பகுதி 2: சிறுபான்மை இன மக்களை வேட்டையாடும் பாசிச மோடி கும்பலை எதிர்ப்போம்

தற்போது இந்த உலக பொருளாதார நெருக்கடியோடு கொரோனா கால பொது முடக்க நெருக்கடியும் சேர்த்து உலகத்தை உலுக்கி வருகிறது. இந்த நெருக்கடியின் காரணமாக உலக நாடுகளும், இந்தியாவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து மக்களைக் காப்பதற்குப் பதில் மோடி கும்பல் ஆட்சி அமெரிக்காவின் உலக மேலாதிக்க போர் வெறிக்கும் அம்பானி அதானிகளின் பொருளாதார நலன்களுக்கு முட்டுக் கொடுத்து வருகிறது.

பகுதி 2: சிறுபான்மை இன மக்களை வேட்டையாடும் பாசிச மோடி கும்பலை எதிர்ப்போம்

மோடி-அமித்ஷா கும்பலின் ராம ராஜ்ஜியத்தின் நோக்கம்

மோடி கும்பலின் இந்து ராஜ்ஜியம் உண்மையில் இந்துக்களுக்கான ராஜ்ஜியம் அல்ல. இந்துக்கள் மீதான ஏகாதிபத்திய - தரகு வர்க்க - நிலவுடைமை வர்க்க ராஜ்ஜியமாகவே அது இருக்கும். இந்துக்களின் தேசிய வெறி, மதவெறியின் மீது கட்டப்படும் இந்த ராமர் ராஜ்யத்தில், ராமர்களாக ஆட்சியில் அமரப் போவது ஏகாதிபத்தியவாதிகளே ஆவர். அம்பானிகளும்-அதானிகளும், மூப்பனார்களும்-வாண்டையார்களும் அனுமார்களாக விளங்குவார்கள். இந்த ராஜ்ஜியத்திற்குள் இஸ்லாமியர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் இடமில்லை. அவர்கள் கொத்தடிமைகளாகவும் மலிவான கூலி உழைப்பின் மூலம் மூலதனத்தைப் பெருக்கும் அத்து கூலிகளாகவும் கார்ப்பரேட் அடிமைகளாகவும் இருப்பர். நாடெங்கிலும் அசாம் மாதிரியில் வதைமுகாம்கள் உருவாக்கப்படும். இந்திய தேசிய இனங்களின் வதை கூடங்களாக கொலை களங்களாக மாறும். எனவே ராம ராஜ்ஜியம் என்பது எதிர் புரட்சிகர ராஜ்ஜியமாகும்.

இந்துத்துவம் என்பது இஸ்லாமியர், கிறிஸ்துவர் போன்ற சிறுபான்மை மதத்தினருக்கு எதிரானது மட்டுமல்ல; அது தன் சொந்த இந்து மதத்திலேயே இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகும். இவ்வாறு இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தியாக இந்துத்துவம் விளங்குகிறது.

மோடி கும்பல் எதிர் புரட்சிகர இந்து ராஜ்ஜியத்தை கட்டி அமைக்கவும் இஸ்லாமிய மக்களை குஜராத்தில் 2002ல் நடத்தியது போல பச்சைப் படுகொலை செய்யவும் ஹிட்லரின் நூரம்பர்க் சட்டம் போல என்.ஆர்.சி, என்.ஆர்.பி போன்ற இன அழிப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 1992ல், இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பாபர் மசூதி காலி நிலத்தில் கட்டப்படவில்லை; அவ்விடத்தில் இருந்த ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது என ஆர்எஸ்எஸ் கும்பல்கள் பொய் பிரச்சாரம் செய்து ராம ஜென்மபூமி, ரத யாத்திரை என்ற பெயரில் இந்து மத வெறியை ஊட்டி பாபர் மசூதியை தரைமட்டமாக்கியது.

கடந்த நவம்பர் 9, 2019 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை (பாபர் மசூதியானது காலி நிலத்தில் கட்டப்படவில்லை; அவ்விடத்தில் இருந்த ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது. மசூதி அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலத்தில்தான் ராமர் பிறந்தார் என இந்துக்கள் நம்புகின்றனர்) பயன்படுத்தி வாரணாசியில் உள்ள கியான்வாபி, மதுராவில் உள்ள ஷாஹி- ஈத்கா மசூதி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை கோவில்களை (பள்ளிவாசலை) தகர்க்க திட்டமிட்டுள்ளன ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள். ராமன் பிறந்த இடம், விஷ்ணு அனுமன் பிறந்த இடம், கோவில் இருந்த இடம் எனக் கூறியும், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, பாரத் மாதாவிற்கு ஜே, ஜெய் ஸ்ரீ ராம் என மதவெறி கோஷங்களை எழுப்பியும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களையும், வீடுகளையும், கடைகளையும் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கி வருகிறது சங்பரிவார கும்பல்கள். இதற்கு மோடி அரசு துணைபோகிறது.

ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பல்கள் இந்து திருவிழாக்களை பயன்படுத்தி இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி ராமநவமி ஊர்வலம் என்ற பெயரில் ஏப்ரல் 16ம் தேதி அனுமன் ஜெயந்தி பெயரிலும் மத்திய பிரதேசம், கோவா, குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, தில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் மற்றும் கடைகள் மீது திட்டமிட்டு புல்டோசர் தாக்குதலை நடத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் தள்ளி வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாக்களை கொண்டாட விடாமல் ஒலிபெருக்கி வைக்க விடாமல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

2014ல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து ராமராஜ்ஜியத்தை கட்டியமைக்கும் பணியை துரித படுத்திவிட்டது மோடி கும்பல். குறிப்பாக மாட்டுக்கறி உண்பவர்கள் மீதான தாக்குதல், பகுத்தறிவுவாதிகள் மீதான தாக்குதல், மாட்டிறைச்சிக்கு தடை, மதமாற்றத் தடைச் சட்டம், ராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள், மசூதிகள் என்பது வழிபாட்டுத்தலங்கள் அல்ல, பள்ளிவாசல்களுக்குள் ராமன், விஷ்ணு சிலைகளை வைக்க வேண்டும், இந்தியா இந்துக்களின் நாடுதான், இதை ஏற்காதவர்கள் நாட்டை விட்டு ஓடுங்கள் என்று துவங்கி இந்தியாவை இந்து நாடாக மாற்ற இதுதான் சரியான நேரம் என்று ஆர்எஸ்எஸ் மதவெறி கும்பல்கள் மதக் கலவரங்களுக்கு தூபம் போட்டுவருகின்றன.

ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்திற்கும், அம்பானி, அதானிகளுக்கும் சேவை செய்யும் மோடி ஆட்சி

2008-ல் அமெரிக்காவில் வெடித்துக் கிளம்பிய முதலாளித்துவ மிகை உற்பத்தி நெருக்கடி ஐரோப்பா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, சீனா, என உலகம் தழுவிய நெருக்கடியாக மாறி தொழிற்துறை வீழ்ச்சி, உற்பத்தித்துறை வீழ்ச்சி, வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாய் வீழ்ச்சி, சமூக நலத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவது, அதை கார்ப்பரேட்மயம், வணிகமயம், தனியார்மயமாக்குவது, ஆலை மூடல், ஆட்குறைப்பு, லேஆப் செய்வது கட்டமைப்பு துறைகளைப் புறக்கணிப்பது அதிகரித்து வருகிறது. மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உலக முழுவதும் அதிகரிப்பது, போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமை பறிப்பு அதிகரிப்பு, வறுமை, பசி, பட்டினி, பிணி, வாங்கும் சக்தியின்மை அதிகரிப்பது, ஒரு சிலர் கையில் 74 சதவீத சொத்துக்கள் குவிவது, ஏழைகள் பரம ஏழைகளாவது, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவது அதிகரிப்பது என உலக பொருளாதாரமே சுருங்கி 1930, 70களில் ஏற்பட்ட நெருக்கடியை விடப் பல மடங்கு உயர்ந்து மிகப் பெரிய முட்டுச் சந்தில் உலக பொருளாதாரம் சிக்கியுள்ளது.

தற்போது இந்த உலக பொருளாதார நெருக்கடியோடு கொரோனா கால பொது முடக்க நெருக்கடியும் சேர்த்து உலகத்தை உலுக்கி வருகிறது. இந்த நெருக்கடியின் காரணமாக உலக நாடுகளும், இந்தியாவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து மக்களைக் காப்பதற்குப் பதில் மோடி கும்பல் ஆட்சி அமெரிக்காவின் உலக மேலாதிக்க போர் வெறிக்கும் அம்பானி அதானிகளின் பொருளாதார நலன்களுக்கு முட்டுக் கொடுத்து வருகிறது.

கார்ப்பரேட் கும்பல்களுக்கு நாட்டின் வளங்களைச் சூறையாடும் வகையில் நாட்டின் கொஞ்ச நஞ்ச சுயச்சார்பு பொருளாதாரத்தை ஒழித்துக் கட்டும் வகையில் ஜி.எஸ்.டி. பணமதிப்பு நீக்கம், நில அபகரிப்பு சட்டம், மற்றும் திட்டக்குழுவைக் கலைத்தது மூலம் வங்கிகள், காப்பீடு, பாதுகாப்புத்துறை, விமானப் போக்குவரத்து மருந்து உற்பத்தி போன்ற துறைகளுக்கு அரசு அனுமதி தேவை என்ற சட்டத்தை தகர்த்து எல்லாவித அடிப்படை தொழிற்சங்க ஜனநாயக உரிமைகளைப் பறித்து கார்ப்ரேட் கும்பலிடம் ஒப்படைத்துள்ளது மோடி கும்பல்.

மேலும் கொரோனா பொதுமுடக்க காலத்தைப் பயன்படுத்தி நாட்டின் பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் கும்பல்கள் சூறையாடும் வகையில் - அமெரிக்காவின் புதிய காலனிய நலன்களுக்குச் சேவை செய்யும் வகையில் மூன்று வேளாண் சட்டங்கள், புதிய மின்சார சட்டம், புதிய துறைமுகச் சட்டம், அத்தியாவசிய சேவைகள் பாதுகாப்பு சட்டம், ஆழ்கடல் மற்றும் மீன்வள சட்டம், ஒளிப்பதிவு சட்டம், மாபெரும் கதிசக்தி திட்டம், உள்கட்டமைப்பு திட்டம், தேசிய பணமாக்கல் திட்டம் போன்ற 38க்கு மேற்பட்ட நாசகர திட்டங்களை கொண்டு வந்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்து வருகிறது.

மோடி கும்பலின் எட்டு ஆண்டு கால ஆட்சியில் மட்டும் கார்ப்பரேட் கும்பல்களுக்கு ரூ.8லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. 2021-2022க்கான மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரிகளைக் குறைத்து ரூ. 1.45 லட்சம் கோடியை வரிச்சலுகையாக அறிவித்தது. மற்றும் டாட்டா, மிட்டல், ரிலையன்ஸ், வேதாந்தா போன்ற பதிமூன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் ரூபாய் 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. மோடி ஆட்சியில் மட்டும் வாராக்கடன்கள் 18.28 லட்சம் கோடியாக 365 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் 26லட்சம் கோடியைக் கொள்ளையடித்து கார்ப்பரேட்களுக்கு சேவை செய்துள்ளது.

மேலும் மோடி அமித்ஷா ஆசியுடன் இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கொரோனா காலத்திலும் 39 விழுக்காடு அதிகரித்து 142 பில்லியனர்களை உருவாக்கியுள்ளது. இவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு ரூ. 53 லட்சம் கோடிக்கு மேலாக (7,900 கோடி டாலர்) அதிகரித்து உள்ளது. நாட்டில் உள்ள 40 சதவீத மக்களின் 55.5 கோடி பேரின் ஓட்டு மொத்த சொத்துக்கு இணையான சொத்தை (49 லட்சம் கோடி) வெறும் 98 பணக்காரர்கள் வைத்துள்ளனர் என ஆக்ஸ்பாம் ஆய்வு கூறுகிறது.

மேலும் அந்த ஆய்வு கூறுவதாவது, நமது நாட்டின் வெறும் 10 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பை வைத்து 25 ஆண்டுகளுக்கு நாட்டின் அனைத்து பள்ளி குழந்தைகள் மற்றும் உயர்கல்வியை இலவசமாக வழங்கலாம் எனவும், இந்த 10 பெரும் பணக்காரர்கள் மீது 1 சதவீத வரிவிதித்தால் 17.7 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க முடியும் எனவும் 98 சதவீத பெரும் பணக்கார குடும்பங்களுக்கு சொத்து வரி விதித்தால் ஆயூஷ்மண் பாரத் திட்டத்திற்கு தேவையான நிதியை அடுத்த 7 ஆண்டுகளுக்கு வழங்க முடியும் எனவும் கூறுகிறது.

மேலும் முதல் 10 இடங்களில் உள்ள பெரும் பணக்காரர்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 7.41 கோடி வரை ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் கூட இந்த கார்ப்பரேட் கும்பல்களின் சொத்துக்களை செலவு செய்ய 84 ஆண்டுகள் ஆகும் என்றும், நாட்டின் 142 பெரும் கோடீசுவரர்களுக்குச் சொத்து வரி விதித்தால் ஆண்டுக்கு 7.830 டாலர் மத்திய அரசுக்கு வருமானம் வரும் எனவும், நாட்டின் 100 பணக்காரர்களின் சொத்துக்களை வைத்து தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்திற்கும், மகளிர் சுய உதவிக் குழுவுக்கும் அடுத்த 365 ஆண்டுகளுக்கு நிதியுதவி செய்ய முடியும் என அந்த ஆய்வு கூறுகிறது.

அம்பானியும் அதானியும் போட்டிப் போட்டுக் கொண்டு மக்கள் சொத்துக்களை மோடி ஆசியுடன் மலை போல குவித்து வருகின்றனர். அதானி 115 பில்லியன் டாலருடன் உலகளவில் 4வது இடத்திலும் அம்பானி 91 பில்லியின் டாலருடன் 10 இடத்திலும் தற்சமயம் உள்ளனர். கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அதானி 106 பில்லியன் டாலரும், அம்பானி 54பில்லியன் டாலரும் வருவாய் ஈட்டியுள்ளனர்.

இவ்வாறு மோடி கும்பலின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியில் அம்பானிகளும், அதானிகளும், பாஜக கட்சியும் மிகப் பெரிய சொத்துக்களுக்கு அதிபதியாக மாறியுள்ளனர். பாஜக கும்பல் நாட்டிலேயே பணக்கார கட்சியாக மாறி வங்கியில் மட்டும் ரூ. 3,253 கோடியை சேர்த்து செய்துள்ளது. அதன் சொத்து மதிப்பு ரூ. 4,847 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆனால் உலகமய கொள்கையாலும் கொரோனா பொதுமுடக்கத்தாலும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். பொது முடக்கக் காலத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 3 கோடியே 20 லட்சம் பேர் ஏழைகளாக மாறியுள்ளனர். நாள் ஒன்றுக்கு 145 ரூபாய் அல்லது அதற்குக் குறைவாக ஊதியம் ஈட்டும் மக்களின் எண்ணிக்கை 3 கோடியே 75 லட்சத்திலிருந்து 7 கோடியே 50 லட்சமாக உயர்ந்துள்ளது.

மாதத்திற்கு ரூ. 3 ஆயிரம் கூட சம்பாதிக்க முடியாமல் கடும் துயரங்களை அனுபவிப்பதாகவும் கொரோனா பொதுமுடக்க காலத்தில் மட்டும் வேலையில்லாதவர்கள் விழுக்காடு 2020 நவம்பர் மாதம் 27.4 பில்லியனும் டிசம்பர் மாதத்தில் 36.7 பில்லியனாக அதிகரித்துள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக சுற்றுலாத் துறையில் மட்டும் 2 கோடியே 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கடன் மற்றும் வேலையின்மை காரணமாக 2018 முதல் 2020 வரை 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தற்கொலை செய்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மோடி கும்பல் கூறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் உழைக்கும் மக்களின் வருவாய் 53 விழுக்காடு சரிவடைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

இவ்வாறு உலகமயக் கொள்கை, முதலாளித்துவ மிகை உற்பத்தி நெருக்கடி, கொரோனா பொதுமுடக்க நெருக்கடி போன்றவைகளால் கோடான கோடி விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகுறு வணிகர்கள் மற்றும் அன்றாடம் காட்சிகள் மீது அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களின் நலன்களுக்காக மறைமுக வரிகளை அதிகரித்து உழைக்கும் மக்களைக் கசக்கிப் பிழிவதும்; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீது வரிகளைப் போட்டுக் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.26 லட்சம் கோடியையும்; நேரடி வரிகள் மூலம் (2021 - 2022) ரூ.13 லட்சத்து 63 ஆயிரம் கோடியையும் கொள்ளையடித்து கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்கிறது மோடி ஆட்சி.

இந்துத்துவ பாசிச பாஜகவிடம் சரணடையும் திமுக அரசு

பாசிச பாஜக மதவெறி கும்பலுக்கு மாற்று திமுகதான் என்றும்; மு.க.ஸ்டாலின்தான் பாசிச அபாயத்தை வேரறுக்க வந்த கூர்வாள், போர் வாள் என்றும் போலி கம்யூனிஸ்ட்டுகளும், புரட்சி பேசும் சில மா.லெ இயக்கங்களும், திராவிட அறிவுக் கொழுந்துகளும் ஒளிவட்டம் கட்டினார்கள். ஆனால் திராவிட மாடலின் ஓராண்டு ஆட்சி என்பது இந்துத்துவ பாசிசத்திற்கும் அமெரிக்காவின் புதிய காலனிய அரசியல் பொருளாதார கொள்கைகளுக்குச் சேவை செய்யும் கைக்கூலி ஆட்சி என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

நாங்கள் பெரியார், அண்ணா பாசறையில் படித்தவர்கள், இது பெரியார் மண், திராவிட மண், இங்கு ஆர்.எஸ்.எஸ் பாஜக போன்ற மதவெறி சக்திகள் அரசியல் செய்யவோ, அதிகாரத்திற்கு வரவோ முடியாது என்று சில களிமண்கள் கூறுகின்றன. ஆனால் பாஜக இந்து மதவெறிக் கும்பலை தமிழகத்தில் வளரவிட்டவர்களும், இந்தியாவில் ஒரு நிலையான ஆட்சியை நடத்த முடியும் என நம்பிக்கை தந்து பட்டிதொட்டி எங்கும் வளரவிட்டவர்களும் இந்த திராவிட இயக்கங்கள்தான் என்பதை நாம் மறந்து விடமுடியாது.

கடந்த 20 ஆண்டுகளாக மெல்ல மெல்ல திமுக, அதிமுகவின் ஆதரவோடு பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் வளர்ந்து வந்தன. தற்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பேரில் இளைஞர்களை பெண்களை அதிக அளவில் திரட்டுகின்றனர். அதேபோல திருவிளக்கு பூஜை, மாங்கல்ய பூஜை, பௌர்ணமி பூஜை என ஆன்மீக ரீதியில் பெண்களை திரட்டுவதற்கு இந்து அன்னையர் முன்னணி எனும் அமைப்பை உருவாக்கி இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சாதி ரீதியான கோரிக்கைகளை ஆதரிப்பதன் வாயிலாகவும் பிராந்திய உணர்வுகளை கிளறிவிடுவதன் மூலமும் அச்சாதி மக்களை தங்கள் பின் அணிதிரட்டுவதில் இந்துத்துவ அமைப்புகள் வெற்றி பெற்று வருகின்றன. மதப் பிரச்சனைகளை கையில் எடுத்து பேசும் பொருளாக மாற்றி வருகின்றன.

கோட்சேவின் வாரிசுகளுக்கு அவர்களது தீய எண்ணங்களுக்கு நம் இந்திய மண்ணில் இடமில்லை என்றும், அமைதியான தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா குளிர்காய நினைப்பதாகவும் அக்கட்சியின் அரசியலை அம்பலப்படுத்துங்கள் என்றும் அறிக்கை புயல் ஸ்டாலின் கூறுகிறார். சிறுபான்மை மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறித்து, சாதி, மத கலவரங்கள் மூலம் நாட்டை ரத்தக்காடாக மாற்றும் கோட்சேவின் வாரிசான வெங்கையா நாயுடுதான், 'சமூக நீதி காவலர்' 'சிறுபான்மை மக்களின் காவலர்' என்று புகழப்படும் கலைஞர் சிலையை திறக்க மு.க.ஸ்டாலினின் முதலில் நெஞ்சத்தில் தோன்றினாராம். போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் இதயத்தில் மு.க.ஸ்டாலின் தோன்றினால்; போர் தளபதி ஸ்டாலின் இதயத்தில் கோட்சேவின் வாரிசுகள் தோன்றுகிறார்கள். இதுதான் அரசியல் சந்தர்ப்பவாதமாகும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்று சந்தர்ப்பவாதத்தில் மூழ்கி முத்தெடுத்த கலைஞர் கூறினார். அவர்களின் வாரிசுகள் அதையே தொடர்கின்றன. எந்த கட்சியின் அரசியலை அம்பலப்படுத்துங்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரோ அதே கட்சியை வைத்து அவரே சிலையை திறந்ததால் யாரை அம்பலப்படுத்துவது என்று புரியாமல் திமுக ஆதரவு கட்சிகள் முழிக்கின்றனர்.

அரசியல் ஆதாயம் பற்றியதல்ல, அடையாளத்தை மீண்டும் நிலை நிறத்துவது பற்றியதாகும் எனக்கூறி அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு இந்தியா முழுவதும் உள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ் காவி காடையர்களின் அட்டூழியங்களை - மதவெறி பேச்சுக்களை எதிர்த்தும், புல்டோசர் அரசியலை எதிர்த்தும் இந்த சமூக நீதி கூட்டமைப்பு போராட தயாராக இல்லை. இதுதான் சமூக நீதி கூட்டமைப்பின் லட்சணமாகும். 37 கட்சிகளுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் அவர்களுக்கு வெங்கய்யாவை அழைத்தது தவறு என்று யார் கடிதம் எழுதுவது என்று போலி கம்யூனிஸ்ட்டுகள் புலம்புகின்றனர்.

திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும்; திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது, சீர்செய்யும்; திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது, அனைவரையும் ஒன்று சேர்க்கும்; திராவிட மாடல் என்பது யரையும் புறக்கணிக்காது, தோளோடு தோள் நின்று அரவணைக்கும்; என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் திராவிட மாடல் என்பது எந்த வர்க்கத்திற்குச் சேவை செய்யும், எந்த வர்க்கத்திற்கு தோளோடு தோள் நின்று அரவணைக்கும் என்பதை கூர்ந்து பரிசீலித்தால், அந்நிய நிதி மூலதன ஆதிக்கத்திற்கும் கார்ப்பரேட் நலன்களுக்கும் இந்துத்துவ பாசிச சாதிவெறி மதவெறி சக்திகளுக்குச் சேவை செய்யும் மாடலாக இருப்பதை புரிந்து கொள்ள முடியும். சிங்கார சென்னை என்ற பெயரிலும், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரிலும், பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை மக்களின் வீடுகளை திமுக அரசு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. மதுரை, நெல்லை, தஞ்சை போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்விடங்களையும், சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் 25 ஆயிரம் வீடுகளை மூன்று மாதத்தில் இடிக்க வேண்டும் எனவும் அறிவித்து நகரமயமாதலின் பேரில் நாடெங்கும் உள்ள நகர்புற சேரிகள், மலைவாழ் மக்கள், காடுகள், வேளாண் நிலங்கள், மீனவர் குப்பங்களை தரைமட்டமாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது.

திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது, தோளோடு தோள் நின்று அரவணைக்கும் என்றது திமுக அரசு. தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எதிராக சாதி கலவரங்களை நடத்தும் - சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் -தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் வீடுகளையும் உடைமைகளையும் இடித்து தள்ளும் ஆதிக்க சாதிவெறியர்களுக்கும்; கும்பகோணம் பந்தநல்லூர் பிரபாகரனை படுகொலை செய்த திமுக சீத்தாபதி உள்ளிட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறியர்களுக்கும், அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை மரணத்தை வைத்து மதக் கலவரங்களை உருவாக்கும் அண்ணாமலை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட காவி காடையர்களுக்கும் தோளோடு தோள் நிற்பதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும் என்பதை நிரூபித்துள்ளது.

சாதி மதக் கலவரங்களை எதிர்த்தும், சாதி மதக் கலவரங்களை தூண்டும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, வி.எச்.பி. உள்ளிட்ட அனைத்து இந்து மதவெறி அமைப்புகளை தடை செய்யக் கோரும்; நீதித்துறை, காவல் துறை, சிறைத்துறை, சேவைத்துறைகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பலை - கோட்சேக்களின் வாரிசுகளை எதிர்த்துப் போராடும் ஜனநாயக சக்திகள் மீது அடக்குமுறை ஏவுவதும் கைது செய்து சிறையில் தள்ளுவதும்தான் சமூக நீதி ஆட்சியின் திராவிட மாடலாகும். கடந்த ஓராண்டில் மட்டும் 8 கொட்டடி மரணங்களை அரங்கேற்றியுள்ளது திமுக அரசின் ஏவல் படையாக செயல்படும் காவல்துறை. 

மேற்குவங்க மாநிலத்தில் மனிதனை மனிதன் அமரவைத்து இழுக்கும் கை ரிக்‌ஷா தமிழகத்தில் காட்சி பொருளாக இருக்கிறது என்று கலைஞர் கூறினார். ஆனால் பாசிசத்தை தகர்த்தெறிய வந்த திராவிட மாடல் ஆட்சியில் ஏற்றத்தாழ்வை விதைக்கும் சனாதன தர்மத்தையும் இந்துத்துவ தர்மத்தையும் தாங்கி பிடிக்கும் வகையில் மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கு முறைக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது 'சமூக நீதி' ஆட்சி.

பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு முடிவு கட்ட தேசபக்தர்கள் ஒன்றிணைவோம்

பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆர்.எஸ்.எஸ் கூட்டம் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக்கொடுத்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த கூட்டம், சுதந்திரப் போராட்டத்தில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்த இஸ்லாமியர்களின் வரலாற்றை மூடிமறைக்கும் சதிவேலையில் ஈடுபட்டுள்ளது. உண்மையில் மோடி ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் இருப்பது தேசபக்தி அல்ல, பல தேசிய இனங்களை, பல மதங்களின் கலாச்சாரங்களின் பன்முகத் தன்மைகொண்ட இந்தியத் துணை கண்டதை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்னும் பெயரில் ராம ராஜ்ஜியத்தையும் அமெரிக்க அடிமை ராஜ்ஜியத்தையும் உருவாக்கும் பக்தியே ஆகும்.

அமெரிக்காவின் புதிய காலனிய பிடியிலிருந்தும் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளையிலிருந்தும் நாட்டை பாதுகாக்கவும், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான சாதி, மதக் கலவரங்களை முறியடிக்கவும், பகத்சிங் ராஜகுரு சுகதேவ் வழியில் உண்மையான சுதந்திரப் போராட்டத்திற்கு வீறு கொண்டு எழுவதும், நாட்டை காட்டிக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பல்களுக்கு முடிவு கட்டுவதுமே தேசபக்தியாகும்.    

 

சமரன், ஜூன்ஆகஸ்ட் 2022 இதழிலிருந்து

முந்தைய பகுதியை படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்