மேகமலை மக்களை வெளியேற்ற துணை ராணவப்படை! உச்சநீதிமன்றம் கொடூர தீர்ப்பு!
செந்தளம் செய்திப்பிரிவு
மாஞ்சோலை மக்களை தொடர்ந்து அடுத்ததாக விரட்டப்படும் மேகமலை மக்கள்!
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி வட்டத்தில் கடமலைக்குன்று மயிலாடும் பாறை ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது ஊராட்சிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் முந்திரி, இலவம்பஞ்சு, காய்கறி விவசாயம், கால்நடை வளர்ப்பு, தேயிலைதோட்ட தொழில் செய்து வருகின்றனர்.
1947 அரைகுறை சுதந்திரத்திற்கு முன்பாகவே கண்டமனூர் ஜமீன் காலத்தில் வழங்கப்பட்ட நிலங்களை சீரமைத்து விவசாயம் துவங்கிய மக்கள் ஐந்து தலைமுறைக்கும் மேலாக கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராமங்களில் வாழும் சுமார் 5000 மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மக்கள் சொல்லான்னா துயரில் ஆழ்ந்திருக்கின்றனர். ஐந்து தலைமுறைக்கும் மேலாக இந்த மண்ணில் வாழும் தாங்கள் செத்தாலும் இந்த மண்ணிலேயே சாவோம் என கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
ஹைவேவிஸ் பேரூராட்சிக்குள் உள்ள பச்சைக் கூமாட்சி, மணலாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, வென்னியாறு கிராமங்களில் வசித்து வரும் தேயிலை தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக குமுறுகின்றனர். தேயிலைத் தொழிலை தவிர தங்களுக்கு வேறு தொழிலே தெரியாது. இங்கிருந்து வெளியேற்றப்பட்டால் தற்கொலைதான் ஒரே வழி என கண்ணீர் விடுகின்றனர்.
இக்கிராமங்களை உள்ளடக்கிய இப்பகுதியானது கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. கண்டமனூர், மேகமலை, வருசநாடு, சின்னமனூர் என வனத்துறைக்கு சொந்தமான 5072 ஹெக்டேர் வன நிலத்தை 4461 நபர்கள் ஆக்கிரமித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகளை வெளியேற்ற நெருக்கடியும் கொடுக்கப்பட்டு வந்தது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் விவசாயிகளை வெளியேற்ற முடியவில்லை.
இச்சூழலில்...களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் (BBTCL நிறுவனம்) குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், அங்கிருந்த தொழிலாளர்களை வெளியேற்றுவது மற்றும் மறுவாழ்வு அளிப்பது குறித்து ஏ. ஜான் கென்னடி வழக்கின் விசாரணையின் போது, நீதிமன்றம் இதை வெறும் தொழிலாளர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட எஸ்டேட் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது என்றும் மாஞ்சோலை அமைந்திருக்கும் அகத்தியமலைப் பகுதி என்பது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு "பல்லுயிர் பெருக்க மண்டலம்" (Biodiversity Hotspot). எனவே, ஒரு பகுதியை மட்டும் தனித்துப் பார்க்காமல், தென்பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒட்டுமொத்த வனப் பாதுகாப்பையும் ஆராய வேண்டும் என முடிவு செய்தனர்.
மாஞ்சோலை அமைந்துள்ள களக்காடு-முண்டந்துறை மட்டுமன்றி, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம், பெரியார் புலிகள் காப்பகம் மற்றும் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் ஆகிய முழுப் பகுதியிலும் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2025-இல் ஜூன் 23 முதல் 26 வரை மத்திய குழு கள ஆய்வு செய்து அறிக்கையினை அளித்தது.
மத்திய ஆய்வுக்குழு தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தபோது, மாஞ்சோலையை விட மேகமலைப் பகுதியில் தான் ஆக்கிரமிப்புகள் மிக அதிகமாக இருப்பதாக வெளிபடுத்தியது. பின்னர்தான் இவ்வழக்கின் முக்கியப் புள்ளியாக மேகமலை மாறியது.
இந்நிலையில் கடந்த மே 29ந்தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றி மேகமலை மற்றும் பிற காப்புக்காடுகளை உடனடியாக மீட்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்ற தவறினால் ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவ படையை ஈடுபடுத்த மத்திய உயர் அதிகாரக் குழு பரிந்துரைக்கலாம் என்றும் ஆகஸ்ட் 28 க்குள் மத்திய உயர் அதிகார குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனப்பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு என்பதை எல்லாம் காரணங்காட்டி அதானி, அம்பானி, வேதாந்தா போன்ற ஒரு சில கார்ப்பரேட் மிருகங்களின் வேட்டைக்கு காட்டை திறந்து விடத்தான் கார்ப்பரேட் வெறிகொண்ட இதுபோன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றன.மாஞ்சோலை கண்ணீர் வடிவதற்குள் மேகமலை கதறி அழுகிறது... மண்ணின் மக்களை விரட்ட ஏவப்படும் கார்ப்பரேட் தீர்ப்புகளுக்கு எதிராக மேகமலை மக்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம்!
செந்தளம் செய்திப்பிரிவு