விசிக-வை கபளீகரம் செய்யும் திமுக
துரை. சண்முகம் - சாவித்திரி கண்ணன்
"ஐயா! நான் ஆடு திருடு போனதா கனவுதான் கண்டேன்! ஆடு திருட்டே போகல!" என்ன ஆள விடுங்க!
எனும் சினிமாவின் நகைச்சுவைக் காட்சியாய் இருக்கிறது திருமாவின் சாமர்த்திய பேச்சுகள்.
என்னுடைய உள்ளுணர்வு படி சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும்! என்று நானே ஆசைப்பட்டேன்! அதற்காகத்தான் காட்டுமன்னார்குடியில் நிற்கப் போவதாக கூறினேன், இதற்கு வேறு விஷனோ பெரிய நோக்கமோ எதுவும் கிடையாது!
இதை உள்நோக்கத்தோடு அவதூறு செய்து தொங்கு சட்டமன்றம் வரப்போகிறது, வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் விதத்தில் திருமா முடிவெடுப்பதாக பலரும் கருத்தைப் பரப்புவதால் கூட்டணி நோக்கம் வெற்றி பெற உத்தியை மாற்றுவதாக!
பஞ்சாயத்தை கலைத்திருக்கிறார்.
கேட்டுக்கொண்ட பத்து சீட்டை தராவிட்டால் கூட்டணி நோக்கம் சிதைந்து விடும்! பாஜகவுக்கு எதிராக களமாடும் முக்கிய சக்தியான விசிக போய்விடும்!
என்ற பதட்டம் திமுகவுக்கு வரவில்லையே. ஆனால் தங்களுடைய சொந்தக் கட்சியின் உறுப்பினர்களை தனியாக டீல் செய்வதும், கொள்கையாவது வெங்காயமாவது சொல்வதைக் கேட்டால் இந்த இடத்தில் இருக்கலாம்! எனும் அளவுக்கு நெருக்கடி கொடுக்கும் சரியில்லாத, ஜனநாயகம் அற்ற திமுகவின் தலைமையில் கலந்து குழாவி இவர் தமிழ்நாட்டிற்கு ஜனநாயகத்தை எப்படி வாங்கித் தரப் போகிறார்?
தனது சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவின் சொம்புகள் என்ற ரேஞ்சுக்கு பொதுவெளியில் விமர்சனம் வந்த பிறகு, அவர்கள் ஒன்றும் எனக்கு முரண்பட்டு நடக்கவில்லை! நானே அப்படித்தான் என்று உருண்டு இருக்கிறார் திருமா.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கள நிலவரம் மாறப்போகிறது! அதற்காக காட்டு முன்னால் குடி தொகுதிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, உள்ளுணர்வால் தனிப்பட்ட முடிவு வந்தேன்! வேறு நோக்கம் இல்லை! என்றால் எப்படி?
இது ஒன்றும் பின்வாங்கல் உத்தி அல்ல! வழக்கமான படுத்தே விட்டேனய்யா சமிக்ஞை.
இருக்கிற சீட்டை எட்டு பேரில் யாருக்கு கொடுத்தாலும்! மற்றவர்கள் எனக்கு எதிரி ஆகிறார்கள் எனும் நிலைமை!
என்று வேறு சொல்கிறார்.
இந்த நிலையில் சொந்தக் கட்சியின் கூக்குரலை விட்டு விட்டு காங்கிரஸ் கட்சியில் விண்ணப்பித்திருந்து சீட் கிடைக்காத இளையபெருமாள் மகனுக்கு தூக்கி சீட்டை கொடுக்கிறார்.
அதுவும் தனது சீட்டை காலி செய்துவிட்டு.
உயர்ந்த தத்துவவாதி தெளிந்த தாய் சிறுத்தை என்று அழைக்கப்படும் திருமா, வெறும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுப்பவரா? இல்லை இந்த அந்தராத்மா உணர்வை கட்டுப்படுத்தும் பரமாத்மாவை பகைத்துக் கொண்டாலோ உரிமைக்குரல் எழுப்பினாலோ இருக்கிற இகலோக சுகபோகமும் பரி போய்விடும் எனும் சந்தர்ப்பவாத அரசியல்தான் இதில் வெளிப்படுவது.
இப்படி ஒரு சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட திருமா அவர்கள் எதிர்க்கட்சி எடப்பாடியைப் பார்த்து, அதிமுகவை பாஜக விழுங்கி வருகிறது! ஆர்எஸ்எஸ் அழித்து வருகிறது! என்று கவலைப்படும் சோகக் காட்சி கேலிக்குரியதாகிறது.
இவர் கதையையே இங்கு இவர் இஷ்டப்படி எழுத முடியவில்லை.
மெல்ல மெல்ல இவரை திமுக கபளீகரம் செய்து வருவதைப் பற்றி எந்த சுய ஆய்வும் இன்றி ,
கூட்டணி அரசியல்! லட்சியம்! எனும் பெயரில் இவர்கள் சொல்லும் ஆரிய அரசியல்
திராவிடத் திருமுகமாய் திமுக திரிந்து கொண்டிருப்பதை எதிர்த்துக் கேள்வி கேட்க எந்த சிறுத்தை பாய்ச்சலும் இன்றி ,
தான் தேர்தலில் நிற்பது வேறு அவதூறுகளுக்கு இடம் கொடுக்கிறது என்று விளக்கம் சொல்லி அஞ்சி அடங்கியது தான் நடந்துள்ளது.
குறிப்பாக திமுக கூட்டணியில் சாதிய மதவாத குழுக்கள் ஊக்கம் பெற்று கூட்டணியில் இருப்பது, தன் கொள்கைக்கு எதிரான அவதூறாக வருமே என்று நடுங்கவில்லை திருமா.
உண்மையில் இதற்குத்தான் இவர் துடித்து இருக்க வேண்டும் பயந்து இருக்க வேண்டும்.
முத்தரையர் சாதி வெறி கொங்கு வெள்ளாளர் சாதி வெறி போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட கட்சிகளின் பெயரிலான சாதி வெறியர்கள் இந்த அணியில் இருக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கி இருக்க வேண்டும். சாதியம்தான் இந்து மதம்! என்று சொல்லிக்கொண்டு ஒரு பக்கம் அத்தகைய சாதியவாத சக்திகளை வளர்த்து விடும் இந்த உத்திதான் ஆர்எஸ்எஸ் புத்தி!
இந்த நோக்கில் திருமாவின் செயல்பாடுகள் இருந்திருந்தால் அவருடைய ஆளுமையை நாம் வரவேற்கலாம். வழக்கம் போல
திராவிட வழுக்குப் பாறையில் திருமாவின் நடன உத்திகள்,
வரலாற்றில் முதலாளித்துவக் கட்சிகளின் கபளீகரத்திற்குள்
அடங்கிவிடும் அடிமைத்தனத்திற்கான எழுச்சி சவடால்களையே இனம் காட்டுகின்றன.
ஏற்கனவே ஆடிப் பார்த்த வைகோவின் வரலாறு நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது.
கார்ல் மார்க்ஸ் சொன்னது போல, " வரலாறு திரும்பவும் நிகழ்கிறது! முதல் முறை சோகமாக இரண்டாவது முறை கேலிக்குரியதாக!"
- துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/977877834919013/?rdid=Ak4UZRsUfqhr7HlF
===================================================
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பது எழுதப்படாத விதியாகவுள்ளது.
அதிகாரம் கோலோச்சும் இடமில்லையா?
நம்ப முடியாத அதிர்ச்சியாகத் தான் உள்ளது!
இன்னும் இழப்பதற்கு என்ன உள்ளது?
கூட்டணியில் இருந்ததால் தலித் மக்கள் பாதிக்கப்படும் விவகாரங்கள் சிலவற்றை பேசாமல் கடக்கவும்,
சிலவற்றை பேசியதோடு விட்டுவிடவும்,
மற்றும் சில தீவிரமான பிரச்சினையில் சும்மா அடையாளப் போராட்டத்தை நடத்திவிட்டு அடங்கிப் போகவும்.. நிர்பந்திக்கப்பட்டது.
வேங்கைவயல் செல்வதற்கே மிகத் தாமதத்திற்கு பின்பே அனுமதி பெற்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அளவுக்கு கூட விசிக வீறு கொண்டு களம் காண முடியவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்கள் காலப் போக்கில் கட்சித் தலைமையிடம் இருந்து விலகி ஆட்சித் தலைமைக்கு ஆராதனை செய்து வந்தனர்.
காலம் கடந்து இதை உணர்ந்த நிலையில் நானே சட்டமன்ற களத்தில் இருந்து வழி நடத்தினால் தான் சரிப்படும் என முடிவுக்கு வருகிறார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து மிக நீண்ட உரையாடல் நடத்தப்படுகிறது. இரவு தொடங்கி அதிகாலை வரை நடந்த அந்தக் கூட்டத்தில் கடித் தலைவர் எம்.பி. பதவியைத் துறந்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும். மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த இதுவே சரியான முடிவு என 90 சதவிகித நிர்வாகிகள் தலைவரை வலியுறுத்துகிறார்கள்.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மூலம் திருமாவிற்கு ’எம்.எல்.ஏவிற்கு போட்டியிட வேண்டாம்’ என அறிவுறுத்தப்படுகிறது. அதற்கு இசைய மறுத்த நிலையில், திமுக தலைவரே தொடர்பு கொண்டு ’’எம்.எல்.ஏ போட்டியில் இருந்து விலகுங்கள்’’ என்கிறார்.
அப்போதும் ’’கட்சி எடுத்த முடிவு. கட்சியின் கட்டளையை தலைவராகிய நான் நிறைவேற்ற வேண்டும்’’ என்கிறார்.
’’ஓகோ துணை முதல்வருக்கு அஸ்திவாரம் போடுகிறார்’’ என அவதூறு பிரச்சாரங்கள் பரப்பப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் திருமா பின் வாங்கியுள்ளார். என்ன உரையாடல்கள் நிகழ்ந்திருக்கும் என யூகித்தேன். அதை இங்கே பதிவிடுகிறேன்.
’’ராயபுரம் தந்தோம். ஷா நாவஸை நிற்க வைக்க ! அந்தத் தொகுதியையே வேண்டாம் என்று சொல்லிட்டீங்க.பல்லாவரம் தருகிறோம் என்றோம். ஏற்க மறுத்து தர இயலாத பண்ருட்டியை பிடிவாதமாக கேட்டு வாங்கீனீங்க.
மூன்று முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுத்து இருக்கீங்க.- அவர்கள் திமுக ஆதரவாளர்கள் என்பதால் சீட்டு மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு நீங்க விளக்கம் தந்தே ஆக வேண்டும்.’’
’’நான் அப்படி சொல்லாத போது ஏன் விளக்கம் தர வேண்டும்?’’
’’அப்ப நீங்க சொல்லாமல் மற்றவர்களை சொல்ல வைத்து இருக்கிறீர்களா?’’
‘’ சரி, விடுங்க எதுக்கு வில்லங்கம்? விளக்கம் சொல்லி விடுகிறேன்...’’
''அந்த விளக்க அறிவிப்பு மட்டும் போதாது. போட்டியில் இருந்து விலக வேண்டும். கொடுத்த எட்டிலும் ஜெயிக்கணும் நினைக்கிறீங்கன்னா, நாங்க சொல்வதை புரிஞ்சிக்கணும். அப்புறம் உங்க விருப்பம்.
என்ன சொல்ல வர்றிங்க…?’’
''எட்டுத் தொகுதியை வாங்கினால் போதாது. ஜெயிக்கணும். ஜெயிக்கணும்னா நாங்க சொல்றதைக் கேட்கணும்னு சொல்ல மாட்டோம். யோசித்து முடிவெடுங்க..ன்னு சொல்றோம்.''
''கட்சிக்குள் யோசித்து, விவாதித்துத் தான் முடிவெடுத்து இருக்கிறோம்...''
''அப்ப உங்க கட்சிக்காரங்களே எட்டு தொகுதிகளிலும் வெற்றியை உத்திரவாதப் படுத்திடுவாங்கன்னு நம்பினால் நீங்க தாரளமாக நில்லுங்க.''.
''இப்படி சொன்னா எப்படிங்க.., எட்டுத் தொகுதிகளை தவிர்த்து திமுகவுக்கும் கூட்டணி கட்சிக்கும் நாங்க வேலை பார்க்கிறோமில்லையா?''
''அப்ப நீங்க வேலை பார்த்து தான் நாங்க ஜெயிக்கிறோமா?''
''நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை…''
''இல்லை, வர,வர உங்க போக்கும் சரியில்லை, பேச்சும் சரியில்லை. ஏதோ ஒரு முடிவோட தான் பேசுறீங்க.. ஆனா, அது நல்லதில்லை.''
''சரி, விடுங்க. உங்க வழிக்கே வந்திடுறேன். நான் என்ன செய்யணும்.''
''முதல்ல நீங்க நிற்பதா சொன்னதை வாபஸ் வாங்கணும். அடுத்து நாங்க சொல்ற வேட்பாளரை நிறுத்தணும்.''
''வாபஸ் வாங்குறேன். ஆனா, எங்க கட்சி சார்பாக பல பேரு வேட்பு மனு தந்திருக்காங்க. அதுல ஒருத்தருக்கு தரணும்.''
''இல்ல, அது சரிப்படாது. ஏற்கனவே திமுகவை ஆதரிக்கிறவங்கன்னு சொல்லி மூன்று பேருக்கு சீட்டு தரலை. நாங்க என்ன உங்களுக்கு எதிரியா?''
''நான் எப்ப எதிரின்னு சொன்னேன்?''
''அப்ப வேட்பாளரை மாற்றியதற்கு .என்ன காரணம் என்று நாங்க கேட்டால் உங்க உள்கட்சி விவகாரத்துல தலையிடுவதாக சொல்வீங்க…! சரி, அதுல நாங்க தலையிடலை. ஆனால், காயப்படுத்தப்பட்டுள்ளோம். இதை நீங்க விளக்கம் சொல்லி பேசிடுவீங்கன்னு தெரியும். இப்ப நாங்க சொல்ற ஒரு வேட்பாளரை மட்டும் போடுங்க.''
''நீங்க சொல்றவருக்கா.., யார்?''
''உங்க சமூகத்தின் பெரிய தலைவரான இளைய பெருமாள் மகன் ஜோதிமணிக்கு தாங்க...''
''அவரு எங்ககிட்ட சீட்டு கேட்கலையே..''
''ஏன் கேட்டா தான் தரணுமா? நாங்க சொன்னா தரக் கூடாதா? இளைய பெருமாள் மகனுக்கு தருவது உங்களுக்கு பெருமை தானே…''
''அதை நான் மறுக்கலை. அவர் எங்க கட்சியிலேயே இல்லையே.''
''நீங்க அறிவிச்சிடுங்க. அப்புறம் கட்சியிலே சேர்ந்துக்குவாரு. இப்ப அவர் காங்கிரசில் இருக்கார். திமுகவில் ஒன்றும் இல்லை. எங்க கட்சி ஆளுக்கு கேட்பதாக நினைக்கக் கூடாது. கையோட அறிவிச்சுட்டால் நல்லது.''
''அதுக்கு முன்னாடி அவரை அழைத்து பேசி முடிவெடுக்கிறேன்...''
''இல்லை, உங்களை விட்டால், வெளியில் போய் மனசு மாறிவிடுவீங்க. அதனால், முதலில் அறிவிப்பு தாங்க. அப்புறம் அவரே உங்களை தேடி வந்திடப் போறார்…!''
''ஒரு வார்த்தை பேசிட்டு அறிவிக்கலாம்னு இருந்தேன்…அதுக்குள்ள நீங்க...’’
''டைம் ஆகிட்டே இருக்கு. முடிவைச் சொல்லுங்க. உங்களால் தான் கூட்டணியில் ராமதாஸின் பாமகவை சேர்க்க முடியலை. அதனால ஜி.கே.மணியோட மகனுக்கு காங்கிரசில் சீட்டு வாங்கித் தந்தோம். காங்கிரசே கூட நாங்க சொன்னவங்களுக்கு தந்துருக்காங்க. அதுக்கு பிராயசித்தமாக நீங்க ஒரு தொகுதியை தாங்க.’’
'’சரிங்க’’
’’நல்லது.’’
சாவித்திரி கண்ணன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு