மணிப்பூரைத் தொடர்ந்து ஹரியானா!

நாட்டை கலவர பூமியாக மாற்றி ஆட்சியை பிடிக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலுக்கு சவக்குழி வெட்டுவோம்!! - சமரன்

மணிப்பூரைத் தொடர்ந்து ஹரியானா!

நிதிமூலதன கும்பலின் கோரப்பசிக்கு மணிப்பூர் மக்களை நரபலி கொடுத்துக் கொண்டிருக்கிறது சங்பரிவார - பாஜக கும்பல். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் மரண ஒலங்கள் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் வேளையில், தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானாவிலும் கலவர நெருப்பை கக்கியுள்ளது இந்த பிணந்தின்னி கூட்டம். தான் அமல்படுத்தி வரும் அரசியல் பொருளாதார கொள்கைகளால் பாஜக அரசு மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. பன்னாட்டு உள்நாடு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த தோல்வியை மூடி மறைத்து வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நாடு முழுவதும் மதக் கலவரங்களை தூண்டிவிடுகிறது. அதன் பகுதியாகவே இன்று ஹரியானாவில் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

நூஹ் மாவட்டத்தில் பஜ்ரங்தள் - விஎச்பி குண்டர்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட கலவரம் 

ஆர்.எஸ்.எஸ். ன் துணை இந்துத்துவ அமைப்புகள் விஷ்வ ஹிந்து பரிசத், இந்து முன்னணி, பஜ்ரங்தள், அரம்பை தெங்கோல், ஏபிவிபி, ராஷ்ட்ரீய சேவிகா சமிதி, பாரதிய கிசான் சங், கவு ரக்‌ஷா தள் என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இவை பாசிச வாய்ச்சவடால்களுக்கு பலியாகும் சக்திகளை திட்டமிட்டு அணிசேர்க்கின்றன. அவர்களை இந்துத்துவ மதவெறி பிடித்த குண்டர்களாக சீரழிக்கின்றன. அக்குண்டர்களை கொண்டே மதக் கலவரங்களை திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றன. அதன் ஓர் அங்கமாக கடந்த ஜூலை 31 அன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் மதக்கலவரத் தீயை பற்றவைத்துள்ளது பஜ்ரங்தள் மற்றும் விஎச்பி சங்பரிவாரங்கள்.

ஹரியானாவின் நூஹ் மாவட்டம் (அதன் பழைய பெயர் மேவாத்) 80சதவிகிதத்திற்கும் மேல் மீயோ பிரிவை சேர்ந்த இசுலாமியர்கள் வாழும் பகுதி. அவர்கள் பெரும்பாலும் 20 நூற்றாண்டிற்கு பிறகுதான் இசுலாமியர்களாக மதம் மாறியவர்களாக உள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறது விஎச்பி. ஆகையால்தான் இசுலாமியர்கள் பெரும்பகுதியாக வாழும் இம்மாவட்டத்தை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது சங்பரிவார கூட்டம். நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களை இணைப்பது – பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை – எனும் பெயரில் அரசின் அனுமதியோடு கடந்த 3 ஆண்டுகளாக மதவெறி யாத்திரையை நடத்தி வருகிறது விஎச்பி; குருகிராம் வழியாக சென்று நூஹ் பகுதியில் உள்ள நல்ஹரேஷ்வர் கோவிலுக்கு செல்வது என திட்டமிட்டு ஜூலை 31 அன்று நூஹ் ஐ அடைந்தன. 

அதே சமயம், பஜ்ரங்தள் அமைப்பைச் சார்ந்த மோனு மனேசர் மற்றும் பிட்டு பஜ்ரங்கி என்ற இரு குண்டர்களும் விஎச்பி யின் யாத்திரையில் தாங்கள் பங்கேற்பதாகவும், அதனால் அனைவரும் கலந்து கொண்டு மேவாத்தில் நமது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் எனவும் பேசி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் பரவலாகியது. இந்த மோனு மனேசர், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜுனைத் மற்றும் நசீர் என்ற இரு இசுலாமிய இளைஞர்களை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவன். மேலும் பசு பாதுகாப்பு எனும் பெயரில் பல்வேறு சித்திரவதை வீடியோக்களும் அப்பகுதியில் ஏற்கனவே வைரலாகின. அதேப் போல பிட்டு பஜ்ரங்கி என்பவனும் கொலை ஆயுதங்களுடன் இசுலாமிய வெறுப்பை உமிழும் பல்வேறு வீடியோக்கள் மூலம் பிரபலமானவன். ஆகையால் அந்த கொலை சம்பவங்களும் வைரலான வீடியோக்களும் நூஹ் பகுதியில் வாழும் இசுலாமியர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கி இருந்தது. 

புனித யாத்திரை எனும் பெயரில் நரவேட்டை யாத்திரையை நடத்த திட்டமிட்டிருந்தது சங்பரிவாரா கும்பல். பளபளப்பான வாள்கள், பட்டாக் கத்திகள் துப்பாக்கிகள், லத்திகள் சகிதமாக ரத்த வெறிக்கொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கி கொண்டு வந்தது அந்த வாணரப்படை. அவர்களின் திட்டமறிந்த நூஹ் பகுதியைச் சார்ந்த இசுலாமிய இளைஞர்கள் ஒன்று திரண்டனர். தற்காப்பு நிலையிலிருந்து அவர்களை தாங்கள் வாழும் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்தனர். யாத்திரையை தடுத்து நிறுத்த முயன்றனர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சங்பரிவார குண்டர்படை தாக்குதலை தொடங்கியது. திருப்பித் தாக்கவே கலவரமாக மாறியது. அங்கு நடைபெற்ற வன்முறையில் உள்ளூர் காவல்படையைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடந்தனர். வாகனங்களும், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. 

அதைத் தொடர்ந்து மறுநாள் ஆகஸ்ட் 1 அன்று, நூஹ் மற்றும் டெல்லிக்கு இடையில் உள்ள குருகிராம் (அதன் பழைய பெயர் குர்கான்) மாவட்டத்தில் உள்ள மசூதியில் 150பேர் கொண்ட விஎச்பி – பஜ்ரங்தள் கும்பல் நுழைந்து 22 வயதுள்ள இளம் மவுலானா அமீனை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்றது. மசூதியையும் தீக்கிரையாக்கின இந்த ரத்தவெறி கொண்ட ஓநாய்கள். அங்கும் கலவரம் பரவியது குருகிராம் மாவட்டத்திலும் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஹரியானாவின் பெரும்பகுதி கலவரக் காடாய் மாறியது. 

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகள் முடக்கப்பட்டன. செய்திகள் பரவி விடாமல் பாதுகாப்பதில் இந்த வெட்கங்கெட்ட அரசாங்கம் எச்சரிக்கையாக செயல்படுகிறது. மறுபக்கம் சங்பரிவார கும்பல் மூலம் கலவரத்தை தூண்டிவிட்டு நிலைமைகளை தனக்கு சாதகமாக்கி கொள்கிறது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றஞ்சாட்டி நூஹ் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும், கடைகளையும் புல்டோசர் மூலம் இடித்து தள்ளியுள்ளது ஹரியானா பாஜக அரசு. அவர்கள் அத்துமீறி குடியேறியவர்கள், வங்காள வந்தேறிகள் என பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது; மற்றும் இது விதிமீறல்களை ஒழுங்குப்படுத்தும் வழக்கமான நடவடிக்கைதான் எனக்கூறி இந்த கொடூர செயல்களை நியாயப்படுத்த முயல்கிறது. பக்கத்து கிராமத்தில் வசிக்கும் சமன்லால், அவரது சலூன் கடை மிகச்சிறியது; புல்டோசரின் ராட்சத கரத்தால் இடித்து அகற்றப்பட்டது. செய்வதறியாது கண்ணீருடன் அதை அமைதியாக பார்த்து நின்றார். புல்டோசர் அடுத்த கடையை நோக்கி நகர்ந்தது. சமன்லால் ஓடிச்சென்று நொறுங்கிய தனது கடையில் எஞ்சியிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக தேடி எடுத்தார். வட்டிக்கு கடன் வாங்கி நடத்தி வந்துள்ளார். அக்கடையை உடைத்து நொறுக்கி நடுத்தெருவுக்கு அவர் குடும்பத்தை தள்ளியுள்ளது அரசு. நூஹ் பகுதியில் வாழும் இசுலாமியர்கள் உண்மையிலேயே பாகிஸ்தான் பிரிவினையின் போது கூட தனது தாய் நாட்டை விட்டுச் செல்லாமல் வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் பெரும்பாலும் வறுமையில் உழல்பவர்களாகவே உள்ளனர். தனிநபர் வருமானத்திலும் மாநில அளவில் அம்மாவட்டம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இத்தனைக்கும் தலைநகர் டெல்லியை சுற்றியும் பன்னாட்டு –உள்நாட்டு கார்ப்பரேட்களின் பகாசுர நிறுவனங்களின் ஆலைகள் அமைந்துள்ள குர்கான் மாவட்டத்தையொட்டியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், குர்கான் பகுதியில் பிழைப்புக்காக உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் குடிசைகளில் தங்கி வேலைப் பார்த்து வந்தனர். கலவரத்தில் அவர்களின் வாழ்விடங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. எஞ்சியிருந்த குடிசைகளில் இருந்து வந்தவர்களையும் காவிக் காடையர்கள் காலிசெய்து ஊர் திரும்பும்படி மிரட்டியுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களில் இசுலாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்களும்தான் இருந்து வந்துள்ளனர். அவர்களையும் சேர்த்துதான் விரட்டியடித்துள்ளது இந்த சங்பரிவார கூட்டம். அவர்களின் பொருட்கள் அனைத்தும் சூறையாடப் பட்டதால் சொந்த ஊர் திரும்பக் கூட பணம் இல்லாமல் அல்லோலப்பட்டு வருகின்றனர். 

ஆரவல்லி மலைத் தொடரின் வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கவே கலவரம் 

குருகிராம் மற்றும் நூஹ் மாவட்டங்களில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் 10,000 ஏக்கரில் உயிரியல் பூங்கா மற்றும் சஃபாரிக்கான திட்டத்தை ஏப்ரல் 2022 இல், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார். இத்திட்டத்திற்காக மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் அந்த மலைத்தொடரின் பல்லுயிர் பெருக்கத்தை சீரழிக்கும் என ‘ஆரவல்லி பச்சாவோ’ என்ற குடிமக்கள் இயக்கமும் எதிர் குரல் எழுப்பி வருகிறது. குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா தாண்டி டெல்லி வரை 720 கி.மீ நீளத்திற்கு நீண்டிருக்கும் இம்மலைத் தொடர் 300க்கும் மேற்பட்ட அரிய தாவர மூலிகைகளையும், 120க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களையும் கொண்டுள்ளது. சபர்மதி உள்ளிட்ட முக்கிய நதிகளின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. இந்த மலைத் தொடரில் காப்பார் படிமங்கள் நிறைந்து கிடைக்கின்றன. இம்மலைத் தொடரில் உள்ள வனங்களையும், பல்லுயிர் மற்றும் கனிம வளங்களையும் கார்ப்பரேட்டுகள் தங்கு தடையின்றி கொள்ளையடிக்கவுமே இதன் அடிவார மாவட்டங்களான குருகிராம் மற்றும் நூஹ் பகுதிகளில் பசுவதை தடுப்பு என்ற பெயரில் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி கும்பல்.

ஹரியானாவில் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் கட்டியமைக்கப்பட்ட இசுலாமிய வெறுப்பு

மஹாராஷ்டிராவைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு ஹரியானாவில் மாநில பாஜக அரசால் கவு சன்ரக்சன் அவும் கவு சம்வர்தன் (Gau Sanrakshan avm Gau Samvardhan) எனப்படும் பசுவதை தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2019ம் ஆண்டில் மேலும் சில திருத்தங்களை கொண்டு தண்டனைகளை தீவிரப்படுத்தியது. பசு பாதுகாப்பு படை - கவு ரக்‌ஷா தள் (Gau Raksha Dal) எனும் பெயரிலான பஜ்ரங்தள்ளின் கிளை அமைப்புக்கு மாவட்ட பொறுப்பாளராகவும், ஹரியானா அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு பசு பாதுகாப்பு பணிக்குழுவின் (Special Cow Protection Task Force committee) மாவட்ட உறுப்பினராகவும் மோனு மனேசர் எனும் மோகித் யாதவ் நியமிக்கப்பட்டான். இவர்களின் குறி முழுவதும் நூஹ் மாவட்டத்தையும் அதன் கிராமப் பகுதிகளிலுள்ள இசுலாமியர்களையும் நோக்கியே இருந்தது. 2019ம் ஆண்டு மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது; சமூக வலைதளங்களில் பசுவதை தடுப்பு எனும் பெயரில் வன்முறை தாக்குதல்களை நியாயப்படுத்தியும் இசுலாமிய வெறுப்பை கட்டியமைக்கும் விதமாகவும் பல்வேறு வீடியோக்களை வைரலாக்கியது என மோனு மனேசர் பிரபலமடைந்தான். 

இந்தாண்டு ஜனவரியில் நூஹ் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இசுலாமியர்களை பசுவை கடத்தியவர்கள் என அடையாளப்படுத்தி ஆயுதங்களால் தாக்கி –துன்புறுத்தியதோடு அதை வீடியோவாகவும் வெளியிட்டான். அதில் வாரிஸ் கான் என்பவர் சில நாட்கள் கழித்து பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அதை டெம்போ மீது கார் மோதிய விபத்தில் இறந்துவிட்டதாக கூறி வழக்கை மூடியது மாநில அரசு. தாக்கப்பட்ட மூவரின் உறவினர்கள் கூறுகையில், “அவர்கள் மாடுகளை கொண்டு செல்லவில்லை என்றும், இக்கொலையில் போலீசும் மோனுவுடன் கைக்கோர்த்து கூட்டாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்”. அதேப் போல, அடுத்த மாதம் பிப்ரவரியில் ராஜஸ்தான் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் மற்றும் ஜூனைத் என்ற இருவரும் ஹரியானா – பிவானி மாவட்டத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலங்களாக எடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் பசு கடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்டு போலீசு துணையுடன் பஜ்ரங்தள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். பிறகு காரில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய மோனு உள்ளிட்ட எந்த பஜ்ரங் தள் குண்டர்களையும் ஹரியானா அரசு இதுவரை கைது செய்யவில்லை. இந்த கொலைகாரர்களுக்கு ஆதரவாக மகா பஞ்சாயத்துகளையும் கூட்டின இந்த்துத்துவ அமைப்புகள். பசு பாதுகாவலர்களை யாராவது கைது செய்ய முயன்றால் அவர்கள் வந்த பாதையில் திரும்ப மாட்டார்கள் என தீர்மானம் போட்டு மிரட்டின. மோனுவும், (அதே பாணியில்) பிட்டு பஜ்ரங்கி போன்ற காவி காடையர்களும் பசு பாதுகாப்பு எனும் பெயரில் இசுலாமிய வெறுப்பை கக்கும் வீடியோக்களையும் இந்துத்துவ மதவெறியை தூண்டும் விதமாகவும் வெளியிட்டு அரசு மற்றும் காவல்துறையுடன் கைக் கோர்த்து ஹரியானாவில் இசுலாமிய வெறுப்பை கட்டியமைத்தனர். இதுவே ஹரியானா கலவரத்திற்கு காரணமாக அமைந்தது.

மோடி ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகில் முதல் நாடாக மாறிய இந்தியா 

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகில் 5வது இடத்தில் இருந்த இந்தியா 2014ம் ஆண்டுக்கு பின் வேகமாக வளர்ந்து முதலிடத்தில் இருந்த பிரேசிலை பின்னுக்குத் தள்ளி ஆண்டுக்கு 12 முதல் 15% சதவிகித வளர்ச்சியுடன் தற்போது உலக அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. சுமார் 15லட்சம் டன் எடையுள்ள மாட்டிறைச்சியை ஆண்டொன்றுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் டெல்லியும் அதைச் சுற்றியுள்ள ஹரியானா மாநிலமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் முறையே இம்மாநிலங்களில் பசுவதை தடுப்புச் சட்டம் எனும் மோசடி சட்டங்கள் முதலில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. நாம் பசுக்களை கொல்லக் கூடாது ஆனால் உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்க வேண்டும். இதுவல்லவோ பசு மீதான பாஜக அரசின் கரிசனம் (?!). 

அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் உலகளவில் குறைவான விலைக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது பாஜக அரசு. அபெடா (Apeda – Agricultural and Processed Food Products’ Export Development Authority)- வின் அறிக்கை மாட்டிறைச்சியின் ஏற்றுமதி பாசுமதி அரிசியின் ஏற்றுமதியையும் பின்னுக்கு தள்ளியுள்ளதாக தெரிவிக்கிறது. நாட்டில் சுமார் 10சதவிகிதம் பேர் வரை மாட்டிறைச்சி உண்கிறார்கள். அதில் பெரும்பாலும் இசுலாமியர்கள், இந்துக்களில் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த உழைக்கும் மக்கள் மற்றும் பழங்குடியினர் ஆவர். இவர்களின் உணவு உரிமையை பறித்து வருகிறது. இவ்வாறு பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் உண்டுகொழுக்க சொந்த நாட்டு மக்களை வஞ்சிக்கிறது மோடி அரசு. ஹரியானா கலவரத்திற்கு இதுவும் ஒரு பொருளியல் அடிப்படையாக அமைந்துள்ளது. அதற்காகதான் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் இசுலாமியர்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் நாடு முழுவதும் நர வேட்டையாடுகிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல். இசுலாமியர்கள் மாட்டிறைச்சி விற்பதற்கு நாடு முழுவதும் தடை விதித்தும் வருகிறது அரசு; ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய இங்குள்ள தரகு முதலாளித்துவ கும்பலுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து அவர்களை ஊக்குவிக்கிறது. இசுலாமியர்கள் உணவுக்காக மாடு வெட்டினால் அது சட்டவிரோதம்; அவர்களுக்கு கொலைத்தண்டனை. கார்ப்பரேட்கள் செய்தால் அது சட்டபூர்வமானது; அவர்களுக்கு சிவப்பு கம்பளம். சதீஷ் (அல்-கபீர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்), சுனில் கபூர் (அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்), மதன் அபோட் (எம்.கே.ஆர். ஃப்ரோசன் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரவேட் லிமிடெட்), பிந்த்ரா (பி,எம்.எல். இண்டஸ்டிரீஸ் பிரவேட் லிமிடெட்) என இந்திய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் இவர்கள் யாரும் இசுலாமியர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் இந்து மதத்திலுள்ள உயர் சாதியினரே. ‘புனிதப் பசு’, ‘பசு பாதுகாப்பு’ போன்ற வெற்று கோஷங்களெல்லாம் இசுலாமியர்களையும் இந்துக்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களையும் சித்திரவதை செய்து கொல்வதற்கு மட்டும்தான். ஆனால் அமெரிக்க மாமன்களுக்கு இளம்பசுக் கறி படையல் செய்கிறது இந்த மதவெறி கூட்டம். 

ஆரிய சமாஜ்வாதி வழியில் இசுலாமியர்களை பலியாக்கும் ஆர்.எஸ்.எஸ். –பாஜக கும்பல் 

“1872ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது காலனியாதிக்கத்திற்காக இந்திய மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி மோதவிட தொடங்கியது. அதன் ஆசியுடன் தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை 1875ல் தோற்றுவித்தது. அது பசுவை புனிதமாக்கி பசு பாதுகாப்பு எனும் பெயரில் இசுலாமியர்களை அதற்கு எதிரானவர்களாகவும் பசுவைக் கொல்பவர்களாகவும் அடையாளப்படுத்தியது. ஆனந்த மடம் என்ற இந்துத்துவ நாவல் அவர்களை ‘அழுக்கான வேசிமகன்கள்’ என குறிப்பிட்டது. மேலும் பல இந்துத்துவ வெறியர்கள் இசுலாமியர்களையும் அவர்களின் ஆட்சிகாலத்தையும் இந்துக்களுக்கு கொடுமை விளைவித்த ஆட்சியாக தங்களது பல எழுத்துக்களில் சித்தரித்து வந்துள்ளனர். 1940ல் ஆர்.எஸ்.எஸ். ன் தலைமையாக பொறுப்பேற்றுக் கொண்ட கோல்வால்கர் பசுவை இந்துமத பக்தியின் அடையாளச் சின்னமாக்கி ‘கோமாதா’ எனக் கருதினார்.” என்று பசு இந்துத்துவவாதிகளால் புனிதமாக்கப்பட்டதை வரலாற்று ரீதியாக எடுத்துரைக்கிறார் டி.என்.ஜா. 

மேலும் அவர், புனிதப் பசு என்பது கட்டுக்கதை பண்டைய இந்தியாவில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட அனைவரும் மாட்டிறைச்சியை உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக கொண்டிருந்தனர் என்றும் இன்னும் சொல்லப் போனால், பஞ்சக்காலங்களில் நாய் இறைச்சியையும் சாப்பிட்ட மிகவும் ஒழுக்கமான பார்ப்பனர்கள் பற்றிய உதாரணங்களை கூட மனுஸ்மிருதி தருவதாகவும் எடுத்துரைக்கிறார். 

ஆனால் ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல் ஆரிய சமாஜத் மற்றும் கோல்வால்கரின் வழியை வரிந்துகட்டிக் கொண்டது. அதை பின்பற்றி இசுலாமியர்களையும் தாழ்த்தப்பட்ட சாதியினரையும் மாட்டிறைச்சி உண்பவர்களாகவும் பசு பாதுகாப்பிற்கு எதிரானவர்களாகவும் அடையாளப்படுத்தி அவர்கள் மீது தொடர் தாக்குதலை தொடுத்து வருகிறது. ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், ஹரியானா என பசுபாதுகாப்பின் பெயரில் காவி காடையர்கள் அப்பாவிகளை கொன்று குவித்து வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக அவர்களின் காலை நக்கிப் பிழைத்த சாவர்க்கரின் வாரிசுகள், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்ட திப்பு சுல்தானின் வாரிசுகளை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லி கொக்கரிக்கின்றன. பசு பாதுகாப்பை முன்னிறுத்தி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் துவங்கிய மோதல் இன்று அமெரிக்க ஆசியுடன் நடைபெறும் பாஜக ஆட்சியின் ஹரியானா கலவரம் வரை தொடர்கிறது. 

நாட்டை கலவர பூமியாக மாற்றி ஆட்சியை பிடிக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்

ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி என வெற்று கோஷங்களை முன்னிறுத்தி 2014ம் ஆண்டு ஆட்சியிலேறிய பாஜக பல்வேறு துறைகளிலும் தோல்வியடந்து வருகிறது. வரலாறு காணாத முதலாளித்துவ ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. உலகமய-தாராளமய-தனியார்மய கொள்கைகளால் நாட்டை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது. நாட்டை அமெரிக்காவின் புதியகாலனிய பிடியில் மேலும் இறுக்கி வைக்க பல்வேறு பொருளாதார – இராணுவ அடிமை ஒப்பந்தங்களையும் போட்டு வருகிறது. கடனுக்கு மேல் கடன் வாங்கி உள்நாட்டு கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைத்து சுமைகளை மக்கள் மீது ஏற்றி வருகிறது. அக்கடனுக்கு வட்டிக் கட்ட நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கூவி விற்கிறது; நாட்டின் வளங்களையும், வனங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு கூறு போட்டு கொடுக்கிறது. அதற்காக நித்தம் ஒரு பாசிச சட்டத்தை அமல்படுத்தி மக்களை வஞ்கிக்கிறது. மணிப்பூர் போன்ற மாநிலங்களில் கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக அம்மாநிலத்தை மாற்ற மக்களை மோதவிட்டு மதக்கலவரங்களை – இனப்படுகொலைகளை அரங்கேற்றுகிறது. அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்துவதை தானே அம்பலமாக்கி கொண்டுள்ளது. 

இந்த தோல்வியை மூடி மறைத்து, வரும் 2024 தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க இந்துமதவெறியை கட்டவிழ்த்து விட்டுள்ளது. நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் மிக மோசமான கலவரங்களை திட்டமிட்டு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாடு முழுவதுமுள்ள பிற்போக்கான சக்திகளை பாசிசத்தின் கீழ் அணி திரட்டுகிறது. அடிமட்டம் வரை சென்று கள வேலை செய்கிறது. அந்த பிற்போக்கு சக்திகளை இராணுவமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் பலர் ஏற்கனவே போலீஸ், இராணுவம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் ஊடுருவியுள்ளனர். பல்வேறு அமைச்சர்களும் நீதிபதிகளும் பசு பாதுகாப்பு எனும் பெயரில் அறிவியலுக்கு புறம்பான கட்டுக்கதைகளைப் பேசி வருகின்றனர். ஹரியானா கலவரம் நடந்த அன்றே இன்னொருபக்கம் ரயில்வே போலீசைச் சார்ந்த ஒரு மதவெறியன் ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் பயணித்த 4 இசுலாமியர்களை அவர்களின் தோற்றத்தை வைத்து பெயரை கேட்டு உறுதி செய்து கொன்றுள்ளான். அவனை மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று கூறி வக்காலத்து வாங்கியுள்ளது அரசு. இவ்வாறு பாசிச கும்பல் மதவெறியை நாடு முழுவதும் திட்டமிட்டு கட்டியமைத்து வருகிறது. இந்த பாசிச கும்பலுக்கு சவக்குழி வெட்டமால் நாம் உயிர் வாழ முடியாது என்ற மோசமான நிலையை உருவாக்கியுள்ளது.

ஆகவே இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை வெறும் மதவெறிக்கு எதிரான அடையாள அரசியல் போராட்டமாக மட்டுமல்லாமல் அதன் பொருளியல் அடித்தளத்தை தகர்க்கும் வகையில் வர்க்க ரீதியான அணிசேர்க்கையை உருவாக்கி ஒரு வலுவான வர்க்கப் போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டத்தின் வழியிலேயே இவர்களை சவக்குழிக்குள் அனுப்ப முடியும். 

- சமரன்

(செப்டம்பர் 2023 இதழில்)