ஆசிரியர்கள் போராட்டம்…
வி சுப்புராஜ்
இடைநிலை ஆசிரியர் பணியில் 2009, ஜுன் 1 முன்னர் சேர்ந்தவர்களுக்கு 8370-ம், பின்னர் சேர்ந்தவர்களுக்கு 5200-ம் அடிப்படை ஊதியமாக வழங்கப்படுகிறது. ஒரே வேலை, ஒரே தகுதி… ஆனால் குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு ஊதியம் குறைப்பு… ஏன் இந்த விநோதம் புரியவில்லை. பாதிக்கப்பட்டுள்ள இருபதாயிரம் பேர் 14 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்…
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல், தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் பகுதிநேர சிறப்பாசிரியர்களை நியமித்து வேலை வாங்குகின்றனர். நிரந்தர வேலை கேட்டு இவர்கள் போராடுகிறார்கள்…
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களை அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைய பேர் TET எழுதி தேர்ச்சி பெற்று, வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் போது, தகுதித் தேர்வு மட்டும் போதாது… இன்னொரு போட்டித் தேர்வினை (Competitive Exam) எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை என்று ஒரு அரசாணையை (149 20.07.3018) போட்டு அவர்களது எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போட்டது, தமிழ்நாடு அரசு. நீட் நுழைவுத் தேர்வை கடுமையாக எதிர்க்கும் இப்போதைய அரசாவது, இந்த போட்டித் தேர்வை ரத்து செய்துவிட்டு TET மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கி இருக்கலாம். செய்யவில்லை. எனவே TET எழுதி விட்டு காத்திருக்கும் பட்டதாரிகளும் போராடுகிறார்கள்…
இந்த மூன்று வகையினரும் ஆண்களும் பெண்களுமாக, கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கல்வி வளாகத்திற்குள் உண்ணாவிரதம் இருந்து போராடுகிறார்கள்...
கோரிக்கைகளின் நியாயம் நமக்கு புரிகிறது. இன்றைய ஆட்சித் தலைமை, எதிர்க்கட்சியாக இருந்த போது, தாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே இப்பிரச்சினையை தீர்ப்போம் என்று உறுதி அளித்தது. இப்போது மௌனம் சாதிக்கிறது. போராடும் ஆசிரியர்களை கைது செய்வதற்கும் தயாராகிறது…
இடதுசாரிகள் இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும், ஏன் என்றும் தெரியவில்லை.
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை கண்டு கொள்ளாத மாநில அரசு, ஒன்றிய அரசின் ISRO நிறுவனத்தில், நாட்டிலேயே உயர்மட்ட ஊதியங்களில் பணியாற்றும் பணியாளர்கள் (அவர்கள் வாங்கும் ஊதியத்திற்கு செய்ய வேண்டிய) செய்யும் வேலையைப் பாராட்டி கோடிகளை அள்ளி வழங்குகிறது…
காலக் கொடுமை…
- Subbaraj V
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு