகள்" என்று நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களையும் அவமானப்படுத்தினார். இதை எதிர்த்து சில இளைஞர்கள் சமூக வலைதளத்தில் ஆம் நாங்கள் கரப்பான் பூச்சிகள்தான், கரப்பான் பூச்சிகளுக்கு அழிவில்லை எனக் கூறி காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) எனும் பெயரில் நையாண்டியாக சமூக வலைதள இயக்கத்தை உருவாக்கினர். ஆனால் அது யாரும் எதிர்பாராத அளவுக்கு மாபெரும் இயக்கமாக ஒரு சில வாரங்களிலேயே உருவெடுத்தது. கோடிக்கணக்கான இளைஞர்கள் அதில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஜூன் 6ம் தேதி இவர்கள் டெல்லியில் போராட்டக் களத்தில் குதித்தனர். நீட் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி முழங்கினர். தொடர்ந்து டெல்லியிலும், புனேவிலும், ஹைதராபாத்திலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சென்ற திமுக ஆட்சியில் தமிழ்நாட்டிலும் கூட சாம்சங் தொழிலாளர் போராட்டங்கள், துப்புரவுத் தொழிலாளர் போராட்டங்கள் எழுந்தன. 

இவ்வகையான போராட்டங்கள் அனைத்தும் பாஜக வின் பாசிச ஆட்சியில் நிலவும் அவலங்களுக்கு எதிரான மக்களின் - இளைஞர்களின் கோபங்களின் வெளிப்பாடாகவே உள்ளதே தவிர அவை சரியான கட்சி மற்றும் தலைமை வழிகாட்டுதலுடன் முன்னெடுக்கப்படவில்லை. அவர்களின் கோரிக்கைகளும் போராட்டக் குணங்களும் சரியானதே வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிகழும் அரசியலமைப்புக்குள்ளான பொருளாதார கோரிக்கைகளாகவே உள்ளன. குறிப்பாக காக்ரோச் ஜனதா கட்சியின் கோரிக்கைகள் குறைந்தபட்சம் தேசிய கல்விக் கொள்கை மற்றும்  நீட் தேர்வுகளை முற்றிலும் நீக்கக் கோரி கூட அமையவில்லை. அவர்கள் தேர்வு முறைகேடுகளை மட்டுமே கண்டிக்கின்றனர். சிபிஐ, சிபிஎம் கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் அரசியலில் கூட்டணி சச்சரவுகளிலேயே மூழ்கி விட்டன. திடமான போராட்டங்களை முன்னெடுக்காமல் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு விட்டன. 

நாட்டை இருண்ட காலத்திற்குள் தள்ளும் மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம் 

உலகமய - தாராளமய - தனியார்மயக் கொள்கைகளால் சீரழிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை காம்பாக்ட் - குவாட் உள்ளிட்ட புதிய காலனியத் திட்டங்கள் மூலம் பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களில் அமெரிக்காவுடன் ஈடுபட்டு நாட்டின் இறையாண்மையை மொத்தமாக தாரைவார்க்கிறது மோடி அரசு. அமெரிக்காவின் ஆணைகளுக்கு அடிபணிந்து சொந்த நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுகிறது. இத்தகைய நெருக்கடிகளை மூடி மறைத்து ஊடகங்களோ பாஜகவின் ஐ.டி. விங்காக மாறி மோடி புகழ் பாடுகின்றன. இந்தியாவின் சிறந்த பிரதமர் என கேவலமாக எழுதி குவிக்கின்றன. இந்த பொய் பிம்பங்களை உடைத்தெறிந்து இந்திய வரலாற்றிலிருந்தே துடைத்தெறியப்பட வேண்டிய மோசமான ஆட்சி இது என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். மோடி ஆட்சி தூக்கியெறியப்பட வேண்டிய ஆட்சி என்பதை ஆணித்தரமாக முன்னெடுக்க வேண்டும். 

விவசாயத்தையும், சிறுகுறு தொழில்களையும் முற்றிலும் சீரழித்து "மேக் இந்தியா ஃபார் அமெரிக்கா" கொள்கையை மூர்க்கமாக செயல்படுத்தும் மோடி ஆட்சியைத் தூக்கியெறிய தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய முதலாளிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும். சொந்த நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்கான அவர்களின் உண்மையான வளர்ச்சிக்கான சுதேசிய உற்பத்தியை வளர்த்தெடுக்காமல் நெருக்கடியைத் தீர்க்க முடியாது. சுதேசிய உற்பத்தியை நசுக்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் உள்ளிட்ட நிதியாதிக்க கும்பலை நாட்டை விட்டு விரட்டியடிக்காமல்; அதற்கு சேவைசெய்யும் தரகு கூட்டங்களை ஒழித்துக் கட்டாமல் நெருக்கடி தீராது. அரைகுறையாக இருக்கும் குறைந்தபட்ச உரிமைகள் கூட பறிபோகும் சூழலில், அவ்வுரிமைகளை பாதுகாக்கப் போராடுவதும் - கொடிய பாசிசச் சட்டங்களை திரும்பப் பெற போராடுவதும் இன்றைய உடனடி கடமையாகிறது.  

எனவே கீழ்கண்ட முழக்கங்களின்பால் அணிதிரள மக்களை அறைகூவி அழைக்கிறோம். 

  • பொருளாதார அவசரநிலை மற்றும் மந்தநிலையை நோக்கி நாட்டை நகர்த்தும் மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம் !
  • பொருளாதார நெருக்கடிக்கு காரணமான உலகமய தாராளமய தனியார்மய கொள்கைகளை எதிர்ப்போம்!
  • மோடி கும்பலே! உலக வங்கி, உலக வர்த்தக கழகத்தில் இருந்து வெளியேறு!
  • அமெரிக்காவின் உலக மேலாதிக்க நலன்களுக்கான அனைத்து அரசியல் -பொருளாதார- இராணுவ ஒப்பந்தங்களில் இருந்தும் வெளியேறு!
  • இந்திய இறையாண்மையை அமெரிக்காவிற்கு தாரைவார்க்கும் காம்பாக்ட், குவாட் உள்ளிட்ட புதிய காலனிய திட்டங்களை எதிர்ப்போம்!
  • கனிமவளங்கள், அரியவகை தனிமங்கள், சுரங்கங்களை அமெரிக்கா - அம்பானி-அதானிகளுக்கு திறந்துவிடும் அமெரிக்க இந்திய சுரங்கம் மற்றும் கனிமவள ஒப்பந்தத்தை முறியடிப்போம்!
  • பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பண வீக்கத்துக்கு காரணமான டாலர் சார்பு பொருளாதார கொள்கையை எதிர்ப்போம்!
  • பெட்ரோல் டீசல் எண்ணெய் நிறுவனங்களை அரசுடமையாக்கு! பெட்ரோல் டீசல் விலையை அரசே நிர்ணயம் செய்யும் வகையில் சட்டமியற்று!
  • அம்பானி அதானிகளின் இலாபத்திற்காக எண்ணெய் ஏற்றுமதியை அனுமதிக்காதே! உள் நாட்டு தேவையை பூர்த்தி செய்!
  • கார்ப்பரேட்டுகள் கொள்ளை இலாபம் அடிக்க மக்கள் மீது வரிகள் போடாதே! கார்ப்பரேட்டுகள் மீது வரி போடு!
  • முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தாதே!
  • நீட் தேர்வு மோசடியால் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் மோடி ஆட்சி ஒழிக! நீட் தேர்வை இரத்து செய்யப் போராடுவோம்!
  • உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு வித்திடும் ஏகாதிபத்தியங்களின் அரசியல் பொருளாதார யுத்தக்கொள்கைகளை எதிர்ப்போம்!

நன்றி: மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

சமரன்

(ஜூன் -ஜூலை 2026 இதழ்)