தளபதி சிதம்பரனார்! - ம.பொ.சிவஞானம்

தமிழ்முரசு ஏட்டில்.. நவம்பர் 15, 1947

தளபதி சிதம்பரனார்! - ம.பொ.சிவஞானம்

இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர் வெளியேறி விட்டனர். அவர்களை வெளியேற்றுவதற்காக சுமார் அறுபது ஆண்டுகளுக்குமேல் வீரப்போர் புரிந்தனர் இந்திய மக்கள்.

தமிழ் இனத்தவரும் தங்கள் தாயக மாம் தமிழ்நாட்டின் விடுதலைக்காக அப் போரில் பங்கு கொண்டனர்; படாதபாடெல்லாம் பட்டனர். இந்திய சுதந்திரப் படையினருக்குத் திறமை மிக்க தளபதிகள் பலர், ஒருவர் பின் ஒருவராக தலைமை தாங்கினர்.

ஏகாதிபத்தியத்தின்மீது நமது தாய்ச் சபையாம் காங்கிரஸ் மகாசபை முதல் முதலில் நேரடித் தாக்குதலைத் துவக்கியபோது வடக்கே திலகர் பெருமானும், தெற்கே வீரச் சிதம்பரனாரும் தள பதிகளாக இருந்து தளராது போர்புரிந்தனர்.

வடக்கு முனையைவிடத் தெற்குமுனைப் போர் மிகக் கடுமையாக இருந்தது. தளபதி சிதம்பரனார் சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக்கி, வெள்ளை வர்த்தகக் கூட்டத்தைத் தாக்கினார்.

ஹார்வி மில் தொழிலாளருக்குத் தலைமை தாங்கி, வெள்ளை முத லாளிகளின் மூலதனக் கோட்டையில், வேலை நிறுத்தம் எனும் 'வெடி' வைத்துத் தகர்த்தார்.

தூத்துக்குடியில் வீதிக்கு வீதி கூட்டங்கள் போட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்க்குமாறு மக்கள் உள்ளத்தே வீரக் கனலை மூட்டினார். 

இவ்வளவும் 1907-1908 ஆகிய இரண்டே ஆண்டுகளில் நிகழ்ந் தன . இதன் விளைவென்ன? ஆங்கில எகாதிபத்திய - முதலாளித்துவ- வாணிபக் கூட்டத்தார் ஒன்று திரண்டு தளபதி சிதம்பரனாரை சிறைப்படுத்தி விட்டனர். 

நீதியென்ற பெயரால் இரு ஜென்ம தண்டனை விதித்தனர். சிறையில் செக்கு வலிக்க வைத்தனர். கல்லுடைக்கச் செய்தனர். அறுசுவை உண்டு அரசர்போல் வாழ்ந்த செல்வச் சிதம்பரனாரை கேழ் வரகுக்கூழ் குடிக்க வைத்துக் கொடுமைப்படுத்தினர். 

ஆம், ஏகாதிபத்தியம் சிதம்பரனாரைப் பழிக்குப் பழி வாங்கியது.

நாமக்கல் கவிஞர் கூறியது போல்,

"வல்லாளன் சிதம்பரனார் சிறையிற்பட்ட வருத்தமெலாம் விரித்துரைக்கில் வாய்லிட்டேங்கி கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டக் கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார்இன்றும்"

இது மிகையன்று. சிதம்பரனார் பிறவித் தலைவர். மதி படைத்த தலைவர் பலருண்டு இந்தநாளில்.

ஆனால், அவரெல்லாம் மற்றவர் இன்னல் கண்டு உதவும் மனம் படைத்தாரில்லை. சிதம்பரனாரோ மதியும், மனமும் ஒருங்கே படைத்த மாபெரும் தலைவர்.

தளபதி சிதம்பரனார் மறைவு நாளை தமிழகம் எங்கும் கொண்டாடுவது கண்டு களிப்படைகிறோம்.

அவர்மட்டுமன்றி, அவரது மனைவியாரும் இன்னல் பல ஏற்றவர். அவ்வம்மையார் அருகிலிருக்க 

அண் ணல் சிதம்பரம் வீற்றிருக்கும் காட்சியை 'முரசு' முகப்புப் படத்தில் காணலாம்.

தளபதி சிதம்பரனாரின் நினைவுக்கு அறிகுறியாக, சென்னை 'ஜார்ஜ்டவுனை', 'சிதம்பரம் நகர்' என மாற்றுமாறு சென்னை நகராண்மைக் கழகத்தாரை வற்புறுத்துகிறோம்.

இதுமட்டும் போதாது.

குமரி முதல் வேங்கடம் வரையுள்ள, சிதம்பரனாரின்-அவரைப் பெற்றெடுத்த தமிழினத்தின் - தாயகமாகிய தமிழகத்தைத் தனிநாடாக்கி, அதில் தமிழ் சோஷலிஸக் குடியரசைக் காணவேண்டும். 

அதுதான் சிதம்பரனாருக்கு நாம் அளிக்கும் அழியாச் சின்னம்.

தளபதி சிதம்பரனார் புகழ் ஓங்குக !

- ம.பொ.சிவஞானம்

தமிழ்முரசு , நவம்பர் 15, 1947

நன்றி: SILAMBUSELVAR.COM

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு