அரசியல் இன்றி ஓர் அணுவும் இல்லை!
துரை. சண்முகம்

அவரவரும் அரசியல் செய்வதற்காக மக்களின் இழவு எடுக்கப்படுவதுதான் கொடூரமாக இருக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்களை ஒரு குறுகிய இடத்தில் கூட்டி தேங்க வைத்து, அது பற்றிய எந்த சுய அறிவும் சுய பொறுப்பும் இல்லாமல் நடந்து கொண்ட த.வெ.க தலைமைதான் முதல் குற்றவாளி.
பழைய கூட்ட அனுபவங்களில் இருந்து கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை மீறி, குவித்த கூட்டத்தை மக்கள் நலன் கருதி இன்னும் சேரவிடாமல் முன்னரே அரசு நிர்வாகத் தரப்பு தடுத்திருக்க வேண்டும் என்பதும் விசாரணைக்கு உட்பட்டது.
இப்படி கருத்துரைப்பதில் முதல் பகுதியை மட்டும்தான் பேச வேண்டும்! அரசின் பொறுப்பு பற்றி கருத்துரைப்பது திமுக ஆதரவு மனநிலையில் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை. மாறாக மக்களுக்கு பொறுப்பான நிலையில் இருந்து சிந்திப்பதை
யே, இந்த நிகழ்வில் அரசு தரப்பின் தவறுகளை சுட்டிக் காட்டுவதையே திமுக கட்சி ஆட்சியில் இருப்பதால், இது ஏதோ பாஜகவுக்கு பயன்படும் கருத்து! விஜய்க்கு ஆதரவான கருத்து! என்று திசை திருப்புகிறார்கள் பலர்.
ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.
முதல்வரே," இதில் எந்தக் கட்சித் தலைவரையும் தனிப்பட்ட முறையில் பழி போடுவதற்கு இல்லை, தனிப்பட்ட பகையாக இதைக் கருத தேவையில்லை எந்த கட்சித் தலைவரும் தனது தொண்டனை அப்பாவி பொதுமக்களை சாகடிக்க விரும்ப மாட்டார்கள்!" என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்.
இந்தக் கருத்தையும் பாஜகவுக்கு ஆதரவானது விஜயின் ரசிக மனப்பான்மை வயப்பட்டது என்று சொல்ல முடியுமா? மாற்றுக் கருத்து!
அதாவது, (குறிப்பிடப்படும் 'வதந்தி வகைப்பட்டது அல்ல',) இந்த விசயத்தில் சொல்வதே தவறு! இரண்டில் ஒன்றுதான் சொல்ல வேண்டும் என்பவர்கள் முதல்வரின் இந்த கருத்தை கண்டிக்க முன்வருவார்களா?
உண்மையில் முக்கியமாக நாம் பேச வேண்டிய விசயம் இந்த பட்டிமன்ற பாணியல்ல.
தன்னளவில் இவ்வளவு மோசமான மக்களின் மீது பொறுப்பற்ற நடவடிக்கை செய்துவிட்ட த. வெ.க. தலைவர் விஜயை உடனடியாக கைது செய்வதை எது தடுக்கிறது?
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதெல்லாம் பெரும் பிரச்சனை அல்ல. அதை சமாளிக்கும் அளவுக்கு அரசு இல்லாமல் இல்லை. அடுத்து அனுதாபம் ஏற்படும் என்பதும் குறைந்தபட்ச காரணம்தான். ஏனென்றால் இந்த நிகழ்வை திமுகவுக்கு அரசியல் ஆக்குவதற்கான அத்தனை கட்டமைப்பையும் அரசின் ஐந்தாம் படைகளாக உருமாறி விட்ட முற்போக்கு முகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
ஒரு கட்சியாகவே ஒழுங்கமைக்கப்படாத கும்பல் மனப்பான்மையைக் கொண்ட கட்சிதான் இப்போதைக்கு த.வெ.க. இதை கலைத்து விடுவதை விட, வேறு ஒரு வகையில் கைப்பற்றவே ஆளும் வர்க்கம் விரும்பும்.
இந்த அடிப்படையை ஆளாளுக்கு எப்படி அரசியல் ஆக்கிகொள்வது! என்பதற்கான திட்டத்தோடு அவகாச நேரத்தை அனைத்து கட்சிகளுமே அரசியல் செய்கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் அவர்கள் குறிப்பிடுவது போல, இதில் பாஜகவின் சித்து விளையாட்டு நடக்கிறது. அதனால்தான் இன்னொரு தரப்பு சித்து விளையாட்டுக்காக காங்கிரசை அவர் அழைக்கிறார்.
லாட்டரி அதிபரின் உறவு அர்ஜுன் ஆதவ் திடீரென வி.சி.க.வில் துணை பொதுச்செயலாளராக ஆக்கப்பட்டபோது, வாய் திறக்காத வாஷிங் மெஷின்கள்
இப்போது அறிவார்ந்த கேள்விகளை எழுப்புகிறார்கள்.
ஏன்? அப்போது அவர் புனிதராக இருந்தாரா? இல்லை எப்போதும் இவர்கள் ஒரு வர்க்கமாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நிலவும் திமுக அதிமுக இரு துருவ அரசியலின் மீதான வெறுப்பிலிருந்து , குறிப்பாக எந்த அரசியல் செயல்திட்டமோ மக்களுக்கான அரசியலோ இல்லாமல், திமுகவை தோற்கடிப்பது! என்று
நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஒழுங்குபடுத்தப்படாத பெரிய அளவு படை இது. பொதுவான ரசிக மனப்பான்மையில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் வேறு புரட்சிகர அரசியல் இயக்கங்களுக்கு ஆட்பட்டு விடாமல் இருப்பதை விட, விஜய் வடிவிலான இந்த அரசியல் மூலதனத்தை ஆளும்வர்க்கத்தின்
இன்னொரு மாற்றுக்குள் அறுவடை செய்து கொள்வதே ஆளும் வர்க்க அரசியல்.
முதலாளித்துவ மற்றும் கார்ப்பரேட் குழுக்களின் அரசியல் தேவைக்காக இயங்கும் கட்சிகளுக்குள் அதிகாரப் போட்டிதான் நடக்கிறதே ஒழிய, ஆளும்வர்க்க கட்டமைப்புக்கு எதிரான போட்டி அல்ல அவர்களுக்குள்.
அதனால்தான் ஒரு கொலைகார சம்பவத்திற்கு பிறகும், விஜய் தரப்புக்கு ஏற்பட்ட இந்த நெருக்கடியை ஆளும் வர்க்கம் தனக்குள் ஓரிடத்தில் செட்டில் செய்து கொள்ளும் அரசியல் வேலையை செய்து கொண்டிருக்கிறது. நேரடி கட்சிகளின் அரசியல் கூட்டணி பேரங்கள் நடக்காமல், நெருக்கடி கூட்டணியை ஆளும் வர்க்கம் தருவிக்கிறது.
ஒன்று பாஜக பக்கம் போ!
இல்லை காங்கிரஸ் திமுக பக்கம் போ! இதைவிட முக்கியம் கொள்கையற்ற உதிரிகளாக இளைஞர்களை கட்டுப்பாடு இல்லாமல் உலவ விடுவது
ஆளும் வர்க்கத்திற்கு உகந்த அரசியல் அல்ல. எனவே ஒரு ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் நின்று திமுக அரசை வேண்டுமானால் எதிர்த்துக்கொள்!
பொதுவிலேயே எந்த அரசு சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாத போக்கை நிறுத்திக் கொள்! எனும் முதலாளித்துவ அரசியல் ஒழுங்கை இந்த சந்தர்ப்பத்தின் மூலம் வளர்த்தெடுத்துக் கொள்கிறது ஆளும் வர்க்க அரசியல்.
முக்கியமாக 'தற்குறிகளை' அரசியல்படுத்து என்று ஆளும் வர்க்கம் எதிர்நோக்குவது இந்த திசையில்தான். மக்கள் நோக்கில் இப்படிப்பட்ட இளைஞர்களை அரசியல் படுத்துகின்ற அவசியத்தை ஆளும் வர்க்கம் அனுமதிக்காது விரும்பாது.
இந்தச் சூழலில் இடதுசாரி கண்ணோட்டம் என்பது மக்களது தேவைகளை நிறைவு செய்யும் மாற்று அரசியல் என்பதற்கு த.வெ.க. விஜய் என்பது தகுதி படைத்தது கிடையாது! ஒரு சிறு நிகழ்விலேயே மக்களை பலி கொடுத்து விட்டு தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வர்க்கத் தன்மை படைத்தது. ஆளும் வர்க்க அரசமைப்பிற்கு உடன் போக்கானது எனும் அரசியலை மக்களுக்கு அறிய தர வேண்டும். மாற்றாக திமுகவுக்கோ அதிமுக பாஜக காங்கிரசுக்கு காவடி எடுப்பதல்ல.
கம்யூனிச அரசியல்தான் மக்களுக்கு கதாநாயகன் பிரச்சனைகளை தீர்க்கும் எனும் அரசியலை தீவிரப்படுத்த இந்த தருணத்தை அரசியல் ஆக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடுவதை, நீதிமன்றமே அனுமதித்தும் கூட மூர்க்கமாக முடக்கிய திமுக அரசு, வெத்துவேட்டு கெத்து அரசியல்
விஜய் கூட்டங்களுக்கு அனுமதிப்பதன் பின்னால்,
தனியார்மய தாராளமய உழைப்பு சுரண்டல் அரசியலுக்கு ஆபத்தில்லாத அவரும் வர்க்கக்கூட்டாளியான தளபதி என்பதுதான்.
கரூர் கொடுஞ்சாவுகள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்களை அன்றாடம் சுரண்டலின் போக்கிலேயே கொன்று கொண்டிருக்கிறது இந்திய ஆளும் வர்க்க அரசியல்.
இதன் ஒரு பகுதியான இந்த ஓட்டுக் கட்சிகள் நம்மை காப்பாற்றும் என்பதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய 'வதந்தி'!
இதை எடுத்துப் பேச தயாராக இல்லாத எவரும் இங்கே மக்களுக்கான அரசியல்வாதிகளே அல்ல!
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/p/1BGohBFsMb/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு