இளைஞர்கள் உண்மையான நம்பிக்கை நட்சத்திரங்களாக கம்யூனிஸ்ட் கட்சிகளை கட்டாயம் ஏற்பார்கள்!
துரை. சண்முகம்

முதலாளித்துவம் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்வதில்லை, அன்றாடம் சிந்தனைகளையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. தாராளமய சந்தைக்கு ஏற்ற சிந்தனை முறைகளையும் பயிற்றுவிக்கிறது. நாம் பார்க்கும் தேர்தல் கட்சிகள் என்பவைகள் இவைகளை வகைப்படுத்தி காட்டும் நிலை கண்ணாடிகளாக இருக்கின்றன.
இந்த அடிப்படையில் முதலாளித்துவ உற்பத்தி முறைகள் உலகளாவிய உற்பத்தி உறவுகளுக்கு ஏற்ற வகையில் இந்தக் கட்சிகள் தங்களை வடிவமைத்துக் கொள்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இது பொருந்தும். இந்தக் கால வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாட்டாளி வர்க்க நலன்கள் சார்ந்து எவ்வாறு இயங்குகின்றன? என்பதைப் பொறுத்து மக்கள் அவற்றையும் மதிப்பீடு செய்கிறார்கள்.
குறிப்பாக புதிய தலைமுறைகள்
நடப்பில் தங்கள் நலன்களுக்கு உகந்த வகையில் இல்லாத ஓட்டு கட்சிகளிடம் கூட்டுப் போட்டுக் கொண்டு உரிமை குரலுக்கும் பூட்டு போட்டுக் கொண்டு இருக்கும் கட்சிகளை 'சிவப்புக் கட்சிகள்' என்றாலும் ஏற்கத் தயாராக இல்லை.
கட்சிகள் கணக்கில் இல்லாமல் அரசு என்பதை பற்றிய பார்வையோடு எங்கெல்லாம் ஒடுக்குமுறை செலுத்துகின்ற, மக்களை ஏய்க்கின்ற அரசு இருக்கிறதோ! அதை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகளை மக்கள் விரும்புகிறார்கள்.
நாளடைவில் அத்தகைய கட்சிகளும் அரசின் தொங்கு சதைகளாக மாறும்போது வெறுப்படைந்து வேறு ஒன்றை தேடுகிறார்கள்.
இந்த இடத்தில்தான் விஜய் போன்ற புதிய வசன கட்சிகள் இளைஞர்களிடம் எடுபடுகின்றன. இதில் சினிமா கவர்ச்சி என்பதெல்லாம் இதன் பாற்பட்ட எதிர்பார்ப்பு உணர்வுகளுக்கு உட்பட்டது தான்.
உழைக்கும் மக்களது வர்க்க நலன்களுக்காக தீவிர களச் செயல்பாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கும் போதெல்லாம் தமிழக உழைக்கும் வர்க்க இளைஞர்கள் அவர்களின் தலைமையில் திரண்டு வந்திருக்கிறார்கள்.
இப்போதும் கூட நடைமுறையில் அப்படிப்பட்ட செயல்பாடுகளில் இருக்கும் கம்யூனிஸ்டுகளின் மீது பொதுவான நம்பிக்கை இளைஞர்களுக்கு இருக்கிறது.
ஆனால் மக்களின் எதிரிகளாக
வெறுக்கப்படும் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து அத்தகைய அரசின் ' பாவங்களை' சுமக்கும் நிலைக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும் சேர்ந்து நம்பிக்கை இழக்கிறார் கள்.
கம்யூனிஸ்டுகளுக்கு உழைக்கும் வர்க்க நலன் அடிப்படையிலான பொது வேலை திட்டம்தான் கதாநாயகன்!
அத்தகைய வேலைத் திட்டத்துக்கு தனித்த வர்க்க நடைமுறையுடன் பொது சமூகத்துக்கு தலைமை கொடுக்கும் வேலை திட்டங்களை முன்னெடுக்கும் போது, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இளைஞர்கள்
வருகையும் பார்வையும் கூடும்.
எம்ஜிஆர் போன்ற கவர்ச்சி நடிகர்களின் ஆதிக்கம் இருந்த காலத்திலேயே, தர்மபுரி வடாற்காடு பகுதியில் அரசியல் செயல்பாடு அன்று இளைஞர்களுக்கு ஈர்ப்பாக இருந்தது. அதன் மக்கள் திரள் வழி முந்தைய காலத்தின் நடைமுறையில் இருந்து வேறுபட்ட போது, பொது அரசியல் போக்கிலும் ஒரு புதிய தாக்கத்தை கொடுத்தது.
கருணாநிதி அவர்கள் பிரபலமாகவும் புகழ்பெற்ற காலத்திலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கங்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருந்தது.
இன்னும் பின்னோக்கிப் போனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் நிறைய சான்றுகள் உள்ளது.
என்னுடைய அனுபவத்தில்
ஒரு கோட்பாட்டு அடிப்படையிலான கொள்கையுடன் ம. க. இ. க. தோழமை அமைப்புகள் நடத்திய மாநாடுகள், டாஸ்மாக் எதிர்ப்பு கூட்டங்கள் மாநாடுகள் போன்றவற்றில் சிற்றூர்கள் வரை ஒட்டுக் கட்சிகள் வியக்கும் வண்ணம் பெரும் இளைஞர்கள் கூட்டம் வருவதை பார்த்திருக்கிறேன்.
எனவே,
விஜய்க்கு வரும் கூட்டம்! ரசிகர் கூட்டம் பார்க்க வரும் கூட்டம்!
என்பது வெளிப்பாடு தான். ஆனால் அந்த இளைஞர்களிடமும் கூட விஜய்யை ஒரு மாற்று! இருக்கிற ஊழல், நம்பிக்கை இழந்த கட்சிகளை விட! நல்ல ஆட்சியை தருவார்! என்று பொத்தாம் பொதுவாக ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
நிச்சயம் விஜயிடம் அதற்கு எந்த அரசியல் அடிப்படையும் மாற்றும் கிடையாது.
மாற்றும் கிடையாது என்பதை
அனுபவத்தில் பார்க்கும்போது
விஜயையும் வெறுக்கவே செய்வார்கள்.
இந்த அரசியல் நிகழ்வு போக்குகளில் தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கங்கள்
எந்த அளவுக்கு மாற்று வேலை திட்டத்துடன், மக்கள் நம்பிக்கையிழந்த கட்சிகளுடன்
கூட்டு சேராமல், தனித்த அதாவது தனிச்சிறப்பான அரசியல் கொள்கையுடன்
உழைக்கும் வர்க்க அணிச்சேர்க்கை இயக்கங்களை எடுக்கும்போது
இளைஞர்கள் உண்மையான
நம்பிக்கை நட்சத்திரங்களாக கம்யூனிஸ்ட் கட்சிகளை கட்டாயம் ஏற்பார்கள்!
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/1CmRnZ9cBa/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு