2026 செப்-12 - தியாகிகள் நினைவு நாள்- ம.ஜ.இ.க. நிலைபாடு விளக்க அறிக்கை

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

2026 செப்-12 - தியாகிகள் நினைவு நாள்- ம.ஜ.இ.க. நிலைபாடு விளக்க அறிக்கை

அப்பு - பாலன் நினைவு நீடூழி வாழ்க!

செப்டம்பர் 12 - தியாகிகள் நினைவு நாள்!!

பொருளாதார மந்தநிலை மற்றும் எமெர்ஜென்சி நிலைக்கு நாட்டை தள்ளும் மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

எமெர்ஜென்சி காலத்தில் நாட்டின் உண்மையான விடுதலைக்காகப் போராடிய நக்சல்பாரி தோழர்களை நரவேட்டையாடியது பாசிஸ்ட் இந்திரா அரசு. அதனுடன் கைக்கோர்த்துக் கொண்ட கருணாநிதி அரசு, தமிழ்நாட்டிலுள்ள தோழர்கள் மீதும் கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவியது. தோழர் அப்புவை அப்போது நரவேட்டையாடி கொன்றது. எமர்ஜென்சியை விலக்கிக்கொண்ட பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காங்கிரஸ் இங்குள்ள எம்.ஜி.ஆர். ஆட்சியோடு கூட்டு சேர்ந்து பாசிச ஆட்சியைக் கட்டியமைத்தது. தருமபுரி பகுதியின் நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைத்த மக்கள் யுத்தக் குழுவின் பாலன் தோழரையும் படுகொலை செய்தது. அத்தகைய தியாகத் தோழரின் நினைவாகவும், அப்பு உள்ளிட்ட இதுவரையில் இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் உயிர்நீத்த அனைத்து வீரத் தியாகிகள் நினைவாகவும் - செப்-12ஐ தியாகிகள் நினைவு நாளாக கடைபிடித்து வருகிறோம். அவர்களின் மகோன்னத லட்சியத்தை மனதில் ஏந்தி அவர்களின் வழிதனில் நடப்பதற்கான உறுதியேற்பு நாளாகும் இது. மீண்டும் ஒரு பாசிச காட்டாட்சி! மீண்டும் ஒரு எமெர்ஜென்சி!! அன்று இந்திரா தலைமையிலான காங்கிரசு - இன்று மோடி தலைமையிலான பாஜக. அமெரிக்காவின் நிதிமூலதனக் கும்பலுக்கும் அம்பானி அதானிகளுக்கும் நாட்டை பலிகொடுத்து வருகிறது மோடி அரசு.

பொருளாதார நெருக்கடிக்கு வித்திடும் ஏகாதிபத்தியங்களின் கொள்கைகள்

இந்த நூற்றாண்டில் சீன ஏகாதிபத்தியம் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. அதி நவீன தொழில்நுட்பத் துறைகளில் 80% சதவிகிதத்திற்கும் மேலான துறைகளில் சீனா முன்னிலைக்கு வந்துவிட்டது. இது அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு கடும் சவாலாகவும் நெருக்கடியாகவும் மாறியுள்ளது. சீனாவை எதிர்கொள்ள டிரம்ப் கும்பல் கடுமையான பாசிசக் கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. இக்கொள்கைகள் அமெரிக்காவுடனான ஐரோப்பிய யூனியனின் முரண்களையும் கூர்தீட்டி நேட்டோ கூட்டணியில் பிளவை உண்டாக்கியது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஷாங்காய் என உலகம் மூன்று முகாம்களின் மறுபங்கீட்டுக் கூடாரமாக மாறியுள்ளது. 

இன்றைய அதிநவீன தொழிநுட்பங்களில் முதன்மை இடம் வகிக்கும் ஏஐ தொழில்நுட்பத்திலும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதல்நிலையை எட்டிவிட்டது. அதை நிலைநிறுத்த அத்தியாவசியமான அம்சங்களில் குறிப்பானவை என்று பார்த்தால் - செமிகண்டக்டர் உள்ளிட்ட சிப்-கள் மற்றும் மின்சாரம். இதில் செமிகண்டக்டர் மீதான ஏகபோகத்தில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. அதாவது சிப் வடிவமைப்பு (Chip Design - Nvidia, Qualcomm, AMD, Apple), அதற்கான மென்பொருள் (EDA Tools - Synopsys, Cadence) மற்றும் காப்புரிமை போன்றவற்றில் 45 முதல் 50% சதவிகிதம் பங்களிப்புடன் உலகளவில் முதலிடத்தில் உள்ளது; உலகளாவிய சிப் உற்பத்தியில் தைவான் 60% சதவிகிதத்துடன் முதலிடம் பெற்றிருந்தாலும் அதன் மொத்த மூலதன நிதி பங்குகளில் 64% சதவிகிதம் அமெரிக்க கார்ப்பரேட்டுகள் (Wall Street Giants - The Vanguard Group, BlackRock, Capital Research & Management Co., FMR LLC (Fidelity) போன்றவை) வசமே கொண்டிருப்பதன் மூலம் தைவானின் உற்பத்தியை முழுமையாகக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால், மின்சார உற்பத்தியில், முதலிடம் பிடித்திருப்பது; சிப் உற்பத்திக்கு தேவையான அருமண் தனிமங்களின் மீதான சீனாவின் ஏகபோகம் ஆகியவற்றால் சீனா ஏஐ துறையில் அசுரவளர்ச்சி பெற்று வருகிறது. - அதாவது உலகளவில் 60% முதல் 70% சதவிகிதம் வரை அருமண் தனிமங்கள் அகழ்விலும், 90% சதவிகிதத்திற்கும் மேல் சுத்திகரிப்பு மற்றும் செயலாக்கத்திலும் ஏகபோகத்தை தக்கவைத்துள்ளது போன்றவற்றின் மூலம் அருமண் தனிமங்கள் மீதான ஏகபோகத்தை சீனா நிலைநாட்டியுள்ளது. செமிகண்டக்டர், சிப் இவற்றை தாண்டி மின்சார உற்பத்தியை பொறுத்தவரை, அமெரிக்காவை விட இரண்டு மடங்கு (9,000 TWh க்கும் மேல்) உற்பத்தி செய்து வருகிறது. சூரிய, காற்று, அணு, நீர் மற்றும் முக்கியமாக இயற்கை எரிவாயு மூலமான மின்சார உற்பத்திகளுக்கான உள்கட்டமைப்புகளை அதிவேகமாக விரிவுபடுத்தியுள்ளது. மின்சார உற்பத்தியில் யார் ஏகபோகத்தை கட்டுப்படுத்துகிறாரோ அவரே ஏஐ துறையில் முன்னிலை வகிப்பார் என எலான் மஸ்க் பேசியுள்ளார். ஒரு நொடி கூட தடைபடாத மின்சாரமே வேண்டும் -அத்தகைய மின்சார உற்பத்திக்கு உகந்தது இயற்கை எரிவாயு என்கிறார். ஆகவேதான் அருமண் தனிமங்களுக்கான போட்டி ஒரு பக்கம் இருந்தாலும் இயற்கை எரிவாயுவின் ஏகபோகத்திற்கான போட்டி இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. 

இயற்கை எரிவாயுவுக்காக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா 

இயற்கை எரிவாயுவில் ரஷ்யாவின் ஏகபோகத்தை தகர்த்து தனது ஏகபோகத்தை நிறுவ அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாம் பார்த்து வருகிறோம். உக்ரைன் போர் அமெரிக்கா எதிர்பார்த்த வகையில் லாபகரமாக அமையாததால், ஐரோப்பிய யூனியனை கழட்டிவிட்டு உக்ரைனின் வளங்களை ரஷ்யாவுடன் மட்டும் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அந்த முயற்சிகள் தோல்வியுற்றதால் ரஷ்யா மீது மீண்டும் பொருளாதாரத் தடை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. உக்ரைன் போர், பாலஸ்தீனம் மீதான போர், ஈரான் மீதான போர், வெனிசுலா அதிபர் கைது மற்றும் ஆட்சி மாற்றம், பொருளாதாரத் தடைகள், வரிப் போர், வர்த்தகப் போர் என எல்லா வகையான பாசிச முறைகளையும் கையாண்டு வருகிறது டிரம்ப் கும்பல். டிரம்பின் கொள்கைகள் உள்நாட்டிலும் அமெரிக்க செனட் சபையிலுமே அதற்கு எதிர்ப்புகளை உருவாக்கியது. தற்போது தனது பாசிச நடவடிக்கைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை நிறுவும் முயற்சிகளில் இறங்கியுள்ளது டிரம்ப் அரசு.

ரஷ்யா - ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், நீக்கவும் ரஷ்யாவுடன் எண்ணெய் - எரிவாயு உள்ளிட்ட அனைத்து விதமான வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது அநியாய வரிகளை விதிக்கவுமான பாசிசச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது டிரம்ப் கும்பல். "லிண்ட்சே கிரஹம் சட்டம்" எனும் பெயரில் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது 100% சதவிகிதம் அளவுக்கு வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் இச்சட்டம் முன்வைக்கப்பட்டு செனட் சபையின் பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச அமைப்புகளின் ஒப்புதலோ, பாதிக்கப்பட்ட நாடுகளின் சம்மதமோ இன்றி தன்னிச்சையாக முடிவு செய்து நிறைவேற்றியுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த பாசிசச் சட்டம் ரஷ்யாவின் ஏகபோகத்தை குறி வைத்தும் அதனுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது குறிப்பாக இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளை பணிய வைப்பதற்காகவும் அந்நாடுகளின் மீது தனது ஏகபோக உரிமையைத் தக்கவைப்பதற்காகவுமானதொரு பொருளாதார ஆயுதமாக இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

நெருக்கடிகளின் சுமைகளுக்கு பணிந்து நாட்டை எமெர்ஜென்சி நிலைக்கு தள்ளும் மோடி அரசு 

இந்தியா ரஷ்யா - ஈரானுடன் எண்ணெய் - எரிவாயு மட்டுமின்றி உரங்கள், ஜிப்சம், தொழிற்துறை ரசாயனங்கள், பழங்கள், இரத்தின கற்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி; அரிசி, தானியங்கள், தேயிலை, சர்க்கரை, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி போன்ற முக்கிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்யா - ஈரானுடனான இந்தியாவின் வர்த்தகங்களை முடக்கும் வகையில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கும் 100% சதவிகிதம் வரை வரி விதிக்கவுள்ளது. சென்ற ஆண்டு ஏற்கெனவே 25% சதவிகிதம் தண்டனை வரிகளை விதித்து அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வைத்தது. காம்பாக்ட் அடிமை சாசனத்தின் அடிப்படையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டது. இந்த ஒப்பந்தங்கள் இந்திய விவசாயத்தை கூண்டோடு ஒழிக்கும் வகையிலான சரத்துகளை கொண்டிருந்தது. 90களில் இருந்து அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து அடிமை ஒப்பந்தங்களும் இந்தியாவை தற்சார்பு உற்பத்தியை சுத்தமாக ஒழித்துக் கட்டி அமெரிக்காவுக்கான உற்பத்திக் கூடமாக இந்தியாவை மாற்றியமைத்தது. நாட்டின் ஏற்றுமதியில் 50%-க்கும் அதிகமான பங்கை சேவைத் துறையே (IT & Services) கொண்டுள்ளது. அத்தியாவசியத் தொழிற்துறை உதிரிபாகங்கள், செமிகண்டக்டர்கள், கெமிக்கல்கள் மற்றும் மின்னணுச் சாதனங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கு 70% சதவிகிதத்துக்கும் மேலாக சீனா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களையே சார்ந்துள்ளது. செபி (SEBI) அறிக்கையின்படி, இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் 90% சதவிகிதத்துக்கும் மேலானவை பொருட்களின் உண்மையான உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை சார்ந்து அல்ல; மாறாக ஊக வணிகமான எஃப் அண்ட் ஓ (Futures & Options) வகைப்பட்ட சூதாட்டமே ஆகும். இதில் 89% சதவிகிதம் சிறு முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பதாக செபியே ஒப்புக்கொண்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு மூலம் இந்தியாவில் ஈட்டப்படும் லாபத்தில் 70% சதவிகிதம் வரையிலான தொகை இந்தியாவிற்குள் மறுசுழற்சி அடிப்படையில் மீண்டும் முதலீடு செய்யப்படாமல் அந்நிய ஏகாதிபத்திய நாட்டிற்கே நேரடியாகத் செல்கிறது. இந்திய உற்பத்தி துறைக்கான ஏற்றுமதி சந்தையும் கூட அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அமெரிக்கா தடை விதித்தால் இந்தியாவின் ஏற்றுமதி முடங்கி இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளி வர்க்கம் முழுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ரஷ்யா -ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து - அதனுடன் உறவு கொள்ளும் நாடுகள் மீது அநியாய வரி விதிப்பதன் மூலம் மாற்றுக் கதவுகளையும் மூடுகிறது டிரம்ப் கும்பல். அதானி - அம்பானி போன்ற தரகு முதலாளித்துவக் கும்பலைப் பாதுகாக்க, டிரம்ப் கும்பலுக்கு அடிபணிந்து எல்லா அடிமை ஒப்பந்தங்களுக்கும் நாட்டை அகல திறந்துவிட்டுள்ளது மோடி அரசு. இது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளது. 

நாட்டின் 40% சதவிகிதத்துக்கும் அதிகமான செல்வத்தை மேல்மட்டத்தில் உள்ள 1% சதவிகிதத்தினர் சுருட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக அம்பானி - அதானிகளின் சொத்து மதிப்பு அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது. மோடி அரசின் இந்த 12 ஆண்டுகால ஆட்சியில் அம்பானியின் வருமானம் 542% சதவிகிதம் அதிகரித்துள்ளது; அதானியின் வருமானம் 1535% சதவிகிதம் அதிகரித்துள்ளது; பாஜக கட்சியின் வருமானம் 628% சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டின் பொதுத்துறைகளையும் கனிமவளங்களையும் விற்று ஏகாதிபத்தியங்களிடமும் உலக வங்கியிடமும் அந்நிய கடன்களை பெற்று அம்பானி - அதானிகளை கொழுக்க வைக்கிறது. 2019-ல் மோடி அரசு உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 30% சதவிகிதத்திலிருந்து 15% சதவிகிதம் அளவுக்கு குறைத்தது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு வருடத்திற்கு ரூ1.45 லட்சம் கோடியாகும். அவையும் கார்ப்பரேட்டுகளின் லாபமாகவும் செல்வமாகவும் குவிந்தன. 2014-ல் மோடி அரசு பதவியேற்ற போது இந்திய அரசின் மொத்தக் கடன் சுமார் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது, அது 391% சதவிகிதம் உயர்ந்து தற்போது ரூ.200 லட்சம் கோடியாக உயர்ந்து மீளமுடியாத கடன் சுழலில் சிக்கியுள்ளது.  இந்த கடன் சுமைகள் மேலும் மேலும் இந்திய உழைக்கும் மக்கள் தலையிலேயே சுமத்தப்பட்டு வருகிறது. அம்பானி-அதானிகளின் வளர்ச்சியைத்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியாக விதந்தோதி வருகிறார்கள் சில வலதுசாரி சந்தர்ப்பவாதிகள். இந்திய பொருளாதாரம் என்பதே சுதேசிய உற்பத்தியற்ற ஊகமூலதன பொருளாதாரமாகவும் - கடன் பொருளாதாரமாகவும் கட்டியமைக்கப்பட்டிருக்கும் குமிழ் பொருளாதாரமாகும். நிதிமூலதனக் கும்பலின் சிறு அசைவினாலும் கூட இது வெடித்து சிதறிவிடும் மோசமான நிலைக்கு கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரசும் - பாஜகவும் மாற்றியமைத்துள்ளன. தற்போதைய மோடி கும்பலின் ஆட்சி இதை இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

மறுபுறம், பொது மக்கள் செலுத்தும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலமான வருவாய் கடந்த 7 ஆண்டுகளில் 11.77 லட்சம் கோடியிலிருந்து 22.27 லட்சம் கோடியாக இரட்டிப்பாகியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளுக்கு மேல் சலுகை வழங்கி சாதாரண உழைக்கும் மக்கள் தலையில் கடன் சுமைகள் மட்டுமில்லாமல் வரிச்சுமைகளையும் இறக்கி வைக்கிறது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு - மொத்த உற்பத்தியில் வெறும் 5.1% சதவிகிதமாகக் குறைந்துள்ளது.  தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் கடன்கள் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை "கடன் சார்ந்த நுகர்வு" வலைக்குள் சிக்கித் தவிக்கிறது. மக்கள் வாங்கும் சக்தியும் பரிதாபகரமாக வீழ்ந்துள்ளது.

இந்திய மக்களின் 80% சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்ற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வாழ்க்கையே நரகமாகியுள்ளது. உணவுப் பொருட்களின் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம் ஆண்டுக்கு 5% சதவிகிதம் அளவுக்கு விலை உயர்ந்த நிலையில் தற்போது ஒவ்வொரு மாதமும் 5% லிருந்து 6% சதவிகிதம் வரை விலை உயர்ந்து மக்களின் வயிற்றை இறுக்குகிறது. வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிரந்தர வேலைமுறை ஏறக்குறைய முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் ஒப்பந்த தொழிலாளர் முறை. சுரண்டலின் கொடிய வடிவமான இந்த ஒப்பந்த தொழிலாளர் முறை மத்திய கால சுரண்டல் முறைக்கு இந்திய தொழிலாளர் வர்க்கத்தை அழைத்துச் சென்றுள்ளது. வறுமை பட்டினிக்குறியீட்டில் வறட்சியான ஆப்பிரிக்க நாடுகளை விட பின்தங்கிய அவல நிலைக்கு இந்தியாவை தள்ளியுள்ளது மோடி அரசு. 

படிக்கவும்: பொருளாதார அவசரநிலை மற்றும் மந்தநிலையை நோக்கி நாட்டை நகர்த்தும் மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டே - பாசிச சட்டங்கள் மூலமே இந்த நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்துகிறது. ட்ரம்ப் பாணியில் பாசிசத்தை சட்டமயமாக்கி வருகிறது. நீட் சட்டம், தொகுதி மறுவரையறை சட்டம், விக்‌ஷித் பாரத் சிக்‌ஷா அதிஷ்தன் (VBSA) சட்ட மசோதா போன்றவற்றில் மாநில உரிமைகளையும் கல்வி உரிமைகளையும் பறிக்கிறது. கனிம வளங்கள் சட்டம் மூலம் இயற்கையை சுரண்டுவதை சட்டரீதியானதாக்கியுள்ளது. தொழிலாளர் சட்டத்தொகுப்புகள், விதை சட்டம் போன்றவற்றின் மூலம் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கார்ப்பரேட்டுகள் சுரண்டுவதை தர்மமாக்கியுள்ளது. அமெரிக்காவுக்கு சேவை செய்யும் இந்துத்துவப் பாசிசச் சட்டங்கள் மூலம் நவீன சனாதன தர்மத்தை மத்தியகாலத்தையொத்த சுரண்டலுக்கேற்ப வடிவமைத்து வருகிறது பாசிச மோடி அரசு. 

தனியார்மயமே தமிழக அரசுகளின் தாரக மந்திரமாக மாறியுள்ளது

ஜிஎஸ்டி போன்ற மையப்படுத்தப்பட்ட வரிக்கொள்கைகளால் மாநில அரசுகளின் வருவாயை பிடுங்கி கொள்கிறது மத்திய அரசு. மாநில அரசுகளுக்கு உரிய நிதி பங்கீடு அளிப்பதில்லை. மாநில அரசுகளையும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இங்குள்ள மாநில அரசுகளோ மத்திய அரசை எதிர்த்துப் போராட துப்பில்லாமல் அதே தனியார்மய-தாராளமயக் கொள்கைகளையே தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகின்றன. மாநில அளவிலான சுதேசிய உற்பத்தியை வளர்த்தெடுப்பதிலும் முனைப்புக் காட்டுவதில்லை. மாறாக அமெரிக்க நிறுவங்களிடமும் - அதானிகளிடமும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலமாக தமிழ்நாட்டை கொள்ளைக் கூடாரமாக மாற்றியது முந்தைய மு.க.ஸ்டாலின் அரசு. தவெக அரசு தனியார்மயத்தை தீவிரப்படுத்தும் என்பதை அதன் இடைக்கால பட்ஜெட்டே நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அனைத்து பொதுத் துறைகளையும் தனியார்மயம் - கார்ப்பரேட் மயமாக்கும் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்நிய கடன்களுக்கு ரீல்ஸ் போட்டு - கடை விரித்து நிற்கிறது.

சென்ற திமுக அரசு, தமிழகத்தை சாதி ஆணவப்படுகொலைகளின் தலைநகரமாக மாற்றியது. சாதி - தீண்டாமைக் கொடுமைகள் தமிழகமெங்கும் தலைவிரித்தாடியது. அது தவெக ஆட்சியில் இன்றும் தொடர்கிறது. தவெக அரசின் சட்டமன்றத்தில் 8 அமைச்சர்களாக தலித்துகளை நியமித்திருப்பதுதான் சமூக நீதி என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது விஜய் அரசு. ஆனால் நாளுக்கு நாள் நடைபெறும் சாதி - தீண்டாமை கொடுமைகளைக் கட்டுப்படுத்த எவ்விதத் திட்டமும் இல்லை இந்த அரசிடம் - குறைந்தபட்சம் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கூட இயற்றாமல் இழுத்தடிக்கிறது. சமூகத்தின் அவலமான இத்தகைய சாதி வன்கொடுமைகள் நார்மலைஸ் (Normalize) செய்யப்படும் போக்கு உச்சமடைந்து வருகிறது. தலித் அமைச்சர்களும் கூட இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கே கோடாரிக் காம்புகளாக மாறியுள்ளனர் என்பது இந்த சமுதாயத்தின் கொடூரநிலை. நிலப்பிரபுத்துவ குப்பைக் கூளங்களைப் பாதுகாக்கும் அந்நிய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டாமல் சாதியை ஒழிக்க முடியாது என்பதை தவெக அரசும் நிரூபணமாக்கி வருகிறது. 

மறுபுறம் திமுகவும் - அதிமுகவும் தவெகவை எதிர்ப்பதன் பெயரில் பாஜகவின் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டன. இதுநாள் வரை இருட்டில் இருந்த திமுக -பாஜக உறவு தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஒவ்வொரு விசயத்திலும் வெட்ட வெளிச்சத்துக்கு வருகிறது. முன்பு, தொகுதி மறுவரையறை சட்டத்தை எதிர்த்து பழைய திமுகவை பார்ப்பீர்கள் என்று பாஜகவை மிரட்டும் தொனியில் பேசினார் மு.க.ஸ்டாலின். ஆனால் இன்று முறையான தொகுதி மறுவரையறை (Fair Delimitation) சட்டத்தை ஆதரிக்கிறது திமுக. இதை இங்குள்ள அறிவாலய இடதுகளும் விதந்தோதி வரவேற்கின்றன. இவர்களின் திராவிட மாயை மீதான மயக்கங்கள் திமுக - பாஜக கூட்டையும் கூட முற்போக்கானதாகப் பேசி வரவேற்கும் அருவறுப்பான நிலைக்கு தள்ளியுள்ளது. 

பாட்டாளி வர்க்கத் தலைமை கொள்!

பாஜக பாசிசத்திற்கு மாற்று என்று இவர்களால் முன்மொழியப்பட்ட "இந்தியா" கூட்டணி என்ற ஒன்று இன்று இருக்கிறதா இல்லையா என்ற அளவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளிடையே கடுமையான முரண்பாடுகள் தோன்றி அக்கூட்டணி ஏறக்குறைய சிதைந்துவிட்டது. எனவே அது பாஜக அரசின் பாசிசத்திற்கு மாற்று அல்ல என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலைபாடு இன்று நிரூபணம் ஆகியுள்ளது. பாட்டாளி வர்க்கத் தலைமையிலான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியே பாஜக அரசின் பாசிசத்திற்கு சாவு மணி அடிக்கும் வல்லமை பெற்றது. அத்தகையதொரு பாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்டியமைத்து மோடி ஆட்சியைத் தூக்கியெறிவதே தியாகிகள் தினத்தில் நமது இன்றைய குறைந்தபட்ச குறிக்கோளாகிறது.

ஏகாதிபத்தியங்கள் இந்த பூவுலகை சுரண்டி கொழுக்கின்றன. இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் மறுபங்கீட்டுப் போட்டியில் நாசமாக்கி வருகின்றன. போர்கள் மூலமாகவும் - ஒப்பந்தங்கள் மூலமாகவும் மூன்றாம் உலக நாடுகளை கபளீகரம் செய்து வருகின்றன. காடுகளை அழித்து பழங்குடிகளையும் காடுவாழ் உயிர்களையும் வேட்டையாடுகின்றன. உலகமய-தனியார்மய-தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையிலான மீ-லாப உற்பத்திக்காக கார்பன் உள்ளிட்ட பசுமைக்குடில் வாயுக்களை கட்டற்ற அளவில் வெளியேற்றி வளிமண்டலத்தை சிதைத்து வருகின்றன. இவற்றின் காரணமாக புவி வெப்பமயமாதல், எல் நினோ விளைவுகள் தீவிரம் பெற்று வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், காட்டுத் தீ போன்ற பேரழிவுகளுக்கு உழைக்கும் மக்களையும் ஏனைய வாயில்லா ஜீவன்களையும் பலிகொடுத்து வருகின்றன. இயற்கைச் சமநிலையை சீரழித்து ஏகாதிபத்திய சக்திகள் கொழுக்கின்றன. இவற்றை ஒழித்துக்கட்ட உலக பாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழவேண்டும். ஏகாதிபத்தியக் கொள்ளைக் கூட்டம் இல்லாத பொதுவுடமை சமுதாயத்தைப் படைக்க வேண்டும். 

படிக்கவும்: உலகை அச்சுறுத்தும் எல்-நினோ: ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பலியிடப்படும் பூகோளம்

இதுவே இந்த நாட்டின் விடுதலைக்காகவும் மகோன்னத லட்சியங்களுக்காகவும் தங்களது இன்னுயிரை ஈந்த அப்பு-பாலன் உள்ளிட்ட தோழர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். எனவே இந்த செப்'12 தியாகிகள் நினைவுநாளில் கீழ்க்கண்ட முழக்கங்களின்பால் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம். 

அப்பு - பாலன் நினைவு நீடூழி வாழ்க!

செப்டம்பர் ’12 - தியாகிகள் நினைவு நாள் 

பொருளாதார மந்த நிலை மற்றும் எமெர்ஜென்சி நிலைக்கு நாட்டை தள்ளும் மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

• வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பண வீக்கம் என நாட்டை மத்திய கால நெருக்கடிக்கு அழைத்துச் செல்லும் மோடி ஆட்சி ஒழிக!

• நீட் தேர்வு, தொகுதி மறுவரையறை சட்டம், VBSA மசோதா, தொழிலாளர் சட்டத்தொகுப்பு, விதை சட்டம் உள்ளிட்ட பாசிச சட்டங்களை திரும்பப் பெற போராடுவோம்!

• தவெக அரசே! 

தனியார்மயத்தை தீவிரப்படுத்தும் பட்ஜெட்டை திரும்பப் பெறு! 

பொதுத்துறைகளை கார்ப்பரேட்மயமாக்காதே! 

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று! 

• அம்பலமாகும் பாஜக - திமுக கள்ள உறவை இனம் காண்போம்! அறிவாலய இடதுகளின் திமுக - திராவிட மாயைகளை தகர்ப்போம்! 

• பாட்டாளி வர்க்க தலைமையிலான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டியமைப்போம்!

• அமெரிக்க, ஐரோப்பிய, ஷாங்காய் முகாம்களுக்கு இடையிலான உலக மேலாதிக்கம் - மறுபங்கீட்டிற்கான வர்த்தக போர் மற்றும் பனிப் போர் தயாரிப்புகளை எதிர்ப்போம்!

• ஈரான் -இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போர்கள் மூலம் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வித்திடும் ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல்-பொருளாதார - இராணுவ கொள்கைகளை எதிர்ப்போம்! 

• ஏகாதிபத்திய நாடுகளே! மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பிய பிராந்தியங்களில் இருந்து வெளியேறுங்கள்!

• இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது 100% வரியை உறுதிப்படுத்தும் அமெரிக்காவின் லிண்ட்சே கிரஹம் சட்டத்தை எதிர்ப்போம்! 

• காடழிப்பு - பசுமைக்குடில் வாயுக்கள் - புவி வெப்பமயமாதல் - எல் நினோ விளைவு... என இயற்கைச் சமநிலையை சீரழிக்கும் ஏகாதிபத்திய சக்திகள் ஒழிக! உலகப் பாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழுக!

நன்றி: மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

சமரன் (ஆகஸ்ட் - செப் 2026)