கொள்கை கோட்பாடுகளை அவிழ்த்து எறிவது என்பதுதானே பாராளுமன்ற வாத புனித மேடையின் இனிய நடனங்கள்
துரை. சண்முகம்

மேலே உள்ள ஒரு அரசியல் குழுவின் அறிவிப்பை பார்த்து முகநூலில் பல தோழர்கள் அதிர்ச்சி அடைவதும்! கேலி செய்வதும்! கூச்சப்படுவதும் போல எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாற்றிலேயே இதற்கு முன் இது போன்ற அபத்தங்கள் நடக்காதது போல இவர்கள் நம்புகிறார்கள் போலும்! அல்லது அந்த பாவனைகள் கேலிக்குரியதா கிறது.
இப்போதைய பாராளுமன்றவாத அரசியல் இடதுசாரிகள் என்று கருதி கொள்பவர்கள் மீது எந்த வகையான கேளிக்கை நடனத்தை ஆடிக் கொண்டிருக்கிறது! பங்கேற்பு நளினங்களின் அரசியல் பாவனைகள் என்னவாக இருக்கிறது? என்பவைகளை
மார்க்சிய லெனினிய கோட்பாடுகளின் வழி எடுத்துச் சொல்வது விளக்குவது என்ற வகையில் இவ்வகை போக்குகளின் மீதான தெளிவு தேவைப்படுகிறது.
இரண்டு மூன்று நாட்களாக முகநூலில் இந்த அறிவிப்பு அறிக்கையை பார்த்தபோது இதில் அதிர்ச்சி அடையவும் இப்போதுதான் நேர்ந்து விட்ட காட்சி என்பது போலவோ தோன்றவே இல்லாததால் கடந்து போனேன்.
இதில் விஜய் என்ற புதிய கவர்ச்சியை தவிர, அதே முதலாளித்துவ இந்துஸ்தான் லீவர் குரூப்பின் பல பெயரிலான சோப்புகள் என்ற வகையினமாக பட்டது.
புர்ரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோதே அவருக்கு ஆதரவு காட்டி நெருக்கம் காட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம். கல்யாணசுந்தரம் போன்ற முதுபெரும் தோழர்கள் களப்போராளிகள் இந்த கூச்சத்தை கடப்பதற்கான வழியை பலருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
விவசாயிகள் மீனவர்கள் தொழிலாளர்கள் நக்சல்பாரி புரட்சியாளர்கள் போன்றவர்களை போட்டுத் தள்ளிய புரட்சித் தலைவருக்கே ஆதரவும் கூட்டணியும் வைத்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள், இன்று ஒரு குழு விஜயை ஆதரிப்பதை பார்த்து மட்டும் கேலிக்குரியதாக கருதுவதும் இது பாராளுமன்ற வாத புனிதத்தை கெடுத்து விட்டதாக பதறுவதும் வியப்பாக இருக்கிறது.
கொள்கை கோட்பாடு அடிப்படையில் இல்லாமல் தேர்தலில் யாரை வேண்டுமானாலும் கூட்டணி சவாரி செய்வது என்பதை ஒரு முறை, புதிய கலாச்சாரம் இதழில் போயஸ் கார்டனுக்கு போன கம்யூனிஸ்டுகளை பார்த்து," உங்களிடம் பேச என்ன இருக்கிறது தோழர்களே ?" என்று ஒரு கவிதை எழுதி இருந்தேன்.
அன்றைய கூட்டணிக் கணக்கில் அது திமுகவுக்கு பயன்பட்டதால் அதை முரசொலியில் எடுத்து வெளியிட்டு இருந்தார் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள்.
தினமணியும் அதன் தேர்தல் புறக்கணிப்பு பகுதிகளை நீக்கிவிட்டு பிரசுரம் செய்து இருந்தது. அந்தக் கவிதையை தேடிப் பிடிக்க வேண்டும்.
மிகக் கடுமையாக இரு கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் என்னை எச்சரித்து திட்டியும் அப்போது பேசினார்கள். தோழர் நல்லகண்ணு! சங்கரய்யா! தியாகங்களை தெரியுமா? பழிப்பதா என்று சாடி இருந்தனர். நானும் அமைப்புத் தோழர்களும் கம்யூனிஸ்டுகளின் உயரிய தியாகங்களை புரட்சித்தலைவியின் ஆசி பெற்ற சின்னம் ஆக்கி பழிப்பது நீங்கள் அல்லவா? என்று பதில் கூறியிருந்தோம்.
தேர்தல் ஓட்டுக் கணக்கில் அப்போதைக்கு எது பயனடைவதற்கு கவர்ச்சிகரமானதோ! அதை அரசியல் செயல் தந்திரம் என்று சொல்லி பாடம் கற்றுக் கொடுத்ததே முன்னவர்கள் தானே! அவர்களின் அத்தகைய தவறுகளை சுட்டிக் காட்டிய போது நியாயம் கற்பித்தவர்கள்!
இப்போது விஜய் வரைக்கும் ஐக்கிய முன்னணி கட்டுவதை மட்டும் வெறுப்பாக பார்ப்பது சிரிப்பாக வருகிறது.
எவ்வளவு தூரம் கொள்கை கோட்பாடுகளை அவிழ்த்து எறிவது என்பதுதானே பாராளுமன்ற வாத புனித மேடையின் இனிய நடனங்கள்.
பாசிச எம்.ஜி.ஆரையே புரட்சித் தலைவராக, அரசியலின் பின்கட்டில் அண்ணாயிசம் தயாராகிறது! அது முதலாளித்துவமும் சோசலிசமும் கலந்த கலவை!
என்று எம்.ஜி.ஆர் ஐ பேச வைக்கும் அளவுக்கு அன்றைக்கு வென்றெடுக்கப்போன கம்யூனிஸ்டுகளை போல இன்றைக்கும் அதன் தொடர்ச்சிகள் பாராளுமன்ற பாதையில் முளைப்பது , சகஜ கம்யூனிஸ்டுகளால் விளைந்த விளைச்சல்தான்!
இப்போது கூட பாருங்கள்!
நேற்று வரை மோடியை புகழ்ந்து பேசி விட்டு, மாற்றி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி யால் மக்களுக்குப் பயன் என்று மோடி புகழ் பாடிவிட்டு, திருப்பரங்குன்றம் பிரச்சனையில் திமுக தான் தேவை இல்லாமல் அரசியல் செய்கிறது என்று ஆர். எஸ் .எஸ் சுக்கு அடிகோலிவிட்டு திடீரென மதச்சார்பற்ற கரங்களை வலுப்படுத்த அண்ணியார் அவர்கள் வந்திருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் அவர்கள் பரந்த மனதுடன் ,"அவரது வருகை மதச்சார்பற்ற அணியின் கரத்தை வலுப்படுத்தும் வலிமைப்படுத்தும்" என்று அறிக்கை விடுகிறார்! இதில் தேர்தல் கூட்டணி தர்மம் என்பதை கடந்து என்ன வகை அரசியல் இருக்கிறது.
வச்சாத்தி ஆவணப்படத்தின்
விழாவில் நானும் கூட காம்ரேட் தான் என்று கமல் உரிமையாக பேசுகிறார். இதைப் பெருமையாக கைதட்டுகிறார்கள்!
விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு மனோநிலையையும், தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் இந்துத்துவ நைச்சியமும், குருதிப்புனல் போன்ற படங்களில் கம்யூனிச காழ்ப்பும் மக்களிடையே பரப்பி விட்டு இடத்திற்கு ஏற்றார் போல கம்யூனிச அணி சேரும் கமலஹாசனை பார்த்து சிரிக்க தோன்றாதவர்களுக்கு, இந்த அறிக்கை மட்டும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுப்பது ஆச்சரியம்தான்!
சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம்! அவள் ஈச்சம் பாயை கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்!
என்ற கதைதான் விஜயோடு
கூட்டணிகளைப் பார்த்து
முதலாளித்துவ பிழைப்பு வாத கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பவர்கள் கூச்சப்படுவது!
விஜயோ வேறு கட்சியோ இவர்களும் உரிக்க ஒன்றும் இல்லாத வெங்காயங்கள்தான்!
இந்தப் பிழைப்பு வாத கட்சிகளிடம் தோளுரிப்பதற்கு அவ்வளவு முதலாளித்து அரசியல் இருக்கிறது.
இவர்களுக்கு பின்னால் தெரிந்தும் தெரியாமலும் திரண்டு இருக்கும் அடுத்த தலைமுறை இளைஞர்கள் இடம் மார்க்சிய அரசியலை பேசும் வேலை முறை அணுகுமுறை பற்றிதான் நாம் கவலைப்படவும்
சிந்திக்கவும் வேண்டி இருக்கிறது.
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/p/1BQ1NwiPrc/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு