நாற்பதுக்குள் எழுதி குவித்த பாரதியும் நாற்பதுக்குப் பின் எழுத ஆரம்பித்த பெரியாரும்

அரவிந்தன் கண்ணாயிரம்

நாற்பதுக்குள் எழுதி குவித்த பாரதியும் நாற்பதுக்குப் பின் எழுத ஆரம்பித்த பெரியாரும்

இணையத்தில் நடக்கும் விவாதங்கள் குறித்து மிகுந்த எள்ளல் பல வட்டாரங்களில் உண்டு, அதில் நிஜமும் உண்டு ஆனால் சில விவாதங்கள் புதிய புரிதல்களை அளிக்கும். சமீபத்திய என் பதிவொன்றில் ஒருவர் பாரதியும் பெரியாரும் சம காலத்தவர் தானே ஆனால் பெரியார் புரட்சியாளரானாரே என்று கேட்டிருந்தார். என் பார்வையில் பெரியார் புரட்சியாளரே அல்ல, பெண்ணியம், மறுமணம், சாதியம், தீண்டாமை குறித்தெல்லாம், ஏன் பிராமண எதிர்ப்பு கூட, பெரியாருக்கு வெகு காலம் முன்பே தீர்க்கமாக எழுதியவன் பாரதி தான். அந்த கேள்விப் பற்றி யோசித்த போது சட்டென்று இருவர் வாழ்வின் நேரக் கோட்டை (biographical timeline) ஒப்பிட்டு பார்க்கலாமே என்று தோன்றியது.

பெரியார் (பிறப்பு 1879) பாரதியை விட (பிறப்பு 1882) 2-3 வயது மூத்தவர், பாரதி இறக்கும் போது (1921) 39 வயது, பெரியார் அதன் பின் அரை நூற்றாண்டு (1973) கழித்து தான் 93 வயதில் இறக்கிறார். சீனி விஸ்வநாதனின் "பாரதி: கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகள்" 16 தொகுதிகள், அதில் கடைசித் தொகுதி, விஸ்வநாதந் பாரதி வாழ்வி பற்றி எழுதியது, விலக்கினாலும் சில ஆயிரம் பக்கங்கள் தேறும். பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் பாரதி அவ்வளவாக எழுதவில்லை. 15 தொகுதிகளில் அந்த சிறுவனும், பின்னர் இளைஞனும் என்னவெல்லாம் எழுதி விட்டான். அப்பப்ப்பா மலைப்பு தான். வகை வகையான கவிதைகள், பெண்களுக்கு பத்திரிக்கை, குழந்தைகளுக்கு பத்திரிக்கை, விஞ்ஞான மொழிபெயர்ப்புகள், காங்கிரஸின் வரலாறு, உலக நடப்புகள், தத்துவ விவாதங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 

பெரியாரின் எழுத்துகளுக்கு நான் பசு.கவுதமனின் தொகுப்பை நாடினேன். பெரியார் 1925-இல் காங்கிரசில் இருந்து விலகி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்து அறிக்கைப் போர் ஆரம்பிக்கிறார். அங்கிருந்து தான், அதாவது பாரதியின் சம காலத்தவரான பெரியார் பாரதி இறந்து 4 வருடம் கழித்து, 45-46 வயதில், தான் தொடர்ச்சியாக எழுத ஆரம்பிக்கிறார். 

இன்று பாரதியின் மேற்கோள்களை பிய்த்துப் போட்டு அவரை ஏதோ சாதி வெறியன் போல் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அற்பர்களுக்காக இப்பதிவு அல்ல. இன்றும் 39 வயதிலாவது பாரதிக்கு இருந்த தெளிவு எத்தனைப் பேருக்கு உண்டு? சிறு வயதில் பெற்றோரை இழந்து வாழ்நாள் முழுதும் ஏழ்மையில் உழன்ற ஏழை கவிஞன், குடும்பஸ்தன் அவன் வாழ்ந்த காலத்தில் பலரைவிட ஞானாவேசத்தோடு சமூகத்தை அவதானித்திருக்கிறான். 

1944-இல் கல்கி ஆரம்பித்து வைத்த பாரதிக்கு மணிமண்டபம் எழுப்ப நிதி சேகரிப்பு முயற்சி கடைசில் அக்டோபர் 13, 1947 எட்டயபுரத்தில் மணிமண்டபம் அமைந்தது. அக்டோபர் 13, 1947 "பாரதியார் என்ற பார்ப்பனர்க்கு மண்டபம் எழுப்பிக் கும்பாபிஷேகம்" நடந்தது என்று வயிறு எரிந்து எழுதினார் பெரியார். அந்த கட்டுரையில் உ.வே.சா-வுக்கும் ஒரு இடி. "திராவிட உணர்ச்சியைச் சிதைப்பதற்காகச் செய்யப்படும் ஆரியர்களின் சூழ்ச்சிகளில் ஒன்றே, இப்பாரதி மண்டப விழாவும் பாரதி விழாவும்" என்று தன் வயிற்றெரிச்சலைக் கொட்டினார் ஈ.வெ.ரா. 

கடைசி வரை சாதிய காழ்ப்பு, சுய தம்பட்டம், பிராமண அழித்தொழிப்பு, ஆபாச பேச்சும் எழுத்தும் தான் ஈ.வெ.ராவின் அடையாளம். 

"பாரதியும் சாதி ஒழிப்பும்" என்று தா. பாண்டியன் புத்தகமே போட்டிருக்கிறார். அவர் பிராமணரல்ல.

அரவிந்தன் கண்ணாயிரம்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029BfFj4EXyKyTteniwn4166GV7iCivqCFg33npiV1iS9aeL1EGBy9ZQzLTdLttFGPl&id=1221294625&mibextid=Nif5oz

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு