கரூர் நிகழ்வை பாடம் கற்கும் அரசியலாக நாம் பார்க்க முடிந்தால் எல்லா தரப்பிற்கும் நன்மையாகும்
சாவித்திரி கண்ணன்

அடுத்தகட்ட நகர்வைப் பார்ப்போம்;
நடந்துவிட்டது ஒரு பெரும் அசம்பாவிதம்!
அது தற்போது பழி போடும் அரசியலாக பரிணமித்து விஸ்வரூம் எடுத்திருக்கிறது.
ஆனால், இந்த நிகழ்வை பாடம் கற்கும் அரசியலாக நாம் பார்க்க முடிந்தால் எல்லா தரப்பிற்கும் நன்மையாகும்.
விஜய், காவல்துறை, ஆட்சியாளர்கள் என முத்தரப்பிலும் சில தவறுகளை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
நடந்த சம்பவம் குறித்து அறம் இணைய இதழில் நான் விரிவாக எழுதிவிட்டேன். அதை இங்கு மீண்டும் சொல்லப் போவதில்லை.
விஜய் அரசியல் மீது எனக்கு பல காத்திரமான விமர்சனங்கள் உள்ளன. அதே சமயம் அவர் மீது பெருந்திரளான மக்கள் கொண்டுள்ள ஈர்பையும், நம்பிக்கையையும் அலட்சியப்படுத்தி நாம் அரசியல் பேச இயலாது.
விஜய்க்கு கட்டுக்கடங்கா கூட்டம் கூடுகிறது எனும் போது, இனி அவர் ரோடு ஷோ நடத்துவதை தவிர்த்து, அதற்கு மாற்றாக, எந்த ஊரில் பிரச்சாரம் என்றாலும், அந்த ஊருக்கு வெளியில் உள்ள மைதானத்தையோ, வெட்ட வெளியான பரந்துபட்ட இடத்தையோ கேட்டுப் பெற்று ஹெலிபேடில் சென்று இறங்கி பிரச்சாரம் செய்துவிட்டு, ஹேலிபேடிலேயே ஏறி பறந்துவிடுவது தான் சரியாக இருக்கும்.
நான் போட்டோ ஜர்னலிஸ்டாக இருந்த காலத்தில் அன்றைக்கு ராஜிவ்காந்தி இப்படித் தான் ஹெலிபேடில் வந்து இறங்கி பிரச்சாரம் செய்துவிட்டு போவதை நியூஸ் போட்டோ கவரேஜ் செய்துள்ளேன்.
விஜய் எந்த நேரத்திற்கு பேச நேரம் கொடுத்தாலும், அந்த நேரத்திற்கு அங்கு இருக்க வேண்டும். காத்திருக்கும் ஒவ்வொருவருக்குமே சில கடமைகள், வேலைகள் இருக்கும். அதை தியாகம் செய்துவிட்டுத் தான் வருகிறார்கள். அத்துடன் காத்திருக்கும் கூட்டத்தால் அந்த ஊரில் எவ்வளவு டிராபிக் நெரிசல்கள், மாற்றுப் பாதையில் வண்டிகள் செல்ல வேண்டிய நிர்பந்தங்கள், பாதிப்புகள் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். மக்களை ஒரு போதும் மணிக்கணக்காக காக்க வைக்கக் கூடாது. அப்படி காக்க வைப்பது ஒரு கிரிமினல் குற்றம். இதை பொறுப்புள்ள தலைவர் செய்யமாட்டார்.
விஜய் தன்னை பாதுகாக்க பவுன்சர் வைத்துக் கொள்வதைப் போல, மக்களை அரண் செய்து பாதுகாக்க தான் பேசும் ஒவ்வொரு இடத்திலும் த.வெ.க தொண்டர் படையை களத்தில் இறக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களோ, குழந்தைகளோ கூட்டத்தில் இருந்தால், அவர்களிடம் அன்பாகப் பேசி ஆட்டோ பிடித்து உங்கள் செலவிலாவது வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். உங்களுக்கு புண்ணியம் சேரும்.
மிக முக்கியமாக விஜய் தன்னை சந்திப்பதற்கு எளிதானவராக வெகு சீக்கிரம் தன்னை மாற்றிக் கொண்டு முழு நேர அரசியல் செய்தால் மட்டுமே அவருக்கு சாத்தியமாகும். தன் மீதான திரைக் கவர்ச்சியை மீறி, மக்களோடு மக்களாக எளிய மனிதனாக மாறினால் மட்டுமே அவருடைய அரசியல் ஆரோக்கியமான அரசியலாக பரிணமிக்கும். தற்போது வரை அவர் ஒரு அரசியல்வாதியாக மக்கள் மனங்களில் பதிவாகவில்லை என்பதே நிதர்சனம்.
விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி தருவதில் பல கெடுபிடிகளை காட்டியது, கேள்வி மேல் கேள்வி கேட்டு அலைக் கழித்தது, இடத்தை மாற்றித் தந்தது …என காவல்துறை தரப்பில் தரப்பட்ட நெருக்கடிகள் எல்லாமே மக்கள் நலன் கருதியதாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சபாஷ் போடலாம். ஆனால், அந்தப்படி இருந்திருக்கும்பட்சத்தில் இந்த உயிர்பலிகள் நடந்திருக்கக் கூடாதே…?
தவெகவினர் தான் அரசியலுக்கு புதியவர்கள். ஆனால், போலீசார் பல களங்களைக் கண்டவர்கள் என்ற வகையில், நல்ல விஸ்தாரமான இடமாக பார்த்து விஜய் பரப்புரைக்கு அனுமதி தந்திருக்க வேண்டும். மேலும், விஜய் வேன் வருவதற்கும், பிரச்சாரம் முடிந்த பிறகு அங்கிருந்து சுலபத்தில் செல்வதற்குமான பாதையை ஏற்படுத்தி காவல்துறை அரண் செய்திருக்க வேண்டும். இனியேனும் இந்த தவறை சரி செய்தல் நன்று.
விஜய்க்கு வரும் கட்டுக்கடங்கா கூட்டம் மற்றும் அந்தக் கூட்டத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள், குறுகிய இடம் தருவதால் ஏற்படும் நெருக்கடிகள் ஆகியவற்றால் பெரும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என சட்டம், ஒழுங்கு போலீசாரும், உளவுத் துறை போலீசாரும் பல முறை காவல்துறை தலைமைக்கு கவனப்படுத்தியும் விஸ்தாரமான இடத்தை உறுதி செய்வதிலும், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வதிலும் பெரும் தோல்வி கண்டுள்ளது காவல் துறை. இந்த விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தரப்பில் இருந்து வரும் அழுத்தங்களை புறம் தள்ளி,மன உறுதியுடன் செயல்படும் முடிவை காவல்துறை தலைமை மக்கள் நலன் கருதி எடுக்க வேண்டும்.
பெரும்திரளான அரசியல் கூட்டம் இருக்கும் இடத்தின் வழியில் ஆம்புலன்ஸை அனுமதிக்கும் போது, அந்தக் கூட்டம் வழிவிட்டு பிளந்து வழி தரும் போது - இரு பக்கமும் உள்ளவர்கள் தள்ளு,முள்ளுவில் கீழே விழுந்து -அசம்பாவிதங்கள் நடக்கின்றன. ஆம்புலன்சிலிருக்கும் ஒருவரை காப்பாற்ற பல உயிர்களை காவு கேட்பது போல இது நடந்துவிடுகிறது. ஆகவே, தயைகூர்ந்து மாற்றுப் பாதையை பரிசீலிக்க வேண்டும்.
எந்த அரசியல் தலைவர் கூட்டம் என்றாலும், பாதுகாப்பில் போதுமான காவல்துறையினரை களத்தில் இறக்கி கடமையாற்றுவதில் பாரபட்சம் இருக்கக் கூடாது.
ஆட்சியாளர்கள் கற்க வேண்டிய ஒரே பாடம். காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். உங்கள் விருப்பு, வெறுப்புகளை அவர்கள் மீது திணித்தால், அதன் விளைவானது உங்களையே திருப்பி தாக்கிவிடும். அவ்வளவு தான்!
சாவித்திரி கண்ணன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு