ஆயிரம் கோடிகளுக்கு மேல் சொத்துள்ளவர் எப்படி நேர்மையான கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும்?
சாவித்திரி கண்ணன்
ரொம்ப ஓவரா பேசுறார், எனதன்புத் தோழர் மு.வீ!
பேசக் கூடாது, எழுதக் கூடாது என்று என்னை ரொம்பக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தேன்.
ஏனென்றால், நாம் ஒரு காலத்துல இருந்து வளர்ந்த இடம். ஜனசக்தியில் தான் என் பயணம் ஆரம்பித்தது! அதனால், நான் பல விவகாரங்களில் அமைதி காத்திருக்கிறேன்.
ஆனால், பொதுச் சமூக மதிப்பீட்டிற்கும் கீழே இவர்கள் வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே தொட்டுக் காட்டுகிறேன்…!
இதன் மூலம் சுதாரித்துக் கொண்டு தங்கள் சுயத்தை உணர்ந்து கொண்டார்கள் என்றால், அவர்களுக்கும் நல்லது. சமூகத்திற்கும் நல்லது.
அதுவும் இல்லாமல் தோழர் வீரபாண்டியனுக்கும் எனக்குமான நாற்பதாண்டு காலத் தோழமை உண்டு. தனிப்பட்ட முறையில் நாங்கள் மு.வி என அழைக்கும் வீரபாண்டியன் நேர்மையானவர் தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எனக்கு நெருக்கமான யோக்கியமான தோழர்கள் பலருண்டு.
உண்மையில் அன்றைய கம்யூனிஸ்டுகள் எல்லாம் சொக்கத் தங்கங்கள் தான்!
ஆனால், இன்றைக்கு அப்படியா?
இன்றைய கம்யூனிஸ்டுகளில் யோக்கியர்கள் குறைவு. இது குறித்து நான் சொல்வது இருக்கட்டும், மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தினாலே போதும், அவரவர்களும் இன்றைய கம்யூனிஸ்டுகளிடம் உள்ளாட்சி அமைப்புகளிலும், ஊர் விவகாரங்களிலும் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பட்டியலிடுவார்கள்…!
நாங்கள் ஒருபோதும் கையூட்டு பெற்றதுமில்லை. கையூட்டை வேடிக்கை பார்த்ததுமில்லையாம்…! அப்ப சென்ற ஐந்து வருட ஆட்சி முழுமையும் கையூட்டை நாங்கள் பார்க்கமாட்டோம் என கண்ணை இறுக்கமாக பொத்திக் கொண்டீர்களோ…?
அதெப்படி திமுக ஆட்சி முழுமையும் கப்சிப் என வாய் பொத்தி இருக்க முடிந்தது உங்களால்! அதற்கும் ஒருபடி மேலே போய் ஊரையடித்து உளையில் போட்ட ஊழல் திமிங்கலங்களுடன் கொஞ்சிக் குலவி ஒரு சிறிதும் முகம் சுளிக்காமல் உறவாடினீர்களே எப்படி?
இப்ப தவெக ஆட்சியில விழிப்போடு இருக்கீங்க. ரொம்பச் சரி. இதே போன்ற வாட்ச் டாக்காக திமுக ஆட்சியில் நீங்கள் இருந்திருந்தால் திமுகவுடன் தேர்தல் கூட்டணியே வைக்க மனம் வந்திருக்காது. தேர்தலில் நிற்க சீட்டு மட்டும் போதாது, வெற்றி பெற நோட்டும் வேண்டும் என்ற உங்க மனநிலை தான் மக்கள் விரோத ஆட்சி நடத்திய திமுகவுடன் கைகோர்க்க வைத்தது.
திமுக குறித்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலாக மதவாத பாஜகவை எதிர்க்க திமுகவை விட்டால் நாதியில்லை என்றீர்கள். அந்த பாஜகவின் ரகசியக் கூட்டாளி தான் திமுக என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜக கட்டளைப்படி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க திமுக உங்களிடம் ஆதரவு கேட்ட போதே தெரியவில்லையா..?
இன்னும் திமுகவின் தொங்கு சதையாக நாளும், பொழுதும் நடமாடிக் கொண்டிருக்கும் தோழர் முத்தரசன் தனது சொத்துக் கணக்கை வெளியிடுவாரா? அவர் மாநிலச் செயலாளர் பொறுப்பு ஏற்கும் முன்பு அவரது பொருளாதார நிலை என்ன? தற்போதைய நிலை என்ன? இது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரிந்த எளிய உண்மை. அவரது சொந்த ஊர்காரர்களிடம் கேட்டால் இன்னும் சொல்வார்கள்!
மறைந்த தோழர் அற்புதமான பேச்சாளர் தா.பாண்டியன் நேர்மையான அரசியல்வாதியில்லை என்பது எல்லோருக்கும்தெரிந்த விஷயம். அதிமுகவில் சசிகலாவும், நத்தம் விஸ்வநாதனும் தா.பாண்டியனுக்கு எப்படியெல்லாம் நிதி தந்துள்ளார்கள் என அதிமுகவிலேயே பலர் சொல்வார்கள்…!
சோவியத் கலாச்சார மையத்தில் - இந்தோ ரஷ்யன் சேம்பர் ஆப் காமர்ஸின் பொதுச் செயலளராக இருந்த திரு. தங்கப்பன் கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம் தானே..!
சென்ற ஆண்டு ஏற்றுமதி வணிகத்தில் அவர் செய்த பித்தலாட்டத்தில் 420 வழக்கில் கைதாகி சிறையில் அடி உதை வாங்கி மாண்டு போனார். ரஷ்ய தூதர் அலுவலகமே இவரது பிராடுகள் கண்டு அரண்டு போனது. இவர் சாவுக்கு யாருமே வாய் திறக்கவில்லை. அவர் வீட்டில் நடத்திய ரெய்டுகளில் 120 சவரன் நகை, 7 கார்கள், 3 கோடி ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டதே. தங்கப்பன் தானே கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜெம் வீரமணிக்கும் பாலமாக இருந்தார்.
ஊழலுக்காக நீதிமன்றத்தில் எந்த கம்யூனிஸ்டுகளும் தண்டிக்கப்பட்டதில்லை… கம்யூனிஸ்டுகள் மீது ஊழல் வழக்கு பதியவில்லை என்கிறார், தோழர். கேரள முதல்வர் தோழர் பினராய் விஜயன் மகள் ஒரு நிறுவனத்திடம் கையூட்டு பெற்றதாக வழக்கு உள்ளது. அதற்கான ஆதாரங்களையும் அமலாக்கத்துறை ஊடகங்களில் பகிரங்கப்படுத்திவிட்டது. இந்தியாவில் பெரும்பாலும் ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதில்லை. அதனால், தண்டிக்கப்படாதவர்களை எல்லாம் நேர்மையானவர்கள் என மக்கள் ஏற்பதில்லை.
தற்போது தளி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கும் ராமச்சந்திரன் மீது எத்தனை கொலை வழக்குகள் உள்ளன. இவர் ஆடிய வன்முறை ஆட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா? கனிம வளங்களை சூறையாடி கல்குவாரிகளை வைத்திருப்பவர் ஆயிரம் கோடிகளுக்கு மேல் சொத்துள்ளவர் எப்படி நேர்மையான கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும்…தோழர்…?
ஒப்பீட்டளவில் மற்ற கட்சிகளை விட கம்யூனிஸ்டுகள் பரவாயில்லை. அவ்வளவு தான்!
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/39668363282754415/?rdid=WDudnBGLLHd8eiHh
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு