டெல்லி பேரணியும், பொதுக் கூட்டமும் சொல்லும் செய்தி என்ன?

அறம் இணைய இதழ்

டெல்லி பேரணியும், பொதுக் கூட்டமும் சொல்லும் செய்தி என்ன?

கடல் அலை போன்ற மக்கள் கூட்டம். இனி ஆட்சியில் தொடரவுள்ள ஒவ்வொரு நாளும் இது போன்ற எதிர்ப்பு பேரணிகளையும், பொதுக் கூட்டத்தையும் பாஜக அரசு பார்த்தாக வேண்டும். பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தியான அலை வட இந்தியாவில் வேகம் கொண்டுள்ளது என்பதை டெல்லி ராம்லீலா மைதானம் நிதர்சனமாக்கியது. அது விரைவில் இந்தியா முழுமையும் சூழன்றடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தெரிகின்றன;

தெளிவான செய்தியை தந்துள்ளன!

இந்தியா கூட்டணியின் டெல்லி பேரணியும், பொதுக் கூட்டமும்!

மக்கள் இனி மேலும் பாஜக அரசின்  திருட்டு வெற்றிகளை, தில்லுமுல்லு ஆட்சியை சகித்துக் கொள்ள போவதில்லை.

‘வெறுமனே இந்துத்துவ வெறியை பரப்புவதாலும், இந்து- முஸ்லீம் இடையே மோதல் போக்குகளை வளர்த்தெடுப்பதாலும் மக்கள் ஆதரவை தக்க வைக்க முடியாது…’ என்பது பாஜக ஆட்சியாளர்களுக்கும் புரிய ஆரம்பித்துள்ளது. ஆனால், பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நிர்வாகம் என்னெவென்ற அவர்களுக்கு தெரியாது. அவர்கள் மக்களாட்சி தத்துவத்தில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டனர்.

டில்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள மின்டோ சாலையில் இருந்து ராம் லீலா மைதானம் வரை எங்கெங்கும் மனித தலைகளாக காட்சியளித்தது!  திறந்தவெளி வாகனத்தில்  ‘இண்டி’ கூட்டணி தலைவர்கள் ராகுல காந்தி, பிரியங்கா, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்ற போது ஒரு எழுச்சியை தொண்டர்களிடம் பார்க்க முடிந்தது!

ராம்லீலா மைதானம் மக்கள் கடலில் மிதப்பது போல இருந்தது!

ராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தியிலேயே பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளதும், மோடியின் நாடாளுமன்ற தோகுதியை உள்ளடக்கிய காசி சட்டமன்ற தொகுதியில் சமீபத்திய இடைத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவி இருப்பதும், ‘பாஜகவின் பருப்பு இனி வேகாது…’ என்பதற்கு அத்தாட்சியாக உள்ளது.

தேர்தலைக் கூட ஜனநாயக ரீதியாக அணுக மறுக்கும் ஒரு ஆட்சியாளர்களை, குறுக்கு வழியில் தேர்தல் நடத்தி தேர்தல் வெற்றியை திருடித் தரும் ஒரு அயோக்கிய அதிகாரியை, ‘பதவி விலகு’ என்று சொல்வதைக் கடந்து, ”நீங்கள் தப்பிக்க முடியாது தண்டிக்கப்படுவீர்கள்” என்ற செய்தியை நேற்றைய கூட்டத்தில் தலைவர்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லி உள்ளனர்.

ஆகவே, ”இனி அடுத்த தேர்தல் என்பது ஞானேஷ்குமாரை விலக்கினால் மட்டுமே நடத்த முடியும். தேர்தல் முடிந்ததும் ஞானேஷ்குமார் சிறையில் தள்ளப்படுவார். அவருக்கு உச்சபட்ச தண்டனை காத்திருக்கிறது…” என்பது தலைவர்களின் பேச்சில் நன்றாக வெளிப்பட்டது. இதற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு இருந்ததையும் பார்க்க முடிந்தது.

காரணம், ஆத்திரத்தில் கொலை செய்தவர்களைக் கூட நீதிமன்றங்களும், மக்கள் மன்றமும் குறைந்தபட்ச தண்டனை தந்து ஓரளவு மன்னிக்கும். ஆனால், திட்டமிட்டு 144 கோடி மக்களின் சுதந்திரத்தை – ஒட்டளிக்கும் உரிமையை – களவாடி அதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பது என்பது மாபெரும் கொலை பாதகச் செயலாகும்.

ஆகவே, இந்த படுபாதகச் செயலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் மோடி- அமித்ஷா- ஞானேஷ்வரன் ஆகிய மும்மூர்த்திகளின் முகமுடி கிழித்தெறியப்படப் போவது உறுதி. அதை ஜனநாயகத்தின் வழியிலேயே மக்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது!

இதே போன்ற ஒரு எழுச்சியான பேரணியை வட கிழக்கு மாநிலங்களின் ஒரு இடத்திலும், மத்திய இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் நடத்த வேண்டும்.

இந்தியா கூட்டணியை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும். இந்தியக் கூட்டணிக்கு கரப்பான் பூச்சி ஜனதா இளைஞர்களின் ஆதரவும், ஆம் ஆத்மியின் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் பாஜக ஆட்சி தூக்கி எறியப்படப் போவது உறுதியாகிவிடும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/33273/india-allianace-meeting-delhi/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு