இந்தியா - ஐரோப்பா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது

வெண்பா (தமிழில்)

இந்தியா - ஐரோப்பா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது

ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்புடன் (EFTA) செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா அக்டோபர் 1 முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்த உள்ளது. இது ஐரோப்பிய கூட்டமைப்புடன் இந்தியா மேற்கொள்ளும் முதல் வர்த்தக ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கையின்படி, புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அரசு ஒரு உயர்மட்ட தொடக்க விழாவை நடத்தவுள்ளது. இதில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், EFTA கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தொழில் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

"அக்டோபர் முதல் தேதியிலிருந்து, சுவிட்சர்லாந்து, லீக்டன்ஸ்டைன், நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நான்கு நாடுகளுடனான ஒப்பந்தம் அமலுக்கு வரும்" என்று உ.பி. சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போது கோயல் கூறினார்.

ஐஸ்லாந்து, லீக்டன்ஸ்டைன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய EFTA-வும் இந்தியாவும் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (TEPA) மார்ச் 10, 2024 அன்று கையெழுத்திட்டன. ஆனால், உறுப்பு நாடுகளில் நடைமுறை ஒப்புதல்கள் பெற தாமதமானதால் இந்த ஒப்பந்தம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த தொடக்க விழா வெறும் சம்பிரதாயமானதல்ல, இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். "தொழில் துறையினர் இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்திருப்பதையும், அதன் முழுப் பயனையும் பெற தயாராக இருப்பதையும் உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்," என்று மூத்த அதிகாரி ஒருவர் பிசினஸ் ஸ்டாண்டர்டிடம் கூறினார்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

TEPA ஒப்பந்தம் பல காரணங்களுக்காக இந்தியாவின் வர்த்தக உறவுகளில் தனித்துவமானதொரு இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அரசு ஐரோப்பிய கூட்டமைப்புடன் கையெழுத்திடும் முதல் வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். மேலும், சந்தை அணுகல் உறுதிமொழிகள் முதலீட்டு வாக்குறுதிகளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட முதல் ஒப்பந்தமும் இதுவே ஆகும்.

EFTA நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 80–85 சதவீதப் பொருட்களின் மீதான வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்குப் பதிலாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் EFTA சந்தைகளில் 99 சதவீதப் பொருட்களுக்கு வரி இல்லாத அணுகலைப் பெறுவார்கள். உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக, முக்கிய துறைகளான விவசாயம் மற்றும் பால் பொருட்கள் இந்த வரிச் சலுகைகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக கவனிக்கப்படுவது EFTA கூட்டமைப்பு உறுதியளித்துள்ள முதலீட்டின் அளவாகும். இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த முதல் 10 ஆண்டுகளில் இந்தியாவில் 50 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 50 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும் இந்த நான்கு நாடுகளும் உறுதியளித்துள்ளன. இதன் மூலம் 15 ஆண்டுகளில் இந்தியாவில் பத்து லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது.

EFTA உடனான வர்த்தக நகர்வுகள்

இந்தியாவின் மற்ற வர்த்தக கூட்டாளிகளைப் போலல்லாமல், EFTA நாடுகள் ஏற்கனவே குறைந்த இறக்குமதி வரிகளைப் பராமரிக்கின்றன. இதன் பொருள், சந்தை அணுகலில் இந்தியாவின் உடனடி ஆதாயங்கள் குறைவாக இருக்கலாம் என்பதாகும். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் முதலீட்டுடன் இணைக்கப்பட்ட வடிவமைப்பு, பரஸ்பர நன்மைகளை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

இந்த நான்கு நாடுகளில், சுவிட்சர்லாந்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. 2025-ஆம் நிதியாண்டில், இந்தியா EFTA கூட்டமைப்புக்கு 1.97 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது, இதில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு சுவிட்சர்லாந்திற்குச் சென்றது. இந்த கூட்டமைப்பிலிருந்து இறக்குமதி 22.44 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு அதிகரித்திருந்தது. இதில் சுவிட்சர்லாந்து மட்டும் 21.8 பில்லியன் டாலர், அதாவது மொத்தத்தில் 97 சதவீத பங்களிப்பைக் கொண்டிருந்தது. இதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை 20.47 பில்லியன் டாலராக இருந்தது.

EFTA ஒப்பந்தத்தின் முக்கியத்துவம், இந்தியா இறுதியாக ஐரோப்பிய கூட்டணியுடன் வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்திருப்பதில் அடங்கியுள்ளது. இது போர்த்தந்திர மாற்றத்தை வெளிப்படுத்துகிறது: வரி குறைப்புகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், உள்நாட்டில் நீண்டகால தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கக்கூடிய முதலீட்டைப் பெறுவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://economictimes.indiatimes.com/news/economy/foreign-trade/india-first-europe-facing-efta-trade-pact-comes-into-effect-on-october-1-delhi-event/articleshow/124206028.cms?from=mdr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு