சாதி ஒழிப்பு குறித்து: ஏஎம்கே
தாழ்த்தப்பட்டோர் மற்றும் உழைக்கும் மக்களின் ஒற்றுமை ஒங்குக என்று முழங்குகின்றோம். ஆகவே, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த உழைக்கும் மக்களும், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும், பிற ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வாரீர்!!
அண்மைக் காலமாகத் தமிழகத்தில் ஆங்காங்கே சாதிக் கலவரங்கள் நடந்துவருகின்றன. இதுவரை தென்மாவட்டங்களில் பரவலாக நடந்துவந்த கலவரங்கள் தற்போது வடமாவட்டங்களில் தலைதூக்கியுள்ளன. தற்போது, தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் சாதிச்சங்கங்கள் அல்லாமல், புதிதுபுதிதாகச் சாதிச் சங்கங்கள் முளைத்துவருகின்றன. வருகின்ற சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு சாதித்திரட்டல்கள் வேகமாக நடந்துவருகின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பலபகுதிகளிலும் சாதிக்கலவரங்கள் நடைபெறுவதும், ஏராளமான சாதியமைப்புகள் உருவாவதும் ஒரு போக்காகவே உள்ளன. இவ்வமைப்பு மக்களிடையே சாதிவெறியை ஊட்டி பகைமை உணர்வுகளையும், மோதல்களையும் தங்குதடையின்றி உருவாக்குவதும் நடைபெற்று வருகின்றன.
இன்று சாதிய இயக்கங்களில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, ஒடுக்கப்பட்ட மக்களை சமூகரீதியான அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்யும் போக்காகும். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமைகளை அதாவது, அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடைகள் அல்லது கிராமக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மீறும்பொழுதோ அல்லது தாழ்த்தப்பட்டோருக்கு மனித உரிமை மறுப்பு, பொது உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பு, ஜனநாயக உரிமை மறுப்பு ஆகியவற்றிற்கு எதிராக தங்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தால் அல்லது தேவையானால் போராடுதல் ஆகியவற்றிற்கு எதிராக மேல்சாதியைச் சேர்ந்த ஆளும் வர்க்கக் கும்பல்கள் தாழ்த்தப்பட்ட மக்களைப் பணியவைப்பதற்காக அவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களே வன்முறைகளே இன்றைய சாதிக்கலவரங்கள் மற்றும் மோதல்களின் உள்ளீடுகளாக இருக்கின்றன. இதற்கெதிராகக் கிளர்ந்தெழும் போக்கு ஆதரிக்கத் தகுந்ததே. இத்தகைய கிளர்ந்தெழும் உணர்வு இல்லாமல் ஆளும் வர்க்கங்களின் அரசியல் ஆதிக்கத்திற்கும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் எதிரான கிளர்ச்சியை நடத்த முடியாது. ஆளும் வர்க்கங்களின் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியையும் இந்துத்துவப் பாசிசத்திற்கு எதிரான கிளர்ச்சியையும், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்கிற ஏகாதிபத்தியவாதிகளின் கோட்பாட்டின்படி உருவான புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு எதிரான கிளர்ச்சியையும் இணைப்பதன் மூலமாகத்தான், உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டங்களையும், விவசாயப் புரட்சிக்கான போராட்டங்களையும் திடப்படுத்த அடுத்த உயர்ந்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.
மற்றொரு அம்சம். அந்தந்த சாதி மக்களின் சாதியுணர்வைத் தூண்டிவிடுதல், புதிய புதிய சாதிச்சங்கங்கள் உருவாக்குதல், பழைய சாதிச்சங்கங்களைப் புதுபித்தல், சாதிக்கூட்டணிகளை உருவாக்குதல் - அதாவது சாதித்திரட்டல்கள் என்னும் போக்காகும். பார்ப்பனர் அல்லாதாரின் சாதிச்சங்கங்கள் நிலப்பிரபுத்துவ சார்பு ஏகாதிபத்தியச் சார்புப் பிரிவினருக்கு ஆதரவான இயக்கமாகக் செயல்பட்டதால், நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதியாக அவை வளரவில்லை என்பது கடந்தகால அனுபவமாகும். மேலும் அவை, பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு அனைத்துச் சாதிமக்களையும் திரட்டிக் கொண்டபோதிலும், பார்ப்பனர்களுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட சாதியினருடன் ஒரு முன்னணி உருவாக்கிக் கொண்டதாக வரலாறு இல்லை; அத்தகைய ஒரு முன்னணி உருவாக்குவதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகச் சாதிக்கலவரங்களை நடத்தியதுதான் இருபதாம் நூற்றாண்டின் வரலாறு ஆகும். எனவே, இவ்வமைப்புகளின் கொள்கைகளும் நடைமுறைகளும் சாதி ஒழிப்பிற்குப் பயன்படக்கூடியது அல்ல.
இந்திய அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, மற்றும் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும், நாட்டில் நிலவும் அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளுக்கு விவசாய அமைப்பு முறைக்கு எதிராகவும் கிளர்ந்து எழ அறைகூவல் விடுக்காமல், எல்லா சாதிய அமைப்புகளும் சாதி உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றன. சாதியமைப்புகள் தாழ்த்தப்பட்ட மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் தனித்தனியாக அணிச் சேர்க்கின்றன.
இத்தகைய சாதிவாத அணிதிரட்டல்கள், சாதியத்தையும், தீண்டாமையையும் ஒழிப்பதற்கோ, அம்மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கோ, அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்கோ பயன்படக் கூடியது அல்ல. மேலும், சாதி அமைப்புகள், தற்போதைய சமூகப் பொருளாதார அமைப்புக்கெதிராக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட கிளர்ச்சியை உருவாக்குவதற்காக தத்தம் மக்களுக்கு அறைகூவல் விடுப்பதற்கு மாறாக; தங்களது உடன்பிறப்புகள், சொந்தங்கள், ரத்தத்தின் ரத்தங்கள் ஆட்சியதிகாரம் கைப்பற்ற வாக்களிக்கக் கோருகின்றன. இன்றைய சமூகப் பொருளாதார அமைப்பைப் பாதுகாக்கக் கூடிய அதிகார அமைப்பை தேர்தல் முறையில் கைப்பற்றுவதன் மூலம் சாதிப் பிரச்சனைகள் உள்ளிட்டு அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியும் என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இது பதவிப் பித்து, அதிகார வேட்கை கொண்ட சாதியமைப்புத் தலைவர்கள், தரகுமுதலாளித்துவ, பெரும்நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சர்வாதிகார அரசமைப்புகளில் இடம்பிடிக்க உதவலாம். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீதான உயர்சாதி ஆளும்வர்க்கக் கும்பல்களின் வன்முறைத் தாக்குதல்களை முறியடிக்க உதவாது; பா.ஜ.கவின் இந்துத்துவப் பாசிசம் மற்றும் காங்கிரஸ் பாசிசத்தைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வலுப்படுத்தப் பயன்படாது. நாட்டு மக்களை வாட்டி வதைத்து ஒட்டாண்டிகளாகும் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு முடிவுகட்டி மக்களின் வாழ்வை வளப்படுத்தவும் வழிவகுக்காது.
பீகாரிலும், தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்டோர் ஆட்சிகளின் அனுபவங்கள் இதைத்தான் காட்டுகின்றன. இந்த அரசாங்கங்கள் இன்று நடப்பில் உள்ள நிலச் சீர்த்திருத்தச் சட்டங்களைக் கூட அமல்படுத்தவில்லை. இம்மாநில ஆட்சிகளில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர் சாதியினரின் வன்முறைகள் தடையின்றித் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. மேல்சாதி ஆளும் வர்க்கங்களால் தூண்டிவிடப்பட்ட அந்தந்த சாதியினரின் வன்முறைக்கு எதிராக, எதிர்ப்பையும் தற்காப்பையும் தரவல்ல ஒரே வழி - சாதி ஒற்றுமை, சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் பரவலாக உள்ளது. சாதிய அடக்குமுறைகளின் விளைவாக, அடிமைப்பட்டிருக்கும் உணர்வின் அடிப்படையில்தான் இந்த ஒன்றிணைப்பு உருவாக்கியுள்ளது.மேல்சாதியினரின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஏற்படும் இந்தத் தன்னியல்பான உணர்வை, சாதியத்தையும், அதைப்பாதுகாக்கும் இன்றைய அரைநிலப்பிரபுத்துவ அரைக்காலனிய சமூக அமைப்பையும், அரசமைப்பையும் தூக்கியெறிவதற்கான விடுதலை உணர்வாக வளர்த்தெடுக்காமல், தங்கள் தேர்தல் சுயநலனுக்காக, சமூக உணர்வின் இத்தகைய தன்னியல்பான தன்மையை சாதியமைப்புகள் பாதுகாத்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக ஆளும் வர்க்கங்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கும், நிலவுடைமைக் கும்பல்களின் சுரண்டலுக்கும் எதிரான கிளர்ச்சியை ஒதுக்கித் தள்ளும் போக்கே இச்சாதியமைப்புகளிடம் உள்ளது. அரசியல் பொருளாதாரக் கட்டமைப்புகளிடமும் உள்ளது. அரசியல் பொருளாதாரக் கட்டமைப்புக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, இவ்வமைப்புகள் இப்போராடங்களை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து தனித்தனியானதாக சாதியமைப்புகள் பார்க்கின்றன. சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தங்களின் சாதி மக்களைத் தனியாகத் திரட்டுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களை இதர ஜனநாயகச் சக்திகளிடமிருந்தும், இதர பகுதி மக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தும் வன்முறைகளைக் கையாள்கின்றன. இச்செயல்களால் அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள மக்களின் ஒற்றுமையை நிலை குலைக்கிறது.
சமூகக் கொடுமைகளுக்கு எதிரான கிளர்ச்சியையும், ஆளும் வர்க்கங்களின் அரசியல் ஆதிக்கம் மற்றும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் எதிரான கிளர்ச்சியையும் ஒன்றிணைப்பதன் மூலமாகத்தான் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்ட முடியும், இத்தகைய ஒன்றுப்பட்ட உழைக்கும் மக்களின் அணித்திரட்டல்தான், தாழ்த்தப்பட்டோர் மீதான உயர்சாதி ஆதிக்க வெறியர்களின் தாக்குதல்களை முறியடிக்கும்; இறுதியாக, சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்கு மக்களைத் திரட்டமுடியும்.
தமிழகத்தில் தற்போது நடந்துவரும் சாதிமோதல்களும், கலவரங்களும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட சாதிமக்களுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே உள்ளன.
தனிக்குடியிருப்பு, தனிப்பாதை, தனிக்கிணறு, தனிக்கோயில், தனிச்சுடுகாடு என்று தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகரீதியாகத் தள்ளி வைக்கப்படுவதும், தீண்டாமைக் கொடுமைகள், மிகப்பிடிவாதமாக சாதி ஆணவத்துடன் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சாதியம் மற்றும் தீண்டாமையின் கொடிய தாக்குதல்களால், இந்திய - தமிழக கிராமங்கள், 'சேரி' என்றும் 'ஊர்' என்றும் இருவேறு கூறுகளாகப் பிரிந்துகிடக்கின்றன. இன்று தாழ்த்தப்பட்ட மக்கள், மனித உரிமை மறுக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின், மிகப் பெரும்பான்மையானவர்கள் பண்ணை அடிமைகளாய் விவசாயக் கூலிகளாய் பெரும் நிலவுடமையாளர்களால் ஒடுக்கப்படுகின்றனர், சுரண்டப்படுகின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைத் தளைகளிலிருந்து விடுபட வேண்டுமானால், மேல்சாதியில் உள்ள ஆளும் வர்க்கத்தினரின், பண்ணையடிமைத்தனத்திலிருந்தும், அவர்கள் விதிக்கும் சாதி தீண்டாமை, ஊர்க்கட்டுப்பாடுகளையும் மீறுவதைத்தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை மேல்சாதியைச் சேர்ந்த ஆளும்வர்க்கத்தினர் தொடுக்கும், பண்ணையடிமை ஆதிக்கம், சாதி-தீண்டாமைக் கொடுமைகள், ஊர்க்கட்டுப்பாடுகள் ஆகியவற்றை தாழ்த்தப்பட்ட மக்கள் மீறத் தலைப்படும்போதெல்லாம், அவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை உயர்சாதி ஆதிக்க சக்திகள் கட்டவிழ்த்து விடுகின்றனர். தவிர்க்கமுடியாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
சமீபகாலத்தில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமைகளை அதாவது அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடைகள் அல்லது கிராமக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மீறும்பொழுதோ, அல்லது தாழ்த்தப்பட்டோருக்கு மனித உரிமை மறுப்பு, ஜனநாயக உரிமை மறுப்பு, பொது உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பு ஆகியவற்றிற்கு எதிராக தங்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தால் அல்லது தேவையானால் போராடினால், அவற்றிற்கு எதிராக உயர்சாதியைச் சேர்ந்த ஆளும் கும்பல் - பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆளும் கும்பல்கள், தாழ்த்தப்பட்ட மக்களைப் பணியவைப்பதற்கும் அவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களே அல்லது வன்முறைகளே இன்று தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையில் நடைபெறும் சாதிமோதல்கள் - சாதிக்கலவரங்கள் ஆகியவற்றின் உள்ளீடுகளாக இருக்கின்றன.
இன்று, கிராமப்புறங்களில் நிலவுரிமை உறவுகளில் ஒருமாற்றம் ஏற்பட்டுள்ளது. பிராமணர்கள், வேளாளர்கள் ஆகிய உயர்சாதியைச் சேர்ந்த பெரும் நிலவுடைமையாளர்கள், தங்களது நிலங்களைப் பெருமளவு குத்தகை விவசாயிகளிடம் ஓப்படைத்திருந்தனர். குத்தகை நில உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, இந்த உயர்சாதி நிலவுடைமையாளர்களுடைய கணிசமான நிலங்கள், குத்தகை விவசாயிகளாக பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஒரு பிரிவினரிடம் சென்றுள்ளது. இத்தகைய மாற்றங்களால், கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஒரு பிரிவினர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இத்தோடு, கந்துவட்டித் தொழில், சாராயம் காய்ச்சுவது, வியாபாரம், கான்ட்ராக்ட் மற்றும் இதர தொழில்களிலும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் ஒரு பகுதியினர் ஈடுபடுவது அதிகரித்துள்ளதும்,பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையில் பூசல்கள் மேலும் வளரக் காரணமாக உள்ளது. கிராமப்புறத்தின் பொருளாதாரத்தில், பிற்படுத்தப்பட்ட சாதியினரில் ஒருபிரிவினரின் பிடிப்பு பலப்பட்டதன் விளைவாக, இயல்பாகவே இவர்கள் கிராம ஆதிக்கத்திலும், அரசியலிலும் வலுவான நிலையை அடைந்துள்ளனர். இதனையொட்டி, கிராமப்புறச் சொத்துக்களின் பயனை அடைவது, சாதியக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது போன்றவற்றில் இவர்களின் கை ஓங்கியுள்ளது மேற்கண்ட பின்னணியிலிருந்துதான், தமிழகத்தில் சமீபக்காலமாக நடைபெற்று வரும் மோதல்களை - பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பரிசீலிக்கவேண்டும்.
தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான பிற்படுத்தப்பட்ட சாதி ஆளும் கும்பலின் தாக்குதல்கள் - பிற்போக்கானதே! தோற்கடிக்கப்பட வேண்டியதே!
சமீப காலத்தில், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஆளும் வர்க்கக் கும்பல்கள், தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் மீது தாக்குதல் தொடுப்பதின் நோக்கம் என்ன? தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பண்ணையடிமை முறைகளைத் திணிப்பது; ஊர்க்கட்டுப்பாடுகளுக்கும்; சாதிக்கட்டுப்பாடுகளுக்கும் அவர்களை அடிபணியச் செய்வது; ஜனநாயக மறுப்புக்கு எதிரான குரலை நசுக்குவது; நாடாளுமன்ற வடிவ முறையிலான அதிகார அமைப்புகளில், இடம் பிடிப்பதற்காக சாதிய வாக்கு வங்கிகளை உருவாக்குவது; உள்ளூரில் தங்கள் அரசியல், பொருளாதார, சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வது ஆகியன பிற்படுத்தப்பட்ட சாதி ஆளும் வர்க்க கும்பல்களின் நோக்கங்களாக இருக்கின்றன.
பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஆளும் வர்க்க கும்பல்களின் அரசியல், பொருளாதார, சமூக ஆதிக்கத்திற்கு எதிராக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் பிற ஜனநாயகச் சக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், இரு பிரிவு சாதிகளையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒரே வர்க்கமாக அணிதிரண்டு தம்மை எதிர்க்கும் ஆற்றல் பெற்ற சக்திகளாக மாறுவதைத்தடுத்து, இரு கூறுகளாகப் பிளந்து அவற்றை எதிரெதிர் சக்திகளாக்கி மோதவிடுவதற்காகவும், சாதியத்தைப் பயன்படுத்துகின்றன; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகச் சாதிக்கலவரங்களை நடத்துகின்றன.
இத்தகைய சாதிமோதல்கள், மற்றும் கலவரங்களினால், ஒரே வர்க்கமாக அக்கம்பக்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இரண்டு சாதிகளின் கணிசமான பிரிவினர் பரஸ்பரம் மோதிக்கொண்டு, ரத்தக்களரி ஏற்பட்டு, நீண்ட காலத்திற்குப் பகைவர்களாக வாழவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர்.
பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஆளும் வர்க்கக் கும்பல்கள் இரண்டு சாதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு இடையில் நிலவும் சாதிவேறுபாடுகளைப் பயன்படுத்தி, அவர்களுக்கிடையிலான பகைமையற்ற முரண்பாடுகளை, பகைமையானதாக மாற்றி, அதனடிப்படையில் மோதல்களுக்குத் திட்டமிடுகின்றன, தலைமை தாங்குகின்றன. தம் சாதியில் உள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும், உழைக்கும் மக்களையும் இயக்குகின்றன. இவ்வாறு, இந்த ஆளும் வர்க்கக் கும்பல்கள், தம் சொந்த சாதியில் உள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள்மீதும், தாழ்த்தப்பட்ட சாதிகளில் உள்ள அடிப்படை வர்க்கங்கள் மீதும், தங்களது அரசியல், பொருளாதார ஆதிக்கத்தையும், அடக்குமுறைகளையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கின்றன. இவ்வாறு, தமது பிரதேசங்களில் தங்களின் வர்க்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்த சாதியத்தைப் பயன்படுத்துவதால், சாதியத்தை தக்கவைக்கின்றன.
பிற்படுத்தப்பட்ட சாதியில் உள்ள ஆளும் வர்க்க கும்பல் அரசதிகார அமைப்புகளில் பங்குபெறுவதற்கு பரந்துபட்ட மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடன் பார்ப்பனரை எதிர்த்து, தாழ்த்தப்பட்ட சாதியினர் உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாதார் முன்னணி என்கிற முழக்கத்தையும் முன்வைக்கின்றனர். அரசு அதிகார அமைப்புகளில் பங்குபெறும் வாய்ப்புக்கிட்டும்போது, உள்ளூர் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் கையாள்கின்றனர். இந்நோக்கத்திற்காக தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக சாதிக்கலவரங்களையும், தீண்டாமைக் கொடுமைகளையும் செய்கின்றனர்.
இத்தகைய தந்திரங்களை அவர்கள் கடைப்பிடிப்பதற்கு காரணம் என்ன? ஏகாதிபத்தியவாதிகளின் புதியகாலனிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்குச் சேவை செய்வதன் மூலமும், இந்தியத் தரகுப் பெருமுதலாளித்துவத்துடன் சமரசம் செய்துகொண்டு அதை அண்டிப் பிழைப்பதன் மூலமும், தாங்களும் தரகுமுதலாளித்துவ வாதியாக வளர்ந்துவிடலாம் என்று கருதுகின்றனர். இந்நோக்கத்திற்காக, ஆட்சி அதிகார அமைப்புகளில் பங்குபெறுவதற்கு அதே நேரத்தில், தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீதும், தங்கள் சொந்த சாதி உழைக்கும் மக்கள் மீதும் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகவுமே இவ்வாறு செய்கின்றனர். எனவே, பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஆளும் வர்க்கக் கும்பலின் சாதிவாத அரசியலும் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களும் பிற்போக்கானதே; தோற்கடிக்கப்பட வேண்டியதே ஆகும்.
தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நடுத்தரவர்க்கத்தினர் குறிப்பாக தலித் இயக்கத்தினர்; சாதி சீர்த்திருத்தப் பாதையைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் நிலப்பிரபுத்துவ சமூக ஒடுக்குமுறைகளுக்கெதிரான கோரிக்கைகளை - கோவில் நுழைவுத் தடை எதிர்ப்பு, தனி தேநீர்க்குவளை ஒழிப்பு, சுடுகாட்டுப் பாதைக்கான கோரிக்கைகள் போன்ற கோரிக்கைகளையே முன்வைத்துப் போராடுகின்றனர். ஆனால் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த அரசியல், பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. இதன் விளைவாக, ஆளும் வர்க்கங்களுக்கும் அரசுக்கும் எதிரான அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தின் அவசியத்தை மறுக்கின்றனர். உயர்சாதியைச் சேர்ந்த ஆளும் வர்க்கத்தினரை எதிர்த்த அரசியல், பொருளாதார, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை பலவீனப்படுத்துகின்றனர். அத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களை பிற ஜனநாயகச் சக்திகளிடமிருந்து தனிமைப்படுத்துவதன் விளைவாக, உயர்சாதி ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறைகளையும் கலவரங்களையும் எதிர்த்த தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களை பலவீனப்படுத்துகின்றனர். இத்தகைய செயல் தந்திரங்களை அவர்கள் மேற்கொள்வதற்கு காரணம் என்ன?
தீண்டாமை ஒழிந்த சாதிவேறுபாடுகளற்ற ஒரு ஜனநாயக சமுதாயத்தை நிறுவ விரும்புவதாகவும், அதற்காக, பார்பனிய - வர்ண சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதாகவும் கூறுகின்றனர். ஆனால் இன்றைய அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்தியாவில் சாதி ஒழிப்பு என்பது விவசாயப் புரட்சி, தேசிய விடுதலைப் புரட்சிக்கு உட்பட்டது -இவை இரண்டையும் புறக்கணிக்கின்றனர். ஏகாதிபத்திய மூலதன இறக்குமதியால் ஏற்படும் முதலாளித்துவ வளர்ச்சி, சாதி ஒழிப்புக்கு முக்கியமான பங்காற்றும் எனக்கருதி, அதன்மீது நம்பிக்கை கொண்டு அதனுடன் சமரசம் செய்துகொள்ளும் போக்கையே மேற்கொள்கின்றனர் சாதியத்திற்கு நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே அடித்தளமாக விளங்குகிறது. அடித்தளத்தை அசைக்காமலே, மேற்கட்டுமானத்தை - சாதி முறையை ஒழித்துவிடவேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. எனவேதான், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான அரசியல், பொருளாதார ஆதிக்கங்களை எதிர்த்த போராட்டங்களை நடத்தாமலே, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை அதாவது, சாதிக் கட்டுப்பாடுகளையும், சாதி நெறிமுறைகளையும் எதிர்த்த போராட்டங்களை மட்டுமே நடத்துகின்றனர். சாதிக்கட்டுபாடுகளை எதிர்த்த போராட்டங்களில் கூட பிற ஜனநாயகச் சக்திகளுடன் ஒன்றுபடாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே தனித்துப்போராடுவது என்ற நிலையை மேற்கொள்கின்றனர். பிறசாதி உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் ஒன்றுபடுவதற்கு மறுக்கும் இவர்கள், மூப்பனாருடனும், பிற நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கச் சக்திகளுடனும் கூட்டணி சேர்வதற்குத் தயங்குவதில்லை. கம்யூனிச எதிர்ப்பு, தரகு முதலாளித்துவத்துடன் சமரசம் என்பதே இவர்களின் நிலைபாடாக உள்ளது. இத்தகைய ஒரு நிலைப்பாட்டின் மூலம், சாதியத்தை ஒழிக்க முடியாது; தாழ்த்தப்பட்டோரின் ஜனநாயக உரிமைகளான - பொது உரிமை, மனித உரிமை, சமூக உரிமை, மத உரிமை ஆகியவற்றை வென்றெடுக்கவும் முடியாது.
சாதியத்தை ஒழிப்பதும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதும் ஒரு ஜனநாயக புரட்சியால்தான் சாதிக்க முடியும். இந்திய மக்களின் ஜனநாயகப் புரட்சி என்பதும், ஏகாதிபத்தியம் தரகுமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை எதிர்த்த தொழிலாளர்கள், விவசாயிகள், பிற உழைக்கும் மக்கள், சாதியால் ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்ட ஜனநாயக வர்க்கங்கள் ஒன்றுபட்டு நடத்தவேண்டிய ஒரு வர்க்கப்போராட்டம் ஆகும். அதுவே இந்தியாவில் ஒரு புதிய ஜனநாயக சமூக அமைப்பை உருவாக்க வல்லது. இத்தகைய வர்க்கப் போராட்டம்தான், உயர்சாதி ஆளும் வர்க்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மறுக்கும் தளைகளை அறுத்தெறிய வல்லது. இத்தகைய வர்க்கப் போராட்டம்தான் உயர்சாதி ஆளும் வர்க்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கும் வன்முறைக் கலகங்களை முறியடிக்கக் கூடியது.
1980ஆம் ஆண்டுகளில், நக்சல்பாரி இயக்கத்தினால் வழிகாட்டப்பட்டு, தருமபுரி மாவட்டத்தில் தோழர் பாலன் தலைமையில் நடைபெற்ற, தீண்டாமைக்கு எதிரான, இரட்டைத் தேநீர்க் குவளை ஒழிப்புப் போராட்டமும், தஞ்சையில் மடத்தை எதிர்த்த போராட்டமும், சேலத்தில் நிலப்பிரபுத்துவ சாதிக்கொடுமைகளை எதிர்த்த போராட்டமும், கடந்த ஆண்டு, தருமபுரி மாவட்டம் வரகூரில் ம.ஜ.இ.க தலைமையில் நடைபெற்ற சாதிமறுப்பு, காதல் திருமணமும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமையால் ஜனநாயகக் கோரிக்கையை வெல்ல முடியும் என்பதை உணர்த்துகின்றன.
எனவேதான், தாழ்த்தப்பட்டோர் மற்றும் உழைக்கும் மக்களின் ஒற்றுமை ஒங்குக என்று முழங்குகின்றோம். ஆகவே, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த உழைக்கும் மக்களும், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும், பிற ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வாரீர் என அறைக்கூவல் விடுக்கிறோம்.
தற்போது தமிழகத்தில் புதிய புதிய சாதியமைப்புகள் முளைத்து வருகின்றன. அனைத்து முதலியார் முன்னேற்றப் பேரவை (புதிய நீதிக்கட்சி), யாதவர்களை அடித்தளமாகக் கொண்ட மக்கள் தமிழ் தேசம் போன்ற சாதியமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தத்தம் சாதி அல்லது உட்சாதி நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் இத்தகைய, அமைப்புகள், அந்தந்த சாதிகளில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் ஆளும் வர்க்கக் கும்பல்களால்தான் உருவாக்கப்படுகின்றன. இவையெல்லாம் அந்தந்த சாதிகளைச் சேர்ந்த அனைவரின் நலன்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனவா என்றால் அதுவுமில்லை. இவ்வமைப்புகள் எல்லாம் அந்தந்த சாதிகளில் உள்ள மேல்தட்டுப் பிரிவினரால் அவ்வர்க்கங்களின் நலன்களுக்காகவே அமைக்கப்பட்டவைதான். தற்போது, புதிதாகத் தொடங்கப்படும் பார்ப்பனர் அல்லது பிற்படுத்தப்பட்ட சாதிச்சங்கங்கள் அல்லது புதுப்பிக்கப்படும் பழைய சாதிச்சங்கங்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிச் சங்கங்கள் எல்லாம் தமது கோரிக்கைகளாக அறிவிப்பது "இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு" என்பவைதான்.
இந்நிகழ்வுப்போக்கைப் புரிந்து கொள்வதற்கு சாதிச் சங்கங்களின் வரலாற்று ரீதியான அனுபவங்களைத் தொகுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
தொடக்க காலத்தில் இந்தியத் தேசியம் பேசியவர்கள் பிரிட்டிஷ் காலனி ஆட்சியை எதிர்த்த போராட்டத்தில் தங்களின் சுதந்திரத்திற்கான கோரிக்கையை நியாயப்படுத்துவதற்கும் நிலைநாட்டுவதற்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற முதலாளித்துவச் சுதந்திரத்திற்கான கோட்பாட்டை முன்வைப்பதற்கு மாறாக, இந்தியாவின் கடந்தகால பெருமிதங்களைப் பேசியதுடன், இந்துமத வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிகாசங்கள் இன்னபிற பிற்போக்கான பழைமைவாத சித்தாந்தங்கள் அடிப்படையிலேயே மக்கள் மத்தியில் ஆதரவு திரட்ட முற்பட்டார்கள். இது மதமீட்டுச் சிந்தனைக்கும், பார்ப்பன மேலாதிக்கத்திற்குச் சேவை செய்வதற்கும் இட்டுச் சென்றன.
பிரிட்டிஷ் காலனி அரசு கொண்டுவந்த இந்திய மயமாக்கம் என்கிற நிகழ்வுப்போக்கில், அன்றைய நிலவுடமை நிலப்பிரபுத்துவ சக்திகளாக இருந்த பார்ப்பனர்களும் மற்றும் மேல்சாதிகளின் மேல்தட்டுப் பிரிவினரும் பயன்படுத்திக் கொண்டனர். கல்வியிலும் காலனி ஆதிக்க அரசமைப்பு நிறுவனங்களிலும் ஏகபோக இடத்தைப் பிடித்தனர்.
அதற்குப் பின்னர் வந்த, 'இந்தியத் தேசப்பிதா' என்று அழைக்கப்பட்ட காந்தியார், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பாத்திரத்தை வகித்தார். 1921ல் லேயே காந்தியார், தான் ஒரு இந்து சனாதனவாதி என அறிவித்துக்கொண்டார். அவருடைய கூற்றின் சாரம் வருமாறு;
1. நான்கு வேதங்கள், உபநிடதங்கள், மற்றும் இந்துத் திருமறையின் பேரால் வழங்கப்படும் அனைத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
2. நான் வர்ணாஸ்ரம தர்மத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.
3. நான், பசு பாதுகாப்பில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.
4. விக்கிரக வழிப்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்டக் காலத்தில், காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்கிய காந்தியாரின் கருத்தியல் இத்தகையதாகத்தான் இருந்தது. இது, காங்கிரஸ் மற்றும் நவீனகாலத் தலைவர்கள், அறிவாளிகள் ஆகியோர், சாதியமைப்பை நிலைநிறுத்திக் கொண்டிருந்த உள்நாட்டு நிலப்பிரபுத்துவ உடைமை உறவுகள் முன்னாலும், அதன் கருத்தியலான இந்துமதச் சித்தாந்த்தின் முன்னாலும் சரணடந்ததைத்தான் காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சி, நிலப்பிரபுத்துவத்திற்கு சேவை செய்யக் கூடிய கட்சியாகவே செயல்பட்டது. நிலப்பிரபுக்களுக்குச் செலுத்த வேண்டிய நிலவாடகையைச் செலுத்தாத விவசாயிகளைக் கடிந்து கொண்டது. 1922ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி, பர்தேலியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானம் வருமாறு;
"ஜமீந்தார்களுக்கு செலுத்தவேண்டிய குத்தகையைச் செலுத்த மறுப்பது, காங்கிரஸ் கட்சியின் தீர்மானங்களுக்கு விரோதமானது மற்றும் சிறப்பான நலன்களுக்கு என விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும்படி காரியக்கமிட்டி, காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும், அமைப்புகளுக்கும் அறிவுறுத்துகிறது. காங்கிரஸ் கட்சி ஜமீந்தார்களின் சட்டரீதியான உரிமைகளைத் தாக்குதலில் எந்தவிதத்திலும், அக்கறை கொண்டிருக்கவில்லை, எனக் காங்கிரஸ் காரியக் கமிட்டி இருக்குமானால், அவற்றைப் பரஸ்பர ஆலோசனை மற்றும் மத்யத்சத்தின் மூலம் தீர்வுகாண முயலவேண்டும் எனக் கமிட்டி தீர்மானிக்கிறது".
மேற்கூறிய தீர்மானம், ஐக்கிய மாகாணத்திலும் மற்ற பிரதேசங்களிலும் நிலப்பிரபுக்களுக்கு எதிராக பெரும்திரளான விவசாயிகள் கிளர்ந்தெழுந்த நேரத்தில்தான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷார் ஆண்ட பகுதிகளை பிரிட்டிஷ் இந்தியா என்றும், மன்னர்கள் ஆண்ட பகுதிகளை இந்தியர் இந்தியா என்றும் அழைத்த காந்தியார், நிலப்பிரபுத்துவ மன்னர்களை வானளாவப் புகழ்ந்தார். அம்மன்னராட்சிகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை எதிர்த்தார்; தடுத்தார். காங்கிரஸ் மற்றும் காந்தியாரின் இத்தகைய நிலைப்பாடு, விவசாயப் புரட்சி குறித்த அச்சத்தையும், உள்நாட்டுப் பிற்போக்குச் சக்திகளோடு கொண்ட கூட்டையும் மிகத்தெளிவாக்குகிறது.
இவ்வாறு, முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு வருவதே பிற்போக்கான நிலப்பிரபுத்துவ கருத்தியல், மக்கள் சிந்தனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கும், சாதியம் நீடித்திருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
இதே காலத்தில் செயல்பட்ட சமூக சீர்திருத்த இயக்கங்களும், அவற்றின் கருத்தியலாளர்களும், மதம், சாதி ஆகியவற்றிற்கும், அதன் அடித்தளமாக விளங்கிய உற்பத்தி உறவுகளுக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளவில்லை. இதன் விளைவாக, சாதி மற்றும் மத ஒடுக்குமுறைகளைப் புரிந்துகொள்வதிலும், சாதி முறைக்கு முடிவு கட்டுவதிலும் விவசாயப் புரட்சியின் அவசியத்தை பார்க்கவில்லை சாதி, மதக்கருத்துக்கள் மீதான விமர்சனமாகவும், அதற்கெதிரான போராட்டமாகவும் பார்த்தார்கள். இதன்விளைவாக, நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அரசியல் சுதந்திரத்திற்கான இயக்கத்திலிருந்து சமூகச்சீர்திருத்த இயக்கத்தை தனித்து இயங்கும் இயக்கமாக நடத்தினார்கள்.
பெரியார், சாதியத்தை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு ஆதாரமாக இருக்கும் மதத்தையும் கடவுளையும் ஒழிக்கவேண்டும் என்றார். சாதிமுறைக்கு பார்ப்பனியமே வேர் என்றும், இதை ஒழிக்கும் போராட்டத்தையே முதன்மையான பணியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பெரியார்
"மேல்நாடுகளில் சாதியம் இல்லாததால், அங்கு பொதுவுடைமை கொண்டுவர வர்க்கச்சண்டை தொடங்க வேண்டியிருந்தது. இங்கு சாதிமுறை இருப்பதால் சாதிச்சண்டை தொடங்கவேண்டியதுதான்" என்று பெரியார் கூறினார்.
பொதுவுடைமைக்கு சுயமரியாதையை வழியாக வைத்தார். சுயமரியாதை இயக்கம் ஒரு கலாச்சார இயக்கம் என்றும், அரசியல் இயக்கம் அல்ல என்றும் பெரியார் விளக்கம் தந்தார். எனவே அவருடைய கருத்துப்படி, சுயமரியாதை என்பது கலாச்சாரத்துறைக்கு மட்டுமே உரியது. அரசியல், பொருளாதாரத் துறைகளுக்கு உரியதல்ல. கலாச்சாரத் துறையிலும்கூட எல்லா மக்களுக்குமானது என்று பொருள்கொள்ளக் கூடாது. அது முதலில் பார்ப்பனனை நீக்கிவிட்டு, இறுதியில் தீண்டத்தகாதார்களுக்கு சலுகைகள் வேண்டும் பொழுதும், (சமுதாய சீர்திருத்தம் - பக்.25,44) ஏனைய இடங்களிலும் ஆதிதிராவிடர் அல்லது மக்களில் பார்ப்பனர் அல்லாத எல்லோருடைய நன்மைக்கும் பேசுவதாகப் பெரியார் குறிப்பிடுகிறார் (குடியரசு - 1.10.1931).
பெரியார் குறிப்பிடும் பார்ப்பனர் அல்லாதார் என்ற சொற்றொடரின் பொருள் - பார்ப்பனர்களைத் தவிர்த்து, தீண்டத்தகாதார் உட்பட அனைவரும் என்ற பொருளில் அல்ல.
'பார்ப்பனர், தீண்டத்தகாதார் தவிர்த்த' என்ற பொருளில் கூறுகிறார். ஆக, பெரியார் குறிப்பிடும் சுயமரியாதை, அரசியல், மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு இல்லாததோடு மட்டும் இன்றி, அவரது கலாச்சார சுயமரியாதை - பார்ப்பனர், தீண்டத்தகாதார் நீங்கிய பார்ப்பனரல்லாத மக்களுக்கான கலாச்சார சுயமரியாதையாகவே உள்ளது.
பார்ப்பனர் அல்லாதோரில் கூட, அனைவருக்கும் சுயமரியாதை என்று கொள்ளமுடியாது. பெரியார், சாதியத்தை அதற்கு அடித்தளமான உற்பத்தி உறவிலிருந்து பிரித்து, வெறும் பார்ப்பனர் கலாச்சாரமாக மட்டுமே பார்க்கிறார். பார்ப்பனர் அல்லாதாரிடமும் உள்ள நிலவுடைமைக் கலாச்சாரக் கூறுகளைக் கூட நெடுங்காலமாக மக்களது சிந்தனைகளை ஆதிக்கம் செலுத்திவரும் நிலவுடைமைக் கலாச்சார ஆதிக்கத்தின் உருவாக்கத்திலும், விரிவாக்கத்திலும் பார்ப்பனர்களுக்குள்ள பெரும்பங்கை மறுக்க இயலாது. எனினும், பார்ப்பனர் அல்லாத வேளாளர் சாதி சித்தாந்தங்களும்; மன்னர்களும்- மறவர்சாதி, வன்னியர்சாதி, நாயக்கர்சாதி மன்னர்களும் இதைக் கண்ணுங்கருத்துமாகப் பேணியதை தமிழர் வரலாற்றில் காணமுடியும்.
(கோ.கேசவன் - சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்).
பார்ப்பனரல்லாத வேளாளர் சாதியைச் சேர்ந்த சைவ சித்தாந்தவாதிகள், சாதியத்தைக் காப்பதில் பார்ப்பனர்களைவிட சளைத்தவர்கள் அல்ல என்பதை, 1997 டிசம்பர் 19ல், தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆறாவது உலக சைவ மாநாட்டில் தருமபுர ஆதீன மடாதிபதி, கர்மவிதியை ஆதரித்துப் பேசிய பின்வரும் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, ஆதிதிராவிடர்கள் முன்னேறுவதற்கு அவசரப்படக்கூடாது என்றும், மனிதன் ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு சாதியில் பிறந்து, கடைசியாக உயர்சாதியில் பிறந்து நன்மை பெறுவார் என்றார். இந்திய ஜனாதிபதியாக இருந்த சங்கர்தயாள் சர்மா ஒரு பிறவியில் ஆதிதிராவிடராகப் பிறந்தார். இறுதியாக பார்ப்பனர் சாதியில் பிறந்தார். அதைப்போலவே, இன்றுள்ள ஆதிதிராவிடர்கள், அடுத்த பிறவிகளில் பிறந்து முன்னேறுவதற்கு வாய்ப்புண்டு, எனவே முன்னேறுவதற்கு அவசரப்படக்கூடாது என்று உழைக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு 'அருளுரை' கூறினார். இதன்மூலம், இந்தச் சைவசித்தாந்தி அடுக்குமுறையை (படிநிலை முறையை) மதத் தத்துவத்தின் மூலமாக ஆரிய (பார்ப்பனிய) சனாதனிகளைப் போலவே நியாயப்படுத்தினார்.
பெரியார் நிலவுடைமைச் சித்தாந்தப் பரவலுக்கு பார்ப்பனரை மட்டுமே பொறுப்பாளிகளாக்குகிறார்; வேளாளர் சித்தாந்த வாதிகளையும், மடாதிபதிகளையும், பெருமன்னர்களையும் அதைக் கட்டிக்காப்பதில் உறுதியாக நின்ற மறவர், நாயக்கர் சாதி மன்னர்களையும் அதற்குரிய பொறுப்புகளிலிருந்து பெரியார் நீக்கிவிடுகிறார்.
பார்ப்பனரல்லாதாரில் மிகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களின் சுயமரியாதையை, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதால் மட்டுமே காப்பாற்றிவிட முடியாது. கூடவே, முதலாளிகள் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதன் மூலமே காப்பாற்ற முடியும்.
ஆனால், பெரியார், முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் ஆதிக்கத்திற்கு எதிரான வர்க்கப்போராட்டத்திற்கு மாறாக வர்க்கச் சமரசத்தைப் போதிக்கிறார். தொழிலாளர் உழவர் வர்க்க அடிப்படையில் 1952 ஆம் ஆண்டில், திராவிடர் உழவர் - தொழிலாளர் கழகம் என்னும் அமைப்பை நிறுவினார். அதன் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது.
"திராவிடத் தொழிலாளர்களுக்கும், அவர்கள் வேலைசெய்யும் பண்ணையார், மிராசுதார், முதலாளிகள், ஆண்டைகள் ஆகியோருக்கும் இடையில், நட்பும், நல்லுறவும், நம்பிக்கையும், கூட்டுப்பொறுப்பும் இருக்கும்படி செய்வது" என்றும், அதனுடைய நோக்கம் தெளிவாக வர்க்கப் போராட்ட முறைக்கு எதிரான வர்க்க உடன்பாட்டுக் கொள்கை என விளங்குகிறது இதையே பெரியார் 'பங்காளி' நிலை என்று குறிப்பிடுகிறார்.
எனவேதான், பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம், பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்களுக்கு முழுமையான சுயமரியாதைத் தத்துவமாக இல்லை.
பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை ஒரு சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையாகும். சுயமரியாதை இயக்கம் ஒரு கலாச்சார இயக்கம் என்றும், அரசியல் இயக்கம் அல்ல என்றும் பெரியார் விளக்கம் அளித்தார். இவ்வாறு, பெரியார், அரசியல் சுதந்திரத்திற்கான இயக்கத்தையும், சமுதாய சீர்திருத்தத்திற்கான இயக்கத்தையும் பிரித்துவிடுகிறார். ஆகையால், நாட்டின் சுதந்திரத்திற்கான இயக்கத்திலிருந்து பிரிந்து, தன்னளவில் தனித்து இயங்குவது. சமுதாய சீர்திருத்தம் என்பன பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கை ஆகிவிடுகிறது.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த, நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்ட காலகட்டத்தில், சுதந்திரத்திற்கான போராட்டத்திலிருந்து, சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தைப் பிரிப்பதும், சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தையும்கூட வெறும் பார்ப்பன எதிர்ப்பு இயக்கமாகக் சுருக்கிவிடுவதும் பெரியாரை, பிரிட்டிஷ் ஆட்சிக்கும், நிலப்பிரபுத்துவ மன்னர்களின் ஆட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதற்கும்; பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்கீழ் அன்றைய சென்னை மாகாணத்திற்கு டொமீனியன் அந்தஸ்த்துள்ள தனிநாடு கோரும் நிலைக்கு இட்டுச் சென்றது.
பெரியாரின் பின்வரும் கூற்றுக்களே இதற்குச் சான்று:
"நான் இன்று, நேற்றாகச் சொல்லவில்லை நாடு பிரிய வேண்டும் என்று, வெள்ளைக்காரன் காலத்திலேயே ஏன் 1938லேயே ஆச்சாரியார் மந்திரியானவுடனேயே சொன்னேன். 1947க்குப் பிறகு, அதாவது சுதந்திரம் அடைந்த பிறகுதான் நான் நாடு பிரியவேண்டும் என்று சொல்லவில்லை. வெள்ளைக்காரன் காலத்திலேயே, நமது நாடு இந்த மதராஸ் கவர்மென்ட்டின் ஆதிக்கத்தில் இல்லாமல், வைசிராய் ஆதிக்கத்தில் இருக்கும்படி பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். மதராஸ் கவர்மென்ட் என்றால் அப்போதும் பார்ப்பான் ஆதிக்கம் - நம் நாட்டை நாமே ஆண்டுகொண்டு சிற்சில விஷயங்களில் மாத்திரம் வெள்ளைக்காரனின் அதிகாரத்திற்கு உட்பட்டு நாம் இருப்பதில் ஆட்சேபனை இல்லை என்று கருத்துத் தெரிவித்தேன்."(22.5.1960)
"பார்ப்பான் கையில், அவன் ஆதிக்கத்தில் நாடு வந்தவுடன் செய்த முதல்வேலை, சுதேசி இராஜாக்களையும், "பரசுராமன் சத்திரியர்களை வெட்டிக்குவித்ததுபோல்", எல்லா ராஜாக்களையும் ஒழித்துக்கட்டி, பார்ப்பன சர்வாதிகார அட்சியாக ஆக்கிக் கொண்டான். அதற்குக் காரணம் 632 அரசர்களில், கிட்டதட்ட 600 பேருக்கு மேல் சூத்திரர்கள் (பார்ப்பனர் அல்லாதவர்கள்). மனுதர்ம சாஸ்த்திரத்தில் "சூத்திரன் ஆளுகின்ற ராஜ்ஜியத்தில் பிராமணர்கள் வகிக்கக் கூடாது, போர் நடத்தி சூத்திர ஆட்சியை ஒழிக்க வேண்டும்." என்றும் இருக்கிறது. அதனால் ஒழித்தார்கள். அதுவும் எப்படி எப்படி ஒழித்தார்கள்? மிரட்டிக் கையெழுத்து வாங்கிக் கொண்டு வெளியே போ என்றார்கள். நீ இராஜாவாக உள்ளே வந்தாய், மனுஷனாகவாவது வெளியே போக நினைத்தால் மரியாதையாகக் கையெழுத்துப்போடு என்று மிரட்டினார்கள். ஒரு தடவை புதுக்கோட்டை மகாராஜா குடும்பத்தார் என்னிடம் இதைத் தெரிவித்தார்கள். இப்போது சில ராஜாக்களுக்கு கவர்னர் பதவி மாதிரி சில CID பதவிகளைக் கொடுத்தார்கள். அத்தோடு அவர்கள் வாழ்வும் தீர்ந்தது." (22.5.1960)
"அவர்கள் எல்லாம் வெள்ளையர்களுக்கு அடிமைகள் அல்ல அவரவர்கள் நாட்டுக்கு சர்வாதிகார இராஜாக்கள். அவர்களால் தனக்கு எந்தக் கேடும் வராத வண்ணம் ஏஜண்டுகளைப் போட்டு அவர்களை முழுச்சுதந்திரம் உள்ளவர்களாகவே, மகாராஜாக்களாகவே வைத்திருந்தான். மற்றபடி ஆட்சியில் சகல அதிகாரங்களும் அவர்களுக்கே இருந்தது. தனி ரயில், தனி தபால் ஸ்டாம்ப், நாணயம், சுங்கம், பட்டாளம், வரிவிதிக்கும் அதிகாரம் இந்தப்படிக்கு சகல உரிமைகளும் அவர்களுக்கே - அந்தந்த நாட்டு அரசர்களுக்கே இருந்தது. வெள்ளைக்காரன் ஆட்சியில் அவர்களுக்கே நமக்கோ என்ன கேடு வந்தது?" (22.5.1960)
சுயமரியாதை இயக்கத்தையும்கூட பார்ப்பனர், தீண்டத்தகாதோர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோரிலும் உழைக்கும் மக்கள் ஆகியோரை நீக்கிவிட்டு (அவர்களின் முழுமையான விடுதலைக்கு இல்லாததால்) பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள சுரண்டும் வர்க்க - ஆளும் வர்க்கக் கும்பல்களின் இயக்கமாக சுருக்கிவிடுவது; ஒருபுறம், பிரிட்டிஷ் காலனி அரசதிகார அமைப்புகளில் இடம் பிடிப்பதற்காக, பார்ப்பன ஆளும்வர்க்க கும்பலுக்கும், பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள ஆளும்வர்க்க கும்பல்களுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில், பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள ஆளும் வர்க்கக் கும்பல்களுக்கு ஆதரவு அளிப்பது; மறுபுறம், பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள ஆளும் வர்க்க கும்பலுக்கும், தீண்டத்தகாத சாதியினருக்கும் இடையில் முரண்பாடுகள் மோதல்கள் ஏற்படும்போது, தாழ்த்தப்பட்டோர் பக்கம் உறுதியாக நிற்காமல், கபட நாடகம் ஆடுவதும், தீண்டத்தகாதார்க்கு வெறும் வாய்ச்சொல் உபச்சாரம் செய்வது ஆகிய நிலைக்கு இட்டுச்சென்றது. இதன் விளைவாக, பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள சுரண்டும் ஆளும் வர்க்கக் கும்பல்கள் கட்டியமைத்த சாதிசங்கங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதையோ, சாதி ஒழிப்பையே தமது நோக்கமாகக் கொள்ளாமல், அரசை அண்டி இட ஒதுக்கீட்டையும் சலுகைகளையும் கேட்டுப் பெறுவதையே முதற்பெரும் நோக்கமாகக் செயல்பட்டன.
ஏகாதிபத்தியச் சீர்திருத்தக் கொள்கைகள் - 1909ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த மிண்டோ மார்லி சீர்திருத்தங்களோடு புதிய சாதிச்சங்கங்கள் கட்டும் போக்கு இணைந்திருந்தது. முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் தீண்டத்தகாதோர் ஆகியோருக்கு தனி வாக்காளர் தொகுதிகள்; அரசாங்கப் பணிகளிலும், கல்வி வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடுகள் வழங்குவது; இதன்மூலம் அவர்களுக்கு, பிரிட்டிஷ் ஆட்சியின் மூலம் முன்னேற முடியும் என்ற ஒரு கற்பனையான நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதே இச்சீர்திருத்த நடவடிக்கைகளின் உள்ளடக்கமாக இருந்தன. காலனி ஆட்சிக்கெதிராக மக்கள் ஒன்று திரளாமல் தடுத்து நிறுத்துவது; ஏற்கனவே இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலிருக்கும் மத அடிப்படையிலான முரண்பாடுகளையும்; பிற்போக்கு சாதி ஒடுக்குமுறை காரணமாக மேல்சாதி, கீழ் சாதிகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் பயன்படுத்துவதுடன், ஏற்கனவே ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையில் உருவாகியிருந்த கூட்டணி அடிப்படையில், நிலப்பட்டா, பட்டம், வரி, ஆகியவற்றை அளவுகோலாக வைத்து தன் அதிகாரத்திற்குச் சேவைசெய்யும் வர்க்கங்களுக்கு இச்சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அமையவுள்ள அரசதிகார அமைப்புகளில் இடம் அளிப்பது மற்றும் பிற சலுகைகளை வழங்குவது என்பதே இச்சீர்திருத்தங்களின் நோக்கம் ஆகும். உண்மையான ஜனநாயகத்தைத் கொண்டுவருவதோ, இச்சலுகைகளைப் பெறுகின்ற பிரிவினருக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதோ நோக்கமாக இல்லை. சுருங்கக்கூறின், இது பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் ஒரு செயல்தந்திரம் ஆகும். உருவாகிவந்த தேசிய இனங்களை மத அடிப்படையில் உடைப்பது; பிரிப்பது. ஒரு மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைப்பதற்குப் பதிலாக, பலமொழி பேசும் மக்களை உள்ளடக்கிய மாநிலங்களை உருவாக்குவது, மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களைத் தடுத்து நிறுத்த சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பது, இதன்மூலம் மதம் மற்றும் சாதிப்பிற்போக்கை நிலைநிறுத்துவது; அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்பதற்கு மாறாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய ஆளும் வர்க்கப் பிரிவினருக்கு மட்டுமே வாக்குரிமை ஆகிய இச்சீர்த்திருத்தம் - காலனி ஆதிக்கச் சீர்திருத்தக் கொள்கையே தவிர, இந்தியச் சமுதாயத்தை ஜனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல. இத்தகைய நிலமைகளில்தான், புதிதாக நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பவற்றை முன்னிறுத்தாமலும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற ஜனநாயகக் கோட்பாட்டை முன்னிறுத்தாமலும், காலனிய ஆட்சியதிகாரத்தை அண்டிப்பிழைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன. இட ஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு என்பதையே முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன.
அம்பேத்கர்
சாதிமுறையானது இந்தியாவின் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளிலிருந்து எழவில்லை; மாறாக இந்துமதமே சாதியத்தை தோற்றுவித்தது என்று சாதியத்தின் தோற்றம் பற்றிக் கருதினார். இதன் காரணமாக, உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான புரட்சி மூலம் அல்லாமல், இந்துமதத்தைச் சீர்திருத்தம் செய்வதன் மூலமாகவே சாதியை ஒழிப்பது சாத்தியம் எனக் கருதினார். இதனால், இந்துமதச் சீர்திருத்தத்திற்கான திட்டம் என்ற முறையில், வேதங்களை ஒழிப்பது; ஒரு பொதுவான அதிகாரபூர்வமான இந்துமதத் திருமறைகளை உருவாக்குவது; அரசாங்கமே புரோகிதர்களை நியமிப்பது - புரோகிதர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகளை நடத்துவது; அந்தத் தேர்வுகளில் எல்லாச் சாதியினரும் பங்குகொள்வது; அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நியமனம் செய்வது என்பனவற்றை முன்மொழிந்தார். இவை போன்றவற்றை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றும் கூறினார். இத்தகைய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து, பிரிட்டிஷ் நிர்வாகம் அவர்கள் கிறிஸ்த்துவர்கள் என்ற காரணத்தால், சாதியத்தை ஒழிப்பதற்கு பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சி ஒரு ஏகாதிபத்திய ஆட்சி; அது தன் காலனி ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நிலப்பிரபுத்துவத்துடன் (முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்திமுறையைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களுடன்) கூட்டணி கொண்டிருப்பதைப் பார்க்க மறுத்தார். இதன் விளைவாக, ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம்தான் சாதி ஒழிப்பு சாத்தியம் என்பதை அவர் ஏற்கவில்லை. அதாவது, விவசாய புரட்சியும், தேசியப் புரட்சியும் இணையும் போதுதான் அது சாத்தியம் ஆகும் என்பதை அவர் ஏற்கவில்லை. இதன்காரணமாக, நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த விவசாயப் புரட்சி, ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசியப் புரட்சி ஆகிய இரண்டையும் புறக்கணித்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய நிலப்பிரபுத்துவமும் இந்திய மக்களைப் பிடித்திருக்கும் இரண்டு பகைகள் என்று அம்பேத்கர் பலமுறை பேசியிருந்த போதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் சொந்தநாட்டில், தீண்டத்தகாதவர்களை வைத்துக் கொண்டு, தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடதவரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அர்த்தம் உள்ளது ஆகாது என்றும் அவர் கூறினார். மேலும், இந்த நாட்டில் இருக்கும் ஏகாதிபத்திய நண்பர்களான ஆலை அதிபர்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோருக்கு எதிராகப் போராடமல், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, வலுவான போராட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை என்றும் கூறினார். இவ்வாறு அவர் சரியாகக் கூறினாலும், தேசிய விடுதலை மற்றும் சாதி ஒழிப்புக்கு ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும்; அவர்களின் அடிவருடிகளான தரகுமுதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு மாறாக, சாதிய ஒழிப்புக்கு சமூகப் புரட்சியை முன்னிபந்தனை ஆக்கினார். அதாவது, ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு முன்னரே சமூகப்புரட்சி நிகழவேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார். மேலும் பிரிட்டிஷ் காலனியாட்சி, சாதிய ஒழிப்புக்கு பங்காற்றும் எனக் கருதி அதன்மீது நம்பிக்கை கொண்டு அதனுடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கை மேற்கொண்டார். இதன்விளைவாக, காலனி அரசுடன் சமநிலை பராமரிப்பது என்பது அம்பேத்கரின் அணுகுமுறையாக இருந்தது. மேலும், அம்பேத்கரின் தரகுமுதலாளிய தாராளவாதச் சிந்தனைப்போக்கு, அரசின் வர்க்கத்தன்மையைக் காணமறுப்பதற்கு இட்டுச் சென்றது. அரசு நடுநிலையானது என்கிற கற்பனாவாதக் கண்ணோட்டத்திலிருந்து, சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம், அரசின் தன்மையையே மாற்றிவிட முடியும் என்ற மிகப்பிற்போக்கான கருத்தை மக்களிடத்திலே, அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடத்திலே, பரப்பவும் செய்தார். 1928ம் ஆண்டு சைமன் கமிஷன்; 1930 - 31 ஆண்டு வட்டமேஜை மாநாடுகள் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதியாக அம்பேத்கர் பங்கு கொண்டார். பிரிட்டிஷ் ஆட்சியின் நடவடிக்கைகள் எல்லாம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து, சட்டத்திருத்தங்கள் மூலம் மக்களை திசை திருப்பும் காலனி ஆட்சி சதிகள்தான். இவற்றில் பங்கேற்றதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களிடையே அரசியல் சட்டத்தின் மீதும், மாயைகளை ஏற்படுத்தினார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் - 1941 பிப்ரவரியில் - வைஸ்ராயைச் சந்தித்து, பிரிட்டிஷ் இராணுவத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேரவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1942 ஜூனில் தொழிலாளர் நல அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதிலிருந்து காலனியாட்சியின் உறுப்பாக மாறினார். இந்தக்கட்டத்தில்தான் தொழிலாளர் நலச்சட்டம் கொண்டுவரப்பட்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரண்டாம் உலகயுத்தத்தின் சுமையையும், முதலாளித்துவ நெருக்கடியால் ஏற்பட்ட சுமையையும், தொழிலாளர் தோள்மீது ஏற்றிவிடும் மிகக்கொடிய காலனியாதிக்கச் சுரண்டல் கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்தியது. தொழிலாளர் நல அமைச்சர் என்ற முறையிலே, அந்தக்கொள்கைகளை அம்பேத்கர் செம்மையாகச் செயல்படுத்தினார். ஏகாதிபத்தியத்தின் நண்பர்களான பண்ணையார்கள், ஆலை அதிபர்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்துப்போராடமல், (ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிப் பயன் இல்லை என்று சொல்லிக்கொண்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் காங்கிரசுடன் சேர மறுத்து எதிர்த்துக் கொண்டிருந்த அம்பேத்கர், காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை ஆதரவுடன் இருந்த அரசியல் சட்ட நகல் தயாரிப்புக் குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.) பிரிட்டிஷ் காலனிய இந்தியா ஒரு அரைக்காலனியாக மாற்றப்படுவதற்கு ஆதரவு தந்தார்.
நேரு பிரதமராக இருந்தபொழுது மத்திய அமைச்சரவையில் சேர்ந்துக்கொண்டார். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களிடம் நாடாளுமன்ற முறை மட்டுமே, அதிகாரப்பகிர்வு மற்றும் சாதி ஒழிப்புக்கான ஒரே வழி என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதிகாரத்தை அடைவதற்கு அவர்கள் தேர்தல் நடைமுறையை நம்பவேண்டிய நிலை ஏற்பட்டது. அரசியலில் நீடிப்பதற்காக, அம்பேத்கர் வழிவந்தவர்கள், ஏதாவது ஒரு அரசியல் கட்சியோடு கூட்டுச் சேர்வது நிரந்தரமாகிவிட்டது. முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் நடைமுறை இங்கேயும் நிலைகொண்டது. இவ்வாறு தலித் இயக்கம் ஆளும் வர்க்கத்தின் நிரந்தரத் தொங்குசதையாக மாறியது.
சாதியத்திற்கு, நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே அடித்தளமாக விளங்குகிறது. அடித்தளத்தை அசைக்காமலே, அதன் மேற்கட்டுமானத்தை - சாதி முறையை ஒழிக்கமுடியும் என்பது அம்பேத்கரின் நிலைபாடாக இருந்தது. சாதிய ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதினார். இந்த நிலைபாட்டில் இருந்து 1920 ஆண்டில் பிற்பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் மதச்சமத்துவத்திற்காகத் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடங்கினார். அவற்றில் முக்கியமானவை:
1927ல் மஹாத் சத்தியாகிரகம் - கொங்கன் பகுதியில் உள்ள பொதுக்குளத்தை எல்லாச் சாதியினரும் பயன்படுத்த உரிமை கோரி நடைபெற்ற போராட்டம்.
1928ல் மனுஸ்மிருதியை எரித்தது.
1930ல் அமராவதி மற்றும் பிற பகுதியில் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டங்கள். இப்போராட்டங்கள் ஐந்து ஆண்டுகள் நடந்தன.
மேற்கூறப்பட்ட போராட்டங்கள், காந்தியார் வழிகாட்டுதலில் பெரியார் தலைமையில் கேரளாவில், 13.4.1924ல் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்னர் நடைபெற்றவை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசி, வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரித்த காந்தியாரும்; வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்தும், சாதி ஒழிப்புக்கு, மதம் கடவுள், பார்ப்பனன் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன பெரியாரும்; வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்து, சாதி ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதிய அம்பேத்காரும், ஆக இம்மூவரும் வெவ்வேறு நிலைபாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில், சாதியத்திற்கு அடித்தளமான நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தை நடத்தாமலே மேற்கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் நடத்தியதில் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர்.
ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அம்பேத்கர் உரிமைக் கொண்டாடினாலும் அவர், தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், மற்றும் தொழிலாளி வர்க்கம் ஆகியோர் மீதான சுரண்டலுக்கு அடிப்படையாக இருந்த காரணிகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கிய இயக்கத்தை வழி நடத்தவில்லை. தாழ்த்தப்பட்டோரில் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவுள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் அடிப்படைக் கோரிக்கையான "உழுபவருக்கு நிலம் சொந்தம்" என்கிற கோரிக்கையை எழுப்பவில்லை. தாழ்த்தப்பட்டோரில் புதிதாகத் தோன்றி உருவாகி கொண்டிருந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்க கூடிய, தனித்தொகுதி ஒதுக்கீடு, அரசாங்க வேலைகளில் ஒதுக்கீடு, உதவித் தொகை கோருதல் போன்ற கோரிக்கைகள் (இக்கோரிக்கைகள் ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பயன்படும் என்று சொன்னாலும் கூட) மட்டுமே எழுப்பப்பட்டன. அவை தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள நடுத்தர வர்க்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை திடப்படுத்தக் கூடியவைதான். அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நடைமுறையை வைத்துப்பார்க்கும்பொது, அவர் தாழ்த்தப்பட்ட சாதியில் உருவாகிவந்த நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாகத்தான் இருந்தார் என்பது தெளிவாகிறது.
அம்பேத்கரின் வழிவந்தவர்களில் முக்கியமானவரான கெய்க்வாட், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, நிலப்பகிர்வுக் கோரிக்கையே முக்கியமானது என்று எடுத்துக்கொண்டு போராடினார். பெருந்திரளான தாழ்த்தப்பட்ட மக்களை இந்தப் போராட்டம் கவ்விப்பிடித்துக் கவர்ந்தாலும், மற்ற 'தலித்' தலைவர்களின் பார்வை வேறுவிதமாக இருந்தது. இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட் வழிப்பட்டது என்று கூறி, கெய்க்வாட்டின் போராட்டத்தினை ஏற்கவில்லை. அம்பேத்கரின் செயல்திட்டத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு இடமில்லை என்றும், அறிவித்தார்கள். அரசியல் சட்டப்படியான ஆட்சியில், பொதுமக்களின் போராட்டம் என்பது அராஜகவழி. எனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதற்கு இடமளிக்க கூடாது என்ற அம்பேத்கரின் கருத்தை அவர்கள் உயர்த்திப்பிடித்தார்கள். நிலப்பிரச்சனை முக்கியமானது என்றால், சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். என்று அவர்கள் வாதிட்டனர். இவ்வாறு, அம்பேத்கர், வழிவந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிலப்பகிர்வுக்கான போராட்டங்களை ஏற்க மறுத்துவிட்டார்கள். தலித் இயக்கத்தினர் தற்போது நிலவும் பாராளுமன்ற முறையின் மூலம், தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசதிகார அமைப்புகளில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன், ஏதாவது ஒரு ஆளும் வர்க்க அரசியல் கட்சிக் கூட்டணியில் சேர்வது நடைமுறைப் போக்காக ஆகிவிட்டது. இத்தகைய நிலைமைகளில் தலித் அமைப்புகள் - சாதிச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பனவற்றை முன்னணிப்படுத்தாமல், இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு, சலுகைகள் பெறுவது ஆகியவற்றைக் கோருவது என்பதை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.
அகில இந்தியப் பெருமுதலாளித்துவ, பெரும் நிலப்பிரபுத்துவக் கட்சிகளில், நேரடியாக வருணாசிரம தர்மத்திற்கும், சாதியத்திற்கும் ஆதரவு தந்து, இந்துத்துவம் பேசிவருவது, பாரதிய ஜனதாக் கட்சியும், அதன் துணை மற்றும் ஆதரவு அமைப்புகளான இந்து முன்னணி, விஸ்வஇந்து பரிஷத், போன்ற அமைப்புகளும் அவற்றின் சித்தாந்தத் தலைமையான RSS ஆகும். இந்து மேலாதிக்கம் என்பது பார்ப்பனிய மேலாதிக்கமே, பார்ப்பனிய மேலாதிக்கம் என்பதே சாதியப் படிநிலை வரிசையையும் அதில் பார்ப்பனர்களின் தலைமைப் பாத்திரத்தை வலியுறுத்துவது என்பதே, சாதியப்படிநிலை வரிசையில், கடைநிலையில் வைக்கப்பட்டுள்ள மக்கள்பால் தீண்டாமைக் கடைப்பிடிப்பதை நியாயப்படுத்துவதே ஆகும். அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ சமுதாயத்தைப் பாதுகாக்கவும்; தரகுப்பெருமுதலாளித்துவ, பெரும் நிலப்பிரபுத்துவத்தின் நலன்களைப் பேணவும் இவர்கள் பேசிவரும் இந்துத்துவம் என்பது, பிறமதங்களை ஒடுக்குவதற்கானது மட்டுமல்லாமல், தமது சொந்த மதத்திற்குள்ளேயே இருக்கக்கூடிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரையும் ஒடுக்கும் இருமுனை கொண்ட கூர்வாளாகவே அமைந்துள்ளது. எனவே, இவர்கள் இந்துத்துவம் என்ற பேரால் மேல்சாதி ஆதிக்கத்தின் கீழ் அனைத்துச் சாதியினரையும் ஒன்றுபடுத்த முடியாது. சாதிய முறையையும், தீண்டாமையையும் பாதுகாக்கும் காவலர்களாகவே இருக்கமுடியும். வேறுவிதமாகச் சொன்னால் இந்துத்துவம் என்பதே மிகப்பெரிய சாதி - தீண்டாமை ஒடுக்குமுறை ஆகும்.
அண்மைக்கால பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிகள் இதனை மெய்ப்பிக்கின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கல்யாண்சிங் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அவர் எடுத்த முக்கியமான நடவடிக்கை, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை, தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்ததே ஆகும். அந்த உத்தரவு இன்னும் ரத்துச் செய்யப்படவில்லை. அதைப் போலவே, மகாராஷ்டிரத்தில், பா.ஜ.க - சிவசேனை கூட்டணி அரசாங்கம் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புகார்களை ரத்துச் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க ஆளுகிற ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் கணிசமாக குறைந்துவிட்டன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பொதுப் போக்காக உள்ளது.
சாதியம் என்கிற சமூக கட்டமைப்புக்கு அடித்தளம் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறைதான். மனுநீதி கூறும் வருணாசிரம தர்மத்தைப் பரிசீலித்தாலே இதைப் புரிந்துக்கொள்ளலாம். மனுதர்மத்தின்படி, பார்ப்பனரின் தொழில் வேதம் ஓதுவது மட்டுமேயல்ல. பிற்காலத்தில் நிலவுரிமையாளர்களாகவும் ஆனார்கள். சத்திரியர் தொழில் - படை நடத்துவது, அரசாள்வது என்பதுடன் இவர்களும் நிலவுரிமை பெற்றவர்களே. வைசியர்கள் - வேளாண்மை, வணிகம் இன்னபிறவற்றில் ஈடுபட்டனர். சூத்திரர்கள் - மேற்கூறப்பட்ட அனைவருக்கும் தொண்டூழியம் புரிந்தனர் இவர்களுக்கு நிலவுரிமை கிடையாது. ஆனால் உழுகருவிகள் உண்டு. அப்படியென்றால், அவர்கள் தங்கள் ஒரு பகுதியை உபரி உழைப்பாக நிலவுரிமையாளர்கள் உறிஞ்சினர். இது பண்ணையடிமை முறையை ஒத்தது. இந்நால்வர்ணத்தையும் சாராது கீழ்நிலையில் இருத்தி வைக்கப்பட்ட பஞ்சமர்களுக்கு நில உரிமையோ மற்றும் எந்தவித உற்பத்திச் சாதனங்களோ வைத்துக் கொள்ள உரிமை கிடையாது. இவர்களை அடிமைகளைப் போலவும் விலங்குகளைப் போலவும் நடத்தமுடியும். எந்த உரிமையையும் அற்றவர்கள் - உற்பத்திசாதன உடைமையாளர்களை நபர் ரீதியில் சார்ந்திருப்பவர்கள். இதுவே, வர்ணாசிரம சமூக அமைப்பு என்பது திட்டவட்டமாக உற்பத்தி உறவுகள் மீது கட்டியமைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பின்னர் இந்தியாவில் நிலப்பிரபுத்துவம் தோன்றிய காலத்தில் ஏற்பட்ட வேலைப்பிரிவினை - பிறவி அடிப்படையிலான பரம்பரை வேலைப்பிரிவினையிலேயே சாதியத்தின் வேர் அடங்கியிருந்தது. சாதிமுறை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை வளர்ச்சியுடன் திடப்பட்டது. எனவே சாதியத்தின் அடித்தளம் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே ஆகும்.
ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் நிலவிய பழையநிலை குறித்துப் பேசும்பொழுது, ஐரோப்பிய நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில் நிலவிய சமயப் படிநிலையே அங்கிருந்த பொருளியல் படிநிலையைத் தீர்மானித்தது என்று கருத்துமுதல்வாதிகள் கூறினர். அதனை மறுதலித்த கார்ல் மார்க்ஸ், பொருளியல் படிநிலையே சமயப்படி நிலையைத் தீர்மானித்தது என்று கூறினார். மேலும், கருத்துமுதல்வாதிகளை விமர்சிக்கும்போது, அவர்கள் காரணத்தை காரியமாகவும், காரியத்தைக் காரணமாகவும் திரித்துக் கூறுகின்றனர் என்றும் கூறினார். இங்கே இருக்கின்ற சமூகப்படிநிலையான சாதியமோ நிலப்பிரபுத்துவம் பொருளாதாரப் படிநிலையால் உருவானது. மதத்தால் உருவாக்கப்பட்டதல்ல. ஐரோப்பிய எண்ணமுதல்வாதிகளைப் பற்றி மார்க்ஸ் விமர்சித்தது போலவே, இங்கு இருக்கின்ற எண்ணமுதல்வாதிகளும், சமூகப்படிநிலையான சாதிமுறை, நிலப்பிரபுத்துவம் பொருளாதாரப் படிநிலையை நிர்ணயிப்பதாக கூறுகின்றனர். அதாவது, இங்குள்ள எண்ணமுதல்வாதிகளும் காரணத்தைக் காரியமாகவும், காரியத்தைக் காரணமாகவும் கூறுகின்றனர். உண்மையில் சாதியமுறைக்கு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையே அடித்தளமாக இருக்கிறது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளைத் தகர்க்காமல் சாதியத்தை ஒழிக்க முடியாது. இங்கே தோழர் மாவோ சொல்வதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளல் அவசியம்.
"எந்தவொரு குறிப்பிட்ட பண்பாடும் (ஒரு சித்தாந்த வடிவம் என்கிற முறையிலே) அந்தக் குறிப்பிட்ட சமுதாயத்தினுடைய அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் ஒரு பிரதிபலிப்பு ஆகும்.
மேலும், முன்னையது அதனுடைய பங்காக பின்னையதன் மீது ஒரு பிரம்மாண்டமான செல்வாக்கையும், பாதிப்பையும் ஏற்படுத்துகிற பொருளாதார வெளிப்பாடாகும். பண்பாட்டுக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கும், உள்ள உறவைப் பற்றியும்; அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள உறவைப்பற்றியும் இதுவே நம்முடைய அடிப்படையான கருத்தாகும்."
எனவே, சாதியத்தின் அடித்தளம் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள்தான் என்றாலும், அதுவே - அந்த அடித்தளமே நிர்ணயம் செய்வது என்று கருதினாலும், சாதியம் மேற்கட்டுமானம் என்ற முறையிலே, அதன் அடித்தளத்தின் மீது செலுத்தும் பிரம்மாண்டமான செல்வாக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சாதியம் பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, 1930 ஆண்டில் Platform for Action - 1930 என்ற அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறது.
"பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக, இன்னமும் நமது நாட்டில் எந்தவித உரிமையும் மறுக்கப்பட்ட - சமூக அளவில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் பறையர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், நிலவுடைமை அமைப்பு, பிற்போக்கான சாதியமைப்பு, சமய ரீதியிலான ஏமாற்றல், பாரம்பரிய அடிமை மரபுகள் ஆகியவை இந்திய மக்கள் மீது ஏறி அமர்ந்து கொண்டு விடுதலைக்குத் தடைகளாக உள்ளன.... பறையர்கள், இன்னும் இவை போன்றவற்றைப் பெறவோ இயலவில்லை. சாதிய அமைப்பை ஈவு இரக்கம் இன்றி ஒழிப்பதன் மூலமே, விவசாயப் புரட்சியின் மூலமே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வன்முறையால் தூக்கியெறிவதன் மூலமே உழைக்கும் பறையர்கள் மற்றும் அடிமைகளின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் சட்டரீதியான விடுதலை கிடைக்கும். பிரிட்டன் ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும், எதிர்த்த போராட்டத்தில், நாட்டின் எல்லா தொழிலாளர்களுடன் ஒரு புரட்சிகர ஐக்கிய முன்னணியில் சேருமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பறையர்களை அழைக்கிறது."
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள மேற்கோளில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரத்திற்கான போராட்டம் மற்றும் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையை எதிர்த்த போராட்டம் ஆகியவற்றிலிருந்து பிரித்து, தன்னளவில் தனித்து நடத்தப்படவேண்டிய ஒரு போராட்டமாக சாதி ஒழிப்பு, சமய ரீதியான ஏமாற்றல், மற்றும் பாரம்பரிய அடிமை மரபுகள் ஆகியவற்றை எதிர்த்த போராட்டத்தைக் காணவில்லை. ஆனால், பெரியாரும், அம்பேத்கரும் சாதி ஒழிப்பை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்டம்; மற்றும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டம் ஆகியவற்றிலிருந்து பிரித்து, தன்னளவில், தனித்து நடத்தப்பட வேண்டிய போராட்டமாக கருதினார்கள். இதுவே கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோருக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாடு. மேலும் கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வன்முறை மூலம் தூக்கியெறிவதன் மூலமே, உழைக்கும் பறையர்கள் மற்றும் அடிமைகளின், சமூக பொருளாதார, கலாச்சார, மற்றும் சட்டரீதியான விடுதலையைப் பெறமுடியும் என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகச்சரியானது.
இப்படி சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும்கூட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்தக் கட்டத்தில், கட்சியைக் கட்டியமைக்கும் பணியில் கவனத்தைக் குவித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்ததன் காரணமாக, பல்வேறு அரங்குகளை உருவாக்குவதிலும், விவசாய இயக்கத்தைக் கட்டியமைப்பதிலும் முன்னேற முடியவில்லை. பின்னர், 1930களின் பிற்பகுதியிலும், 1940களிலும் கம்யூனிஸ்ட் கட்சி பல பகுதிகளில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டங்களை கட்டி வளர்த்தது. குறிப்பாக, தேபகா, தெலுங்கானா தஞ்சையில் சில பகுதிகளில் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களும், பிற்படுத்தப்பட்ட சாதி உழைக்கும் மக்கள் மற்றும் சில பணக்கார விவசாயிகளை உள்ளடக்கிய ஒன்றுபட்ட இயக்கத்தைக் கட்டியமைத்தது. இப்போராட்டங்கள் வெறும் பொருளாதார வகைப்பட்ட போராட்டங்களாக மட்டுமில்லாமல், தீண்டாமையை எதிர்த்தும், பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தும் நடத்தப்பட்டன. இதன் உயர் நிலையாகத்தான் தெலுங்கானாவில், நிலவுடைமையை எதிர்த்த அரசியல் அதிகாரத்திற்கான ஆயுதப் போராட்டமாக வளர்ந்தது.
எனினும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியப் பெருமுதலாளித்துவத்தை தரகு முதலாளித்துவம் என்று தெளிவாக வரையறை செய்யாமல், அதை தேசிய முதலாளித்துவம் என்று வரையறுத்தது. இதன் விளைவாக, அது காங்கிரஸ் கட்சியைப் பற்றிய மதிப்பீட்டில், அது தரகுமுதலாளித்துவக் கட்சி என்ற முறையில் ஏகாதிபத்தியத்துடன் செய்துகொண்ட சமரசம், நிலப்பிரபுத்துவத்துடனான கூட்டு என்கிற நிலைப்பாட்டுக்கு மாற்றாக, ஒரு புதிய ஜனநாயகப் புரட்சி அரசியலை முன்வைத்து, தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பாட்டாளிவர்க்கத் தலைமையை நிறுவத் தவறிவிட்டது. மேலும், இந்தியா ஒரு காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்ற முறையிலே, அதன் சமச்சீரற்ற வளர்ச்சியை ஆய்ந்தறிந்து, பலவீனமான பகுதியை விடுவிப்பதன் மூலமாக, நாடுதழுவிய விடுதலைப்போரை நடத்துவதற்கு, நீண்ட மக்கள் யுத்தப்பாதையே உகந்த பாதை என்பதைப் பார்க்கத் தவறியது. அத்துடன், 1930ம் ஆண்டின் அறிக்கையின்படி, ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த போராட்டத்துடன், சாதி ஒழிப்புப் போராட்டத்தை இணைக்கவேண்டும் என்று உணர்ந்திருந்தாலும், பின்னர் நடத்திய நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களில், தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களையும், பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களையும் வெற்றிகரமாக ஒன்றிணைத்திருந்தாலும், நிலப்பிரபுத்துவச் சித்தாந்தமான வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்த ஒரு புரட்சிகர அரசியல் சித்தாந்தக் கருத்துகளை முன்வைத்து, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமாக வளர்க்கவில்லை. அதுபோலவே, அரசியல் பொருளாதார போராட்டங்களையும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்கவேண்டும் என்று முன்பே சொல்லியிருந்தாலும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஜனநாயக உரிமை மறுப்பு, பொது உரிமை மறுப்பு, மனித உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பு ஆகியவற்றிற்கெதிரான போராட்டத்தை, அரசியல், பொருளாதார, ஆதிக்கத்திற்கெதிரான போராட்டத்துடன் இணைத்து, ஒருங்கிணைத்த ஒரு வர்க்கப் போராட்ட வழியை உருவாக்கவில்லை. இதன் விளைவாக, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசிய விடுதலை, நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து ஜனநாயகம் ஆகியவற்றிற்கான போராட்டத்திலிருந்து பிரிந்து நடத்தப்பட்ட சாதி ஒழிப்பிற்கான சமூக சீர்திருத்த இயக்கத்தை, குறிப்பாக அம்பேத்கர் மற்றும் பெரியார் இயக்கத்தையும், அவற்றின் ஏகாதிபத்திய ஆதரவுப் பாதையையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் தனிமைப்படுத்த முடியவில்லை; அவர்கள் பின்னாலிருந்த மக்களை வென்றெடுப்பதில் முன்னேற முடியவில்லை.
வருடம்: 2000
(ஏஎம்கே தேர்வு நூல்கள் - தொகுதி 5 - சாதி ஒழிப்பு குறித்து நூலிலிருந்து)
சமரன் – ஜனவரி – பிப்ரவரி 2023 மாத இதழ்