புதிய தொழிலாளர் விரோதச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் திமுக அரசு
சே ரா

தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சமீபத்தில் வெளியிட்ட அரசாணை நிலை ஆணை எண் 115 ஆனது அரசு துறைகளில் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்கள் மிகவும் அதிகமாக உள்ள ஓர் இக்கட்டான சூழலில் அரசு இருப்பதாகவும், அதனால் மனித வளம் தொடர்பான சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக 5 பேர் அடங்கிய மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவை 6 மாத காலத்திற்குள் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் எனவும் கூறுகிறது.
இந்த அரசு நிலையாணை வந்த சில வாரங்களில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் அரசாணை எண் 152 ஆனது வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் மூலம் தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில் காலியாக உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை 3417 ஆக சுருக்கி மீதமுள்ள பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பி கொள்ளலாம் என்றும். ஏற்கனவே உள்ள நிரந்த பணியாளர்களின் பணியிடங்கள் காலியான பின்பு அப்பணியிடங்களையும் அவுட்சோர்சிங் மூலமே நிரப்பவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மேற்கண்ட மனிதவள மேம்பாட்டு துறையின் அரசாணை எண் 115 ன் படியான 5 பேர் அடங்கிய சீர்த்திருத்த குழு வழங்க போகும் பரிந்துரைகளுக்கு முன்னோட்டம் பார்ப்பதாகவே நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண் 152 உள்ளதாகவே தெரிகிறது.
அனைத்து நிரந்தர பணிகளையும் அழித்துவிட்டு அவைகளை தனியார் தொழிலாளர் சப்ளை நிறுவனங்களின் மூலம் எந்த விதமான தொழிலாளர் சட்ட பாதுகாப்பும் இன்றி கொத்தடிமைகளாக தனியார் தொழிலாளர் சப்ளை கம்பெனியின் கொடும் சுரண்டல்களை எதிர்கொண்டு வேலை செய்யும் நிலைக்கு தொழிலாளர்களை தமிழக அரசு தள்ளவிருக்கிறது.
ஏற்கனவே தமிழக அரசு பல துறைகளின் சில பிரிவுகளில் அவுட்சோர்சிங் முறையை கொண்டுவந்துவிட்டது. இப்போது மொத்த அரசு துறைகளையும் அவுட்சோர்சிங் முறைக்குள் கொண்டு வந்து தொழிலாளர்களின் உழைப்பை எந்த வித தொழிலாளர் சட்ட பாதுகாப்பும் இன்றி சுரண்டுவதற்கு வழிவகை செய்துவிட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிகாலத்திலிருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் என்கிற கொத்தடிமை முறையை முறைப்படுத்தவும் பிறகு அதனை முற்றிலும் ஒழிக்கவும் 1970 ல் மைய அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. அச்சட்டத்தின் முதன்மை நோக்கமே ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பதுதான். ஆனால் அச்சட்டம் இயற்றி 50 ஆண்டுகள் கடந்த பிறகு இன்று அனைத்து துறைளிலும் அவுட்சோர்சிங் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் கொண்டு வேலைகளை செய்ய வைக்க அரசே திட்டமிடுகிறது என்பதிலிருந்து நம் நாட்டின் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களின் நிலை என்னவென்பதை பற்றி புரிந்து கொள்ளலாம்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை பெரும் அளவு உருவாக்கி உழைப்பு சந்தையில் கோடிக்கணக்கான இளைஞர்களை குவித்து அவர்களை தனியார் தொழிலாளர் சப்ளை நிறுவனங்களின் சுரண்டலுக்கு இந்த அரசு தள்ளி விடுகிறது. சுரண்டலை எதிர்த்து கேள்வி கேட்டால் உடனடியாக அந்த தொழிலாளியை நீக்கிவிட்டு உழைப்பு சந்தையில் குவிந்துள்ள அனைத்து மற்ற தொழிலாளர்களிலிருந்து ஆட்களை எடுத்துகொள்வார்கள். இதற்கு பயந்துகொண்டே தொழிலாளர்கள் எவ்வளவு சுரண்டலுக்கு உள்ளானாலும் சகித்து கொண்டு வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
மிகக்கொடூரமான இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைதான் சமூக நீதி அரசு என ஊரை ஏமாற்றி கொண்டிருக்கும் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது.
வாய்கிழிய இட ஒதுக்கீட்டை பற்றி பேசும் திராவிட மாடல் அரசு பெரும்பாலான அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்த்து இட ஒதுக்கீடு இல்லாத நிலையை ஏற்படுத்த உள்ளது.
இவைகளை எல்லாவற்றையும் மறைத்துவிட்டு கலர் கலராக மக்களை ஏமாற்ற சமூக நீதி, திராவிட மாடல் என வடை சுட்டுக்கொண்டிருக்கிறது. மைய அரசின் பொருளாதார கொள்கையைதான் தமிழக அரசும் கடைப்பிடித்து வருகிறது. மைய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களைத்தான் தமிழக அரசும் பல்வேறு வகையில் கொள்ளைப்புறமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
முதலாளித்துவ அரசில் நல்ல அரசு கெட்ட அரசு என்பதெல்லாம் இல்லை. மக்களை ஏமாற்றுவதன் மூலமோ அல்லது அடக்குமுறை செய்வதன் மூலமோ முதலாளித்துவத்தின் கொள்ளை லாபத்திற்கு நேவையான வேலைகளை செய்வது என்பது மட்டும்தான் அரசின் பணியாக உள்ளது.
- சே ரா
(முகநூலிலிருந்து)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு