கொல்கத்தா மருத்துவ மாணவி கூட்டு வல்லுறவுக்கு பலி: கொலையாளிகளை பாதுகாக்கும் மம்தா - கிழிந்த முகத்திரை! வெளிவந்த பாசிச கோர முகம்!!

செந்தளம்

கொல்கத்தா மருத்துவ மாணவி கூட்டு வல்லுறவுக்கு பலி: கொலையாளிகளை பாதுகாக்கும் மம்தா -  கிழிந்த முகத்திரை! வெளிவந்த பாசிச கோர முகம்!!

கொல்கத்தா அரசு ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்ற பயிற்சி மருத்துவர் மிகக்கொடூரமான முறையில் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொடூர வன்புணர்வு கொலைக்கு எதிராக நாடெங்கும் மருத்துவர்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் இறங்கினர்.

கடந்த ஆகஸ்ட் 8 ம் தேதி வழக்கமாக இரவுபணியை முடித்து விட்டு அதிகாலை மூன்று மணிக்கு மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்திற்கு உறங்க சென்ற மருத்துவ மாணவி (சௌமித்ரா) அரை நிர்வாணக் கோலத்தில் கடுமையான காயங்களுடன் காலையில் பிணமாக கிடந்தார்.

பிரேதப் பரிசோதனையில் அவரது கை கால்கள் கழுத்து முறிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது பிறப்புறுப்பில் 150மில்லி அளவுக்கு விந்து இருந்தது கண்டறியப்பட்டதானது, இது ஒரு கூட்டுப்பாலியல் வன்புணர்வு கொலை என்பதை ஊர்ஜிதபடுத்தியது.

இந்த மிருகத்தனமான - கொடூரச்  செயலுக்கு காரணமான சஞ்சய்ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். இவன் காவல்துறையுடன் இணைந்து பணிபுரியும் தன்னார்வலன் ஆவான்.

மருத்துவர்களை அச்சுறுத்தும்  பணியிட சூழலும் நீண்ட வேலை நேரமும்

ஆர்ஜிகர் மருத்துவமனையில் குற்றம் நடந்த அன்று இரண்டு ஆண் காவலர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளனர். நாளுக்கு 3,500 பேர் நோயாளிகளாக வரும் மருத்துவமனையில். மிக குறைந்த மருத்துவர்களும், பணியாளர்களுமே பணியாற்றுகின்றனர். 36 மணி நேர ஷிப்டில் வேலை செய்வது வழக்கமாக இருக்கிறது. சில மருத்துவர்கள் நீண்ட ஷிப்ட்களின் போது பூட்டுகள் இல்லாத அறைகளில் தூங்கும் நிலையே உள்ளது. பெண் மருத்துவர்களுக்கு தனியான ஓய்வு அறைகள் மற்றும் தனி கழிப்பறைகள் கூட இல்லை. எந்த வசதியும் இல்லாததால் மூன்றாவது மாடி கருத்தரங்கு அறையில் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம். 

ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மற்றொரு முதுகலை பட்டதாரியான டாக்டர் ஷ்ரேயா ஷா கூறுகையில், பூட்டுகள் இல்லாத, ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில், அதிகாலை 3 மணியளவில் தான் தூங்கிக்கொண்டிருந்த போது இரண்டு  பேர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்றனர் எனக் கூறியுள்ளார். 

இந்தியாவின் மருத்துவர்களில் சுமார் 60% பெண்கள் ஆவர். இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) நடத்திய ஆய்வில், ”இந்தியாவில் 75% மருத்துவர்கள் பணியிடத்தில் ஏதேனும் வன்முறையை எதிர்கொள்கின்றனர். மருத்துவமனைகளில் பாதுகாப்பு என்பதே  இல்லை," என்று  கூறுகிறது.

இச்சூழலின் ஓர் அங்கமாகத்தான் கொல்கத்தாவில் இந்த படுகொலை நிகழ்ந்துள்ளது. 

இவ்வாறிருக்கையில், இச்சம்பவத்தை ஒட்டுமொத்தமாக மறைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள். ஆனால் இதை மறைக்க சிலர் முயன்றுள்ளனர் என கொல்லப்பட்ட மருத்துவரின் தந்தை  கூறினார். இவ்வழக்கை தாமாக முன்வந்து எடுத்துக் கொண்டது உச்ச நீதிமன்றம். பெண் மருத்துவர் இப்படி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தகவல் போலீசுக்கு தெரிந்தும்  11 மணி நேரம் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பியதுடன், இவ்விசயத்தில் போலீசார் பின்பற்றிய நடைமுறையை எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் கண்டதில்லை என கூறியதுடன், இப்படிப்பட்ட வன்புணர்வு கொலை வழக்குபதிவு செய்யும் முன்பாகவே எப்படி உடற்கூராய்வு நடத்தப்பட்டது என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர்.

இரக்கமற்ற மம்தாவின்  கொடூர அரக்கத்தனம்! தடயத்தை அழிக்க மருத்துவமனை சூறையாடல்!!

இச்சம்பவத்தை  ஆரம்பத்திலிருந்தே மம்தாவும் அவரது அரசும் மறைக்க திவிர முயற்சி எடுத்தது. சௌமித்ராவுக்கு உடல்நிலை சரியில்லை என அவரது பெற்றோருக்கு முதலில் கூறப்பட்டது. அதற்கடுத்த சிறிது நேரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்ததும் போலீஸ் நடவடிக்கை நடப்பதாக நாடகம் நடத்தப்பட்டது. இதற்கு பின்பாகதான் கொலையான மருத்துவரின் பெற்றோரால் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் மருத்துவர்கள் மருத்துவமனையில் நீதி கேட்டு அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது மருத்துவமனைக்குள் புகுந்த கூலிப்படை கும்பல் மருத்துவமனையை சூறையாடியது.

ஊடகவியலாளர்கள் ஔிப்பதிவாளர்களை இந்த கும்பல் குறிவைத்து தாக்கியது. எதிரில் தென்பட்ட அனைவரும் தாக்கப்பட்டனர். இக்கும்பலின் தாக்குதலில் மருத்துவர்கள் கடுமையான காயங்கள் அடைந்தனர். பெண் மருத்துவர்களும் தாக்கப்பட்டனர். இக்கும்பலின் கொலை வெறியாட்டத்திலிருந்து தப்பிக்க சிதறி ஓடிய மருத்துவர்கள் ஆங்காங்கே ஔிந்தனர். போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்த அனைத்து பொருட்களும் உடைத்து நொறுக்கப்பட்டது. அவசர சிகிச்சைப் பிரிவுகூட நொறுக்கப்பட்டது. முக்கியமாக குற்றம் நடந்த இடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டது. பொதுமக்களின் உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த அட்டூழியங்களை மம்தாவில் காவல்துறை அடக்கவில்லை. இப்படி மொத்தமாக அனைத்தும் நொறுக்கப்பட்ட பின்னரும் போராட்டத்தை மருத்துவர்கள் அச்சமின்றி தொடர்ந்தனர்.

இறந்த சடலங்களை திருட்டுத்தனமாக விற்று காசு பார்த்த மருத்துவமனை முதல்வரை பாதுகாத்த மம்தா அரசு, இப்பிரச்சினையால் அவர் ராஜினாமா செய்த பின்பும் கூட அவருக்கு வேறொரு பதவி வழங்கி அழகு பார்த்தது. மறுபக்கம் தனது ஆட்சியில் நடந்த இந்த மோசமான வன்புணர்வு கொலைக்கு எதிராக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென நீதி கேட்டு வீதியில் இறங்கி போராடுவதாக நாடகமாடினார் அரக்கத்தன மம்தா.

மகளை பறிகொடுத்த பெற்றோரிடம் லஞ்சம் கொடுக்க சென்ற மம்தாவின் போலீஸ்

தனது “மகளின் உடலை பதப்படுத்த நினைத்ததாகவும் ஆனால் அதை செய்ய விடாமல் போலீஸ் தடுத்தது. உடலை வீட்டுக்கு எடுத்து வந்த போது எங்களை 300-400 போலீசார் சூழ்ந்து கொண்டனர். இப்படி உடனடியாக இறுதி சடங்கு செய்ய நிர்பந்திக்கப்பட்டோம்” என கொலையான மருத்துவரின் தந்தை நெஞ்சம் பதற கூறியுள்ளார்.

இதையும் தாண்டி மருத்துவரின் உடல் கிடத்தப்பட்டதற்கு அருகிலேயே, அவரது பெற்றோர் முன்னிலையிலேயே தங்களுக்கு போலீஸ் மூலமாக லஞ்சம் கொடுக்க முயன்றனர் என்றும் இதுதான் போலீசின் மனித நேயமா? என்று கொலையான மருத்துவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். எவ்வளவு கேடுகெட்ட ஈனத்தனமான வகையில் இந்த வன்புணர்வு கொலை வழக்கை மூடிவிடுவதற்கு மம்தா வெறிபிடித்து இருந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

மம்தாவின் கிழிந்த முகத்திரை! வெளிவந்த பாசிச கோர முகம்!!

இந்த வன்புணர்வு கொலை குறித்து மம்தாவின் நடவடிக்கையை விமர்சித்து  பேசிய சாந்தனு சென் என்பவரை தனது கட்சி பதவியில் இருந்து மம்தா நீக்கினார். அதே போல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து சேகர் ரே  இந்த வழக்கில் போலீஸ் விசாரனை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 8ம் தேதி திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்கலவை எம்.பி ஜவகர் சிவ்கார் இந்த வன்புணர்வு கொலை வழக்கில் மம்தாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் அவர் கூறும் போது, ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருந்த தான் ஒருமாதமாக காத்திருந்ததாகவும், போராடும் இளநிலை மருத்துவர்களுடன் மம்தா பேசுவார் என்று எதிர்பார்த்தேன் அது நடக்கவேயில்லை; அரசு தற்போது என்ன நடவடிக்கை எடுத்திருந்தாலும் அது தாமதமானது - குறைவானது என்றும்; கட்சி தலைவர்களிடம் அதிகரித்து வரும் ஆயூத கலாச்சாரம், ஊழல், அதிகாரிகள் (அல்லது மருத்துவர்கள்) உயர் மற்றும் முக்கிய பதவிகளை பெறுவது ஆகியவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் மம்தாவின் நடவடிக்கைகள் மதவாத சக்திகளுக்கே சேவை செய்யும் எனவும் கூறினார். இவ்வாறு மருத்துவரின் வன்புணர்வு கொலையை மூடிமறைத்து வந்த மம்தாவின் கொடூர பாசிச முகம் அம்பலமாகியுள்ளது.

வழக்கை இழுத்து மூடுவதில் ஒன்றிணையும் சி.பி.ஐ-மம்தா

கடந்த 7ந்தேதி சி.பி.ஐ (CBI) வெளியிட்டுள்ள மரபணு ஆய்வில் மருத்துவரின் உடலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள்  மரபணு சோதனையில் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய்ராய் என்பவனுடன் ஒத்துப் போவதாகவும் அவன் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும் என்றும் கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என்றும், எனவே சஞ்சய் ராய்க்கு எதிராக மிகத் துல்லியமாக குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சி.பி.ஐ கூறிவிட்டது. எவ்வளவு பெரிய அநீதி இது!

சம்பவம் நடந்த மறுநாள் குற்றம் நடந்த அறையை பழுதுபார்க்க விட்டிருக்கிறார்கள் (பழுது பார்க்கவா விட்டார்கள்?). 

குற்றம் நடந்த இடத்தை கூலிப்படை கும்பல்கள் அடித்து நொறுக்கி தடயங்களை அழித்து விட்டது. ஆனால் சி.பி.ஐ வேரெவரும் குற்றத்தில் ஈடுபட்டதற்கான தடயங்கள் இல்லை எனக்கூறுகிறது.

திட்டவடடமாக ஒரு கும்பல் செய்த இந்த கொடூர செயலினை மூடிமறைக்க அதிகாரத்தின் அனைத்து உறுப்புகளும் துருத்தி நிற்கிறது.

ஒரு சஞ்சய் ராயை காப்பற்றவா இத்தனை தகிடு தித்திங்களை இவர்கள் செய்தார்கள்?

அவன் ஒருவனை காப்பாற்றவா வன்புணர்வு கொலையை தற்கொலை என்று மூடிமறைத்தார்கள்?

அவன் ஒருவனை காப்பாற்றவா கொலையான மருத்துவரின் குடும்பத்தினருக்கு லஞ்சம் தரமுயன்றது?

அவன் ஒருவன்தான் ஈடுப்பட்டிருப்பான் என்று நாங்கள் சொல்லவில்லை என ஆரம்பத்தில் போலீஸ் கூறியது என்னவானது?

வன்புணர்வு செய்யப்பட்டு கொலையான மருத்துவரின் உடல் மிகமோசமான வகையில் சீர்குலைக்கப்பட்டு உடைத்து நொறுக்கப்பட்டுள்ளதே, அதை ஒருவன் மட்டுமா செய்தான்?

திட்டவட்டமாக இது ஒரு கூட்டுப பாலியல் வல்லுறவு கொடூர கொலையாகும். மட்டுமின்றி, பெரும் அதிகார பின்புலம் கொண்ட ஊழல் வாதிகள் சூழ்ந்த மருத்துவமனை சூழலில் இவ்வளவு மூர்க்கமான வன்புணர்வு கொலை என்பது வன்புணர்வு என்ற எல்லையையும் கடந்து விரிவானதாகும். 

பெண்களுக்கு எதிரான பா.ஜ.க.வின் அருகதையற்ற அரசியல்

சி.பி.ஐ க்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது குறித்து பேசிய மம்தா ஹத்ராஸ், உன்னாவ், மணிப்பூரில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது  எத்தனை மத்திய அரசின் குழுக்கள் அங்கு சென்றன என கேள்வி எழுப்பியதுடன் மேற்கு வங்கத்தில் எலி கடித்தால் கூட 55 குழுக்கள் இங்கே வந்து விடுவதாக ஆத்திரமடைந்தார்.

இந்த வன்புணர்வு கொலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மம்தாவிற்கு எதிரான அரசியல் செய்தது பா.ஜ.க. உண்மையில் பெண்கள் மீதான இத்தகு கொடூர ஒடுக்கு முறைகளை எதிர்ப்பது அதன் நோக்கமல்ல.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த பாசிச காவி-காலிக் கும்பல்கள் அதிகாரத் திமிரில் எத்தனையோ பாலியல் வல்லுறவுகளையும் கொலைகளையும் செய்துள்ளது. பெண்களை ஒடுக்குவதற்கு பாலியல் பலாத்காரத்தை கருவியாக பயன்படுத்தலாம் என்ற சாவர்க்கரின் இந்த வாரிசுகள்தான் ஆசிபாவை வன்புணர்ந்து வீசியெறிந்தது! மணிப்பூர் பெண்களை வன்புணர்ந்து அம்மண ஊர்வலம் நடத்தியது!

உத்திரபிரதேசம் உன்னாவில் சிறுமியை வன்புணர்ந்து அவரது குடும்பத்தை கொலை செய்த உன்னாவ் பா.ஜ.க எம்.எல்.ஏ;

பனாரஸ் இந்து பல்கலைகழக மாணவியை கல்லூரி வளாகத்திலேயே காவி பொறுக்கி கும்பல் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த கொடூரம்;

உபி ஷாஜஹான் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் ஒருப்பெண்னை வன்புணர்வு செய்ததுடன் கொலை செய்ய முயன்றது;

மத்தியப்பிரதேசத்தில் சகோதரிகள் இருவரை கடத்திச்சென்று நான்குபேர் கொண்ட பா.ஜ.க கும்பல் வன்புணர்வு செய்தது;

என நெஞ்சை பதறவைக்கும் பா.ஜ.கவின் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு கொலைகளையும் அக்கிரமங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பாரத் "மாதா கி ஜெ" என்று கத்தும் இக்கும்பல் அப்படி ஒரு மாதா தங்கள் கண்முன் தோன்றினால் அவளையும் அடுத்த நொடியே வன்புணர்ந்து சாலையோரத்தில் வீசியெறியும் மாபாதக கொலைகார கும்பலாகும்.

இந்த காவிகும்பலின் ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறைகள் அதிதீவிரம் பெற்றுள்ளது. நாட்டில்15 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்றால் எவ்வளவு பெரிய கொடுமை! வெட்கக்கேடு! தேசிய குற்ற ஆவணகாப்பகத்தின் தகவலின்படி கடந்த 2017-2022 காலகட்டத்தில் மட்டும் 1551 பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு அச்சத்திற்குள்ளாக்குகிறது. பெண்கள் வாழ தகுதியற்ற, பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் உள்ளது இந்த காலிகளின் ‘புண்ணிய’ தேசம்!

இன்னும் எத்தனை ஆசிபாக்களையும் நிர்பயாக்களையும் பார்த்து பதறுவது?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடத்தப்படுவதில் பா.ஜ.க ஆளும் உத்திரப்பிரதேசம் முதலிடத்தில் இருந்தாலும், இந்நிலைமை என்பது நாடு தழுவியதாகவே இருக்கிறது.

சமீபத்தில் தமிழகத்தில் தஞ்சை பாப்பாநாட்டில் இளம்பெண்னை அவரது வீட்டின் அருகிலேயே அதே பகுதியை சேர்ந்த கஞ்சா போதை கும்பல் கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்தது. பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் வன்கொடுமைகள் மட்டுமல்லாது பெண்கள் மீதான அனைத்து ஒடுக்கு முறைகளும் இந்த பாசிச கும்பலின் ஆட்சியில் தலைவிரித்தாடுகிறது.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்று பாரதி பாடி சென்றான். இன்று ஆணாதிக்கக் கிடுக்குப்பிடிகளை கடந்து பெண்கள் சட்டங்களையும் பட்டங்களையும் எட்டிப்பிடித்தாலும் கூட பெண்களின் நிலையில் அடிப்படையான மாற்றம் நடந்து விடவில்லை! 

பெண்ணின் நிலையென்பது சொத்திற்கும் பெண்ணிற்குமான உறவின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் மீதான உரிமையின் அடிப்படையிலேயே பெண்ணின் நிலை தீர்மானிக்கப்படுகிறது.

பெண்ணின் நிலையோடு தொடர்புடைய ஒடுக்குமுறையானது பெண்ணுக்கும் உற்பத்தி சாதனங்களின் தோற்றம்-வளர்ச்சி-உரிமை ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பில்தான் வேர் கொண்டுள்ளது. எனவே பெண்விடுதலை என்பது, இந்த உற்பத்தி சாதனங்களின் மீதான உரிமை ஒழிக்கப்படுவதில்தான் அடங்கியுள்ளது. தாய்வழி உறவுமுறையின் மீது வெற்றிக்ககொண்ட தனியுடமை ஆணாதிக்க உரிமை காலத்திலிருந்து, வர்க்க சமூகம் பல படி நிலைகளை கடந்து வந்திருப்பினும், பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற, பெண் அடிமையாக இருப்பதற்கான தனியுடமை ஆணாதிக்க சமூக அமைப்பு தொடர்ந்து கொண்டே இருப்பதை முற்றாக ஒழித்துக்கட்டாமல் பெண் விடுதலை என்பது சாத்தியமில்லை. (சோவியத் ஆட்சி பெண்களுக்கான சகல உரிமைகளையும் வழங்கியது) பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுத்து தனியுடமையை ஒழித்து கட்டுவதன் மூலம்தான் பெண்கள் விடுதலை பெறமுடியும் என்பதை பாட்டாளிவர்க்க தலைமையிலான புரட்சிகர அரசுகள் நிரூபித்துள்ளன.

பெரும்பாலும் பெண்கள் மீதான  ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் ஆண்களுக்கு எதிரான போராட்டமாக திசை திருப்பப் படுகிறது. அல்லது சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்துவதோடு நி்ன்று விடுகிறது. பெண்களை போகப் பொருளாக பார்க்கின்ற, வாரிசு பெற்றுப்போடும் எந்திரமாகவும் ஆணிண் உடைமையாகவும்  பார்க்கும் ஆணாதிக்க சிந்தனை முறைக்கு அடிப்படையான தனி சொத்துடமை தகர்ப்பிற்கான திசையிலிருந்து விலக்கி விடுவிகிறது. மாற்றாக பெண்கள் தங்கள் கர்ப்பப்பைகளை அகற்றி விடவும், பிள்ளை பெற்றுக்கொள்ள கூடாது என்பதும், பல புருஷன் முறையை கைக் கொள்ளவும் என அயோக்கியதனமான அராஜக வழிகாட்டல்கள் முன்வைக்கப்படுகின்றன.

நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு பெண்கள் மீதான வன்முறையும் நமக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. இது போன்ற பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான போராட்டங்கள் மக்கள் மயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றவாளிகள் அதிகாரத்தின் துணைக்கொண்டு தப்பித்து விடுவதற்கான நிலைமைகள் மட்டுப்படும். அரசுகள் எவ்வளவு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்திட மக்கள் போராட்டம் அவசியமாகும். இருக்கும் சட்டத்தின் படி இக்குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவும்  பாதிக்கப்பட்டவருக்கு நீதி பெற்று தருவதற்காகவுமான போராட்டம் அவசர அவசியமானதாகும்.

மேலும், குற்றம் நடைபெற அடிப்படையான சமுகப்பொருளாதர காரணிகளை மாற்றியமைப்பதற்கான நீண்ட அரசியல் போராட்ட வழியின் மீது அதன் பார்வை விரியவேண்டும். இன்று பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் உள்ளிட்டு அனைத்து ஒடுக்கு முறைகளையும் கட்டவிழ்த்து விட்டு, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பாசிச மோடியின் காட்டாட்சியை வீழ்த்துவதற்கு காவிகளை விரட்டும் காளிகளாய் பெண்கள் வீதியெங்கும் அவதாரம் எடுக்க வேண்டும்!

ஒரு ஜனநாயகப் புரட்சியினூடே சமூகம் முழுமையும் சோசலிசத்திற்கு மாறும் போதுதான் உண்மையான ஆண் பெண் சமத்துவத்தை அடைய முடியும் என்பதும்; பெண்  அடிமைத்தளை அகற்றல் என்பது பாட்டாளி வர்க்க விடுதலையின் பிரிக்க இயலாத பகுதி என்பதிலிருந்து பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் பார்வையும்  விரிந்தெழுவதன் மூலம்தான் விளைவுகள் விளைய விதையாக இருக்கின்ற காரணங்கள் காலாவதியாகும்.

நாடெங்கும் நடைபெறும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்!

- செந்தளம்