தினம் தினம் நடக்கும் காவல் நிலைய சித்ரவதைகள்...

சே ரா

தினம் தினம் நடக்கும் காவல் நிலைய சித்ரவதைகள்...

காவல்துறையின் காவல் நிலைய சித்ரவதைகளில் மரணம் நிகழ்ந்தால் மட்டும்தான் அரசும், நீதிமன்றங்களும் பதறுவது போன்று காட்டிகொள்கின்றன. ஆனால் இங்கு தினம் தினம் நடக்கும் காவல் துறையின் காவல் நிலைய சித்ரவதைகள் மரணத்தை தராமல் இருக்காலம், ஆனால் அந்த சித்ரவதைகள் பலரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருகின்றன. இவைகளை எல்லாம் நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் திருட்டு கேஸ்ல அடிக்காம எப்படி விசாரிக்க முடியும்னு அடிக்கும் சட்டவிரோத செயலை ஆதரித்து பேசுவதை கேக்குற அவல நிலைதான் இருந்து வருகிறது.

காவல் நிலையத்தில் நடக்கும் சித்ரவதைகள் அனைத்தும் அரசுக்கும் நீதித்துறைக்கும் தெரிந்தே நடக்கின்றன. காவல்துறையில் இருக்கும் பிரிவான குற்றப்பிரிவில் (Crime) தனிப்படைகள் என்கிற பெயரில் குற்றக் கும்பல்களைதான் உருவாக்கி வருகிறார்கள். 

இவர்கள் CRPC (NOW BNSS) ல் கைது குறித்து சட்டம் வழங்கியுள்ள எந்த வழிகளையும் பின்பற்றுவதில்லை. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்று தெரியப்படுத்த வேண்டியது கைதில் ஈடுபடும் காவலர்களின் முதன்மை கடமை. அப்படி செய்யாத கைது என்பது சட்டவிரோதமானது. அது ஒரு குற்றம்.  விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் கூட முறையாக அழைப்பாணை கொடுத்து இந்த தேதியில் இந்த நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அழைக்க வேண்டும்.

ஆனால் இங்கு தங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பதே தெரியாமல் காவலர்கள் என்று கூறிக்கொண்டு எந்த சட்டத்தையும் பின்பற்றாமல் விசாரணை என்கிற பெயரில் அள்ளிப்போட்டுக்கொண்டு செல்வதைதான் இந்த பிரிவு போலிஸ் செய்வது வழக்கமாக வைத்து வருகிறார்கள்.

சட்டவிரோத கும்பல்களை சேர்ந்தவர்கள் தங்களது சட்டவிரோத செயல்களை செய்ய வைத்துக்கொள்ளும் ரகசிய இடங்களை போல் குற்றப்பிரிவு காவலர்களும் ரகசியமாக பல இடங்களை வைத்துக்கொண்டு அங்கு தங்களால் சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் கடத்தி சென்ற நபர்களை அடித்து மிதித்து மனித தன்மையற்ற செயல்களையெல்லாம் செய்து சித்ரவதை செய்வார்கள். விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் மீது வேறு வழக்குகளை வேறு காவல்நிலையத்தில் போட்டு சிறையில் அடைத்துவிடுவார்கள். அப்படியும் எதாவது பிரச்சனை வந்தால் அந்த ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் என்பவர்களை வைத்து பேரம் பேசி பிரச்சனையை மூடி மறைக்க முயல்வதும் நடக்கும்.

இதையெல்லாம் மீறி யாராவது காவல் நிலையத்தில் போய் காவலர்களிடம் நீங்கள் சட்டவிரோதமாக செய்ய கூடாது சட்டத்தில் இவைகள் எல்லாம் இல்லை என்று யாராவது கூறினால் "எங்கிட்டையே சட்டம் பேசுறீயா, பொய் கேஸ் போட்டு உள்ள வைக்கவா" என்ற எதிர் கேள்விதான் வரும். சட்டமே காவல்நிலையத்தில் படாத பாடு படுகிறது. சாதாரண மக்களின் நிலையை யோசித்து பாருங்கள்! இவைகளெல்லாம் காவல் நிலையங்களை பற்றி நன்கு அறிந்தவர்களும் , குற்றவியல் வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களும் , காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நன்கு தெரியும்.

இதில் தப்பி உயிர்பிழைத்தவர்கள்  தங்களுக்கு நேர்ந்ததை காவல்துறைக்கு பயந்து சொல்லமாட்டார்கள். ஒரு சில பேர் வெளியில் சொன்னாலும் அதனை மூடி மறைக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் அந்த காவலர்கள் செய்வார்கள். ஒன்றிரண்டு நீதிமன்றத்திற்கு சென்றாலும் அதான் உயிர் இருக்கிறதே என்பதுபோல் அங்கும் கண்டுக்கொள்வதே இல்லை. பாதிக்கப்பட்டவர்களும் போராடி பார்த்து ஓய்ந்துதான் போகிறார்கள். 

இந்திய அரசமைப்பு இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமையை உத்ரவாதப்படுத்துகிறது. ஒரு வேளை அப்படி வாழும் உரிமை பறிக்கப்படுகிறது என்றால் அது சட்டத்தின் அதிகாரத்தினால் மட்டும்தான் முடியும். வேறு எந்த வகையிலும் ஒருவரின் வாழும் உரிமையை பறிக்க முடியாது. அப்படி பறித்தால் அது அரசமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு சமம் என்கிறது அரசமைப்பு. அரசமைப்புதான் இந்தியாவின் உச்சபட்சம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறுகிறார். அந்த உச்சபட்ச அமைப்பின் செயல்திறத்தை மீறி இங்கு 24 உயிர்கள் சட்டத்தின் அதிகாரம் இன்றி காவல்துறையின் சட்டவிரோத செயல்களால் இந்த நான்கு ஆண்டுகளில் பறிக்கப்பட்டன. 2020ல் சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பெறும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. காவல்துறையின் கொடூரத்தை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன. அதன் பிறகு இப்போது திருப்புவனத்தில் அஜித்குமார். இதற்கு முன்பு 2021லிருந்து அஜித்குமார் மரணத்திற்கு முன்பு வரை 23 லாக்கப் மரணங்கள். கிட்டத்தட்ட 4 வருடங்களில் 24 மரணங்கள். 

2020 லாக்கப் டெத்களுக்கு எதிராக அன்று போராடிய அன்றைய எதிர்கட்சி தலைவர்தான் 2021லிருந்து தமிழ்நாட்டின் முதல்வரும், காவல்துறையின் அமைச்சருமாக உள்ளார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் 24 லாக்கப் டெத்கள் நடந்துள்ளன. 2020ல் போராடிய யாரும் 24 லாக்கப் மரணங்களுக்கும் போராடவில்லை. லாக்கப் டெத் என்கிற காவல்துறையினரின் அராஜங்களை எதிர்ப்பதில் கூட இங்கு அரசியல் நடக்கிறது. 

2026 தேர்தல் வந்தவுடன் இப்போது இது ஆளும் கட்சிக்கு எதிரான பிரச்சாரமாக எடுத்து செல்லலாம் என்று எதிர்கட்சிகள் இப்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. சாத்தான்குள சம்பவத்தில் அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் செய்ததைதான் இன்று இன்றைய எதிர்கட்சிகள் செய்கின்றன. இந்த லாக்கப் மரணங்களில் கொலையுண்டவர்கள் கூட தேர்தல் நெருங்கும் நேரத்தில் கொல்லப்பட்டால்தான் அவர்களுக்கான நீதியை பெறமுடியும் போல!

இந்த நிலை இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சி ஆட்சியை விட்டு போனால் எல்லாம் மாறக்கூடிய விசயம் இல்லை என்பதைதான் எந்த ஆட்சி மாறினாலும் குறையாமல் நடக்கும் காவல் நிலைய மரணங்கள் காட்டுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சம்பவங்களில் சாதாரண மக்கள் காவல் நிலையங்களில் மரணத்தை தவிர அதனை நெருங்கி சென்று திரும்பும் அளவுக்கான சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர். இவைகளையெல்லாம் முதல்வர்  சம்பவம் நடந்த உடன் உயரதிகாரிகளை அழைத்து மீட்டிங் போட்டு பிரஸ்மீட் விடுவதால் மாறிவிடாது. காவல்துறை என்கிற அமைப்பே இங்கு முற்றிலும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட, சட்டத்தால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்கிற நிலைக்கு சென்றுவிட்ட ஒன்றாக மாறியுள்ளது. இந்த அமைப்பை முற்றிலும் கலைத்து புணரமைக்காமல் இந்த சீரழிவை தடுக்க முடியாது. 

அது வரை சட்ட விதிமுறைகளை பின்பற்றாத கைதுகளுக்கு நீதிமன்ற காவல் வழங்குவதை நீதித்துறை நடுவர்கள் கறாராக பின்பற்றவேண்டும் என்பதை உயர் நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி கண்காணிக்க வேண்டும். சட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் விசாரணை மற்றும் கைதுகளை மேற்கொள்ளும் காவல் நிலைய அதிகாரிகளையும், அவர்களின் உயர் அதிகாரிகளான காவல் ஆய்வாளர், காவல் துணை கண்காணிப்பாளர் மீது துறை சார் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் தனது கண்காணிப்பின் கீழ் செயல்படும் காவல் நிலையத்தில் விசாரணை அல்லது கைது குறித்து முறையான சட்ட வழிமுறைகள் பின்பற்றபடாமல் காவல  நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்/மாநகர ஆணையர் மீது துறை சார் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவைகளை எல்லாம் கண்காணிக்க காவல் நிலையங்களை தினமும் கண்காணிக்க மக்கள் மன்றங்களை உருவாக்க வேண்டும். இந்த மன்றங்கள் மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பெண்ணுரிமைவாதிகள், ஓய்வு பெற்ற காவலர்கள், வணிகர் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினத் போன்றவர்களை கொண்ட ஒரு அமைப்பாக உருவாக்கி இவைகளின் கீழ் காவல்நிலையங்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

https://www.facebook.com/share/p/1DuSD9eTXm/?mibextid=oFDknk

============================

அதிமுக ஆட்சியில் சாத்தான் குளத்தில் காவல்நிலையத்தில் அப்பா மகன் இருவர் காவல்நிலைய சித்ரவதைக்கு உள்ளானதை கீழ்நிலை காவலரிலிருந்து முதல்வர் வரை மறைக்க முயன்றனர். பல போராட்டம், உயர்நீதிமன்ற தலையீடு இவற்றால் உண்மை கண்டறியப்பட்டது.

இன்று திருப்புவனத்தில் எந்த மறைப்பும் இன்றி உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதான் திராவிட மாடல் என்று புல்லரிக்க பேசுகிறார்கள் உபிகள்.

உண்மைதான். 

சாத்தான்குளத்தில் அதிமுக அரசாங்கம் நடந்துகொண்ட விதத்திற்கும் திருப்புவனத்தில் திமுக அரசாங்கம் நடக்கும் விதத்திற்கும் பாரிய வேறுபாடு உண்டு. திமுக அரசாங்கம் இதில். வெளிப்படைதன்மையோடு செயல்படுகிறது..

ஆனால் இந்த வெளிப்படைக்காண காரணம். பல சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் திருப்புவனத்தின் சேர்மனின் கணவர், டிஎஸ்பி, எஸ்பி நடத்திய பேரத்தை தடுத்து அம்பலப்படுத்தி ஒரு உயிரழப்பை உலகுக்கு  அம்பலப்படுத்திய பிறகு இந்த வெளிப்படை தன்மை. 

இதுபோல் இறந்துவிட்டனர் என்ன செய்வது  என உயரதிகாரிகளிடம் காவலர்கள் கேட்டிருக்கும்போது அவர்கள் காட்டிய வழியில்தான் அந்த ஜோடிக்கப்பட்ட FIR பதிவு செய்யப்பட்டிருக்கும். தானாகவே இந்த FIR யை போட்டிருக்க வாய்ப்பே இல்லை. இவைகள் உளவு அமைப்பிற்கு தெரிந்திருக்கும். அவைகளை உடனடியாக உளவு தலைமையகத்திற்கு தெரிவிக்கப்பட்டிருக்கும். அவை அரசின் தலைமைக்கு கொண்டு சென்றிருக்கும்.

மேற்சொன்ன உளவு அமைப்பு செயல்பாடுகள் எதுவும் நடக்கவில்லை என்றால் நாம் மிகவும் ஆபத்தான அரசின் கீழ் இருந்துவருகிறோம் என்பதுதான் நிஜம். உளவு அமைப்பு செயல் பாடற்று இருக்கும் மாநிலம் பாதுகாப்பற்ற மாநிலமாகவே இருக்கும்.

இப்போது பாதுகாப்பில்லாத மாநிலத்தில் இருக்கிறோமா அல்லது உளவு அமைப்பின் வழி எல்லாம் தெரிந்துதான் பேசி மூடி மறைக்க முயற்சி செய்து இறுதியில் முடியவில்லை என்றவுடன் வெளிப்படையான செயல்பாட்டை காட்டுகிறார்களா? 

பிறகு 24வதில் தான் இந்த வெளிப்படையான செயல்பாடு...இதற்கு முன் 23ல் ஏன் அந்த வெளிப்படை செயல்பாடு இல்லை?

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid037ZRSCimiyw1JKTaifGoL4QX9nWWdPJAnzjweGyrwcKgGB7zqa8MnaU5PVuxtcyBPl&id=100001614889440&mibextid=Nif5oz

================================

அஜித்குமார் வழக்கை பொறுத்தவரை புகார் கொடுத்தவரோ, அதற்கு ஆதரவாக காவல் அதிகாரிகளுக்கு பேசிய அந்த தலைமை செயலக அதிகாரியோ முக்கியமில்லை.

பொதுவாக காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் புகார் கொடுத்தாலோ அல்லது ஏற்கனவே கொடுத்த புகாருக்கு விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டவர்களோ பெரும்பாலும் யாராவது தங்களுக்கு தெரிந்த மட்டத்தில் முக்கியமானவர்கள், செல்வாக்கானவர்கள், காவலர்களுக்கு நெருக்கமானவர்கள் என தாங்கள் கருதும் நபர்களை சிபாரிசு செய்ய சொல்லி அழைப்பார்கள் அல்லது போனிலாவது பேச சொல்லுவார்கள்.

அஜித் குமார் மீதான திருட்டு புகாரிலும் அதுதான் நடந்திருக்கும்!. அந்த இடத்தில் ஒரு சாதாரண கவுன்சிலர் போன் பன்னி சொன்னாலும் கூட அந்த அடியைதான் தனிப்படை போலிஸ் கொடுத்திருக்கும். அதுவும் நகை திருட்டு வழக்கில் அதை விசாரிக்கும்  தனிப்படையினருக்கு நகையை மீட்டால் சில ஆதாயங்களும் உள்ளன என்பதால் கூடுதல் ஆர்வத்தோடு விசாரணை என்கிற பெயரில் அடிப்பார்கள். பல காவல் சித்ரவதைகள் மற்றும் காவல் விசாரணை மரணங்கள் திருட்டு வழக்கில்தான் அதிகம் நிகழும் என்பதை பார்த்தாலே இவை புரியும். எல்லா வழக்கிலும் IAS அதிகாரியோ ,ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் உள்ள IAS அதிகாரியை தெரிந்த பெண்மணியோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது புரியும்.

இங்கு முக்கியமான விசயமாக பார்க்க வேண்டியது , காவல்துறை தன்னை கேள்விக்கு அப்பாற்பட்டதாக நினைத்துக்கொண்டு தங்கள் முன் விசாரணை என்கிற  பெயரில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக அடிக்கலாம் என்கிற எண்ணத்தை தங்களுக்குள் வைத்துக்கொண்டு செயல்படுவதைதான். இந்த எண்ணம் காவல்துறையின் கட்டமைப்பிலே அடியிலிருந்து மேல்மட்டம் வரை நீக்கமற ஊட்டப்பட்டுள்ளது.

இங்கு அஜித்குமாரை நிரபராதியாக காட்டவே நாம் முயல்கிறோம். ஒரு வேளை அவர் திருடியிருந்தால் இந்த அடியை நியாயப்படுத்த முடியாததாகவே நம் அடிமனம் நினைக்கிறது. ஆனால் இங்கு ஒருவர் மீது எந்த குற்றம் சுமத்தப்பட்டிருப்பினும் அந்த நபர்களை அடிக்க காவல்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதே எதார்த்தமான உண்மை. இதனைதான் நாம் பேச வேண்டும்.

நாம் மீடியா செய்திகளில், சமூக வலைதளத்தில் பார்த்து வெறுப்பவர்களுக்கு காவல்துறை பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் கை முறிந்தது, கால் முறிந்தது என்றும், தப்பியோடியதால் காலில் சுட்டதாகவும், என்கவுண்டர் செய்ததாகவும் காவல்துறை சொல்லியபோதெல்லாம் போதெல்லாம் ஆதரித்ததன் விளைவு, ஏற்கனவே அடிப்பதற்கு அடிமுதல் உச்சம் வரை லைசன்ஸ் பெற்றதாகவே கருதி வரும் காவல்துறைக்கு இந்த ஆதரவெல்லாம் மேலும் அந்த வெறியை அதிகரித்தே வைத்துள்ளன. அதனால்தான் அடிக்க கூடாது என்று தாங்கள் வரையறுத்து வைத்துள்ள சிறப்பு வகையினரை தவிர மற்றவர்கள் யார் தங்களிடம் சிக்கினாலும் அடித்து துவம்சம் செய்கிறார்கள். 

இங்கு மீண்டும் நாம் வலியுறுத்த வேண்டியது எந்த குற்றம் செய்திருந்தாலும் அதனை புலன்விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்களை திறம்பட சேகரித்து விரைந்து வழக்கை முடித்து தண்டனை பெற்று தருவதும், சாட்சியங்களையும், சாட்சிகளையும் பாதுகாப்பது அதனை முறையாக நீதிமன்றத்தில் சமர்பிப்பது என செய்ய வேண்டும். இதுதான் காவல்துறையின் பணி. இதனை மீண்டும் மீண்டும் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். சாதாரண மக்கள் மட்டும் அல்ல காவல்துறையை சேர்ந்தவர்கள் பிறரை அடிப்பதும் குற்றம் என்பதையும் அப்படி செய்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போராடவேண்டும்.

கிராம நிர்வாக அலுவர், அரசு மருத்துவர், அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள், அரசு ஆசிரியர்கள் போன்று காவல்துறையினரும் அரசு பணியாளர்களே! மற்ற அரசு துறையினர் எப்படி சட்டத்தின் படி அவரவர் வேலைகளை செய்கிறார்களோ காவல்துறையும் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்வது அதன் பேரில் விசாரணை நடத்துவது விசாரணையில் அதன் உண்மை தன்மைகளை அறிந்து அதற்கான ஆதாரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் சமர்பிப்பதும், அதன் பிறகு வழக்கை நீதிமன்றத்தில் நடத்தி குற்றஞ்சாட்டை நிருபிக்க போராடுவதான். இதை தாண்டி வேறு எந்த அதிகாரமும் இல்லை.

இதனை மீண்டும் மீண்டும் மக்களிடத்தில் பிரச்சாரமாக கொண்டு செல்லவேண்டும்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02XKmG3pBTNG4wv7npaGMncQCrwydpAeSuGZmUqUfVLK2kZt3N1uSwT26ChGgo4taml&id=100001614889440&mibextid=Nif5oz

- சே ரா

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு