பாசிசம் என்பது வர்க்க கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல

துரை. சண்முகம்

பாசிசம் என்பது வர்க்க கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல

1
பாசிசம் என்பது வர்க்க கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல

பாசிச பாஜகவை மட்டுமல்ல, பாசிசத்தை  தருவிக்கும் சூழலை அரசை எதிர்கொள்ளவும் முறியடிக்கவும் நம்மால் எங்கிருந்து ஆற்றலை பெற முடியும்? 

பாசிசத்தின் முதன்மையான சித்தாந்த தாக்குதல் இலக்கு கம்யூனிசம்தான். உழைக்கும் பிரிவு தொழிலாளர் வர்க்கத்தை ஒட்டச்சுரண்ட தடையாக இருக்கும் அனைத்தையும் தட்டி சரி செய்வதன் போக்கில் சமரச சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளை தனது கட்டுக்குள் கொண்டு வருகிறது. ஏற்கனவே காலில் விழுந்து மூலதன ஆசீர்வாதத்துக்காக காத்திருக்கும் கட்சி காலாட்படைகள் அதனோடு  இணைந்து கொள்கின்றன. 

ஆளும்வர்க்க முதலாளித்துவக் கட்சிகளுக்குள் முரண்பட்ட பிரிவுகளோ நிலைகளோ முதலாளித்துவ ஜனநாயக அடிப்படை இல்லாமல், தேர்தல் ஆதாய பங்கீடு அரசு அதிகார பங்கீடு எனும் அளவிலான நிதி மூலதன ஏகபோகத்திற்கான பேரமாக இருக்கும்போது பாசிச எதிர்ப்பு கொள்கைக்கு அது பயன்படுவது இல்லை. 

இந்த நிலைதான் இத்தருணம் வரை இங்கே நிலவுகிறது. 

எனவேதான் பாசிச எதிர்ப்புக்கு அடிப்படையான உழைக்கும் வர்க்கங்களின் கோரிக்கைகள் போராட்டங்கள் மீது ஜனநாயகத் தன்மையையும் ஒரு தற்காலிக சமரச உடன்பாடுகளையும் கூட கொள்ள மறுத்து திமுக அரசு நிதி மூலதன ஏகபோகத்தின் பக்கம் சமரசவாத நிலை கொண்டு இருக்கிறது. 

புரிந்து கொள்ளப்பட வேண்டியது பாசிசம் என்பது வர்க்க கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. 

ஆளும் வர்க்கங்களுக்கு உள்ளேயே மிகப்பெரிய அரசியல் கொள்கை முரண்பாடு இப்போதைக்கு இங்கு ஏற்படவும் இல்லை. 

எனவே ஆளும் வர்க்கப் பிரிவுகளை பாசிசத்திற்கு எதிராக பயன்படுத்தும் சூழல் எதார்த்தத்தில் நிலவாத நிலையில், பாசிச எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு முதலாளித்துவ கட்சிகளை நிர்பந்தப்படுத்துவதற்கே கூட அடிப்படை உழைக்கும் வர்க்கங்களின் அரசியல் போராட்டங்களை நிகழ்த்தி நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

இப்போதைக்கு பாசிச எதிர்ப்பு மார்க்சிய லெனினிய இயக்கங்கள் சிறிதாகவும் பலவீனமாகவும் இருந்தாலும் 

அது தற்காலிக நிலைதான்.

பாசிசத்தை எதிர்ப்பதற்கு எதார்த்த தேவையில் முகம் கொடுக்கும் இடத்தில் இருக்கும் உழைக்கும் வர்க்கப் பிரிவுகளை அரசியல் படுத்தி ஒருமுகப்படுத்தும் 

பணிகளை இடைவிடாமல் செய்வதின் மூலம் இத்தகைய அமைப்புகள் வளர முடியும். 

பாசிச எதிர்ப்புக்கு முதலாளித்துவ கட்சிகளின் பிரம்மையில் மக்களை ஆழ்த்துவதை விட 

உழைக்கும் வர்க்கத்தின் சொந்த  பலத்தை உணரச் செய்வதற்கான அரசியல் அமைப்பு முறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து  வேலை செய்ய தொடர்ச்சி கொடுத்தால் கூட மிகுந்த பயன் உண்டு. 

அமைப்பாக்கப்படாத தொழிலாளர் வர்க்கம் பல்கிப் பெருகி இருக்கிறது. அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கம் தனது வர்க்க கோரிக்கை அடிப்படையில் மோதிப் போராடுகிறது. இந்த இடங்களில் பாசிச சமரசவாத கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் சந்தர்ப்பவாத சாய்மானங்களால் எதிர்ப்பிற்கான முழு ஆற்றல் கருவிலேயே சிதைகிறது.

சிந்தூர் இந்து தேசிய அரசியலுக்கு கொடி பிடிக்கும் அளவுக்கு கேவலமானது.

போராடும் வர்க்கத்தின் ஆற்றலை அரசியல் படுத்தும் தலைமைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிதான் இனி வளர முடியும்.

 முழுதும் உழைக்கும் வர்க்கப் பிரிவுகள் தொழிலாளர் வர்க்க ஆற்றலை அடித்தளமாகக் கொண்ட மக்கள் திரளை திரட்டுவதன் மூலமாகவே பாசிசத்தை எதிர்கொள்ள முடியும்.

இந்த திசையில் வளர்ந்து தவிர்க்க இயலாத சமூக ஆற்றலாக கம்யூனிஸ்ட் கட்சி எழுந்து நிற்கும் போதுதான் 

பிற முதலாளித்துவ கட்சிகளை கூட நிர்பந்த அடிப்படையில் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் நெருக்கடிக்கு தள்ள முடியும். 

எனவே தொழிலாளர் வர்க்க அணி சேர்க்கை ஆற்றலை 

அதற்கான அரசியலை முதன்மைப்படுத்தி செய்யும் வளர்ச்சி போக்கில்தான் பாசிச எதிர்ப்புக்கான சமரசம் அற்ற சமூக ஆற்றலை பெற முடியும்.

சமூகக் களத்தில் முதன்மை பாசிசக் கட்சி என்ற வகையில் 

பாஜக ஆர்‌ எஸ் .எஸ் அரசியல் சித்தாந்தத்தோடு அதன் உழைக்கும் வர்க்கத்தை வாழ விடாத அரசியல் பொருளாதாரம் பண்பாட்டு கொள்கைகளை அம்பலப்படுத்தி சமரச கட்சிகளின் சாயல்கள் இன்றி 

சிறு இயக்கம் ஆனாலும் மக்கள் திரள் அலை இயக்கங்களால் அதை அழித்து ஒழிக்கும் போதுதான் 

மக்கள் திரளின் நம்பிக்கையையும் பெற முடியும்.

தவிர்க்க இயலாமல் தேர்தல் போக்கை கையாள வேண்டும் என்று கருதுபவர்கள் கூட, 

இந்த அடிப்படைகளை கடைபிடிப்பது மூலமாகத்தான் பாசிச எதிர்ப்பில் உழைக்கும்

வர்க்க நோக்கில் முன்னேற முடியும்.

வர்க்க அடிப்படைக் கொள்கைகளில் வேலை செய்து முன்னேறும் போது இயக்கங்களின் பிளவுகள் தனிநபர்வாத போக்குகள் அனைத்தும் பின் சென்று புறநிலை நெருக்கடியும், அதைவிட உழைக்கும் வர்க்க அரசியலின் உருப்படியும் மக்களுக்கான இடதுசாரி இயக்கங்களை ஓர்மை கொள்ளச் செய்யும்.

கம்யூனிச இயக்கங்களை 

திராவிட இயக்கமாக நீர்த்துப் போகச் செய்யும் திருத்தல்வாத முயற்சிகளுக்கு எதிரான சித்தாந்த போராட்டமும் இதன் வழியான ஐக்கியமும் சரியான மார்க்சிய லெனினிய இயக்கங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். 

தங்கள் ஆற்றலுக்கு உட்பட்ட வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் சிறு சிறு 

மா.லெ. இயக்கங்கள் உழைக்கும் வர்க்க திரட்சிக் கொள்கைகளின் மூலம் வளரும் என்பதே எனது நம்பிக்கை. 

கம்யூனிசத்திற்கே எதிர்காலம் இருக்கிறது!

கம்யூனிஸ்டுகளுக்கே எதிர்காலம் இருக்கிறது!

பாட்டாளி வர்க்க அரசியல் பலத்திலிருந்துதான் நாம் அனைத்து பலத்தையும் பெற முடியும்!

சிறிதாக இருப்பது பிரச்சனை அல்ல இந்த அரசியலுக்கு தயாராக ஆவதுதான் தேவையானது.

       

https://www.facebook.com/story.php?story_fbid=887323510641113&id=100080904177819&post_id=100080904177819_887323510641113&rdid=KUZi1oPHDamdpD0G

============================================

2
சமரசவாத அரசியலை எத்தி நடக்கும் நடைதான் மெய்யான இலக்கிய நடை

பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத மேட்டுக்குடி பிரிவினர் இருவர்களிடமும் இன்னும் நில உடமை கண்ணோட்ட மரபுகளை தாண்டாத ஜனநாயகம் அற்ற தன்மை நிலவுகிறது. 

இந்த தன்மையை நீடிக்க செய்வதும் இவர்களின் சுரண்டும் வர்க்க அரசியல் நலன்தான் அடிப்படை. அதுவும் அறிவுத்துறையில் ஜனநாயகம் அற்ற மனநிலை வர்க்க குழு நலன்களின், அரசு- அதிகார வர்க்க ஒட்டுறவு பயனடைதலுக்கு ஏற்றவாறு தகவமைகிறது. 

சென்ற ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் ஒரு அனுபவம். 

ஒரு பதிப்பாளர் ‌ தானாக முன்வந்து கவிதைகளை தாருங்கள் தோழர் உடன் நூலாக்குவோம் என்றார்.

உங்கள் கவிதைகள் சிறப்பாக இருக்கிறது என்றும் கூறினார். 

அதன் உள்ளடக்கத்தை புரிந்து கொண்டுதான் வரவேற்கிறார் என்று நினைத்தேன். சரி என்று உடனடியாக சில கவிதைகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தேன். 

அதன் பிறகு கப்சிப்!

என்ன நடந்தது என்று அறிய விசாரித்த போது பார்த்துவிட்டு பேசுகிறேன் என்றதோடு சரி. 

பிறகு அழைக்கவே இல்லை. 

இத்தனைக்கும் நானாக போய்  கேட்கவில்லை. விருப்பமுடன் கேட்டதால் அவரும் சமூக கண்ணோட்டத்துடன் நூல்களை போடுபவராக இருந்ததால் இசைந்தேன். இன்று வரை முறையான பதில் இல்லை. 

புரிந்து கொண்டேன், 

எனது கவிதையின் உள்ளடக்கம் , உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக இருக்கும் அரசு பற்றிய கண்ணோட்டமாகவும் அமைகிறது. முக்கியமாக மக்களின் மீதான வர்க்கத் தாக்குதலை இனவாத பிரச்சனையாக மடை மாற்றாமல் கம்யூனிச அரசியல் கண்ணோட்டத்தில் உணர்த்துகிறது.

இந்த அரசியல் திராவிட அரசியலுக்கும் கூட இடைஞ்சல் தானே! 

அந்தப் பின்னணியில் அறிதல், சில உபதேசியார்களின் உறவாடல் ஆகியவற்றால் அந்தப் பதிப்பாளர் இந்த முடிவுக்கு வந்திருக்கக்கூடும் என்பது எனது பரிசீலனை அனுபவம். 

இதுவல்ல வேறு காரணம் எனும் அளவுக்கு எதார்த்தமாக எதுவும் நடக்காததால் இந்த முடிவுக்கே பொருத்தப்பாடு உள்ளது.

என்னுடைய எழுத்து பணிக்கு இதை எந்த பிரச்சினையாகவும் தடையாகவும் நான் கருதவில்லை. தொடர்ந்து எழுதுவதற்கான அரசியல் புற தூண்டலும் நான் முன்னிறுத்த விரும்புகிற கம்யூனிச அரசியலும்தான் எழுதுவதற்கான தேவையை எப்போதும் போல் தூண்டுகிறது.

இந்த அனுபவத்தின் ஊடாக சொல்ல வருவதன் முக்கியத்துவம் என்ன என்றால், எழுத்து உலகிலும் பொதுவான ஜனநாயகம் அறிவுத்துறையில் நிலவுகிறது என்ற மாயை யாருக்கும் தேவையில்லை. 

இங்கேயும் வர்க்கப் போராட்டம் தான் நடக்கிறது.

இதில் பாட்டாளி வர்க்க அரசியலை சமரசம் இன்றி எடுத்துச் செல்வதற்கான கலை இலக்கியப் பார்வைதான் நமக்குத் தேவை.  

சமரசவாத அரசியலை எத்தி நடக்கும் நடைதான் மெய்யான இலக்கிய நடை!

https://www.facebook.com/100080904177819/posts/888437323863065/?rdid=y61Mv8FDKl3R7VoA

 - துரை. சண்முகம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு