எலான் - டிரம்ப் கும்பலின் DOGE - TECHNO பாசிசம் மற்றும் அயலுறவு கொள்கை குறித்த பாட்டாளி வர்க்க நிலைபாடு
சமரன்

அமெரிக்காவில் ட்ரம்ப் கும்பல் ஆட்சிக்கு வந்தது முதல் தறிகெட்டு காண்போரை எல்லாம் கடிக்கும் வெறிநாய் போல, கூட்டாட்சி முறையை ஒழித்து வெளிப்படையானதொரு பயங்கரவாத "கார்ப்பரேட் பாசிச ஆட்சி" முறையை "அமெரிக்கா முதன்மை" எனும் பேரில் கட்டவிழ்த்து விட்டுள்ளது. Make America Great Again (MAGA) எனும் பெயரில் அமெரிக்காவில் பாசிச ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
புறநிலையில் சீனாவின் தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கு போட்டியாக தனது தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிறுவுவது; அகநிலையில் அமெரிக்காவில் தோன்றியுள்ள கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது என்ற இரண்டு காரணிகள்தான் டிரம்பின் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளுக்கு பொருளியல் அடிப்படையாக விளங்குகின்றன.
"அரசாங்க செயல் திறன் துறை (DOGE-Department of Government Efficiency)" எனும் பெயரில் ஒன்றிய அரசு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிர்வாகத்தை எலான் மஸ்க் எனும் பெரும் கார்ப்பரேட் வெறிநாயிடம் (DOG) டிரம்ப் கும்பல் ஒப்படைத்துள்ளது. DOGE என்பதை E-DOG அதாவது Electronic Dog என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். காரணம் அமெரிக்க ஒன்றிய அரசு மற்றும் அமெரிக்கர்களின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் தரவுகள் மீதான அனைத்து கட்டுப்பாடும், அதிகாரமும் எலான் மஸ்க்கிடம் தாரை வார்க்கபட்டுள்ளது. மட்டுமின்றி எலான் மஸ்க், மார்க் ஷூகர்பர்க், ஜெஃப் பெசோஸ் போன்ற தொழில்நுட்ப கார்ப்பரேட்களின் (Tech corporates) ஏகபோக நிதிமூலதன சர்வாதிகாரம் (அதாவது சிறு கும்பலின் ஏகபோக சர்வாதிகாரம்) கட்டியமைக்கப்படுவதால், அமெரிக்க பாசிசத்தை DOGE-TECHNO பாசிசம் என்று வரையறுக்கலாம்.
ஆட்சி அதிகாரம், கட்சிகள், அரசு எந்திரம் மீது கார்ப்பரேட்கள் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வந்த முறையை தூக்கியெறிந்து ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தையே அரசாங்கம் நடத்த டிரம்ப் அனுமதித்த நிகழ்வானது வரலாற்றில் முதல்முறையாகும். இம்முறை வெளிப்படையான எதிர்புரட்சிகர பயங்கரவாத கார்ப்பரேட் பாசிச ஆட்சி முறை ஆகும்.
செயற்கை நுண்ணறிவு, 5G, ரோபோடிக்ஸ், க்ளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் நிதியமைப்பு, சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் சீனா பிரம்மாண்டமாய் வளர்ந்து அமெரிக்காவின் உலக மேலாதிக்க கனவுகளுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. சீனாவின் உலக மேலாதிக்கத்தை முறியடித்து அமெரிக்கா அத்துறைகளில் மேலாதிக்கம் பெற திட்டமிட்டுள்ளது. அதன் விளைவே DOGE-TECHNO பாசிச ஆட்சி முறை.
எனவே சீனாவின் டெக்னோ (TECHNO) கார்ப்பரேட்டுகளின் ஏகபோக சர்வதிகாரத்திற்கு (அ) டெக்னோ பாசிசத்திற்கு (TECHNO FASCISM) போட்டியாக அமெரிக்கா DOGE-TECHNO பாசிசத்தை கட்டியமைத்து வருகிறது எனலாம். ரஷ்யா - சீனா இரண்டுமே எதிரிகள் என்ற முந்தைய பைடன் ஆட்சியிலிருந்து ட்ரம்ப் கும்பல் வேறுபட்டு, சீனாவை மட்டும் பிரதான எதிரியாக கொண்டு ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொள்வது; DOGE-TECHNO பாசிசம்; சீனா, கனடா, மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீதான வரி-வர்த்தகப் போர்; அகண்ட அமெரிக்கா, ஆரிய இனவெறி பாசிசம் ஆகியவற்றை உள்ளடக்கிய "அமெரிக்கா முதன்மை" எனும் வலது சாரி பாசிச கொள்கையை அமல்படுத்தி வருகிறது. இதன் அறுதியான - இறுதியான இலக்கு சீனாவின் உலக மேலாதிக்கத்தை முறியடித்து, தனது மேலாதிக்கத்தை நிறுவுவதே.
அமெரிக்காவில் தோன்றியுள்ள பாசிச ஆட்சி முறையின் பொருளியல் அடிப்படை என்ன?
சீனாவின் தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கு போட்டியாகவே அமெரிக்கா தொழில்நுட்ப மேலாதிக்கத்தை கட்டியமைத்து வருகிறது எனினும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதார நெருக்கடியே அந்நாட்டின் கடுமையான பாசிச ஆட்சி முறைக்கு வித்திட்டுள்ளது எனலாம்.
அமெரிக்கா மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளிலேயே அதிகளவு நெருக்கடியில் அமெரிக்கா மூழ்கி வருகிறது. அதன் கடன் மதிப்பு மொத்த தேசிய உற்பத்தியை (GDP) விட 124% அதிகமாகும். அதாவது GDP யை விட 124% சதவீதம் அதிகமாக கடனில் அமெரிக்கா உள்ளது. பண மதிப்பில் அது 36.7 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. வாங்கிய கடனுக்கு ஆண்டுதோறும் 1.14 டிரில்லியன் டாலர் வட்டி மட்டும் கட்டுகிறது. இந்த கடனை அடைப்பதற்கு 2025ம் ஆண்டில் மட்டும் கூடுதலாக 7.2 டிரில்லியன் டாலர் கடனை (Debt to re-finance) வாங்கியுள்ளது. 2023இல் 2.9%ஆக இருந்த வளர்ச்சி விகிதம் (Growth Rate) 2024இல் 2.8ஆக சரிந்து விட்டது. 2025 ல் அது1.7%ஆக அதள பாதாளத்தில் விழும் என கணக்கிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.0% லிருந்து 4.2% ஆக அதிகரித்துள்ளது. பணவீக்கம் 2023-24 ல் 6.4% ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை எதிர்மறையில் (minus) -833.91 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது மொத்த தேசிய உற்பத்தியில் -3.1% சரிந்து விட்டது.
60% அமெரிக்க மக்கள் சேமிப்பு ஏதுமின்றி வாழும் நிலையில் உள்ளனர். 8.5 கோடி மக்கள் எவ்வித காப்பீடு இல்லாமலும் (அ) மிகக் குறைந்த காப்பீடு பெற்ற நிலையிலும் உள்ளனர். 25% முதியவர்கள் 15,000 டாலர்கள் (அ) அதற்கும் குறைவான ஆண்டு வருமானத்தில் வாழ்கின்றனர். 8லட்சம் அமெரிக்கர்கள் வீடற்றவர்களாக உள்ளனர்.
பிற முதலாளித்துவ நாடுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வறுமையில் அமெரிக்க குழந்தைகள் வாடுகின்றனர். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பளம் உயராததால் பல பத்து ஆண்டுகளாக தொழிலாளர்கள் வாழ்க்கை படுமோசமான நிலையில் உள்ளது.
இந்நிலை தொடருமானால் இவ்வாண்டு பெரும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என முதலாளித்துவ நிபுணர்களே கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஆழப்பட்டதற்கு பல முக்கியமான காரணங்களில் ஒன்று அமெரிக்கப் பொருளாதாரம் இராணுவப் பொருளாதாரமாக நீடித்து வருவதே ஆகும். "இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போர்" எனும் செயல்தந்திரம், அதற்கான ஆயுத தளவாட உற்பத்திக்காக கட்டியமைக்கபட்ட இராணுவ பொருளாதாரத்தால் அமெரிக்கா இதுவரை சுமார் 10 ட்ரில்லியன் டாலர் (10இலட்சம் கோடி டாலர்) செலவு செய்துள்ளது. இராணுவத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 800 பில்லியன் டாலர்கள் (GDP யில் சுமார் 15 %) செலவிடுகிறது. 1980 களில் இருந்து அமெரிக்கா தனது பாதுகாப்புத் துறைக்கு செய்து வரும் செலவு 62% அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் மொத்த இராணுவ செலவினத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 40% ஆகும். இராணுவ செலவினத்தில் அமெரிக்கா உலகில் முதல் நாடாக விளங்குகிறது.
பைடன் ஆட்சி (ஜனநாயக கட்சி) பிரதானமாக ஆயுத தளவாட கார்ப்ரேட்டுகளை சார்ந்து ஆட்சி நடத்தியது. ட்ரம்ப் ஆட்சி (குடியரசு கட்சி) தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறை கார்ப்பரேட்டுகளை சார்ந்து நின்று அவற்றின் ஏகபோக ஆட்சிக்கான பாசிச கொள்கைகளை திட்டமிடுகிறது. உள்நாட்டில் நீடித்து வரும் இந்த முதலாளித்துவ முரண்பாடே இரண்டு கட்சிகளின் உள்நாட்டு - வெளியுறவு கொள்கைகளில் வெளிப்படும் முரண்பாட்டிற்கு அடிப்படையாகும். ட்ரம்ப் முந்தைய ஆட்சியிலேயே "அமெரிக்கா முதன்மை" கொள்கையை துவக்கி இருந்தாலும் இந்த முறை அக்கொள்கையை எட்டுக்கால் பாய்ச்சலில் அமல்படுத்தி வருகிறார். பைடன் ஆட்சி ரஷ்யா - சீனா இரு நாடுகளையும் எதிரிகளாக வரையறுத்தது. ரஷ்யாவின் நேரடி போருக்கு எதிராக உக்ரைனை மறைமுகப் போரில் அதாவது பதிலிப் போரில் ஈடுபடுத்தியது. ஆனால் டிரம்ப் ஆட்சியோ ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டு உக்ரேனில் போர் நிறுத்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சீனாவை முதன்மை எதிரியாக கொண்டு அயலுறவு கொள்கைகளையும், உள்நாட்டில் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் ஏகபோகத்தையும் கட்டியமைத்து வருகிறது.
எனவே
- புறநிலையில் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் சீனாவின் உலக மேலாதிக்க முயற்சிகளை முறியடித்து தனது மேலாதிக்கத்தை நிறுவுவது
- அகநிலையில் அமெரிக்க பொருளாதாரத்தின் கடும் நெருக்கடி
இவ்விரண்டு காரணிகளே அமெரிக்காவில் கட்டியமைக்கப்பட்டு வரும் டாக் இ - டெக்னோ (DOGE - TECHNO) பாசிசம், வர்த்தகப்போர், அகண்ட அமெரிக்கா, காப்புக் கொள்கை உள்ளிட்ட "அமெரிக்கா முதன்மை" கொள்கையின் அடிப்படையாக விளங்குகின்றன.
இக்கட்டுரையில் டாக் இ மற்றும் டெக்னோ பாசிசம் பற்றிய சில அடிப்படைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து காணலாம்.
DOGE பாசிச ஆட்சிமுறை
அமெரிக்காவின் கூட்டாட்சி முறை, அதன் அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றை ஒழித்துக் கட்டும் வகையிலேயே "அமெரிக்கா முதன்மை" எனும் பாசிச கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பாசிசக் கொள்கையாக DOGE - TECHNO பாசிச கொள்கையை டிரம்ப் ஆட்சி செயல்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு எனும் பெயரிலும், "சிறந்த - சிறிய நிர்வாகம்" எனும் பெயரிலும், அரசு செலவினங்களை குறைப்பது எனும் பெயரிலும், டிரம்ப் கும்பல் எலான் மஸ்கிடம் அரசாங்க நிர்வாகத்தை ஒப்படைத்துள்ளது. அதற்கு "அரசாங்க செயல் திறன் துறை" (DOGE - Department of Government Efficiency) என்று பெயரிட்டுள்ளது. இதன் மைய இலக்கு சுமார் ஒரு டிரில்லியன் டாலர்களை அரசு செலவினத்தில் மிச்சப்படுத்துவது என்கிறது DOGE கும்பல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எலான் மஸ்க் எனப்படும் பெரும் கார்ப்பரேட் அரக்கனிடம் "ஜனாதிபதி உத்தரவின்" (Presidential order January 2025) மூலம் அரசாங்க நிர்வாகத்தினை ஒப்படைத்துள்ளது. அந்த உத்தரவின் வாயிலாக எலான் மஸ்க் அரசாங்கத்தின் சிறப்பு அரசு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
"அமெரிக்க கூட்டாட்சி (அ) ஒன்றிய அரசின் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் (software) அமைப்பை நவீனப்படுத்துவதன் மூலம் நிர்வாகத்தினை மேம்படுத்துவது" என்பதை முக்கிய இலக்காகக் கொண்டு DOGE செயல்படும் என்று டிரம்பின் வெள்ளை மாளிகை உத்தரவு தெரிவிக்கிறது. அரசாங்கத்தின் இணைய புள்ளி விவரங்களை DOGE பயன்படுத்த அனுமதிப்பது, அரசு பணியிடங்களை குறைப்பது (அ) பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவது, இராணுவ செலவினங்களை குறைத்து தொழில்நுட்ப ஏகபோகத்திற்கு அதை திருப்பி விடுவது, USAID (US agency for international development), CFPB (Consumer Financial Protection Bureau), SSA (Social Society Administration) போன்ற அமெரிக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் கலைப்பது உள்ளிட்ட பல அதிகாரங்கள் எலான் மஸ்க் கும்பலின் DOGEற்கு வழங்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரி ஜனாதிபதி உத்தரவுக்கு பிறகு அடுத்தடுத்து பல உத்தரவுகள் மூலம் அதன் அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அவை அதி தீவிரமாக DOGE கும்பலால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அவையாவன:
1. அமெரிக்க ஒன்றிய அரசின் நிதி வழங்கல் அமைப்பு (Fedral Payment System) DOGE கும்பலின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 5 டிரில்லியன் டாலர்களுக்கும் கூடுதலாக நிதியை கையாளும் அவ்வமைப்பு இவ்வாறு எலான் கும்பலுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ள நடவடிக்கையானது டிஜிட்டல் (அ) டெக்னோ பாசிச ஆட்சி வடிவம் என்பதில் ஐயமில்லை. அது ஒன்றிய அரசின் நிதி செலுத்துதல், நிதி பரிவர்த்தனை மீதான அதிகாரங்களை (சமூகப் பாதுகாப்பு, மருத்துவம், வரி செலுத்துதல், உள்ளிட்ட துறைகளில்) ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்பது அமெரிக்காவின் பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை குழி தோண்டி புதைப்பதாகும். கருவூலத்தின் நிதி வழங்கல் முறைகளான ஒன்றிய அரசின் காசோலைகள், வரி செலுத்துவோரின் தனி விவரங்கள், ஒன்றிய அரசின் திட்டங்களால் பயன்பெறும் பயனாளர்கள் பற்றிய விவரங்கள், ஒப்பந்ததாரர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பள வழங்கல் விவரங்கள் அனைத்தும் எலான் மஸ்க் கும்பல் கையாள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் எலான்மஸ்க் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை கார்ப்பரேட்டுகளின் ஏகபோகத்திற்கும், ட்ரம்பின் சிலிகான் பள்ளத்தாக்கு பினாமி கும்பலுக்கும் இலாபம் தரக்கூடியவை என்பது சொல்லாமலேயே விளங்கக் கூடியவை.
2. அரசு நிர்வாகத்தில் (ஒன்றிய அரசு நிறுவனங்கள் உட்பட) பணிபுரியும் அரசு ஊழியர்களை விருப்பம் போல பணி நீக்கம் செய்யவும், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்கவும் DOGE கும்பலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சுமார் 65,000 ஊழியர்கள் ஒன்றிய அரசு நிர்வாகத்திலிருந்து பணிவிலகுமாறு (Resign) அவர்களுக்கு DOGE இமெயில் அனுப்பி நீக்கியுள்ளது. மேலும் லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பாசிச நடவடிக்கையை எதிர்த்து ஒன்றிய அரசு ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFFE) மற்றும் அமெரிக்க அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு ஆகியவை கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
3. சர்வதேச உதவிக்கான அமெரிக்க (USAID) நிறுவனம், சர்வதேச அமைதிக்கான அமெரிக்க நிறுவனம் (USIP), CFPB, SSA போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்களில் எவற்றை கலைப்பது, எவற்றை மாகாண அரசுகளின் தலையில் கட்டுவது, எவற்றை வைத்துக் கொள்வது எனும் ஏகபோக அதிகாரம் DOGEக்கு வழங்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி அந்நிறுவனங்களின் கணிணிகளை கையாளும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஒன்றிய அரசு மற்றும் மாகாண அரசுகளுக்கு இடையிலான நிதி பகிர்வு, அதிகார பகிர்வு ஆகியவற்றை முற்றாக ஒழிக்கும் வகையில் ட்ரம்ப் ஆட்சி செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு வசம் உள்ள அரசு கல்வி, அரசு மருத்துவம் உள்ளிட்ட சேவைத் துறைகள் மாகாண அரசுகளும் ஒன்றிய அரசும் நிதி பகிர்வு முறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்தன. உள்கட்டமைப்புத் திட்டம், தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களை ஒன்றிய மற்றும் மாகாண அரசுகள் இரண்டும் செயல்படுத்தி வந்தன. ஒன்றிய அரசு இனி சேவைத் துறைகளுக்கு நிதி ஒதுக்காது; மாகாண அரசுகளே நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்று கூறி அவற்றை மாகாண அரசுகளின் தலையில் கட்டி விட்டது. மாகாண அரசுகள் செயல்படுத்தி வந்த தொழில்நுட்பம், தொழில்துறை, வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களை ஒன்றிய அரசின் அதிகார வரம்பின் கீழ் மையப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்தலுக்கும், அரசியல் மையப்படுத்துதல் பாசிசத்திற்கும் இட்டு செல்கிறது. அதன் ஒரு அம்சமாகவே ஒன்றிய அரசு நிறுவனங்களில் எதை கலைப்பது, எதை மையப்படுத்துவது, எதை மாகாண அரசுகளின் தலையில் கட்டுவது எனும் முடிவுகளை எலான் - டிரம்ப் கும்பல் பாராளுமன்ற ஒப்புதல் இன்றி எதேச்சதிகாரமாக தீர்மானித்து செயல்படுத்தி வருகிறது.
இனி ஒன்றிய அரசு நிறுவனங்களை DOGE எவ்வாறு தனது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது என்பதை காண்போம்.
USAID (United States Agency for International Developemnt):
சர்வதேச உதவிக்கான அமெரிக்க நிறுவனம் (தனியார் அறக்கட்டளை நிறுவனம்) (USAID) எலான் - டிரம்ப் கும்பலால் கலைக்கப்பட்டு மாகாண அரசுகளின் தலையில் கட்டப்பட்டுள்ளது. அதன் அனைத்து பணிகளும் நிறுத்தப்படுவதாகவும், அந்நிய உதவி மற்றும் வளர்ச்சி சார்ந்த உதவி மட்டுமே இனி தொடரும் எனவும் அவ்விரண்டு பணிகளையும் கூட ஜூலை 2025 முதல் மாகாண அரசுகளே கவனித்துக் கொள்ளும் எனவும் எலான்-டிரம்ப் கும்பல் அறிவித்துள்ளது. இதன் மூலம் நிதி செலவினங்களை பெருமளவு குறைக்க முடியும் என்று DOGE கூறுகிறது. USAID யிடம் முன் அனுமதி பெறாமல் பலவந்தமாக அந்நிறுவனத்தை கைப்பற்றி அதன் கணிணிகள், இரகசிய தகவல்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்பை (Security System) DOGE கைப்பற்றியுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வலைதளம் மற்றும் X தளம் ஆகியவற்றையும் கையகப்படுத்தியுள்ளது. அதன் ஊழியர்களை பலவந்தமாக வேலையை விட்டு நீக்கியுள்ளது. சுயேச்சையான அறக்கட்டளையாக செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தை பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் எதேச்சதிகாரமாக பிப்ரவரி-3 அன்று கலைத்து விட்டது DOGE. சர்வதேச தொண்டு நிறுவனமான இதை கலைப்பது முற்போக்கானது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், அதன் NGO நடவடிக்கைகள் மாகாண அரசுகளின் வழியாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதுதான் உண்மை.
USIP (U.S. institute of peace):
சர்வதேச அமைதிக்கான அமெரிக்க நிறுவனமும் (U.S. institute of peace) DOGE கும்பலால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பு அதிகாரிகளை DOGE கும்பலும், காவல்துறையும் தாக்கி, பலவந்தமாக உள்ளே நுழைந்தது. வெளியேற மறுத்த அதன் தலைவரை குண்டுக்கட்டாக வெளியேற்றி, தனது புதிய தலைவரை அமர வைத்து பாசிச முறையில் அந்நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது DOGE. மேலும் அதன் ஊழியர்களையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி வீட்டுக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பியுள்ளது DOGE.
CFPB (Consumer Financial Protection Bureau)
நிதித்துறையில் நுகர்வோர் நலனுக்கான இந்த தனியார் நிறுவனத்தையும் (ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது) DOGE கைப்பற்றி அதன் கணிணி, புள்ளி விவரம், இணைய தகவல்களை கையகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த அமைப்பு கலைக்கப்படும் எனவும் எலான் அறிவித்துள்ளார். இதன் இயக்குனரான ரோஹித் சோப்ரா (Rohith Chopra) பலவந்தமாக நீக்கப்பட்டு, ட்ரம்பின் ஆதரவாளரான ரஸல் (Russel Voughr) நியமிக்கப்பட்டுள்ளார்.
USDA (Department of Agriculture)
விவசாயத் துறைக்கான ஒன்றிய அரசு நிறுவனமான இதை DOGE கும்பல் காப்பரேட்மயம், தனியார்மயமாக்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே வேளாண்மைத் துறையில் கார்ப்பரேட்களுக்கு நிலங்கள் தாரைவாக்கப்பட்டு கார்ப்பரேட் நிலக்குவியல் (Corporate feudalism) எனும் போக்கு தீவிரமடைந்து வருகிறது. டிரம்ப் ஆட்சியில் அது மேலும் தீவிரமடைய போகிறது. வேளாண்மைத் துறையை முழுவதும் கைப்பற்றி வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சி எனும் பெயரில், வேளாண் உணவு உற்பத்திக்கான நிதி வெட்டப்படும் என்ற டிரம்ப்-மஸ்க் கும்பலின் முடிவால் உணவு உற்பத்தி - உணவு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என அமெரிக்கா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
DOD (Department of Defense)
பாதுகாப்புத் துறையின் நிதி விவகாரங்களில் தலையிடுவதற்கும் DOGE கும்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 6. 2025 வரை சுமார் 61,000 ஊழியர்களை DOGE பணி நீக்கம் செய்துள்ளது. (சுமார் 8% ஆட்குறைப்பு).
மேலும் இராணுவ செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு பெண்டகன் DOGE- க்கு ஒத்துழைக்க வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அரசு நிறுவனங்கள் அனைத்தும் DOGE க்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டும் என்ற ட்ரம்பின் "ஜனாதிபதி உத்தரவின்" தொடர்ச்சியாக வேளாண்மை, பாதுகாப்புத்துறை, நாசா நிறுவனம் என எல்லா அரசு நிறுவனங்களும் மையப்படுத்தப்பட்ட பாசிச ஆட்சியின் கீழ் தனியார்மயம் - கார்ப்பரேட்டுமயமாக்கப்பட்டு வருகின்றன.
ED (Department of Education)
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்வித்துறை கலைக்கப்பட்டு மாகாண அரசுகளின் தலையில் கட்டப்பட்டுள்ளது. இது அதிகாரப் பரவல் என்று ட்ரம்ப் ஆதரவு ஊடகங்கள் பேசுகின்றன. உண்மையில் இது, கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து ஒன்றிய அரசு விலகும் பாசிச நடவடிக்கையாகும். இதுவரை ஒன்றிய அரசும், மாகாண அரசுகளும் நிதி பகிர்வு மூலம் இத்துறையை இயக்கி வந்தன. இனி ஒன்றிய அரசு இலவச கல்விக்கென எவ்வித நிதி உதவியும் தராது. மாகாண அரசுகள் தமது நிதியின் மூலம் கல்வித்துறையை இயக்கிக் கொள்ளட்டும் என்று ட்ரம்ப் -எலான் மஸ்க் கும்பல் கூறுவதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்.
மேலும், ஆங்கில மொழி மட்டும் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக டிரம்ப் கும்பல் அறிவித்துள்ளது. இந்த ஒரு மொழிக் கொள்கையினால் மொழிச் சிறுபான்மையினரும் கல்வி பெறும் வகையில் மாகாண அரசுகள் செயல்படுத்தி வந்த மொழிக் கொள்கை ஒழிக்கப்பட்டு மொழி சிறுபான்மையினரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கு நிதி வழங்குவதன் மூலம் ஒன்றிய அரசால் இயக்கப்பட்டு வந்தது. ஆதரவற்ற, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பலர் இதனால் பலன் பெற்றனர். கல்விக்கடன் மூலம் சுமார் 4.2 கோடி மாணவர்கள் பலன் பெற்று வந்தனர். ட்ரம்ப்பின் இந்த புதிய உத்தரவு அம்மாணவர்களின் கல்வி உரிமையை பறித்து விட்டது.
பிப்ரவரி மாதத்தில், நிதியுதவி பெறும் மாணவர்கள் பற்றிய தகவல்கள், கல்விக் கடன் பெற்றுள்ள சுமார் 4.2 கோடி மாணவர்களின் தனிநபர் விவரங்கள் ஆகியவற்றை DOGE கையாள்வதற்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்வி அறிவியல் நிறுவனத்தின் (Institute of education science) சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆய்வுப் பணிகளும், ஒப்பந்தப் பணிகளும் DOGE-ஆல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 881 மில்லியன் டாலர்கள் மிச்சமாகும் என்று கூறி கல்வி உரிமைகளை பறிக்கிறது. அரசு கல்வியை ஒழித்துக் கட்டுகிறது. அத்துறையின் 50% பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.
கல்வித்துறையில் ஆய்வுப் பணி, ஆசிரியர்கள் ஆகியோருக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்படும் என்று DOGE அறிவித்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த நவீன கல்வி எனும் பெயரில் அரசு கல்வி முற்றாக ஒழிக்கப்பட்டு கல்வித்துறை முழுவதும் TECHNO கார்ப்பரேட்களின் ஏகபோகத்திற்கு மாற்றப்படுகிறது.
DOE (Department of Energy)
அமெரிக்காவின் ஆற்றல் துறை மற்றும் உற்பத்தி சார்ந்த கொள்கைகளை திட்டமிடும் இந்நிறுவனமும் DOGE-ன் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அணு உலைகள், இராணுவ அணு ஆயுத திட்டங்கள், ஆற்றல் சார் ஆராய்ச்சி, ஆற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட இத்துறைகளின் செயல்பாடுகளும் DOGE-ஆல் இனி கட்டுப்படுத்தப்படும். தேசிய அணு ஆயுத பாதுகாப்புத் துறையின் கணிணிகளை கையாளும் அதிகாரம் DOGE -ன் சார்பில் லூக் ஃபாரிடர் (Luke Farritor) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இத்துறையின் செயலாளராக இருந்த கிரிஸ் ரைட் (Chris Wright) என்பவர் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளார்.
HHS (Department of Health and Human science)
அமெரிக்க மக்களின் மருத்துவ சேவைக்கான இந்த துறையையும் DOGE விட்டுவைக்கவில்லை. இதுவரை மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த Healthcare integerated General ledger Accounting System - HIGLAS என்ற டிஜிட்டல் முறையுடன் தொடர்புடைய மருத்துவப் புள்ளிவிவரங்கள் மற்றும் நிதியமைப்புகளை கட்டுப்படுத்த DOGE-ற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு தரவும் DOGE முடிவெடுத்து ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது.
USDT (Department of Treasury)
கருவூலத்துறையில் ஆண்டுதோறும் சுமார் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான (சமூக பாதுகாப்பு வரிகள், அரசு நிதி பரிவர்த்தனை, ஒப்பந்ததாரர்களுக்கு நிதி வழங்கல் உள்ளிட்ட துறைகளில்) "ஒன்றிய நிதி வழங்கல் அமைப்பை (Federal payment system)" கையாளும் அதிகாரம் DOGEற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கருவூல அதிகாரி (ஜனவரி 31 அன்று) டேவிட் வெப்ரிக் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
IRS (Internal Revenue service)
வருவாய் துறையில் (Internal Revenue service) கணினிகள், இணைய விவரங்களையும் DOGE கைப்பற்றியுள்ளது. இத்துறை ஒன்றிய அரசின் "வரி விதிப்புகளை" நிர்வகிக்கும் துறையாகும்.
இவை தவிர NASA, CDC (centre for disease control and protection), FDA (Food and Drug Administration), HUD (Department of Housing and Urban Development), FHA (Federal Housing Administration), FPM (Office of Field policy and Management), DOI (Department of Interior), VA (Department of Veterans AffAIrs ), EPA (Environmental protection Agency), FAA (Federal aviation Administration), FEMA (Federal Emergency Management Agency), GSA (General service Administration), NARA (National Archives and Records Administration), NED (National Endorsement for Democracy), NOAA (National Oceanic and Atmospheric Administration), NNSA (National Nuclear security and administration), OPM (Office of Personal management), SSA (Social security Administration), TSA (Transportation security Administration), USDS (United states digital services), UPS (US postal service) உள்ளிட்ட அனைத்து ஒன்றிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் (Federal Agencies) DOGE ன் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிறுவனங்களை கட்டுப்படுத்துவது அல்லது கலைப்பது அல்லது மாகாண அரசுகளின் தலையில் கட்டுவது; ஊழியர்களை பணி நீக்கம் செய்வது ஆகிய பாசிச நடவடிக்கைகளுக்கு பின்வரும் காரணங்களை எலான்-ட்ரம்ப் கும்பல் முன் வைக்கிறது.
- அந்நிறுவனங்களில் உள்ள நிதி முறைகேடு, ஊழல் ஆகியவற்றை கண்டறிந்து களைவது
- ஆட்குறைப்பு, புதிய நியமனங்களுக்கு கட்டுப்பாடு.
- மேற்கூறிய இரண்டு நடவடிக்கைகள் மூலம் சுமார் 1 ட்ரில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தி அமெரிக்காவின் வளர்ச்சிக்கு திருப்பி விடுதல்
ஓராண்டில் 1 ட்ரில்லியன் டாலர்களை மிச்சப்படுத்திய பிறகு, DOGE அமைப்பு தொடராது என்று ட்ரம்ப் கூறியுள்ளார். DOGE ன் நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது எனவும், இதுவரை சுமார் 400 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தியுள்ளது எனவும் டிரம்ப் கூறியுள்ளார். அதே சமயம் ஓராண்டிற்குப் பிறகு இந்த DOGE - அமைப்பில் எலான் மஸ்க் தொடரவில்லையென்றாலும், இவ்வமைப்பு கேபினட் செயலாளர்களால் (Cabinet Secrataries) தொடர்ந்து பின்பற்றப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஆகவே அதன் பிறகு எலான் மஸ்க் DOGE-ஐ பின்புலத்திலிருந்து இயக்கும் வாய்ப்புகளை ட்ரம்ப் பூடகமாக தெரிவித்துள்ளார். இந்த பாசிச முறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், நீதிபதிகளின் எதிர்ப்பு, ஜனநாயக கட்சியின் எதிர்ப்பு, அரசு ஊழியர்கள் போராட்டம் ஆகியவற்றின் காரணமாகவே இந்த "மறைமுக வடிவத்திற்கு" எலான் - ட்ரம்ப் கும்பல் செல்லவுள்ளது என்பதை கூறத்தேவையில்லை.
தேர்தல் முறையில் ஊழல் நடப்பதால் அதன் செயல்முறைகளில் மாற்றம் தேவை; தேர்தல் ஆணையத்தை நமது (DOGE) கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற ட்ரம்பின் அறிவிப்பு தேர்தல் முறையில் பாசிச கொள்கைகளை அமல்படுத்துவது அல்லது தேர்தல் முறையை மெல்ல மெல்ல ஒழிக்கும் நோக்கம் கொண்டதே அன்றி வேறில்லை.
ஊழலை ஒழிப்பதாக கூறிக்கொள்ளும் DOGE அமைப்பின் செயல்பாடுகள், அதற்கான செலவினங்கள் ஆகியவற்றிலேயே வெளிப்படைத்தன்மை இல்லை என்பதுதான் கொடுமை. பாசிசத்தின் முக்கிய வாய்வீச்சுகளில் "ஊழல் ஒழிப்பு" என்று டிமிட்ரோவ் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
டிரம்பின் ஆரிய இனவெறி பாசிச வடிவம்
DOGE-TECHNO பாசிசத்திற்கு ஆரிய இன மேன்மை - வெள்ளை நிற வெறியை பாசிச வடிவமாக ட்ரம்ப் -எலான் மஸ்க் கும்பல் முன்வைத்துள்ளது.
ஹிட்லர் கும்பலின் "ஆரிய மேன்மை" எனும் பாசிச வடிவம் ட்ரம்ப் ஆட்சியின் பாசிச வடிவத்துடன் ஒத்துப் போகிறது. கருப்பர்கள் மரபணுவிலேயே "குற்றப் பரம்பரையினர்" என்று கடந்த ஆட்சியிலேயே "வெள்ளை நிற வெறியை" விஷம் போல் கக்கியவர்தான் ட்ரம்ப். 1970களில் ரியல் எஸ்டேட் தொழில் ஈடுபட்ட போதே ஆப்பிரிக்க மக்களுக்கு எதிராக நிறவெறியை கடைப்பிடித்ததற்காக ட்ரம்ப் மீது வழக்கு தொடரப்பட்ட வரலாறும் உண்டு.
"ஆரிய மேன்மை" எனும் பாசிச வடிவமே டிரம்பின் புதிய மொழிக் கொள்கையிலும் வெளிப்படுகிறது. ஆங்கிலம் அல்லாமல் பிற மொழி பேசும் சிறுபான்மை மக்களின் மொழி உரிமைகளை அங்கீகரிக்கும் மாகாண அரசுகளின் பன்மைத்துவ மொழிக் கொள்கையை ஒழித்து ஆங்கில மொழி மட்டுமே அலுவலக மொழியாக - அதிகாரபூர்வ மொழியாக - ஒன்றிய அரசு மொழியாக இருக்கும் என்ற "ஆங்கில மொழி மேன்மையை" தூக்கிப் பிடிக்கும் மொழிக் கொள்கையை அறிவித்துள்ளார். சந்தையை மையப்படுத்தி கார்ப்பரேட் ஏகபோகத்தை கட்டியமைக்க இத்தகைய ஒருமொழிக் கொள்கை எனும் ஏகபோக மொழிக் கொள்கை டிரம்ப் ஆட்சிக்கு தேவைப்படுகிறது. மோடி கும்பலின் 'ஒரே மொழி' கோஷத்துக்கும் ட்ரம்ப் கும்பலின் 'ஒரே மொழி' கோஷத்துக்கும் உள்ள ஒற்றுமையை நாம் காண முடியும். டிரம்பின் ஒருமொழிக் கொள்கையால் அமெரிக்காவில் வாழும் பிற மொழிச் சிறுபான்மையினர் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை இழந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. "சட்ட விரோத குடியேறிகள்" எனும் பெயரில் பிறநாட்டவரை வெளியேற்றுவதோடு இது நிற்கப்போவதில்லை; அமெரிக்காவில் பல தலைமுறைகளாக வாழ்ந்து குடியுரிமை பெற்றவர்கள் கூட வருங்காலங்களில் வெளியேற்றப்படவோ (அ) வெள்ளை நிறவெறி பாசிசத்தால் கொல்லப்படவோ வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. யூதர்களுக்கு ஜெர்மனியில் நேர்ந்ததைப் போல, இசுலாமியர்க்கு இந்தியாவில் நேர்ந்து வருவதைப் போல, மெக்சிகர்களுக்கும், அமெரிக்க மொழிச் சிறுபான்மையினர் மற்றும் கருப்பின மக்களுக்கும் நேரும் என்பதற்கான அறிகுறிகள் டிரம்பின் பாசிச ஆட்சியில் தென்படுகின்றன.
சீனாவுடனான தொழில்நுட்ப போரின் (TECH War) விளைவாக அமெரிக்காவில் கட்டியமைக்கப்படும் டெக்னோ பாசிசம்
சீனாவின் தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கு போட்டியாகவே அமெரிக்காவில் DOGE மற்றும் TECHNO (தொழில்நுட்பம்) பாசிசம் எட்டுக்கால் பாய்ச்சலில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் TECHNO பாசிசம் குறித்து சுருக்கமாக காணலாம்.
அமெரிக்க வர்த்தக கொள்கை, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைக்கான தொழில்நுட்பம், டிக்-டாக் தடை போன்ற அம்சங்களில் டிரம்பின் தொழில்நுட்பக் கொள்கை பைடன் ஆட்சியின் கொள்கையிலிருந்து வேறுபட்டுள்ளது. DOGE முறையும் கூட புதிய வகைப்பட்ட டெக்னோ (அ) டிஜிட்டல் பாசிச முறையே ஆகும். தொழில்நுட்பத் துறையில் டெக்-கார்ப்பரேட் சிறுகும்பலின் ஏகபோகத்தை கட்டியமைப்பதற்காகவே மையப்படுத்தப்பட்ட DOGE பாசிச ஆட்சி முறையை எலான்-டிரம்ப் கும்பல் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆக, DOGE தன்னளவிலேயே ஒரு தொழில்நுட்ப பாசிச ஆட்சி முறையாகவும், தொழில்நுட்பத் துறை கார்ப்பரேட்களின் நிதிமூலதன சர்வாதிகாரத்தை (எலான், மார்க், பெஜோஸ் உள்ளிட்ட சிறுகும்பலின் சர்வாதிகாரம் - டெக்னோ பாசிசம்) நிறுவுவதற்கான ஆட்சி முறையாகவும் உள்ளது.
டெக்னோ பாசிசம் எவ்வாறு கட்டியமைக்கப்படுகிறது என்பது பற்றி ஒரு சில துறைகளில் காணலாம்.
சைபர் செக்யூரிட்டி
டிரம்ப் ஆட்சி இத்தகைய பாசிசக் கொள்கைகளை அமல்படுத்த இதுவரை 100 "ஜனாதிபதி உத்தரவுகளை" (Presidential Order) பிறப்பித்துள்ளது. கடந்த பைடன் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை இரத்து செய்ததில் சைபர் செக்யூரிட்டி பற்றிய உத்தரவு அடங்கும். சைபர் செக்யூரிட்டி துறையை நிர்வகிக்கும் CISA- சைபர் செக்யூரிட்டி மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமை (Cybersecurity and Infrastructure Security Agency) எனும் அமைப்பின் மீதான அதிகாரம் தற்போது எலான் மஸ்க்கின் DOGE-ற்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் முன்பு பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்களை பணி நீக்கம் செய்து தனது ஆட்களை DOGE நியமித்து வருகிறது. நுகர்வோர் நிதி பாதுகாப்புத் துறை (CFPB) தொடர்பான 32 சைபர் செக்யூரிட்டி ஒப்பந்தங்களை (பைடன் ஆட்சியில் வழங்கப்பட்டவை) DOGE இரத்து செய்துள்ளது. தேர்தல் உள்கட்டமைப்பு தகவல் பரிமாற்றம் மற்றும் ஆய்வு மையம் (Elections Infrastructure Information Sharing and Analysis Center - EI-ISAC) உள்ளிட்ட சைபர் செக்யூரிட்டி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்துள்ளது. மேலும், பன்மாநில தகவல் பரிமாற்றம் மற்றும் ஆய்வு மையம் (Multi-state information Sharing and Analysis Centre - MS-ISAC) எனும் ஆய்வு மையத்திற்கான உதவிகளும் இரத்து செய்யப்படும் என DOGE அறிவித்துள்ளது.
சைபர் செக்யூரிட்டி துறையில் எலான் மஸ்க், மார்க், பெஜோஸ் ஆகியோரின் நிறுவனங்களை அனுமதிக்கவே மேற்கண்ட நடவடிக்கைகளை டிரம்ப் ஆட்சி எடுத்து வருகிறது. எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு சைபர் செக்யூரிட்டி தொடர்பான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. Federal Aviation administration துறையிலும் வெரிசான் (Verizon) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI)
ஜனவரி 20, 2025 அன்று டிரம்ப் "ஜனாதிபதி உத்தரவு" வாயிலாக (Executive order) பைடன் ஆட்சி கொண்டு வந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த உத்தரவுகளை இரத்து செய்துள்ளார். ஜனவரி 23 அன்று டிரம்ப் தனது செயற்கை நுண்ணறிவு குறித்த கொள்கைக்கான உத்தரவை பின்வருமாறு பிறப்பித்துள்ளார்.
"மனித வள மேம்பாடு, பொருளாதார போட்டித் திறன், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை முன்னேற்றும் வகையில், செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை விரிவுபடுத்தவும், அதை தக்க வைக்கவும் அமெரிக்காவின் "செயற்கை நுண்ணறிவு கொள்கை" முன்வைக்கப்படுகிறது" என்கிறார் டிரம்ப். இதற்கான செயல் திட்டத்தை வெள்ளை மாளிகை அதிகாரிகளும், DOGE-ம் இணைந்து உருவாக்கி செயல்படுத்தப் போகிறார்கள். கடந்த பைடன் ஆட்சியில் வகுக்கப்பட்ட AI சார்ந்த தொழிலாளர் மற்றும் சிவில் உரிமைகளை டிரம்ப் கும்பல் இரத்து செய்துள்ளது என்பது முக்கிய கொள்கை மாற்றம் ஆகும்.
எலான் மஸ்க் கும்பல் ஒன்றிய நிறுவனங்களிடம் இருந்து பெற்ற இணைய விவரங்கள், புள்ளிவிவரங்கள், ஊழியர்களின் தனிநபர் தகவல்கள் அனைத்தையும் "செயற்கை நுண்ணறிவு" துறை சார்ந்த கணினிகளில் ஏற்றி வருகிறது. "மனித உழைப்பை" முடிந்தவரை குறைப்பதே தமது AI கொள்கையின் நோக்கம் என்று எலான் மஸ்க் பேசுகிறார். டிரம்பின் AI பற்றிய உத்தரவில் "மனித வள மேம்பாடு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது எவ்வளவு மோசடியானது என இதன் மூலம் அறியலாம்.
ஒன்றிய அரசு நிர்வாகம், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை, ஆயுத தளவாட உற்பத்தி மற்றும் வர்த்தகம், பிற உற்பத்தி துறைகள், எதிரி நாடுகளுடனான யுத்த தந்திரக் கொள்கைகளை செயல்படுத்துவது, எதிரி நாட்டு இராணுவ செயல்பாடுகள் மற்றும் போர் யுக்திகளை உளவு பார்க்கும் உளவுத்துறைகள் (Intelligence), உள்நாட்டு பாதுகாப்பு, சைபர் செக்யூரிட்டி என அனைத்திலும் "செயற்கை நுண்ணறிவு" சார்ந்த தொழில்நுட்பமே வருங்காலங்களில் கோலோச்சப் போகிறது. ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான யுத்தங்களும் கூட செயற்கை நுண்ணறிவு சார்ந்து (AI Driven wars) நடைபெறுவதற்கான வருங்கால வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. ஆகவேதான் சீனா, அமெரிக்கா, ரசியா ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கு தீவிரமாக முயன்று வருகின்றன. அண்மையில் தனக்கான தனியானதொரு இராணுவ மற்றும் தொழில்நுட்ப கொள்கையை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"அமெரிக்க முதன்மை" கொள்கையின் உண்மையான சாரம் எலான், மார்க், பெஜோஸ் போன்ற தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகளின் (Tech Corporates-களின்) ஏகபோகத்திற்கு முதன்மை அளிப்பது என்பதே.
எலான் மஸ்க் "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே முதன்மையான யுத்தத் தந்திரம் (AI First Strategy)" என்றும், அதன் மூலம் அமெரிக்காவை மாற்றியமைப்போம் எனவும் பிப்ரவரி 20, 2025 அன்று நடந்த CPAC (Conservative Political Action Conference)-மாநாட்டில் பேசினார். அதையே DOGE கும்பல் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, டெஸ்லாவின் பொறியியல் வல்லுநரான தாமஸ் ஷெட் (Thomas Shedd) என்பவர் பொது சேவை நிர்வாகத்தின் (GSA - General Administration Technology, Texas) தொழில்நுட்ப குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எலான் மஸ்க்கின் AI நிறுவனமான "X AI" நிறுவனம்தான் "செயற்கை நுண்ணறிவினால் வழிநடத்தப்படும் அரசாங்கம் (AI driven Government Transformation)" எனும் திட்டத்திற்கு பொறுப்பேற்று தலைமை தாங்குகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி நிதி மூலதனத்தின் கோரப்பிடிக்குள் சென்றால் அது தொழில்நுட்ப போராக மாறி, அதன் நெருக்கடிகள் ஒடுக்கப்படும் நாடுகள், உள்நாட்டு மக்கள் மீது சுமத்தப்படும் என்பதை டிரம்பின் கொள்கைகள் உணர்த்துகின்றன. டிரம்பின் வர்த்தகப் போரும் கூட, தனது வர்த்தகப் பற்றாக்குறை நெருக்கடியை தீர்த்து "தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கம் கொண்டதே.
செயற்கை நுண்ணறிவு துறையில் சீனா அமெரிக்காவை விட பெரும் பாய்ச்சலில் உள்ளது. அமெரிக்கா எலான் மஸ்கின் Open AI திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட "சாட் ஜிபிடி"யானது (Chat GPT) விமானப்படை ஆய்வகம் (Air Force Research Laboratory), லாஸ் அலாமோஸ் தேசிய ஆய்வகம் (Los Alomos National Lab), பென்ஸில்வேனியா (Pennyslavania)வின் காமன்வெல்த், மொழிபெயர்ப்பு அலுவலகங்கள் (State of Minnesota’s Enterprise Translation Office) ஆகிய துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாட் ஜிபிடிக்கு போட்டியாக வந்துள்ள சீனாவின் டீப்சீக் (Deepseek) பல அம்சங்களில் அதனை பின்னுக்கு தள்ளியுள்ளது. Open source, தொழில்நுட்ப இலக்குகள் (Tasks), கணிதத்துறை கணக்கீடுகளில் (Mathematical Computations) அதிவேக செயல்திறன் மற்றும் குறைவான செலவினம் போன்றவற்றில் டீப்சீக் முன்னேற்றம் வாயந்ததாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் மார்க் ஷூகர்பெர்க்கின் Meta நிறுவனம் Open AI, கூகிள் (Google)-உடன் போட்டி போட்டு சுமார் 60-65 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. Meta (மெட்டா) நிறுவனத்தின் அடுத்த தலைமுறை AI-Model-ஆன Llama-4-ஐ உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மார்க் அறிவித்துள்ளார். கூடுதலாக AI Engineer-ஐ (செயற்கை நுண்ணறிவு பொறியாளர்) உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு திட்டமிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது தவிர 1 பில்லியன் டாலர் செலவில் 2GW திறனுள்ள மாபெரும் தகவல் மையத்தையும் (Data Centre) உருவாக்கப் போகிறது Meta நிறுவனம். இந்த மையம் 2025 ஆண்டு இறுதிக்குள் சுமார் 1 GW திறன் கணக்கீட்டு வலிமையை (Computing Power) கொண்டிருக்கும் என்கிறார் மார்க். டிரம்ப் ஆட்சி Open AI (எலான்), Soft Bank (ஜப்பான்), Oracle (அமெரிக்கா) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கும் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான "செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு திட்டத்தில்" (AI Infrastrcuture Project) தனது நிறுவனம் இணையவுள்ளதாகவும் அறிவித்துளளார். அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஜோஸ் (jeff Bezos) AI துறையில் 100 பில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார். அமேசானின் AI நிறுவனமான Anthropic தனது அடுத்த தலைமுறை AI தொழில்நுட்பமான Gen AI Chatbot Claude -ல் முதலீட்டை இருமடங்காக உயர்த்தியுள்ளது. Anthropic (ஆந்த்ரோபிக்) நிறுவனமானது அமேசானின் Trainium மற்றும் Inferentia chips-ஐ கொண்டு foundational modelsக்கு பயிற்சி அளித்து பணிகளில் ஈடுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
டிஜிடல் நிதியமைப்பு தொழில்நுட்பம் (Digital Financing Technolgoy)
ஜனவரி 23, 2025 அன்று டிரம்ப் "பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் டிஜிடல் சொத்துகள் (Digital assets), Blockchain தொழில்நுட்பம் (Digital ledger) மற்றும் தொடர்புடைய பிற தொழில்நுட்பங்களை பொறுப்புமிக்க வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை அமெரிக்கா முன்னெடுக்கும்" என்று தனது ஜனாதிபதி உத்தரவில் (EO) குறிப்பிட்டுள்ளார். டிஜிடல் சொத்துகள் குறித்த பைடனின் உத்தரவை இரத்து செய்து, ஜனாதிபதியின் நேரடி கண்கானிப்பில் (அதாவது எலான்-டிரம்பின்) இயங்கும் குழுவை (President’s working group) நியமித்துள்ளார் டிரம்ப். இத்துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அந்தக் குழுவில் இடம் பெறுவர். தற்போது நிலுவையில் உள்ள டிஜிடல் சொத்துகளை பாதிக்கும் அம்சங்களைக் கண்டறிந்து அக்குழு ஒழுங்குபடுத்தும். கூடுதலாக வங்கிகளும் பிற நிறுவனங்களும் பயனாளர்கள் (Users) சார்பாக அவர்களின் கிரிப்டோ-சொத்துகளை (Crypto assets) கட்டுப்படுத்தும் முந்தைய பைடன் ஆட்சியின் உத்தரவையும் இரத்து செய்துள்ளார் டிரம்ப். மற்றும் CBDC (Central Bank Digital Currency) தொடர்பான விசயங்களில் எவ்வித நடவடிக்கையும் ஒன்றிய அரசு நிறுவனங்கள் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார் டிரம்ப்.
சுருக்கமாக சொல்வதெனில், நிதியமைப்பை தொழில் நுட்பமயமாக்குவது எனும் பேரில் அதன் மீதான அரசுக் கட்டுப்பாட்டை நீக்கி கார்ப்பரேட்மயமாக்குவதே டிரம்பின் கொள்கையாகும். ஏனெனில் தொழில்நுட்ப "சந்தை ஏகபோகத்திற்கு" நிதியமைப்பு மீதான ஏகபோகம் அவசியமாகும். DOGE கும்பல் கருவூலத்தின் நிதியமைப்பை கட்டுப்படுத்த துவங்கி விட்டனஎன்பதை நாம் முன்பே கண்டோம்; அது மேலும் விரிவடையும் என்பதே மேற்கூறிய விவரங்கள் உறுதிப்படுததுகின்றன.
NASA (விண்வெளி ஆய்வு மையம்)-வை கட்டுப்படுத்தும் DOGE
நாசாவின் செலவினங்கள் மற்றும் அதன் ஒப்பந்தங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் DOGE-க்கு வழங்கப்பட்டுள்ளது. நாசா தலைவரான ஜானெட் பெட்ரோ (Janet Petro) DOGE-ன் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரப்படும் என்று கூறியுள்ளார்.
- செலவினத்தை கட்டுப்படுத்துவதற்காக நாசாவின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்வது
- நாசா ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது
ஆகிய பாசிச நடவடிக்கைகளை DOGE மேற்கொண்டு வருகிறது.
"நாசாவை மறுகட்டமைப்பு செய்வது" எனும் பெயரில் முதன்மை விஞ்ஞானிகள் அலுவலகம் உள்ளிட்ட மூன்று துறைகளை மூடப்போவதாக நாசா அறிவித்துள்ளது. மாற்றீடாக புதிய ஒப்பந்தங்கள் எலானின் SPACE-X நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் முன் ஏற்பாடாக DOGE கும்பல், "Change Manager Support Service" என்ற திட்டத்திற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட 420 மில்லியன் டாலர் மதிப்பிலான பல ஒப்பந்தங்களை இரத்து செய்துள்ளது. நாசாவிற்கான X தள கணக்கையும் எலான் மஸ்க் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அது நாசாவின் "ஊழல், மோசடி, கழிவு" ஆகியவற்றை பெற்று கண்காணிக்குமாம்.
எலான் மஸ்க்கின் SPACE-X மற்றும் United Launch Alliance நிறுவனங்களும், அமேசானின் Blue origin நிறுவனமும் அமெரிக்க விண்வெளி ஏவுகணை (US Space Force Rocket launch) தொடர்பான 13.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை டிரம்ப் ஆட்சியில் பெற்றுள்ளன. டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சுமார் 290 மில்லியன் டாலர் நிதியுதவி செய்து அதைவிட பல மடங்கு பலன் பெற்றுள்ளார் எலான் மஸ்க். இவ்விரு நிறுவனங்களும் பெண்டகனின் மிகவும் முக்கியமான, மிகவும் சவாலான (Complex) செயற்கை கோள்களை 2029-க்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளன.
விண்வெளி பாதுகாப்பு துறையின் தேசிய பாதுகாப்பிற்கான ஏவுகணை கொள்முதல் திட்டத்தின் (Space Force’s National Security Space launch Programme) கீழ் 2029-க்குள் சுமார் 50 ஏவுகணை திட்டங்களை நிறைவேற்றித் தருமாறு இவ்விரு நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளன. SPACE-X நிறுவனம் அவற்றில் 29 ஒப்பந்தங்களை 5.9 பில்லியன் டாலர் மதிப்பில் பெற்றுள்ளது. United launch Alliance (ULA) நிறுவனம் போயிங் (Boeing) நிறுவனத்துடன் இணைந்து கூட்டு திட்டத்தின் அடிப்படையிலும், லாக்கீட் மார்டின் (Lockheed Martin) நிறுவனமும் 5.3 பில்லியன் டாலர் மதிப்பிலான 19 ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளன. ஜெஃப் பெஜோசின் Blue Origin நிறுவனம் 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான 9 ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.
Falcon 9 ராக்கெட்டை உருவாக்கிய பிறகு SPACE-X நிறுவனம் உலகின் மிக வலுவான ஏவுகணை நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் அந்நிறுவனம் இராணுவ விண்வெளி ஏவுகணைகளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. FALCON 9 மற்றும் அதன் மிக வலுவான மூன்று கனரக FALCON ஏவுகணைகளை செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. United Launch Alliance-ன் புதிய 2 Vulcan ராக்கெட்டுகள் கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டன. பெண்டகன் இதற்கு தேசிய பாதுகாப்பிற்கான சிறந்த ஏவுகணை என்று சான்றிதழ் தந்து அங்கீகரித்துள்ளது. SPACE-X நிறுவனத்தின் FALCON-9 உடனான "ஏவுகணை செலுத்து விகிதம் (Launch Rate)", Blue Origin மற்றும் ULA-ஐ விட மிக மிக அதிகமாகும். எனவே நாசாவின் பெரும்பான்மை இராணுவ திட்டங்களை எலான் மஸ்க்கின் SPACE-X கபளீகரம் செய்து வருகிறது.
தேசிய பாதுகாப்பிற்கான இராணுவ ஏவுகணை திட்டங்களின் ஒப்பந்தங்களில் (in Early phase - Phase-2) 40% SPACE-X நிறுவனத்திற்கும், 60% ULA விற்கும் 6 பில்லியன் டாலர் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இரண்டுமே எலான் மஸ்க்கின் நிறுவனங்களாகும்.
இந்த தகவல்கள் நாசாவில் எலான் மஸ்க்கின் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகத்தைக் காட்டுகிறது. 2-வது இடத்தில் அமேசானின் Blue Origin உள்ளது.
சமூக வலைதளத்தில் ஆதிக்கம்
மார்க்கின் முகநூல் நிறுவனம் சமூக வலைதளத்தில் அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பாசிசக் கூட்டுக்கு ஆதரவாக களம் அமைத்து தருகிறது. இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை விழுங்கி இன்று மாபெரும் சமூக வலைதளை ஏகபோக நிறுவனமாக Meta நிறுவனம் உருவெடுத்துள்ளது. மக்களிடையே கருத்துருவாக்கம் செய்வது; தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக (அ) எதிராக பிரச்சாரம் செய்து கருத்துருவாக்கம் செய்வது போன்ற முக்கிய 'பணிகளை இன்று சமூக வலைதளங்கள் செய்து வருகின்றன. பாஜகவிற்கும், அதிமுகவிற்கும், அமெரிக்காவிற்கும், திமுகவிற்கும் எதிரான கருத்துகள் முகநூலில் தடை விதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். இத்தகைய டிஜிடல் (அ) டெக்னோ பாசிசத்தின் முகமாக மெட்டா (Meta) நிறுவனம் விளங்குகிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவில் உருவாகி வரும் DOGE-TECHNO பாசிசத்தின் முக்கிய பங்குதாரராக விளங்குகிறது.
தொலைத் தொடர்புத் (Tele communication) துறை
தொலைத் தொடர்பு துறையிலும்கூட "எலான் மஸ்கின், Starlink நிறுவனம், அமேசான் நிறுவனம், Metaverse திட்டம் வாயிலாக Meta நிறுவனம் ஆகியவற்றின் ஏகபோக சந்தைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டுப் பாசிச கொள்கை, அயலுறவு கொள்கை, வர்த்தகப் போர், அகண்ட அமெரிக்கா உள்ளிட்ட அமெரிக்க முதன்மைக் கொள்கை குறித்த மார்க்சிய அணுகுமுறை
அ) புற நிலையில், தனது உலக மேலாதிக்கத்திற்கு போட்டியாக பிரம்மாண்டமாக வளர்ந்துவரும் சீனாவின் தொழில்நுட்ப உலக மேலாதிக்கம்,
ஆ) அக நிலையில், கடும் பொருளாதார நெருக்கடி
ஆகிய இரண்டு பொருளியல் காரணிகளே அமெரிக்க முதன்மை கொள்கை எனும் வலதுசாரி பாசிசத்தின் அடிப்படையாக விளங்குகின்றன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது, தொழில்நுட்ப துறைகளில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவது ஆகிய இரண்டையும் ஒரு சேர நிகழ்த்த அதுவும் துரிதமாக நிகழ்த்த டிரம்ப் விரும்புகிறார். ஆகவேதான் உள்நாட்டில் DOGE பாசிச ஆட்சியையும், அதன் கீழ் தொழில்நுட்பத்துறை பாசிசத்தை (டெக்னோ பாசிசம்) கட்டியமைக்கும் பொருட்டு, தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகளின் நிதிமூலதன சர்வாதிகாரத்தையும் நிறுவுகிறார். அதற்கு தடையாக உள்ள கூட்டாட்சி முறை, அரசியல் அமைப்புச் சட்டம் உள்ளிட்ட அரைகுறை முதலாளிய ஜனநாயக வடிவங்கள் எலான் - டிரம்ப் கும்பலால் தூக்கியெறியப்பட்டு பாசிசம் அரங்கேற்றப்படுகிறது.
1. ஒரு ஏகாதிபத்திய நாடு தனது மேலாதிக்கத்திற்கு சவாலாக வளர்ந்து வரும் பிற ஏகாதிபத்திய நாடுகளை சந்தையில் இருந்து அகற்றி தனது மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கிலேயே கொள்கைகளை வகுக்கும் என்பது லெனினியத்தின் அடிப்படைகளுள் ஒன்று. அது அமெரிக்காவின் கொள்கைகளில் வெளிப்படுவதை நாம் காணலாம்.
தொழில் நுட்ப மேலாதிக்கத்திற்கு அருமண் தனிமங்கள், சிப்கள் ஆகியன அத்தியாவசியமான மூலப்பொருட்களாகும். இவற்றை கைப்பற்றுவதில் சீனா உலகின் முதன்மை நாடாக விளங்குகிறது. ஆகவே அவற்றை கைப்பற்ற அமெரிக்கா விரும்புகிறது. அதன் விளைவாகவே அமெரிக்கா - சீனாவிற்கு இடையிலான இந்தப் போட்டி அல்லது போர் தொழில்நுட்ப போராகவும் (Tech war) சாரத்தில் அது அருமண் தனிமங்களுக்கான போராகவும் (War for Rare earth elements) மற்றும் குறை மின்கடத்திகளுக்கான போராகவும் (Chip war) உள்ளது. மிக முக்கியமாக அவை ஆதி திரட்டல் வடிவிலான போர்களாக உள்ளது.
உக்ரைனில் கனிம வளங்களுக்காக ரசியாவுடனான அமெரிக்காவின் சமரசம், மின்கடத்தி உற்பத்தியின் (Chip) தலைநகரமாக விளங்கும் தைவானை மறுபங்கீடு செய்யும் நோக்கிலான அமெரிக்கா - சீனாவின் பனிப்போர் தயாரிப்புகள், பாலஸ்தீனம் இல்லாத இசுரேலை உருவாக்கி அங்கு மேலாதிக்க சக்தியாக வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பது போன்றவற்றிற்கு அடிப்படை மேற்சொன்ன காரணிகளே ஆகும்.
"முதலாளித்துவ சமூகத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் ஒரு படி முன்னேறுகிறது எனில், உழைப்புச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் ஒரு படி முன்னேறுகிறது என்றே அர்த்தமாகும்" என்று லெனின் கூறுவார். (நூல் திரட்டு தொகுதி 18, பக்கம் 594-595)
அமெரிக்காவின் தொழில்நுட்ப கொள்கைகளை ஆராய்ந்தால் லெனினியம் எவ்வளவு மெய்யானது என அறிந்து கொள்ளலாம்.
கூடுமானவரை மனித உழைப்பைக் குறைப்பதே எங்கள் கொள்கை என எலான் - டிரம்ப் கும்பல் கூறுகிறது.
லெனினின் கூற்று பாசிச காலகட்டத்தில் மேலும் மெய்ப்பிக்கப்படுகிறது. அமெரிக்காவின் டெக்னோ பாசிசம் உழைப்புச் சுரண்டலை மட்டும் அதிகரிக்கவில்லை; கூடுதலாக மனித உழைப்பையே நிராகரிக்கிறது.
ரசியா, சீனா, ஐரோப்பிய யூனியன் வல்லரசுகள், அமெரிக்காவின் தொழில்நுட்ப கொள்கைக்கு ஏற்ப இந்தியாவில் வகுக்கப்படும் தொழில்நுட்ப கொள்கை என எல்லாவற்றிலும் இதே அணுகுமுறைதான். முதலாளித்துவ நாடுகளை விட காலனிய நாடுகளில் நிகழ்த்தப்படும் சுரண்டல் மிகவும் கொடூரமானது.
இராணுவப் பொருளாதாரத்தைக் குறைத்து, தொழில் நுட்பத்துறையில் பாசிசப் பொருளாதாரக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்துவதால் அமெரிக்காவின் நெருக்கடி தீரப்போவதில்லை. மாறாக நெருக்கடி தீவிரமடையவே செய்யும்.
தொழில்நுட்ப பாசிசமானது மனித உழைப்பையே நிராகரிக்கிறது. மக்களின் வாங்கும் சக்தியின்மையால் உருவாகும் நெருக்கடியை மக்களின் உழைப்பை நிராகரிப்பதன் மூலம் தீர்க்க முயல்கிறது பாசிசம். ஆனால் நெருக்கடி மேலும் பன்மடங்காக தீவிரமடையுமே ஒழிய நெருக்கடி தீராது.
நெருக்கடிக்கு எது காரணமோ அதையே தீர்வாக முதலாளித்துவ ஏகபோகம் முன்வைக்கிறது. ஏகாதிபத்தியத்திடம் வேறு தீர்வும் இல்லை. அத்தகைய மாயச்சுழலில் சிக்குவதை தவிர ஏகாதிபத்தியத்திடம் வேறு மார்க்கமும் இல்லை. ஏகபோகம் நீடிக்கும் வரை ஏற்றத்தாழ்வான வளர்ச்சியும் நெருக்கடியும் தவிர்க்க முடியாது. அமெரிக்க நெருக்கடிக்கு தீர்வு சோசலிசத்தை தவிர வேறு மார்க்கம் இல்லை. அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் சோசலிச திட்டத்துடன் நடக்கவில்லை. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சோசலிச திட்டத்துடன் அமெரிக்கர்கள் அணி திரண்டால்தான் அது சாத்தியம்.
2. "அகண்ட அமெரிக்கா" எனும் டிரம்பின் திட்டடமானது, கிரீன்லாந்து உள்ளிட்ட ஆர்க்டிக் நாடுகளில் வளர்ந்து வரும் சீன மேலாதிக்கத்தை கட்டுப்படுத்தி தனது மேலாதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டதே ஆகும். இந்த அமெரிக்க விரிவாதிக்க கொள்கை உள்நாட்டு தொழில்நுட்ப ஏகபோக சந்தையை அண்டை நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்பது சொல்லாமலே விளங்கும். மோடி கும்பலின் அகண்ட பாரத திட்டத்தோடு இணைத்து இதை புரிந்து கொள்ளலாம்.
3. உலக நாடுகள் மீது டிரம்ப் துவங்கிய வர்த்தகப் போர் இன்று குறிப்பாக சீனாவுக்கு எதிரானதாக பரிணமித்து நிற்கிறது.
அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையை போக்கி, அதன் மூலம் வரும் வருவாயை தொழில்நுட்ப மேலாதிக்க நலன்களுக்கு திருப்பிவிடும் நோக்கிலான டிரம்பின் வர்த்தகப் போரும், அதற்கான சீனா உள்ளிட்ட நாடுகளின் எதிர்வினையும் நெருக்கடியும் பாசிசமும் தீவிரமடையும் என்பதைத்தான் உணர்த்துகின்றன. டிரம்பின் வர்த்தகப் போரால் உலக பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி நகரும் என முதலாளிய பொருளாதாரவாதிகளே எச்சரிக்கிறார்கள்.
உலகமய - தாராளமய - தனியார்மயக் கொள்கைகளினால் ஏகாதிபத்திய நாடுகள் தமக்குள்ளும் காலனிய நாடுகளுடனும் சந்தைகளை தடையற்று பரிமாறிக்கொள்வது வளர்ச்சியைக் கொண்டு வரும் என ஏகாதிபத்திய NGO க்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சாரங்கள் படுமோசமான முறையில் அம்பலமாகி நிற்கின்றன. ட்ரம்பின் வர்த்தகப் போர் உலகமயக் கொள்கைகளின் படுதோல்வியை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன.
ஏகாதிபத்திய நாடுகள் தமக்குள் சந்தைகளை பரிமாறிக் கொள்வதில், சம பலத்தில் போடப்படும் ஒப்பந்த முறைகள் கட்டுப்பாடுகள், அவை காலனிய நாடுகளுடன் சந்தையைப் பரிமாறிக்கொள்வதில் இல்லை. பல நிபந்தனைகள் ஒரு தலைப்பட்சமாக காலனிகளுக்கு மட்டும் உலக வர்த்தக கழகம் மூலம் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஏகாதிபத்திய நாடுகள் மீது காலனி நாடுகள் அவ்வாறு விதிக்க முடியாது. டிரம்பின் வரி உயர்வை இந்தியா மறுப்பின்றி ஏற்றுக்கொள்வதையும், சீனா பதிலுக்கு வரி விதிப்பதையும் நாம் காண்கிறோம்.
உலகமயத்தால் உலக வர்த்தகச் சங்கிலியில் இணைக்கப்பட்ட நாடுகள், ட்ரம்பின் வர்த்தகப் போரால் அடுத்தடுத்து சீட்டுக்கட்டு போல சரியக் காத்திருக்கின்றன. அமெரிக்காவும் சீனாவும் போட்டிப் போட்டுக்கொண்டு வரி விகிதத்தை விதிப்பதால் பிற நாடுகள் குறிப்பாக இவற்றின் காலனிய நாடுகள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன. பதிலுக்கு சீனா, மெக்சிகோ, கனடா, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா மீது வரியை உயர்த்தியதானது அமெரிக்காவிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவை எல்லாம் உலகமயக் கொள்கையின் படுதோல்வியைத்தான் காட்டுகின்றன. டிரம்பின் வர்த்தகப் போர் உலகப் பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு நிலைமைகள் உள்ளன. அவை ஏகாதிபத்திய நாடுகளில் பாசிசப் போக்கையும், போர் தயாரிப்புகளையும் தீவிரப்படுத்தும். ஏற்கனவே தீவிரம் பெற்றும் வருகின்றன.
இந்தியாவுடன் சீனா, ஐரோப்பிய யூனியனின் வல்லரசுகள் வர்த்தகம் செய்வதை டிரம்ப் விரும்பவில்லை. ஆகவேதான் இந்தியாவுடன் இரு தரப்பு ஒப்பந்தங்கள் எனும் வடிவத்திற்கு செல்கிறார். உலகமயக் கொள்கையால் இலாபம் பலவற்றை அனுபவித்துவிட்டு பிற நாடுகள் முன்னேறிவிட்டதாகவும், தான் மட்டும் பின்னேறிவிட்டதாகவும் பொய் பேசுகிறார். உலகமய நிறுவனங்களில் இருந்து வெளியேறுவதாக சொல்லி, அமெரிக்காவே முதன்மை எனும் பாதுகாப்புவாதம் (Protectionism) பேசுகிறார். மறுபுறம், அமெரிக்காவுக்கு பிற நாடுகள் தமது சந்தையை தாராளமாக திறந்துவிட வேண்டும், ஆனால் தனது சந்தை மூடப்படும் எனும் கதவடைப்பு கொள்கையை (closed door policy) பேசுகிறார். இதில் இருந்து தேசியவாதம் டிரம்பால் முன்வைக்கப்பட்டு பாசிசமாக உருக்கொள்வதால் அது தேசியவெறியாக, ஆரிய இனவெறிப் பாசிசமாக வெளிப்படுகிறது. அமெரிக்கா முதன்மை என்பது சாரத்தில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் குறிப்பாக சிலிகான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த எலான், மார்க், ஃபெசோஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் சிறுகும்பலின் நலன்களுக்கானது.
வர்த்தகப் பற்றாக்குறை வர்த்தக உபரியால் உருவாகிறது. வர்த்தக உபரியானது உபரி உற்பத்தியால் உருவாகிறது. இது முதலாளியத்தின் தவிர்க்க இயலாத விதி என்கிறார் மார்க்ஸ். ஆனால் டிரம்ப் நெருக்கடிக்கு காரணமான அராஜகமான உற்பத்தியில் இருந்து மீள்வதற்கு, மென்மேலும் அராஜகமான உற்பத்தி ஏகபோகத்திற்கான (தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகளின் ஏகபோக நலன்களுக்கான உற்பத்தி முறை) பாசிசத்தை கட்டியமைக்கிறார். அது நெருக்கடியை தீவிரப்படுத்தவே செய்யும். நெருக்கடியின் சுமைகள் உள்நாட்டு மக்கள் மீதும் இந்தியா போன்ற காலனிகள் மீதும் சுமத்தப்பட்டு அந்த நாடுகளிலும் பாசிசம் தீவிரம் பெறும். காலனிகளை கொள்ளை அடிப்பதற்கான பனிப்போரும் தீவிரம் அடையும். இந்த மறுபங்கீட்டுப் போர்கள் மூலம் ஏகாதிபத்தியங்கள் உலக மேலாதிக்கத்திற்கு முயலும். முயல்கின்றன.
4. டிரம்பின் அயலுறவுக் கொள்கை பைடன் ஆட்சியின் கொள்கையில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. பைடன் ஆட்சியில் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் பிரதானமாக ஆயுதத் தளவாட கார்ப்பரேட்டுகளைச் சார்ந்து (US Military Industrial complex) கொள்கைகள் வகுக்கப்பட்டன. ரசியா, சீனா இரண்டுமே பிரதான எதிரிகள் என வரையறுத்து, உக்ரைனில் ஜெலன்ஸ்கி தரகு கும்பலை பதிலிப் போரில் ஈடுபடுத்தி, இராணுவ தொழில்துறை நிறுவனங்களுக்கு இலாபம் தேடித் தந்தது.
ஆனால் டிரம்ப் கும்பல் சீனாவை மட்டும் பிரதான எதிரியாக வரையறுத்து ரசியாவுடன் சமரசப் போக்கை கையாளும் கொள்கையை வகுத்துள்ளது. உக்ரைனில் ரசியாவுடன் சமரசம் செய்து கொண்டு ஒப்பந்தம் மூலம் உக்ரைனின் கனிம வளங்களை மறுபங்கீடு செய்ய முயல்கிறது.
தொழில்நுட்பத் துறை, அதற்கான மூலப்பொருட்கள் மீதான உலக மேலாதிக்கத்தில் சீனாவே அமெரிக்காவின் மேலாத்திக்கத்திற்கு போட்டியாக வளர்ந்துள்ளது. அதில் அமெரிக்கா, ரசியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிற ஏகாதிபத்தியங்களைவிட சீனா பல படிகள் முன்னேறி வருகிறது. ஆகவேதான் டிரம்ப் சீனாவை முதன்மை எதிரியாக வரையறுத்து அயலுறவு கொள்கையை வகுத்துள்ளார். அதற்கேற்ப உள்நாட்டிலும் தொழில் நுட்ப ஏகபோகத்திற்கான கொள்கையை அமல்படுத்தி வருகிறார். இராணுவம், உற்பத்தி, அரசாங்கம், உள்நாட்டு பாதுகாப்பு, ஆயுத தளவாட உற்பத்தி, கல்வி உள்ளிட்ட சகல துறைகளிலும் தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை அனுமதிக்கிறார். பொருளாதார நெருக்கடி அமெரிக்காவை ஆட்டம் காண செய்துள்ளதால் மூர்க்கத்தனமான பாசிச ஆட்சியாக அங்கு வெளிப்படுகிறது.
ஆக, அமெரிக்க முதன்மை கொள்கையின் அனைத்து அம்சங்களும் சீனாவின் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை முறியடித்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கம் கொண்டதே.
அதன் பொருட்டே சீனாவின் டெக்னோ பாசிசத்திற்கு போட்டியாக அமெரிக்காவில் டெக்னோ பாசிசத்தை கட்டியமைக்கிறார் டிரம்ப்.
சீனாவில் Tencent Holdings, Alibaba, PDD Holdings, BYD, Xiaomi Corporation, Meituan, Net ease, JD.com, Trip.com, Baidu போன்ற 10 தொழில் நுட்ப கார்ப்பரேட்டுகளின் (Tech corporates) நிதிமூலதன ஏகபோக சர்வாதிகாரத்திற்கான தொழில்நுட்ப பாசிசம் (Techno fascism) கட்டியமைக்கப்பட்டு வருகிறது.
மறுபுறம் அமெரிக்காவில் எலான் மஸ்க், மார்க், ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட், கூகிள் உள்ளிட்ட தொழில் நுட்ப கார்ப்பரேட்டுகளின் ஏகபோக நிதிமூலதன சர்வாதிகாரத்துக்கான தொழில்நுட்ப பாசிசம் (டெக்னோ பாசிசம்) கட்டியமைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இத்தகைய தொழில்நுட்ப போர் (Tech war) மற்றும் ஏகபோக தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகளின் நிதிமூலதன சர்வாதிகரத்திற்கான பாசிசக் கொள்கையால் (Techno fascism), ஏற்கனவே நிலவி வந்த ஏகாதிபத்திய முரண்கள் மேலும் கூர்மையடைந்துள்ளன.
- சீனாவை முதன்மை எதிரியாக வரையறுத்து ரசியாவுடன் சமரசம் காண்பது, உக்ரைன் சந்தையை ஒப்பந்தம் மூலமாக ரசியாவுடன் மறுபங்கீடு செய்து கொள்வது,
- வர்த்தகப் போரின் மூலம் சீனாவை பலவீனப்படுத்துவது, அதன் மூலம் சீனச் சார்பு நாடுகளை கட்டுப்படுத்துவது,
- மத்திய கிழக்கில் சீனாவின் மேலாதிக்கத்தை முறியடிக்க இஸ்ரேல் - இந்தியா - அமெரிக்கா எனும் பாசிசக் கூட்டை பலப்படுத்துவது மற்றும் ஈரானை அணு ஒப்பந்தம் மூலம் பணிய வைப்பது, ரசியா - சீனா - ஈரான் எனும் சங்கிலியை உடைப்பது, பாலஸ்தீனம் இல்லாத அகண்ட இசுரேலை உருவாக்குவது, அதன் மூலம் மத்திய கிழக்கின் மீதான அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது,
- தெற்காசியாவில் வலுவான மேலாதிக்க சக்தியாக உள்ள சீனாவை முறியடிப்பது, தனது தொழில்நுட்ப, வர்த்தக, இராணுவ மேலாதிக்க நலன்களுக்கு ஏற்றவாறு இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் இந்தியச் சந்தையை மாற்றியமைப்பது, அதன் மூலம் சீனாவிற்கு எதிரான யுத்ததந்திர கூட்டாளியாக உள்ள இந்தியாவுடன் உறவுகளை மேலும் பலப்படுத்துதல், தைவானை ஆயுத வழியில் மறுபங்கீடு செய்ய சீனாவுடன் போருக்கு தயாரித்தல், தென்சீனக் கடலை மையப்படுத்திய போர் தயாரிப்புகள்,
ஆகியன டிரம்பின் முக்கியமான வெளியுறவு கொள்கைகளாகும்.
நேட்டோ விதிகளின் படி ஐரோப்பிய யூனியன் நிதி ஒதுக்கவில்லை- ஆனால் நேட்டோவால் அதிக பலன் பெற்றது ஐரோப்பிய வல்லரசுகள்தான். ஆகவே நேட்டோவில் இருந்து வெளியேறுகிறோம் என்று டிரம்ப் அறிவித்தார். அத்துடன் போருக்கு காரணம் உக்ரைன்தான் எனும் ரசியாவின் நிலைப்பாட்டை ஆதரித்து, ரசியாவுடன் சமரசம் செய்து கொண்டு உக்ரைனை மறுபங்கீடு செய்ய முயன்று வருகிறார். புதின், தான் ஆக்கிரமித்த உக்ரைனின் பகுதிகளில் உள்ள கனிமவளங்களை கூட அமெரிக்காவுடன் பங்குப்போட தயார் என அறிவித்துள்ளார். ஜெலன்ஸ்கியுடனும் கனிம வள ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயல்கிறார் டிரம்ப்.
இதனால் அமெரிக்கா துரோகம் இழைத்துவிட்டதாக கூறி ஐரோப்பிய யூனியன் தனி இராணுவ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. EU Army Readiness 2030 எனும் அதன் இலக்கானது, 2030 க்குள் ஐரோப்பிய வல்லரசுகள் உலக மேலாதிக்கத்துக்கு தயார் எனும் பிரகடனமே ஆகும். தனது ஐரோப்பிய மேலாதிக்கத்திற்கு சவாலாக உள்ள ரசியாவை பிரதான எதிரி என அறிவித்தது மட்டுமின்றி,லித்வேனியாவில் ரசிய எல்லைக்கு அருகில் இராணுவ தளத்தையும் ஜெர்மனி நிறுவியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பிய யூனியன் தனி இராணுவக் கூட்டமைப்பை உருவாக்கி, தனது முதல் இராணுவத் தளத்தையும் உருவாக்கியுள்ளது.
உக்ரைனில் போர் நிறுத்தம் செய்வதாக சொன்னாலும் ரசியாவும் உக்ரைனும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திய பாடில்லை. இதற்கும் உக்ரைன்தான் காரணம் என கூறி புதினுக்கு நேசக்கரம் நீட்டுகிறார் டிரம்ப். ரஷ்யாவின் கிழக்கு ஐரோப்பிய மேலாதிக்கத்தை அங்கீகரிக்கும் அளவுக்கு நேசக்கரம் நீள்கிறது. ரசியாவுடனான சமரசம் இத்துடன் நிற்கவில்லை. மத்திய கிழக்கில் ஈரானுடனான அணு ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் செய்யவும் ரசியா முன்வந்துள்ளது. சிரியாவில் ரஷ்யாவின் இராணுவத் தளத்தை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. ஈடாக ரசியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. மட்டுமின்றி ரசியா எலான் மஸ்க்குடன் இணைந்து விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தும் என்று கூறி, எலானை சோவியத் கால விஞ்ஞானியுடன் ஒப்பிடுகிறார் புதின்.
ஆக, கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க - நேட்டோ எதிர் ரசியா என்றிருந்த முரண்பாடு, இன்று ஐரோப்பிய யூனியன் எதிர் ரசியா என மாறியுள்ளது. மட்டுமின்றி அமெரிக்காவும் ரசியாவும் சமரசம் செய்து கொண்டு கைகோர்க்கின்றன. ரசியாவின் இந்த போக்கு சீனாவுக்கு அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. ரசியாவுக்கும் சீனாவுக்கும் முரண் துவங்கியுள்ளது. இன்னும் முற்றவில்லை. ஷாங்காய் கூட்டமைப்பு நீடிக்கிறது.
அமெரிக்க - சீன தொழில்நுட்ப போரானது, ஏற்கனவே நிலவி வந்த ஏகாதிபத்திய முரண்களை மேலும் அடுத்தடுத்து கூர்மைப்படுத்தியுள்ளன என்பதைத்தான் இவை காட்டுகின்றன.
ஏகாதிபத்தியங்கள் ஆயுத வழியிலும், வாய்ப்பிருந்தால் அமைதி வழியிலும் சந்தைகளை பங்கிட்டுக்கொள்ளும்; அதன் பொருட்டு அணிச்சேர்க்கைகள் மாறும் என லெனின் சொன்னது இன்றும் பொருந்துகிறது.
ரசியா, உக்ரைன் போர் மூலம் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வீழ்த்தும் என கனவுலகில்
சஞ்சரித்தவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் புதின். ரசியாவின் போர் தற்காப்பு போர் எனவும் அவர்கள் மந்திரங்களை ஓதினார்கள். ஆனால் உக்ரைனை மறுபங்கீடு செய்வதற்குத்தான் போர் நடந்தது என்பதை அமெரிக்க, ரசிய நாடுகளுக்கிடையேயான சமரச உடன்பாடு அம்பலப்படுத்திவிட்டது.
ஜெலன்ஸ்கியின் போர் தேசியப் போர், அதன் அமெரிக்க சார்பு சரியானது என சொன்னவர்கள் முகத்தில் ஜெலன்ஸ்கி கரியை பூசிவிட்டார். கனிமவளங்களை டிரம்புக்கு தாரை வார்த்து தானொரு அமெரிக்க எடுபிடி என்பதை நிரூபித்துள்ளார். அடுத்து, ஐரோப்பிய யூனியனின் இராணுவக் கூட்டமைப்பில் இணைந்து ரசியாவை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார். ஏகாதிபத்தியத்தை நம்பினால் என்ன கதி ஆகும் என்பதை இன்னமும் உணரவில்லை. உக்ரைன் முதலாளிகளின் நலனுக்காக ஐரோப்பிய யூனியனுடன் கைகோர்த்து மீதமுள்ள நாட்டையும் பலி கொடுக்க தயார் ஆகிவிட்டார்.
அமெரிக்கா கிழக்கு ஐரோப்பாவில் கடைபிடித்த அதே அணுகுமுறையை மத்திய கிழக்கிலும், தெற்காசியாவிலும் கடைபிடிக்காது. காரணம் அப்பகுதிகளில் சீனாவின் மேலாதிக்கம் வளர்ந்து வருவதுதான் என்பது எளிதில் விளங்கும்.
பாலஸ்தீனம் மீதான இன அழிப்பு தொடர்கிறது. இசுரேலுடன் சேர்ந்து போரை நடத்திக் கொண்டே காசா மறுவாழ்வு என கதைக்கிறார் பாசிசக் கோமாளி டிரம்ப். உதவிகளை நிறுத்தி பாலஸ்தீன மக்களை அகதிகளாக்கி வெளியேற்றும் வேலையையும் செய்து வருகிறது இக்கும்பல். ஹவுதி படைகள் மீதான தாக்குதல் மூலம் ஈரானை அச்சுறுத்துகிறது. சீனாவிற்கு எச்சரிக்கை விடுக்கிறது. ரசிய - சீன - ஈரான் எனும் சங்கிலியை உடைக்க முயல்கிறது. ரசியாவை அமெரிக்க - ஈரான் அணு ஒப்பந்தத்தில் மத்தியஸ்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்துகிறது. இதற்கு போட்டியாக சீனா - ஈரான் அணு ஒப்பந்த நடவடிக்கைகள் தீவிரம் பெறுகின்றன. இசுரேலை எதிர்க்கும் துருக்கியில் ரசியாவின் இராணுவத் தளத்தை ஆதரிக்கிறது. வளர்ந்து வரும் இசுரேல் - சீன உறவுகளை கட்டுப்படுத்துகிறது.
இவ்வாறாக அகண்ட இசுரேல் திட்டத்தின் வழியாக மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கத்தை நிறுவ துடிக்கிறார் டிரம்ப். ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க - மறுபங்கீட்டுப் போரில் பாலஸ்தீனம் பலியிடப்படுகிறது.
தெற்காசியாவில் சீனா வலுவான மேலாதிக்க சக்தியாக நீடிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மின்கடத்தி (Chips) மையமாக விளங்கும் தைவானை மறுபங்கீடு செய்து கொள்ள அமெரிக்காவும் சீனாவும் தீவிரமாக முயன்று வருகின்றன. சீனா BRICS அமைப்பை பலப்படுத்தி டாலருக்கு எதிராக போட்டி நாணயத்தை உருவாக்கி அதன் ஆதிக்கத்தை வீழ்த்த முனைகிறது.
தைவான் ஆளும் வர்க்கம் அமெரிக்கச் சார்பு நிலையில் உள்ளது. அங்குள்ள எதிர்க்கட்சி சீனச் சார்பு நிலையில் உள்ளது. தைவான் மின்கடத்தி கார்ப்பரேட்டுகள் அமெரிக்காவில் 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நிறுவி வருகின்றன.
உக்ரைனை அமைதி வழியிலும், தைவானை ஆயுத வழியிலும் மறுபங்கிட டிரம்ப் முயல்வதன் காரணமும் இதுவே.
அமெரிக்கா, சீனா இடையே தென் சீனக்கடல் மீதான ஆதிக்கச் சண்டையும் நீடிக்கிறது. ஐரோப்பிய யூனியன் கூட தென்சீனக் கடல் மீதான சீனாவின் உரிமைக் கோரலை கண்டித்துள்ளது.
5. இந்தியா அமெரிக்காவின் தெற்காசிய ஏஜெண்டாக நீடிக்கும் என டிரம்ப் உறுதிபடுத்தியுள்ளார். குவாட், I2U2, IP4, ஆக்கஸ் போன்ற கூட்டமைப்புகள் பலப்படுத்தப்படுகின்றன.
மோடி கும்பல் அமெரிக்காவின் வரிவிதிப்பு உள்ளிட்ட அனைத்து உத்தரவுகளுக்கும் பணிந்துவிட்டது. எலான் மஸ்க் - டிரம்ப் கும்பலின் புதிய காலனிய நலன்களுக்கான இரு தரப்பு ஒப்பந்தங்களுக்கும் மோடி கும்பல் ஒப்புதல் அளித்துள்ளது.
டெலிகாம் துறை, வேளாண் வணிகம், விண்வெளி திட்டம், AI, Cloud computing, கல்வி உள்ளிட்ட பல துறைகளில் எலான் உள்ளிட்ட அமெரிக்க டெக்னோ கார்ப்பரேட்டுகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு ஏற்ப இந்தியச் சந்தையை மோடி கும்பல் மாற்றவுள்ளது. ஆகவேதான் இந்தியாவில் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்துவோம் என மோடியின் 56 இன்ச் வாய் கிழிகிறது.
ரசியாவுடனான டிரம்பின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமானது மோடி கும்பலுக்கு - அம்பானி அதானிகளுக்கு அணுகூலமாக மாறியுள்ளது. உக்ரைன் போரின் போதும் அதற்கு முன்பும் ரசியாவுடனான இந்தியாவின் எண்ணைய், இராணுவ தளவாட வர்த்தகத்தால் மோடி கும்பல் மீது பைடன் ஆட்சி அதிருப்தியுற்று, பொருளாதாரத் தடை, ஹிண்டன்பர்க், பிபிசி ஆவணப்படம் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்த முயன்றது. ஆனால் டிரம்ப் ஆட்சியில் நிலைமை மாறிவிட்டது. ரசியாவுடன் அமெரிக்கா ராசியாகிவிட்டதால் மோடி கும்பலின் ரசிய உறவுகள் மேலும் பலப்படும். அதற்கு ஈடாக இந்தியா சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளில் மென்மேலும் உறுதியான கூட்டாளியாக மாறுகிறது.
ஆகவேதான் ஜெய்சங்கர் டிரம்பின் கொள்கைகள் இந்தியாவுக்கு (அதானி அம்பானிக்கு) சாதகமானவை என்கிறார்.
அமெரிக்கா பல்துருவ உலக ஒழுங்கை உருவாக்குவது உலகிற்கு நல்லது என்கிறார். ரசியாவுடனான தமது உறவு வலுவடையும் என மகிழ்கிறார்.
அடடா! இங்குள்ள CPI, CPM மற்றும் சில ML அமைப்புகளும், பாசிச மோடி கும்பலும் ரசியாவை ஆதரிப்பதிலும், பல்துருவ உலக ஒழுங்கை ஆதரிப்பதிலும் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றுபடுகின்றனர். கண்கொள்ளாக் காட்சி!!
மட்டுமின்றி அவர்கள் பெயரளவுக்கு அமெரிக்க எதிர்ப்பு, எலான் மஸ்க் எதிர்ப்பு பேசிவிட்டு, திராவிட மாடலும், கேரள மாடலும் எலான் மஸ்க்கின் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவதை கண்டும் காணாமல் கிடக்கின்றனர். இதைவிட ஒரு பச்சோந்தித்தனம், சந்தர்ப்பவாதம் இருக்க முடியாது.
தீர்வு
- அமெரிக்கா எதிர் ஷாங்காய் எதிர் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கம் மற்றும் மறுபங்கீட்டிற்கான பனிப்போர் தயாரிப்புகளை உறுதியாக நாம் எதிர்க்க வேண்டும்.
- அமெரிக்காவில் கட்டியமைக்கப்படும் பாசிசத்திற்கு சோசலிசமே மாற்றாக இருக்கும்.
- எலான் மஸ்க் - டிரம்ப் கும்பலுக்கு அடிபணியும் மோடி ஆட்சியை தூக்கியெறிய நாம் அணிதிரள வேண்டும்.
- ஏகாதிபத்தியம் எந்த நாட்டின் இறையாண்மையையும் அனுமதிக்காது. அது ஆதிக்கத்தையே விரும்பும். ஒரு போதும் சுதந்திரத்தை விரும்பாது. சுதந்திரம் அடைந்த முதலாளிய நாடுகளைக் கூட தனது செல்வாக்கு மண்டலங்களாக மாற்றும் எனும் லெனினியம் உக்ரைன், பாலஸ்தீனம், தைவான், லித்வேனியா விசயங்களில் நிரூபிக்கப்படுகிறது.
எனவே காலனிய, அரைக்காலனிய, ஒடுக்கப்பட்ட நாடுகள் எந்த ஏகாதிபத்திய அணியுடனும் சேராமல் அணிசேராக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும். உலக வர்த்தக கழகம், உலக வங்கி உள்ளிட்ட புதிய காலனிய நிறுவனங்களில் இருந்து வெளியேற வேண்டும். சுயசார்பு வளர்ச்சிக்கான கொள்கைகளை திட்டமிட வேண்டும். அக்கொள்கைகளை அடிப்படையாக கொண்டு ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வகை கூட்டமைப்பு ஏகாதிபத்திய சுரண்டல் மற்றும் போர்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஓர் இடைக்கால தீர்வாக அமையும்.
நிரந்தர தீர்வென்பது முதலாளிய நாடுகளில் சோசலிசப் புரட்சியையும், காலனிய நாடுகளில் புதிய ஜனநாயகப் புரட்சியையும் முன்னெடுப்பதே ஆகும்.
அதன் பொருட்டு உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட நாடுகளும் அணிதிரள்வோம்!
- சமரன்
(ஏப்ரல் -மே 2025)