ஒருங்கிணைந்த ஓய்வூதியத் (யுபிஎஸ்) திட்டம், ஒரு ஏமாற்றுத் திட்டமே..!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க அறிக்கை
பத்திரிகை செய்தி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் ஆகியோர் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை
----------------------------------------------------------
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் (யுபிஎஸ்) திட்டம், ஒரு ஏமாற்றுத் திட்டமே..!
இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 24 ஆம் தேதி ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் யு.பி.எஸ் என்ற பெயரில் ஏற்கனவே அமலில் உள்ள என்.பி.எஸ், சி.பி.எஸ் திட்டங்களுக்கு மாற்றாக புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது.
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.
முந்தைய என்.பி.எஸ், சி.பி.எஸ். திட்டங்களோடு ஒப்பிடும் போது, இந்த யு.பி.எஸ் திட்டம் சற்று மேம்படுத்தப்பட்ட திட்டம் தான். ஆனால் அதை ஆதரிப்பவர்கள் சொல்வதைப் போல் இத்திட்டம் ஓய்வூதியர்களுக்கு ஒரு சர்வரோக நிவாரணி அல்ல.
குறிப்பாக, இதுவும் ஒரு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே. இது நாடே போற்றும் நல்ல திட்டம் அல்ல.
பணிக் காலத்தில் வழங்கி இருக்க வேண்டிய நியாயமான ஊதியத்தை வழங்காததால், அவ்வாறு வழங்கப்படாத கொடுபடாத ஊதியமே ஓய்வூதியம் என்ற கோட்பாடை நிராகரித்துவிட்டு பணிக்காலத்தில் மேலும் பத்து சதவீதத்தை பிடித்தம் செய்து அதிலிருந்து ஓய்வூதியம் வழங்குகிறோம் என சொல்கிற யுபிஎஸ் திட்டம் ஒரு ஏமாற்று திட்டமே.
இதன் மூலம், 1982, டிசம்பர்-17 அன்று டி.எஸ்.நகரா வழக்கில் அப்போதைய உச்சநீதிமன்ற நீதியரசர் ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் ஒரு பகுதியில், "ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப் பிரிவுகள் 139 மற்றும் 148 (5) -ன் படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டப்பூர்வமான உரிமையாகும் என்று சொன்ன கருத்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த யு.பி.எஸ் திட்டம் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
ஆனால், தமிழ்நாட்டில் இது குறித்து விவாதிப்பதே அரசு ஊழியர்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். தமிழகத்தில் அமலில் இருப்பது எந்த ஒரு திட்டத்திலும் சேராத சிட்பண்ட் மோசடியாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 22.7.23 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்ட முடிவு தொடர்பாக.,
மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பு: எண்.40, நாள்: 22.7.23 ல்.. புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள சோம்நாத் கமிட்டி அறிக்கை மற்றும் ஆந்திராவில் அமுல்படுத்தப்பட்ட உத்திரவாத ஓய்வூதியத் திட்டம்..
இவ்விரண்டில் எது தமிழ்நாட்டுக்கு சிறந்தது என்று முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஆந்திராவில் உத்திரவாத ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு விட்டது. சோம்நாத் கமிட்டி அறிக்கை அடிப்படையில் ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தி விட்டது.
தமிழகத்தில், திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிப்படி சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவது ஒன்றே தீர்வாகும்.
எனவே, தமிழக அரசு உடனடியாக சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பலனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அதனை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எவ்வித சமரசமும் இன்றி தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .
சு.தமிழ்ச்செல்வி, மாநிலத் தலைவர்
ஜெ.லட்சுமி நாராயணன், பொதுச் செயலாளர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்
- சேரன் வாஞ்சிநாதன் (முகநூலில்)
Disclaimer: இது சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு