நில பிரபுத்துவ எதிர்ப்பு -ஏகாதிபத்திய எதிர்ப்பு - இரண்டும் கொண்ட தேசியவாதிகளை தலைவர்களை கம்யூனிஸ்டுகள் லட்சிய நோக்கில் ஆதரித்தே வந்துள்ளார்கள்
துரை. சண்முகம்
ஒரு முற்போக்கு தேசியத் தன்மை இல்லாத மேற்சொன்ன இரண்டு அரசியல் தன்மையும் கடமையும் இல்லாதவர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆட வேண்டிய அவசியம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை.
ஏனென்றால் இவர்களிடம் பரந்து பட்ட உழைக்கும் மக்களுக்கான சுரண்டலுக்கு எதிரான உருப்படியான எந்த கொள்கையும் இல்லை.
மக்களின் மீது அக்கறை கொண்ட தேசியவாதிகளுடன் கம்யூனிஸ்டுகள் அரசியல் ரீதியாக ஐக்கியப்பட்டு வேலை செய்வதில் மறுத்தது இல்லை. கறாரான கம்யூனிஸ்டுகள் யாரிடமும் ஒட்ட மாட்டார்கள்! என்று முதலாளித்துவ அடிவருடிகள் கதை கட்டுவது வரலாற்றில் உண்மை அல்ல.
சொல்லப்போனால் கறாரான கம்யூனிசப் பார்வை இருப்பவர்கள் மட்டும்தான் சரியான அரசியல் ஐக்கியத்தை உருப்படியாக உருவாக்கியும் இருக்கிறார்கள்.
அப்படி வரலாற்றில் ஒரு எடுத்துக்காட்டு தோழர் மாவோ மற்றும் நவீன சீனத்தின் தந்தையாக அம் மக்களால் கொண்டாடப்படக்கூடிய சன்யாட் சென் அவர்களின் அரசியல் உறவு.
மிகவும் பிற்போக்கு சூழ்நிலையில் இருந்த சீனாவில் 2000 ஆண்டுகளாக பகுதிக்கு பகுதி நில உடமை பரம்பரை வம்ச பண்ணையார்களாக நிலப்பரப்புக்களாகவும் இருந்த ஆதிக்கத்தையும் முடியாட்சியையும்
மூன்று மக்கள் கோட்பாடு எனும் கொள்கையை முன்வைத்து முடிவுக்கு கொண்டு வந்து நவீன சீனாவை உருவாக்கினார்.
தேசியவாதம்
மக்களாட்சி
மக்கள் வாழ்க்கைநலன் ஆதாரம்
எனும் மூன்று அடிப்படை விசயங்களை முன் வைத்து மக்களை தேசியவாதத்தின் கீழ் திரட்டினார். நில சீர்திருத்தங்கள் போன்ற கொள்கைகள் கொண்டிருந்தாலும் கம்யூனிஸ்டுகளே நாட்டை வளர்ப்பதற்கு சரியான சக்தி என அவர்களுடன் ஐக்கிய படுவதற்கும் அரசியல் ரீதியாக முன் வந்தார்
சன் யாட் சென்.
அவர் ஒன்றும் கோட்பாட்டு ரீதியான கம்யூனிசவாதி அல்ல.
ஆனால் சீனாவை சூழ்ந்து நின்ற ஏகாதிபத்தியங்களை எதிர்த்து விரட்ட நாட்டுப்பற்றுடன் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து நின்றார். ஏகாதிபத்தியம் மிரட்டியும் பயந்து ஒதுங்காத தேசியவாதி.
இப்படிப்பட்ட அரசியல் அடிப்படையிலான ஒரு தேசிய சீர்திருத்தவாதிகளைத்தான் கம்யூனிஸ்டுகள் அங்கீகரிக்க முடியும்.
இங்கே நாடு அன்னிய ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டு கிடக்கும் போது விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்காமல் விலகி நின்று கொண்டு, பாப்பாரப் பண்ணையாருக்கு பதிலாக சூத்திரப்பண்ணையார்களை உருவாக்கு! எவனாவது எனது நாட்டை ஆண்டு கொள்! எனக்கும் ஒரு பங்கை கொடு! எனும் கூலி தேசியம் எப்படி தேசிய முன்மாதிரியாக கொள்ளப்பட முடியும்? இந்த தேசிய அடிமைத்தனத்தை கலகம் போல
சித்தரிப்பது, இன்றைய ஏகாதிபத்திய தாசர்கள் வரை தொடர்கிறது.
மக்களை கம்யூனிச கொள்கைக்கு திரட்டுவது இருக்கட்டும், ஒரு தேசிய உணர்வுக்கு திரட்டுவதற்கு கூட அடிப்படை நில உடமை எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு இல்லாத
மெய்யான வறட்டு வாதிகள்தான்
இங்கு சமூக நீதிப் பேசும் ஆளும் வர்க்க அடியார்கள்! உண்மையில் இவர்கள்தான் சுரண்டல் ஆளும் வர்க்கத்தை வாழவைக்கும் பார்ப்பன சூத்திர எதிர்மறை கூட்டணிகள்.
துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/1110889158284546/?rdid=Yk8ZnlgGaZe9ZETa
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு