சீன ஏகபோக நிறுவனத்தின் ' டீப்சீக் (DeepSeek) - AI 'மென்பொருள் உருவாக்கம்

தெய்வசுந்தரம் நயினார்

சீன ஏகபோக நிறுவனத்தின் ' டீப்சீக் (DeepSeek) - AI 'மென்பொருள் உருவாக்கம்

அமெரிக்க ஏகபோக முதலாளித்துவத்தின் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சீன ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் இடையிலான தொழில் உற்பத்தி, வணிகப் போட்டி  கூர்மையடைந்துவருகிறது. அது பலவகைகளில் கடந்த பல வருடங்களாக வெளிப்பட்டு வருகிறது. 

செய்யறிவுத் திறன் கணினிப் பிரிவில் கடந்த ஓராண்டாக அமெரிக்க நிறுவனங்களின் சேட்ஜிபிடி, ஜெமினி, மெடா , கிளாட் போன்றவை உலகத்தில் ஆதிக்கம் செலுத்திவந்தன. அதற்குப் போட்டியாக சீனாவின் ஒரு ஏகபோக நிறுவனமும் செயல்பட்டுவந்தது. 

செய்யறிவுத்திறனுக்கு முதல் தேவையான , அடிப்படையான நிகழ்தகவு புள்ளியியல் இன்று தோன்றியது இல்லை! பல ஆண்டுகளுக்குமுன்பே  தோன்றி நீடித்த ஒன்றுதான் அது!

ஆனால் அதை அடிப்படையாகக்கொண்டு, கணினித்தளத்தில் செய்யறிவுத்திறன் மென்பொருள்களை உருவாக்க, கோடியே கோடி மொழித்தரவுகள் தேவை. இது இரண்டாவது தேவை! இந்தப் பெரிய அளவு தரவுகளைத் திரட்டும்  திறன்வாய்ந்த இணையதளங்கள் கடந்த பத்தாண்டுகளில்தான் தோன்றி வளர்ந்துள்ளன. உலகின் எந்த மூலையில் இருக்கின்ற நூல்களையும், இணைய தளங்களையும், இதழ்களையும், உரையாடல்களையும் ஒரு சில மணிநேரங்களில் திரட்டும் திறன் இன்று வளர்ந்து நிற்கிறது.( இதை மொழியியல் அறிஞர் அறிஞர் நோம் சாம்ஸ்கி "Mega Plagiarism என்று அழைக்கிறார்.)  இந்தத் திறன் குப்பனுக்கும் சுப்பனுக்கும் இருக்கமுடியாது. அதற்கான கணினி வசதிகளை உருவாக்க பில்லியன், டிரில்லியன் கோடி டாலர்கள் தேவை! அந்த அளவுக்கு வசதி, விரல்விட்டு எண்ணக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களுக்கே உள்ளது.  

அடுத்து, கோடியே கோடி தரவுகளைச் சேமித்து வைக்கும் வன்பொருள்கள், அத்தரவுகளை ஆய்வுசெய்யக்கூடிய கணினி நினைவகங்கள் மிகப் பெரிய அளவில் தேவை! அவற்றையும் வைத்திருப்பது மேற்கூறிய சில பன்னாட்டு நிறுவனங்களே! மிகத் திறமையான  கணினி நினைவகங்களுக்கான 'சிப் (Chip)' தயாரிப்பில் NVIDA என்ற பன்னாட்டு நிறுவனம் ஆதிக்கம் செலுத்திவருகிறது. 80 விழுக்காடு AI chips உற்பத்தி அதன் கையில் இருக்கிறது. வணிகப் போட்டியில் அந்நிறுவனத்தின் உயர் ரக சிப்புகளைச் சீனாவின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கக்கூடாது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைபாடு. சீன நிறுவனங்கள்   AI  தொழில்  உற்பத்தியில் போட்டிக்கு வந்துவிடக்கூடாது என்பதே இதற்குக் காரணம்!

ஆனால் சீன முதலாளித்துவ நிறுவனங்கள் இச்சிக்கலை வேறுவகையில் தீர்த்துக்கொண்டன. உயர் ரக சிப்கள் இல்லாமலேயே AI  மென்பொருள்களை உருவாக்கமுடியும் என்ற நிலைக்குத் தங்களை வளர்த்துக்கொண்டன. இன்று அதை நிரூபித்தும் காட்டியுள்ளன.  சிறு சிறு நிறுவனங்கள் இனி பெரிய அளவு முதலீடு செய்யாமலேயே இந்தத் தொழில்துறையில் நீடிக்கமுடியும் என்ற ஒரு நிலை இன்று! இதன் விளைவாக, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் கடுமையான பாதிப்புக்கு உட்பட்டுள்ளன. 

உலக அளவில் ஏகபோக முதலாளித்துவத்திற்கிடையேயான  - ஏகாதிபத்தியத்தியங்களுக்கு இடையிலான -  முரண்பாடு மேலும் மேலும் கூர்மை அடைந்துவருகிறது. உறுதியாக இது உலக அளவில் ஒரு பொருளாதாரத் தேக்கத்தை விரைவில் உருவாக்கும். அத்தேக்கத்தின் பாதிப்புகள் - சுமைகள் - உழைக்கும் வர்க்கங்களைத்தான் பாதிக்கும்! பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நெருக்கடிகளை - போட்டிகளை - தீர்த்துக்கொள்ளத் தங்கள் நிறுவன உற்பத்தியைக்கூட சிறிதுகாலம் நிறுத்திவைக்கும்!  அதனால் பிற உற்பத்திகளும் வணிகமும் பாதிப்புக்கு உட்படும்! 

உலகப் பொருளாதாரம்  மேலும் தீவிரமான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

முதலாளித்துவ , ஏகபோக பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் ஒன்றையே அடிப்படையாகக்கொண்டு, அறிவியல் தொழில் நுட்பத்தை வளர்க்கும்! வளர்த்துத்தான் ஆகவேண்டும்! அது ஏகாதிபத்திய - முதலாளித்துவத்தின் -  உள்ளார்ந்த விதி!  ஆனால் ஒரு கட்டத்தில் அதுவே அவற்றின் நஷ்டங்களுக்கு , இழப்புகளுக்கு அடிப்படையாகவும் மாறும்! 

'டீப்சீக் ' நிறுவனத்தின் சொந்தக்காரர்:

Based in Hangzhou, Zhejiang, it is owned and solely funded by Chinese hedge fund High-Flyer, whose co-founder, Liang Wenfeng, established the company in 2023 and serves as its CEO.

- தெய்வ சுந்தரம் நயினார் (முகநூலில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid023pmhwHQJJmpiAuDZ8K5BJFHo21skhhPHjFeKgepudQs3CYA3fMtpzMzctGyYRooFl&id=100004424580477&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு