மார்க்சியம் - நூற்றாண்டுகள் ஆயினும் அதன் தேவையை வேறு தத்துவங்களால் மாற்றீடு செய்ய முடியவில்லை
துரை. சண்முகம்

வரலாற்று வழியில் சமூக முரண்களை
வென்ற தத்துவம்!
வெல்லப்பட முடியாத
தத்துவம் !
வேண்டிய தத்துவம்!
மார்க்சியம்தான்.
நூற்றாண்டுகள் ஆயினும் அதன் தேவையை வேறு தத்துவங்களால் மாற்றீடு செய்ய முடியவில்லை.
வென்ற தத்துவம்! என்ற உடனேயே பாமர புரிதல்கள்,
ஆட்சியில் இருக்கிறதா? என்று அவசர குடுக்கையாக கேட்பார்கள். மனதுக்குள் ஒரு
ஹி...ஹி...வேறு.
தத்துவ அரங்கில் வென்ற தத்துவம் என்பதன் பொருள் இணக்கம் காண முடியாத சமூக வர்க்க முரண்களை அதுவே தீர்க்க வல்லது என்று நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேறு சீர்திருத்த தத்துவங்கள் எதுவும் அதன் பக்கத்திலேயே நிற்க முடியவில்லை.
மேலும் அமெரிக்காவில் கென்னடி மண்! ஜெர்மனியில் இட்லர் மண்! இப்படி உலகில் முதலாளித்துவ தலைவர்களின் மண்! என்று பெருமை பாராட்டிக் கொண்டாலும், முதலாளித்துவத்தால் உழைக்கும் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாமல் நெருக்கடியில் கிடந்த உழல்கிறது.
பிரான்சின் வீதிகளிலும் ஐரோப்பாவின் வீதிகளிலும் அமெரிக்காவின் வீதிகளிலும் ஒழிக்கப்படமுடியாத உந்து சக்தியாக தொழிலாளர் வர்க்க உணர்வு கொந்தளிக்கிறது. தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு போராடுகிறது. அவ்வப்போது வழங்கப்படும் சில்லறை சீர்திருத்தங்கள் செத்து மடிந்து மீண்டும் அங்கே வர்க்க முரண்கள் தலை தூக்குகிறது.
இவையெல்லாம் மார்க்சிய தத்துவம் உலகுக்கு முன்னறிவித்த பாட்டாளி வர்க்க கண்ணோட்ட தேவையை பல வடிவங்களில் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
நடைமுறையில் வர்க்கப் போராட்ட அரசியல்தான் வென்று இருக்கிறது. அரசு அனைவருக்கும் ஆனதல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நல்ல அரசு! நமது அரசு! இந்து அரசு! பொந்து அரசு! திராவிட அரசு! என்று எத்தனை போர்வைகளை போர்த்திக் கொண்டு வந்தாலும் முதலாளித்துவத்தின் முகத்திரை கிழிகிறது.
இன்னும் கூட வரலாற்றில் பாசிசத்தை முறியடித்த செம்படை சிவப்பு வீரர்கள் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்டுகளின் செயல் தந்திரத்தை எந்த முதலாளித்துவ தந்திரத்தாலும் வெல்ல முடியவில்லை.
தோழர் மாவோவின் கலாச்சாரப் புரட்சிக்கு இணையாக பின்தங்கிய ஒரு நாட்டில் சோசலிசம் எனும் மார்க்சிய வெல்லுகையை!
எந்த சீர்திருத்த தத்து வங்களாலும் செய்ய முடியவில்லை.
ஐயோ ஏமாத்திட்டான்! மக்கள் முட்டாளாக இருக்கிறார்கள்! என்று முணகும் கிழட்டு சிந்தனைகளாக மற்றவைகள் கிடந்து புலம்புகின்றன.
போராடும் மக்களுக்கு தங்கள் சிந்தனைகளின் வழியாக வழிகாட்டவோ தீர்வு சொல்லவோ வக்கற்று போய்விட்டன.
இங்கும் கூட மோடி மாடல் திராவிட மாடல் எந்த மாடலாக இருந்தாலும் தூய்மைப் பணியாளர் செவிலியர் போக்குவரத்து ஊழியர் விவசாயிகள் என உழைக்கும் வர்க்கம் போராட்டங்களின் குரலை உயர்த்திப் பிடிக்கிறது.
ஓட்டுக்காகவும் சீட்டுக்காகவும் கடந்த காலத்தில் கம்யூனிச வசனங்கள் பேசிய கபட வேட முதலாளித்துவக் கட்சிகள்
சமூக அரங்கில் தொழிலாளி வர்க்கம் துள்ளி எழுந்து போராடும்போது நானும் கம்யூனிஸ்டுதான்! எனும் கைகள் நானும் இட்லர்தான்! என கையை உயர்த்துகிறது.
கம்யூனிசத்தின் வர்க்கப் போராட்ட விதிகள்தான் சமூகத்தின் அச்சாணியாக இன்றளவும் இயங்குகிறது.
பிரபுத்துவ சோசலிசம்
ஜனநாயக சோசலிசம்
அரசு வகை சோசலிசம்
அனைத்தும் கதைக்கு உதவாத கந்தலாகி "கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூலில்" தோழர் ஆசான் எங்கெல்ஸ் விண்டு வைத்தது போல வேலைக்கு ஆகாத கருத்துருவாக கரைகிறது.
இப்போதும் கூட இந்திய ஆளும் வர்க்கம் கம்யூனிஸ்டுகள்தான் எங்கள் முதல் எதிரி என மாவோயிஸ்டுகளை கொலை செய்கிறது. தத்துவ ரீதியாக மக்களிடம் பற்றிக் கொள்ள கூடாத தத்துவம் என கம்யூனிசத்தை கருவறுக்க துடிக்கிறது.
கூட்டத்தைக் காட்டியோ!
கொழுவிருக்கும் முதலாளித்து ஆட்சிக் கட்டிலை காட்டியோ!
நாங்கள்தான் மக்களிடம் வளர்ந்திருக்கிறோம்! என்றால்
கும்பாபிஷேகத்திற்கும் பிரதோஷத்திற்கும் கூட இங்கே இயல்பாக கூட்டம் கூடுகிறது.
அதைப்போல முதலாளித்துவக் கட்சிகளை நம்புவதும் ஒரு மூடநம்பிக்கைதான்.
அதனால்தான் என்னதான் கட்சிகளுக்கு ஓட்டு போட்டாலும், கடவுளை விழுந்து கும்பிட்டாலும்!
வாழ்க்கைப் போராட்டமும் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போதும் வர்க்கப் போராட்டத்தின் பக்கமே வந்து நின்று போராடுகிறார்கள் மக்கள்.
"வர்க்கப் போராட்டம்தான் சமகால வாழ்வின் அச்சாணி!" என்று தோழர் ஸ்டாலின் சொன்னதுதான் சமூக இயக்கவியலாக இருக்கிறது.
குட்டி முதலாளித்துவ தத்துவத்தை கொண்டு வந்து பல டிசைன்கள் என்னதான் உழைக்கும் மக்களின் தலையில் இறக்கினாலும், அவர்கள் சமாதானம் அடையாமல் சமத்துவத்தை நோக்கி போராடுகிறார்கள்.
கோடிகளில் புரளும் பணக்கார கட்சிகளின் பக்கத்தில் நின்று கொண்டு, இங்கே வா! உன்னை வாழவைப்பதற்காகத்தான் நாங்கள் தத்துவங்களை வைத்திருக்கிறோம்! என்று பேசும் அறிஞர்களை அடிப்படை உழைக்கும் வர்க்கம் நம்பத் தயாராக இல்லை. தனது வர்க்க சிந்தனை புரிதலுக்கு ஏற்ப இந்த கட்டமைப்புக்கு எதிராக போராடுகிறார்கள்.
எனவேதான் சொல்கிறோம்! அனைத்து வகை ஒடுக்குமுறை அடிமைத்தனத்திலிருந்தும் மக்களை விடுவிக்கும் தத்துவமும்! வேண்டிய தத்துவமும்! மார்க்சியம்தான்.
மற்ற சமுதாய முற்போக்கு கண்ணோட்டம் உள்ள அனைத்து கருத்துகளையும் நாம் மதிக்கலாம் ஏற்கலாம்.
ஆனால்
மார்க்சியத்தை மட்டுமே
விடுதலை தத்துவமாக உயர்த்தி பிடிப்போம்!
- துரை. சண்முகம்