பகுதி 1: சிறுபான்மை இன மக்களை வேட்டையாடும் பாசிச மோடி கும்பலை எதிர்ப்போம்

இந்துராஜ்ஜியத்தை கட்டியமைப்பதும், மோடி ஆட்சி அறிவித்த டிஜிட்டல் இந்தியா, மேட் இன் இந்தியா, மேக்கின் இந்தியா உள்ளிட்ட எல்லா வெற்று கோஷங்களும் இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவில்லை. மாறாக ராமனான அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கும், அனுமார்களான அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நலன்களுக்கும் சேவை செய்யும் ஆட்சியாக இருக்கிறது

பகுதி 1: சிறுபான்மை இன மக்களை வேட்டையாடும் பாசிச மோடி கும்பலை எதிர்ப்போம்

பாசிச மோடி ஆட்சியில், விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு மற்றும் கொரோனா நெருக்கடிகளை மூடி மறைக்கவும், இதை எதிர்த்து நாடு முழுவதும் நடக்கும் பரந்துபட்ட ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை திசை திருப்பவும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றவும், பாசிசப் போக்குகளை தீவிரப்படுத்தி நாட்டை இராணுவ மயமாக்கவும், ஆர்.எஸ்.எஸ் (1925 - 2025) உதயமான நூறாவது ஆண்டில் ராம ராஜ்ஜியத்தையும் அமெரிக்க மாமன் ராஜ்ஜியத்தையும் கட்டி அமைக்கும் நோக்கில் மோடி-அமித்ஷா ஆசியுடன் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி-மதக் கலவரங்களை சங்பரிவாரங்கள் நடத்தி வருகின்றன.

2002ல் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான சோதனைக் களமாக குஜராத்தும் உபியும் சங்பரிவார கும்பலால் கட்டியமைக்கப்பட்டது. தற்போது கர்நாடகா, கோவா, திரிபுரா, அசாம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் ராம ராஜ்ஜியத்திற்கான கொலை களத்தை அசுர வேகத்தில் விரிவுபடுத்தி வருகிறது. ஜெர்மனியில் பாசிச ஹிட்லர் "உலகத்தை ஆளப்பிறந்த இனம் ஆரிய இனம்" என ஆரிய இன மேன்மை பேசி 60லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை இன சுத்திகரிப்பு என்ற பெயரில் படுகொலை செய்தான். தற்போது மோடி - அமித்ஷா ஆர்எஸ்எஸ் கும்பல்கள் "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்" என்ற இந்து ராஷ்டிரத்தை கட்டியமைக்க சிறுபான்மை மக்களை இன அழிப்பு செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

2019ல் மீண்டும் மோடி கும்பல் அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டின் பிரதமர் முதல் ஆர்எஸ்எஸ் பாஜக தொண்டர்கள் வரை சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களையும், மதவெறி நஞ்சையும் அள்ளித் தெளித்து வருகின்றனர். உபியில் மீண்டும் யோகி ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆர்எஸ்எஸ், சங்பரிவாரக் கும்பல்கள் மோடி-அமித்ஷா வழிகாட்டுதல்படி, சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆர்எஸ்எஸ் கட்சியின் தலைவர் மோகன் பகவத், இனி பாஜக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேற எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இந்துத்துவா கொள்கைகளைத்தான் செயல்படுத்த முடியும் என்றும், "சனாதனமே இந்து ராஷ்டிரம்; அதற்கான பயணம் துவங்கிவிட்டது; இன்னும் 15 ஆண்டுகளில் இந்து ராஷ்டிரம் அமையும்; குறுக்கே யார் வந்தாலும் அவர்களின் கதை முடிக்கப்படும்" எனக் கூறுகிறார். இதற்கு அடிப்படைக் காரணம் பாசிச மோடி கும்பலின் 8 ஆண்டு ஆட்சியில், ராணுவம், காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கமும், கல்வி, பண்பாடு மற்றும் ஊடகத்துறை முழுவதும் காவிமயமாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதிதான் 2021 டிசம்பர் மாதம் 17, 19ம் தேதிகளில் உத்தரகாண்ட் (ஹரித்துவாரில்) மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் சாமியார்கள் நடத்திய கூட்டத்தில் இந்து மதவெறி கும்பல்கள் இஸ்லாமிய மக்களை இன அழிப்பு செய்ய ஆயுதம் எடுக்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்கள். மேலும் "ஆயுதங்களை எடுக்காமல் எந்த ஒரு சமூகமும் உயிர் வாழ இயலாது; உங்கள் ஆயுதங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; 20 லட்சம் முஸ்லிம்களை கொள்ளக்கூடிய 100 வீரர்கள் நமக்கு வேண்டும்; இந்தியாவை இந்து நாடாக மாற்ற போர் நடத்துவோம்; ஆயுதம் ஏந்துவோம்; இஸ்லாமியர்களை இன அழிப்பு செய்ய காவல்துறை, ராணுவம், அரசியல் பதவிகளில் உள்ள இந்துக்கள் தங்கள் கையில் ஆயுதம் எடுக்க வேண்டும்" என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பாதிரியார்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு எதிராக மட்டும் கடந்த ஓராண்டில் 300க்கும் மேற்பட்ட தாக்குதல்களையும், கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் ஒட்டுமொத்தமாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மதக் கலவரங்களையும் மோடி ஆட்சி நடத்தியுள்ளது.

பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல்களின் மதவெறி பேச்சுக்கள்

மோடி ஆட்சியின் 8 ஆண்டு கால அவலங்களை மூடிமறைக்கவும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர் வெறிக்கும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கைக்கூலி படையாகவும், புதிய காலனிய நாடாகவும் இந்தியாவை மாற்றி வருவதை திசை திருப்புவதற்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக பாசிச கும்பல் மதவெறியை தூண்டும் வகையில் பின்வருமாறு தொடர்ந்து பேசி வருகின்றன.

1. பாஜக செய்தி தொடர்பாளர்களான நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் இசுலாமியர்கள் மற்றும் அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி கலவரத்தை மூட்டுகின்றனர்.

2. ஹரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், "முஸ்லிம்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது; முஸ்லிம்கள் தங்கள் சொந்த இடத்தில் தொழுகை நடத்துவது நல்லது; இல்லையென்றால் கலவரம் வரும்" என அச்சமூட்டுகிறார்.

3. உபி பாஜகவின் துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, அயோத்தி வாரணாசி போல மதுராவிலும் விரைவில் பிரம்மாண்ட கோவில் கட்டப்படும் என்கிறார். பில்லியா தொகுதி பாஜக எம்பி குஷ்வாகா, நாடாளுமன்றத்தில் பேசும் போது வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் போது, ஏன் வழிபாட்டுத்தலங்கள் சட்டம் திரும்பப் பெறக் கூடாது என்கிறார். இதையே ஹர் நாத் சிஸ்யாதவ் பாஜக எம்பி நாடாளுமன்றத்தில் மதுராவில் உள்ள மசூதியை இடித்து ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் கட்டப்பட வேண்டும் என்கிறார்.

4. பாஜக தெலுங்கானா எம்பி சஞ்சய் குமார், சிஐஏக்கு எதிராக போராட்டங்கள் நடத்துபவர்கள் கையில் கற்களை எடுத்தால் நாங்கள் வெடிகுண்டை எடுப்போம் என மதவெறி கும்பல்களுக்கு அழைப்பு விடுக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முஸ்லிம் கடைகளில் இந்துக்கள் பொருட்களை வாங்க கூடாது என்றும், இந்துக்கள் அல்லாதவர்கள் வாரணாசியில் நுழையக்கூடாது என்றும், ஆர்எஸ்எஸ், பாஜக, பஜ்ரங்தள், விஎச்பி போன்ற மதவெறி அமைப்புகள் மிரட்டுகின்றன.

5. கர்நாடகாவில் திருவிழாக்களில் இந்து வியாபாரிகள் மட்டுமே கடைகளை வைக்க வேண்டும் எனவும் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிகளுக்கு ஹிஜாப் (முகத்திரை) அணியக்கூடாது எனவும் மாணவிகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் மாணவர்களிடையே திட்டமிட்டு மதக் கலவரங்களை உருவாக்கும் நோக்கில் பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

6. தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி இறந்த அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை மரணத்தை பயன்படுத்தி, அவர் கட்டாய மத மாற்றத்தினால்தான் தற்கொலை செய்து கொண்டார் என ஆர்எஸ்எஸ் பாஜகவின் அண்ணாமலை கும்பல்கள் பொய்யான வீடியோவை வெளியிட்டு, மத கலவரத்திற்கும், மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் திட்டமிட்டு செயல்படுகிறது.

இவ்வாறு நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, மதக்கலவரங்களையும் மத வெறுப்பு பேச்சுக்களையும் விஷம் போல கக்கி வருகிறது பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல். ஆனால், முஸ்லிம் மக்களை ஹிட்லரைப் போல இன அழிப்பு செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக ஆட்சியில் முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் வெட்கம், மானமின்றி பிரச்சாரம் செய்தது. இதற்கு எதிராக போராடுவதையே காரணம் காட்டி இசுலாமியர்கள் மீது தடியடி நடத்துவதும், கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதும், துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்வதும், பாதிக்கப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுவதும், கலவரத்துக்கு காரணமான சக்திகளை பாதுகாப்பதும் மோடி ஆட்சியில் அதிகரித்து வருகின்றன.

தேவாலயங்கள் தகர்க்கப்படுகின்றன; முஸ்லிம்கள் பகிரங்கமாக அச்சுறுத்தப் படுகின்றனர்; பிரதமர் மோடியே இப்போதாவது மௌனம் கலையுங்கள் என ஐஐஎம் மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட 183 பேர் கூட்டாக கடிதம் எழுதினர். நாடே பற்றி எரியும் போது ரோம் நீரோ மன்னனை போல பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் மோடி. 130 கோடி மக்களின் காவலனாக வேடமிடும் மோடி நாடு முழுவதும் நடக்கும் மத கலவரங்களை தடுக்கவும், தண்டிக்கவும் தயாராக இல்லை. மாறாக சிறுபான்மை மக்கள் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். குறிப்பாக "உபியில் ஆக்கிரமிப்பாளர்கள்; இந்து நாகரிகத்தை தாக்கினர்; இதனை அழிக்க முயன்றனர். அவுரங்கசீப்பின் அட்டூழியங்களுக்கும் அவரது பயங்கரவாதத்திற்கும் வரலாறு சாட்சி; அவர் வாளால் நாகரீகத்தை மாற்ற முயன்றார்; கலாச்சாரத்தை வெறித்தனத்தால் நசுக்க முயன்றார்; ஆனால் இந்த நாட்டின் மண், உலக நாட்டில் இருந்து வேறுபட்டது; இங்கே ஒரு அவுரங்கசீப் வந்தால் ஒரு மராட்டிய வீரன் (சிவாஜி) வீறுகொண்டு எழுகிறார்" என்று மோடி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்.

இவ்வாறு இந்திய வரலாற்றில் பழமையை கட்டிக் காப்பதும், ஆரிய இன வாதத்தின் படி இந்தியாவில் வாழ்வதற்கு இந்துக்களுக்கு மட்டுமே தகுதியும், உரிமையும் உள்ளது என்று பேசி பிற சிறுபான்மை மத மக்களை ஒடுக்குவதும், தனது சொந்த மதத்திற்கு உள்ளேயே வர்ணாசிரம முறையை கடைப்பிடிப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்குவதும் தான் இந்து மத பாசிச அமைப்புகளான ஆர்எஸ்எஸ், பாஜக, ஏபிவிபி, இந்து முன்னணி, விஎச்பி போன்ற இந்துமதவெறி கும்பல்களின் உண்மையான நோக்கம் ஆகும்.

பிரிட்டன் ஏகாதிபத்தியம், இந்திய துணைக் கண்டத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு மன்னர்களுக்கு இடையே இருந்த பூசல்களையும் முரண்பாடுகளையும் நில உடமையாளர்களுக்கும் மக்களுக்கும் இருந்த முரண்பாடுகளையும் பயன்படுத்தியதோடு அல்லாமல், நமது நாட்டின் உண்மையான வரலாறுகளை மூடிமறைத்து விவிலிய ஐதிக கட்டுக்கதைகளை புனைந்து தனது காலனிய ஆதிக்கத்தையும் சுரண்டல் முறைகளையும் விரிவுபடுத்தியது. தற்போது இந்துத்துவ பாசிச மோடி கும்பல், ராம ராஜ்ஜியத்தை கட்டியமைக்கவும் காவி மயத்தை விரிவுபடுத்தவும் அறிவியல் பூர்வமான வரலாறுகளை இஸ்லாமியர்களின் சுதந்திரப் போராட்ட வரலாற்றையும் கள்ளத்தனமாக மூடிமறைக்கிறது.  இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளைக்காரன் காலை நக்கிப் பிழைத்த ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளை தேசபக்தர்களாக புனைய இதிகாச புராண கட்டுக்கதைகளை இளைய தலைமுறையிடம் பரப்பி வருகிறது.

கல்வி மீதான இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதல்

பிரிட்டன் ஏகாதிபத்தியம் தனது காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் வகையில் உடலாலும் உள்ளத்தாலும் இந்தியனாகவும், செயலால் சிந்தனையால் ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் வகையில் குமாஸ்தாக்களை உருவாக்க மெக்காலே கல்விமுறையை தனது வர்க்க நலனிலிருந்து புகுத்தியது. தற்போது இந்துத்துவ பாசிச மோடி கும்பல் இந்துராஷ்டிரக் கனவை நனவாக்க குழந்தைகள், மனதில் நஞ்சை விதைக்கும் விதமாக கல்வித்துறையை காவிமயமாக்கி வருகிறது.

இந்தியாவின் கலாச்சாரம், அறிவாற்றல், பழம்பெருமை ஆகியவற்றை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பகவத்கீதையின் மதிப்புகள், கோட்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் என்பவை எல்லா மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என குஜராத் அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பகவத்கீதையை ஒரு பாடமாக சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாம் வகுப்புக்கான இந்தி பாடத்தில், இந்து மன்னர் இஸ்லாமிய மன்னரை தோற்கடித்தார் என்றும், இஸ்லாமிய பண்டிகைகளை இருட்டடிப்பு செய்தும் எழுதப்பட்டுள்ளது. முதல் வகுப்பிற்கான இந்தி பாடப்புத்தகத்தில், எழுத்துக்கள் புராண பாத்திரங்களைக் கொண்டும், சம்பவங்களை கொண்டும் விளக்கும்படி எழுதப்பட்டுள்ளன. மேலும் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் புத்தகத்தில், வேத கணிதம் எனும் பாடம் வைக்கப்பட்டுள்ளது. நான்காம் வகுப்பிற்கான அறிவியல் புத்தகத்தில் மலர்கள் பாடத்தில், தாமரை மலர் இந்துக் கடவுள் சரசுவதியின் தொடர்புடையது என்றும், ஆறாம் வகுப்பு புவியியல் புத்தகத்தில் அண்டம் பற்றிய பாடத்தில் துருவதாரா எனும் இந்துக் கடவுள்தான் துருவ நட்சத்திரம் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மிக மிக பிற்போக்கான ஆதாரமற்ற கட்டுக் கதைகளையும், பகவத்கீதை மனுஸ்மிருதி போன்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் பிற்போக்கு குப்பைகளையும், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், நவீன குலக் கல்விமுறையை புகுத்தி, அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கும், பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கும்பல்களுக்குச் சேவை செய்யும் வகையில், உள்ளத்தால் இந்துத்துவத்திற்கும், உடலால் கார்ப்பரேட்டுகளுக்கும் சேவை செய்யும் வகையில், எதிர்கால மாணவ சமூகத்தை இந்துத்துவ பாசிசத்திற்கு பலியாக்கி வருகிறது மோடி கும்பல்.

அறிவியல் மீதான தாக்குதல்

அறிவியல் அல்லது சமூக விஞ்ஞானம் என்பது உலகளாவிய நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். H2O சேர்த்தால் நீர் உருவாகும். நீரை 100 டிகிரி கொதிக்க வைத்தால் ஆவியாக மாறும். அதே நீரை 0 டிகிரி வெப்ப நிலைக்கு வந்தால் பனிக்கட்டியாக மாறும். நேர் மின்னலைகளும், எதிர் மின்னலைகளும் ஒன்றோடு ஒன்று மோதினால் மின்னொளி பிறக்கும். இவை அனைத்தும் உலக அளவில் நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மையாகும். ஆனால் இந்துத்துவ பாசிச மோடி கும்பல்

விஞ்ஞானத்தின் மீதும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது. விமானத்தை கண்டுபிடித்து ரைட் சகோதரர்கள் என்பது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று உண்மையாகும். ஆனால் விமானத்தை மகாபாரத காலத்திலேயே கண்டுபிடித்ததாகவும், நாடு விட்டு நாடு அல்ல, கிரகம் விட்டு கிரகம் பாயும் ஏவுகணைகளை அன்றே கண்டு பிடித்ததாகவும், பிள்ளையாருக்கு யானை முகம் வந்ததுக்கு காரணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி தொழில் நுட்பம் நமது நாட்டில் பயன்படுத்தி உள்ளதாகவும் மோடி கும்பல் கூறுகிறது.

2019 ஜனவரியில் நடந்த 106 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில், மகாபாரதத்தில் 100 கௌரவர்கள் உருவானது டெஸ்டியூப் பேபி மூலம் தான் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்துக்கள் மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் என்றும், ஏவுகணைகள், விமானங்கள் பண்டைய இந்தியாவில் இருந்தது என்றும், 24 வகையான ஏவுகணைகளை ராமன் பயன்படுத்தினார் என்று அறிவியல் மாநாட்டில் ஆந்திரப்பிரதேச பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராகேஷ்வரராவ் கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார கும்பல்களின் நோக்கங்களை நிறைவேற்ற ராணுவமயமாக்கல் தீவிரம் பெறுதல்

முசோலினி, ஹிட்லரின் பாசிச ராணுவமயமாக்கல் கொள்கைகளை இந்தியாவில் கட்டியமைக்கவும், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்களில் உள்ள தாழ்த்தப்பட்ட - பழங்குடி மக்களையும், கம்யூனிஸ்ட்டுகளையும் கொன்றொழித்து இந்துராஷ்ட்ரத்தை கட்டியமைக்க, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இராணுவ பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ராணுவத்தை இந்துமதவாதமாக மாற்றுவது, இந்துத்துவாவை இராணுவமயப்படுத்துவது எனும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் அகினிபாத் மூலம் வேகமாக நடைமுறைக்கு வரத் துவங்கியுள்ளது. ஏற்கனவே லவ்-ஜிகாத்திற்கு எதிரான படை, தாய் மதத்திற்கு திரும்புவதற்கு மக்களை தயார்ப்படுத்தும் 'கர்வாப்ஸி' படை, பசுக்களை பாதுகாப்பதற்கு பசுகுண்டர் படை, கவுரி லங்கேஸ், கல்புரிக்கு, பன்சாரே, நரேந்திர தாஸ் தபேல்கர் போன்ற பகுத்தறிவுவாதிகளையும், பாசிச மோடி கும்பலின் மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளையும், இன அழிப்புச் சட்டங்களையும், எதிர்த்து போராடுபவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் கநாதன் சன்ஸ்தா போன்ற ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கும்பல்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

நாடு முழுவதும் 100 ராணுவப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த ஆண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பின் முக்கியமான நோக்கம் என்பது இளைஞர்களிடையே தேசபக்தி, நாட்டுப்பற்று உருவாக்குவது என கூறுகின்றனர். ஆனால் உண்மையான நோக்கம் என்பது, 2021 டிசம்பர் 17, 19 தேதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் "இஸ்லாமிய பயங்கரவாதமும், நமது பொறுப்புகளும்" எனும் தலைப்பில் நடந்த மாநாட்டில், இந்து மதவெறிக் கும்பல்கள், இஸ்லாமியர்களை இன அழிப்பு செய்ய, இந்துக்கள் தங்கள் கையில் ஆயுதம் எடுக்க வேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ராணுவ பயிற்சி பள்ளிகளை சட்டப்பூர்வமாக நடத்துவதற்கான ஒரு யுத்தியேயாகும்.

கடந்த 2018 -ல் நடந்த கூட்டமொன்றில் "இக்கட்டான சூழலில் போருக்கு வீரர்களை தயார்ப்படுத்த இராணுவத்திற்கு 6 அல்லது 7 மாதங்கள் ஆகும் நம்முடைய நாட்டிற்கு தேவையென்றால் அரசியல் அமைப்பு சட்டம் அனுமதித்தால் நம்மை (ஆர்.எஸ்.எஸ்.) கேட்டுக் கொண்டால் மூன்றே நாட்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை இராணுவமாகத் தயார்ப்படுத்துவோம். அதுதான் நம்முடைய திறமை" என்று நாட்டின் ராணுவத்தை காவிமயமாக்க மோகன் பகவத் பகிரங்க அழைப்பு விடுத்தார். இந்த அமைப்பின் பின்புலமும் இந்துக்களுக்கு என்று ஒரு ராணுவப் படை தேவை என்றும் இந்து முஸ்லிம் பிரச்சனையை பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க முடியாது, யுத்தம் நடத்திதான் தீர்வுகான முடியும் என்ற இன அழிப்பு கொள்கைகயை நடைமுறைப்படுத்தவே நாட்டின் ராணுவத்தை காவிமயமாக்கி வருகிறது.

மாட்டிறைச்சி மீதான தடையும் தாக்குதலும்

பாசிச மோடி கும்பல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, சிறுபான்மை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஒருவர் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எந்த மொழியை கற்க வேண்டும், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பதை அரசே தீர்மானிப்பது பாசிசத்தின் வெளிப்பாடாகும்.

மோடி கும்பல் மத்தியில் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் ஆறாவது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது மோடி ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பசு புனிதம் என்ற பெயரிலும், கோமாதா பாதுகாப்பு என்ற பெயரிலும், ஆர்.எஸ்.எஸ் கொலைகார பசு பாதுகாப்பு குண்டர் படை, "கால்நடை விதிகள் ஒழுங்காற்று சட்டம் 2017" யை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, தனது இந்துத்துவ அரசியல் பண்பாட்டை இஸ்லாமியர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிப்பதற்கு, சட்டவிரோத கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு சாதி, மத கலவரங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2015-ல் மாட்டுக்கறி வைத்திருந்தாக கூறி உ.பியில் முகமது அக்லக்கை சங்பரிவார கும்பல் படுகொலை செய்ததில் துவங்கி, கடந்த எட்டு ஆண்டுகளில் இஸ்லாமியர்களை அடித்து துன்புறுத்துவதும், படுகொலை செய்வதும் தூக்கிலிடுவதும், மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களையும் அதே காரணத்திற்காக சித்திரவதை செய்து கும்பல் படுகொலை செய்வதும் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் பசுவை வதை செய்தார்கள் என்ற பெயரில், உ.பியில்(2020) ஆகஸ்ட் வரை 76 பேர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் தீழ் வழக்கு பாய்ந்துள்ளது. உ.பி.மாநிலத்தில் இத்தடைச் சட்டத்தின் கீழ் 1,716 வழக்குகளில் 4000 பேரை கைது செய்துள்ளது. அதில் பசுவதை எனும் பெயரில் உ.பி கேங்ஸ்டர் சட்டத்தின் கீழ் 2,384 பேரை கைது செய்துள்ளது யோகி மதவெறி ஆட்சி. 2021ல் அசாம் மாநிலத்தில் கொண்டு வந்துள்ள கால்நடைப் பாதுகாப்பு திருத்தச் சட்டமானது இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் சில பகுதிகளில், கோவில் அல்லது வைணவ மடங்களுக்கு 5கிலோமீட்டர் சுற்றளவிற்கு மாடு அறுப்பதையும், மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும் தடை செய்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்து கடந்த ஆறு ஆண்டுகளில் "மாடு" வணிகத்தில் சம்பாதித்த பணம் எவ்வளவு? அதனால் வாங்கிய சொத்துக்கள் என்ன? அப்படி சொத்துக்களை வாங்கியிருந்தால் அதைச் சோதனை செய்யவும், பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு பாசிச சட்டத்தை அசாம் மாநில பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

உண்மையில் மோடி கும்பலின் 2017 கால்நடை விதிகள் ஒழுங்காற்று சட்டம், பசு புனிதம், கோமாதா பாதுகாப்பு, மாடுகளை கொல்வதை தடை செய்வதால் மாட்டுவளம் பெருகும் போன்ற நோக்கங்களுக்காக ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பல்கள் போராடவில்லை. மாறாக உள்நாட்டு மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதன் மூலம், மாடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள், இறைச்சி மற்றும் தோல் பதனிடும் தொழில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையான தலித் மற்றும் இஸ்லாமிய மக்கள், வர்த்தகர்கள், கால்நடைகளை கொண்டு செல்லும் வாகன தொழில் ஈடுபடுபவர்கள் என பல கோடி பேர் வாழ்வாதாரங்களை பறித்து நடுத்தெருவுக்கு தள்ளுவதுதான் இக் கும்பலின் உண்மையான நோக்கம்.

பசு பாதுகாப்பு குண்டர்களும், ஆர்.எஸ்.எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பல்களும் இறைச்சி ஏற்றுமதி ஆவதை எதிர்க்கவுமில்லை, தடுக்கவுமில்லை, காரணம் பாஜகவை சார்ந்தவர்களும், அவர்களின் நண்பர்களும் முஸ்லிம் பெயர்களில் கம்பெனிகளைத் துவங்கி பசு உள்ளிட்ட மாட்டிறைச்சி ஏற்றுமதியில் (அல்கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட், விரிஸி, அல்நூர், எய்டான்டார்ட், எக்ஸ் போன்ற இஸ்லாமிய பெயர்களில்) ஈடுபட்டு வருகின்றனர். இந்து மதத்தை சார்ந்த சபர்வால், கனில்கபூர், மதன், அரோரா, சுனில்தத், கமல் வர்மா, போன்ற கார்ப்பரேட் முதலாளிகளால் நடத்தப்படும் நிறுவனங்கள்தான் இறைச்சி ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் 2013-2014, 2015 ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு நிதியை வாரி வழங்கின. எனவே ஆர்.எஸ்.எஸ். பாஜக பசு குண்டர்களின் உண்மையான நோக்கம் பசு பாதுகாப்பு அல்ல, கார்ப்பரேட் நலன்களுக்குச் சேவை செய்வதும், தங்களது இந்துராஷ்ட்டிரக் கொள்கைகளை நிறைவேற்ற இஸ்லாமியர், தலித் மக்கள் மீதான கும்பல் படுகொலை செய்வதற்கான சட்ட அங்கீகாரம் பெறுவதே ஆகும்.

இந்துராஜ்ஜியத்தை கட்டியமைப்பதும், மோடி ஆட்சி அறிவித்த டிஜிட்டல் இந்தியா, மேட் இன் இந்தியா, மேக்கின் இந்தியா உள்ளிட்ட எல்லா வெற்று கோஷங்களும் இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவில்லை. மாறாக ராமனான அமெரிக்காவின்  புதிய காலனிய ஆதிக்கத்திற்கும், அனுமார்களான அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நலன்களுக்கும் சேவை செய்யும் ஆட்சியாக இருக்கிறது.

சமரன், ஜூன்ஆகஸ்ட் 2022 இதழிலிருந்து

(தொடர்ச்சி - பகுதி 2ல்)

தொடர்ந்து படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்