கணினி சிப்கள் சந்தையில் தைவானின் ஆதிக்கம்: அமெரிக்கா கவலை
தமிழில்: மருதன்
சீனாவின் தொடர் எதிர்ப்புகளையும் மீறி மேற்கொள்ளப்பட்ட நான்சி பெலொசியின் தைவான் பயணம் சீன அரசாங்கத்தின் அமெரிக்கா மீதான அதிருப்தியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பெலொசியின் தைவான் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான சந்திப்புகளாள தைவான் குறைகடத்திகள் உற்பத்தி கழகத்தின் (Taiwan Semiconductor Manufacturing Corporation, TSMC) தலைவர் மார்க் லூயிவுடனான சந்திப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. TSMC-யின் உற்பத்தி தொழிற்சாலைகளை தைவானிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கும், TSMC-யால் உற்பத்தி செய்யப்படும் சிப்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது குறித்தும் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வரும் அரசாங்க அளவிலான பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவோவின் புரட்சி படைகளால் நாடு கடத்தப்பட்ட ஷியாங்கே சேக் தைவானில் தஞ்சம் புகுந்து தனக்கென ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொண்டதிலிருந்தே தைவான் அமெரிக்காவின் நட்பு நாடாகவும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சீனாவின் விரிவாதிக்கப் போக்குகளுக்கு எதிரான சக்திகளுள் முக்கியமான சக்தியாகவும் விளங்குகிறது. அதோடு சீனாவின் உற்பத்தித் துறைக்கு மிகவும் முக்கியமான குறைகடத்தி சிப்களின் தேவைக்கு தைவானின் ஏற்றுமதியையே சார்ந்துள்ளது.
தற்போது உலகமெங்கும் நிறுவப்பட்டு வரும் 5G தொலைதொடர்பு தொழில்நுட்பத்திற்கும் தைவானிலிருந்து உற்பத்தியாகும் சிப்களே அதிகளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன. மைக்ரோ ப்ராசஸர்கள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் அமெரிக்க நிறுவனங்களான இண்டல், ஏ.எம்.டி போன்ற நிறுவனங்களும தைவானின் சிப் தயாரிப்புகளையே சார்ந்திருக்கின்றன.
ஏனைய தைவான் சார்ந்த சிப் உற்பத்தியாளர்கள் 10% சந்தையை கொண்டிருக்கும் வேளையில், உலக சிப் உற்பத்தியில் 53% சந்தை பங்கை TSMCமட்டும் கொண்டுள்ளது. பெட்ரோல் உற்பத்திக்கு எப்படி சவுதி அரேபியாவோ அப்படித்தான் சிப் உற்பத்திக்கு தைவான்.
பைடன் தலைமையில் சமீபத்தில் ‘100 நாள் விநியோக சங்கிலி' (100 Days Suppy Chain Report) குறித்த அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் அமெரிக்க அரசாஙகம், தனது உள்நாட்டு மின்னணு மற்றும் மென்பொருள் உற்பத்திக்கு TSMC என்ற ஒரு நிறுவனத்தின் சிப் உற்பத்திகளையே அதிகளவில் சார்ந்திருப்பதாகவும், இச்சார்பு நிலை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிரதான உள்கட்டுமானம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு தேவையான தொடர் விநியோகத்தை உறுதி செய்யமுடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
அதாவது சீனாவின் தைவான் மீதான விரிவாதிக்கப் போக்கு தன் மின்னணு தொழிற்சாலைகளுக்கு பெரிய ஆபத்தாக விளங்குவதாக அமெரிக்கா கருதுகிறது. தைவான் சீன நிலப்பரப்பின் ஒரு பகுதியே என்று அமெரிக்கா பல சமயங்களில் பேச்சளவில் கூறி வந்திருந்தாலும், சீன-அமெரிக்க உறவுகளில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள வரலாறு காணாத விரிசல் தைவான் நிலப்பரப்பை தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள எத்தனிக்கிறது.
’தொழில்நுட்ப போர்’
இதன் ஒரு பகுதியாகவே தைவானின் TSMC நிறுவனத்தை அமெரிக்காவிற்கு இடப்பெயர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தனது மின்னணு மற்றும் மென்பொருள் உற்பத்திக்கு அடிப்படையாக விளங்கும் சிப்களின் தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் நிவர்த்தி செய்து கொள்வதே தற்போதைக்கு உகந்தது என்ற முடிவுக்கு அமெரிக்க அரசாங்கம் வந்துள்ளது. இதன் அடிப்படையில் சென்ற வருடம் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சிப் உற்பத்திக்கான அடிப்படை கட்டுமானங்களை தயார் செய்வதற்கு தேவையான நிலத்தை TSMC நிறுவனத்திற்க்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த பணிகளை 2024க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவும் தன் பங்கிற்கு TSMC போன்ற சிப் உற்பத்தி நிறுவனங்களுக்கு 52 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மானியம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை Chips and Science Act எனும் சட்டம் மூலம் செய்துள்ளது.
இந்த மானியத்தை பெற விரும்பும் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சிப்களை எக்காரணம் கொண்டும் சீனாவிற்கு விற்கமாட்டோம் என உறுதியளிக்க வெண்டும் என்றும் கூறியுள்ளது.
அமெரிக்காவின் இப்படியான நடவடிக்கைகள் சீனாவின் தொழில்நுட்ப சக்திகளை முடக்கும் தொழில்நுட்ப போராகவே அனைவராலும் கருதப்படுகிறது.
2020-ம் ஆண்டு சீனாவின் ஹுவாய் நிறுவனத்தின் மீது அளவிற்கதிகமான பொருளாதார தடைகளை விதித்து அந்த நிறுவனத்தையே முடக்கியது அமெரிக்க அரசாங்கம். ஹுவாய் நிறுவனத்தின் மீதான தடைகளின் பிரதான அம்சமே அந்நிறுவனம் தனது 5G கருவிகள் உற்பத்திக்கு TSMCயிடமிருந்து சிப்களை வாங்கக் கூடாது என்பதுதான்.
பிரிட்டன் அரசாங்கம் தனது 5G கட்டுமானத்திற்க்கு ஹுவாய் நிறுவனத்தையே சார்ந்திருந்தது, ஆனாலும் அமெரிக்காவின் குறுக்கீடால் ஹுவாய் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்தது.
அடிப்படையில் அமெரிக்கா சீனா மற்றும் தைவான் நிறுவனங்களுடனான தனது சார்பு நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதே தைவானுடனான தனது சர்ச்சைக்குரிய இந்த சந்திப்பின் பிரதான அம்சமாக விளங்குகிறது.
பெலோசியின் தைவான் பயணம் "தொழில்நுட்பப் போரில்" தைவானின் முக்கியமான இடத்தை விட அதிகமாக இருந்தது. ஆனால் அதன் மிக முக்கியமான நிறுவனத்தின் மேலாதிக்கம் தைவானுக்கு புதிய-முக்கியமான புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை அளித்துள்ளது, இது தைவானின் நிலை குறித்து அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் இருக்கும் போட்டியை அதிகரிக்கக்கூடும். அது அதன் குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியை "மீண்டும்" செய்வதற்கான அமெரிக்க முயற்சிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
- மருதன்
(தமிழில்)
மூலக்கட்டுரை - theconversation.com