திமுக ஆட்சியின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் வேல்முருகன்

சாவித்திரி கண்ணன்

திமுக ஆட்சியின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் வேல்முருகன்

திமுக ஆட்சியின் யோக்கியதையை இப்போதாவது, இவராவது அம்பலப்படுத்தியுள்ளாரே.. என்பதற்காக பாராட்டுக்கள்!

சமரச அரசியலோடு சாமானியர்களுக்கான குரலையும் சட்ட சபையில் தொடர்ந்து வெளிப்படுத்தியவர் நண்பர் வேல்முருகன். குறிப்பாக தமிழ் மண்ணையும், மக்களையும் நேசித்து விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுப்பவர் வேல்முருகன்.

தமிழ் உணர்வு, சமூக நீதி  உணர்வு, அநீதிகளுக்கு எதிரான சீற்றம் ஆகியவை அவ்வப்போதேனும் சட்ட சபையில் அவர் வழியாக வெளிப்பட்டு வந்தது,  ஒருவகையில் ஆறுதலாகவே இருந்தது என்பேன்.

அவர் திமுக ஆட்சி அமைந்த ஆறாவது மாதத்தில்  தொடங்கி ஆட்சியின் அலங்கோலங்களுக்காக  தொடர்ந்து ஆவேசமாக வெடித்துப் பேசி வந்தார்.
சட்ட சபையில் வேல்முருகனை சகித்துக் கொள்வதற்கு ரொம்பவே சங்கடப்பட்டார், முதல்வர் ஸ்டாலின். 

சபாநாயகர் அப்பாவு முதலமைச்சரின் உணர்வுகளை புரிந்து கொண்டு வேல் முருகன் பேச ஆரம்பித்தாலே அவரை தடுக்கவும், நிறுத்தவும், இடையிடையே குறுக்கிடவும் இல்லாத சேட்டைகளைச் செய்வார். அதற்கெல்லாம்  அசராமல் பேசியும், பேசத் தடுத்தால் ஏசியும் பொங்கிவிடுவார். பிறகு  சூடான முதல்வரை குளிர்விக்க ஐஸ் மழையும் பொழிந்து சம நிலைப்படுத்துவார்.

தற்போது அவர் திமுகவில் இருந்து விலக முடிவெடுத்தது காலதாமதம் என்றாலும் பாராட்டுக்குரியது.


மனசாட்சிக்கு மதிப்பளித்து வேல்முருகன் அம்பலப்படுத்திவை;

# திமுக ஆட்சியை பொறுத்த வரை அது அதிகாரிகளின் ஆட்சியாகவே இருந்தது. (முதலமைச்சர் சுயமாக முடிவெடுக்ககூடியவராக இல்லை).

# தமிழர் விரோத, தமிழின உரிமைக்கு எதிரான,  சமூக நீதி லட்சியத்திற்கு எதிரான அதிகாரிகளின் பேச்சையும் அறிவுரைகளையும் தான் முதலமைச்சர் கேட்டு நடந்தார்.

# சமூக நீதிக்கு எதிரான சக்திகளை உடன் வைத்துக் கொண்டு திமுக எப்படி சமூக நீதி அரசாக  நடைபோட முடியும்?

# லஞ்ச லாவண்யம், ஊழல், தமிழர் விரோத நடவடிக்கைகள், பாசிச சங் பரிவார் கும்பல்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் நாட்டை கொண்டு சென்றனர்.

# மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை தான் இந்த நாட்டை ஆள வேண்டும். ( அவ்வாறு நடக்கவில்லை)

 # நான் தந்த விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், தாய்மார்கள்.. நலன் சார்ந்த கோரிக்கையை பரிசீலிக்காமல் நீயெல்லாம்  கோரிக்கை வைத்து நிர்பந்தப்படுத்தும் அளவுக்கு வந்துட்டியா..?  என்ற ரீதியில் எங்களை கையாள்கிறார்கள்.

# மக்களுக்காக போராடும் இயக்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சுற்றுச் சூழல் போராளிகள் என ஒரு குழுவினர் முதலமைச்சரை சந்தித்து பேச கடந்த ஆண்டுகளாக முதலமைச்சரிடம் அப்பாயிண்மென்ட்  பலமுறை கேட்டும் ஒருமுறை கூட சந்திக்க முன்வரவில்லை.

#  வட நாட்டு இளைஞர்களுக்கு தமிழ் நாட்டரசு வேலை வாய்ப்பில் இடமளிக்கும் வகையில் ஒ.பி.எஸ் கொண்டு வந்த சட்டத்தை கேன்சல் செய்ய முதல்வர் ஸ்டாலின் கடைசி வரை சம்மதிக்கவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினை  சுற்றிலும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகள் சிலர் வழி நடத்துகிறார்கள். அவர் கைகள் கட்டப்பட்டு உள்ளன.

# நான் நிச்சயமாக பாஜக இருக்கும் கூட்டணிக்கு போக மாட்டேன் என வேல்முருகன் கூறியது என்பதும் பாராட்டுக்கு உரியது.



சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/share/1BEGey47xu/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு