அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர் - (இறுதிப் பகுதி -3)

நவீன தொழில்நுட்பம் மற்றும் அதன் மூலப் பொருட்களின் ஆதிக்கத்திற்கான அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர்

அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர் - (இறுதிப் பகுதி -3)

முந்தைய பகுதிகளை படிக்க: அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர் – (பகுதி 1)

அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர் – (பகுதி 2) 

விண்வெளி துறை:

"நாங்கள் முற்றிலும் சீனாவுடன் ஒரு மூலயுக்தி போட்டியில் இருக்கிறோம்; விண்வெளி அதன் ஒரு பகுதியாகும்" என்று அமெரிக்க விண்வெளி படையின் விண்வெளி நடவடிக்கைகளின் துணைத் தலைவர் ஜெனரல் டேவிட் டி. தாம்சன் 2021ல் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை செய்கிறார். "சுருக்கமாக சொன்னால் எதார்த்தம் என்னவென்றால், ஒரு சீராக அவர்கள் விண்வெளி திறன்களை உருவாக்கி வருகிறார்கள். அவற்றை சரியாக நிலை நிறுத்தியும் வருகிறார்கள்; விண்வெளித் துறையை நம்மைவிட இருமடங்கு அதிக வேகத்தில் மேம்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தும் நமக்கு காட்டுவது என்னவென்றால், மிக விரைவில், நமது வளர்ச்சி மற்றும் நடைமுறை திறன்களின் வேகத்தை விரைவுபடுத்தவில்லை என்றால், அவர்கள் நம்மை தாண்டி சென்றுவிடுவார்கள்" என்றும் கூறியுள்ளார்.

செயற்கைக்கோள்களே இன்றைய நவீன தொழில் நுட்பத்தின் சூத்திரதாரியாகத் திகழ்கிறது. வழி செலுத்துதல் மற்றும் நிலை நிறுத்துதல் (Navigation and Positioning), தொலைக்காட்சி ஒளிபரப்புகள், ரேடியோ, வானிலையைக் கணித்தல், உலகத்தில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தையும் இதன் மூலம் கண்டறியப்படுகிறது (தாது பொருட்கள், மீன் வளங்கள் என்று சகலமும் இதன் துணைகொண்டே காணப்படுகிறது), இராணுவ ரீதியாக மிக நவீன ஆயுதங்களை இயக்குவது, அதாவது போர் விமானங்கள், ஏவுகணைகள் என்று சகல இராணுவ ஆயுதங்களுக்கும் ஜிபிஎஸ் தொழில் நுட்பம் தேவைப் படுகிறது, எதிரியின் தாக்குதலை கண்காணிப்பது, இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர்களை முன்கூட்டியே அனுமானித்தல் என்று அனைத்திற்கும் இந்த செயற்கைக்கோள்களே வினையாற்றுகின்றன. அமெரிக்கர்களுக்கு மட்டும் பல்லாயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் மூலம் அரை டிரில்லியன் டாலர் உலகளாவிய விண்வெளி பொருளாதாரம் கொண்டுள்ளது. செயற்கைக்கோள்கள் இல்லாமல் எந்த நாடும் ஒரு நாளும் நிம்மதியாக உறங்க இயலாது என்பது மிகையல்ல.

அமெரிக்காவே உலகத்தின் மிக நவீன விண்வெளி துறையில் சக்தி வாய்ந்த நாடாகத் திகழ்ந்து வருகிறது. இன்று விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள உலகத்தின் மொத்த செயற்கைக்கோள் எண்ணிக்கையான 4500ல் 2700 செயற்கைக்கோள்கள், அதாவது பாதிக்கும் மேல் அமெரிக்காவின் செயற்கைக்கோள்களே ஆதிக்கம் செலுத்துகிறது. ஏறக்குறைய அடுத்த போட்டியாளரான சீனாவைவிட 7 மடங்கு அதிக எண்ணிக்கையை கொண்டது.

சீனா 2021ல் அதிக செயற்கைக் கோள்களை ஏவிய நாடாக இருந்தது என்பது உண்மைதான். சீனா மொத்தம் 55 செயற்கைக்கோள்களை ஏவியது. அமெரிக்காவோ 51 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

சீனா விண்வெளித் துறைக்கான நிதியை சமீப வருடத்தில் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக 2020ல் 8.9 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவோ மொத்தம் 48 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. அமெரிக்காவில் பல நூறு துவக்க நிறுவனங்கள் போட்டியில் இறங்கியுள்ளன. குறிப்பாக ப்ளூ ஆரிஜின் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களில் பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடுகளாக கொட்டி குவிக்கப்படுகிறது.

2020ல் உலகத்தின் மொத்த விண்வெளி துறை வர்த்தகமானது 371 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.  இதில் பெரும் பங்கு இணையம் சார்ந்து கருவிகள் (Network & Consumer Equipments) சந்தையே. 135.3 பில்லியன் அளவுக்கு வர்த்தகம் ஆகியுள்ளது. 117.8 பில்லியன் டாலர்கள் தொலை தொடர்பு சேவைகள் மற்றும் தொலை அறிதல் (Tele communication and Remote Sensing) 100.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அரசுகளும் மற்றும் தனியார் வர்த்தக நோக்கில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கும் (Government and Commercial Human Space budget) செலவு செய்யப்பட்டுள்ளது.

சீனா சமீப காலமாக பல சாதனைகளையும் முன்னேற்றங்களையும் அடைந்து வருகிறது. அதன் சொந்த உலகளாவிய செயற்கைக்கோள் திசைவழி அமைப்பை நிர்மாணித்திருக்கிறது. லூனார் மாதிரிகளை திரட்டுதல்; செவ்வாயில் ஒரு விண்கலத்தை தரையிறக்கி இருத்தல்; சொந்த விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருதல்; அந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு சொந்த ராக்கெட்டை கொண்டு விண்வெளி வீரர்களை அனுப்பி வருதல் என்று சமீபத்தில் மிக வேகமாக பல மைல் கல்களை தாண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் குவாண்டம் செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. 6ஜி செயற்கைக்கோளையும் செலுத்தியுள்ளது. இந்த இரு செயற்கைக் கோள்களும் இத்தொழில் நுட்பத்தில் உலகத்தின் முதல் செயற்கைக்கோள்களாகும்.

சீனாவின் முக்கிய விண்வெளி ஒப்பந்த நிறுவனமான சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CASC) மூத்த அதிகாரியான பாவ் வெய்மின், மார்ச் 7, 2021 அன்று ஷாங்காய் செக்யூரிட்டீஸ் செய்திக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் விண்வெளி இணைய செயற்கைக்கோள்களை திட்டமிட்டு உருவாக்கி வருகிறோம்; சோதனை செயற்கைக்கோள்களை சிலவற்றை ஏவி சோதனை செய்துவருகிறோம்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பிடம் (ITU) சீனா சமர்ப்பித்த அலைக்கற்றை ஒதுக்கீடு அனுமதி படிவத்தின்படி, 12,992 செயற்கைக்கோள்களைக் கொண்ட இரண்டு பெரிய செயற்கைக்கோள் விண்மீன் கூட்டத்தை தாழ்ந்த புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது என்பது தெரியவருகிறது. சீனாவின் இந்த திட்டத்திற்கு "GW" என்று பெயரிடப்பட்டுள்ளது.

சீனா இப்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சொந்தமாக அமைத்து வருகிறது. சீனா இதன் கட்டுமானத்தை 2011ல் ஆரம்பித்து 2022 இறுதியில் முடிக்கும் என்று கருதப்படுகிறது.  இதன் பெயர் தியான்காங் என்று சூட்டப்பட்டுள்ளது. இந்த சர்வதேச மையம் இந்த ஆண்டு இறுதியிலிருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த மையத்தில் இணைந்து செயல்பட சர்வதேச நாடுகளையும் வணிக ரீதியான நிறுவனங்களையும் பங்கேற்கவும் நிலையத்தை பார்வையிடவும் அழைக்கிறது. சர்வதேச விண்வெளி வீரர்களையும் தனது விண்வெளி நிலையத்திற்கு வரவேற்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கத்தில் தற்போது இயங்கிவரும் சர்வதேச விண்வெளி மையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த சர்வதேச விண்வெளி மையமானது அமெரிக்கா, இரசியா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி மையங்கள் ஒன்றிணைந்து அமைக்கப்பட்டு இயக்கி வருகிறது. ஆனால் இதன் ஆயுட்காலம் இன்னும் சில ஆண்டுகளே மிச்சம் உள்ளது. 2030ல் இந்த விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிவடைந்து முழுவதுமாக செயலற்றதாகிவிடும் என்று அதன் இயக்குநர்கள் அறிவித்துள்ளனர். அதே சமயம் தனியாகவோ அல்லது ஒன்றிணைந்தோ புதிய சர்வதேச விண்வெளி மையத்தை அமைப்பது பற்றி இந்த நாடுகள் இதுவரை எந்த முடிவிற்கும் வரவில்லை. 2030ல் முழுவதுமாக செயலற்றதாகி விடப்போகிறது என்றாலும் 2024லிருந்தே கிட்டத்தட்ட இந்த விண்வெளி மையம் பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது. அப்படியென்றால் 2030க்குப் பிறகு உலகத்தின் பயன்படுத்துவதற்கு அல்லது ஆய்வு செய்வதற்கு உகந்த ஒரே ஒரு சர்வதேச விண்வெளி நிலையம் மட்டுமே இருக்கும். அதுவும் சீனாவினுடைய சொந்த விண்வெளி மையம் மட்டுமே. மற்றொரு பக்கத்தில் அமெரிக்காவோ புதிய விண்வெளி மையம் அமைப்பதற்கான எந்த திட்டத்தையும் இதுவரை அறிவிக்கவில்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த நாடுகள் இப்போது இவ்வளவு செலவு செய்து அமைக்க முடியுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

இப்போது இயங்கிவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் 2000ம் ஆண்டு வாக்கில் சீனாவை சேர்த்துக் கொள்வதில் அமெரிக்காவிற்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. சீனா இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் இயங்குவதற்கும் நிதி அளிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் தயாராக இருந்ததாகவும், ஆனால் அமெரிக்கா சீனாவின் முன்னேற்றத்தை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதாகவும் தொடர் நிகழ்வுகள் காண்பிக்கின்றன. அதனால் சீனாவிற்கு வழிகள் அடைக்கப்பட்டதால் வேறு வழியின்றி சொந்தமாக விண்வெளி மையத்தை அமைப்பது ஒன்றே அதன் தீர்வாகவும் இருந்ததாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் நிலவில் விண்வெளி மையத்தை அமைக்க இரு நாடுகளும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் நாசா அமைப்பு 100 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஆர்டிமிஸ் திட்டத்தை கையிலெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி மனிதர்களை நிரந்தரமாக நிலவில் குடியமர்த்துவது அதன் ஒரு அம்சமாகும். இத்திட்டம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ஆர்ட்டிமிஸ்-I சந்திரனைச் சுற்றிவருமாறு ஒரு விண்கலத்தை அனுப்புவது, ஆர்ட்டிமிஸ்-II விண்வெளி வீரர்களுடன் அதே பயணத்தை மேற்கொள்வது, ஆர்ட்டிமிஸ்-III 1972ல் அப்பல்லோ-17க்குப் பிறகு முதல் முறையாக மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவது என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் (2022) ஆர்ட்டிமிஸ்-I விண்கலத்தைச் செலுத்துதல் தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு முறை தள்ளிப்போடப்பட்டுள்ளது. சீனாவோ இரசியாவுடன் சேர்ந்து அணுசக்தியால் இயங்கும் ஆராய்ச்சி நிலையத்தை சந்திரனில் நிறுவ விரும்புகிறது. இந்த வசதி, சீன விண்வெளி வீரர்கள் அமெரிக்க வீரர்களை காட்டிலும் அதிக நேரத்தை செலவிடுவதற்கு உதவும். ஏனென்றால் அமெரிக்காவின் மையம் சந்திரனின் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டு பின்புதான் சந்திரனின் தரைக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் சீனாவிற்கு அமெரிக்க செய்யும் செலவில் ஒரு பகுதியே தேவைப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் இந்த இரு நாடுகளும் நிலவை உரிமை கோரி வருகின்றனர். அமெரிக்காவின் உரிமைகோரலுக்கு சவால் விடுக்கும் வகையில் சீனா ஒரு நடமாடும் ஆய்வு நிலையத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நடமாடும் நிலையம் நிலவின் தளத்தில் 1,000 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க முடியும். மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதால் அதை இயக்குவதற்கு தனியாக விண்வெளி வீரர்கள் தேவைப்படாது.

நிலவில் காணப்படும் பல முக்கிய வளங்களில் அருமண் தனிமங்கள், பிளாட்டினம்-வகை உலோகங்கள் மற்றும் டைட்டானியம், இரும்பு மற்றும் அலுமினியம் போன்ற தொழில்துறை உலோகங்கள் உள்ளடக்கம். ஹீலியம்-3, சந்திர மண்ணில் காணப்படும் ஐசோடோப்பு, எதிர்கால இணைவு அணு உலைகளுக்கு (Fusion Reactors) எரிசக்தி பொருளாக பயன்படும். இரு நாடுகளும் நிலவில் ஆய்வு மையத்தை அமைக்கும் நோக்கமாக விண்வெளி ஆய்வு, மனித குடியேற்றம் மற்றும் விண்வெளி சுற்றுலா என்று கூறிக்கொண்டாலும், உண்மையில் இரு தரப்பினரும் நீண்ட காலத்திற்கு நிலவில் கனிம வளங்களை சுரண்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்த கனிம வளச் சுரண்டல் நோக்கம் நிலவோடு நிற்கவில்லை. பூமியைப் போலவே, சந்திரன், செவ்வாய், சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள் போன்றவற்றிலும் மதிப்பு வாய்ந்த வளங்களின் கணிசமாக உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். இது ஆராய்ச்சியாளர்களையும் தொழில்துறையினரையும் இருவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  சில சிறுகோள்களில் இரும்பு, நிக்கல், தங்கம் மற்றும் பிளாட்டினம் வகை உலோகங்கள் உள்ளன. இவை கட்டுமானம் மற்றும் மின்னணுவியலுக்குப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்க சபை இதில் தனியாருக்கும் உரிமை கொடுத்துள்ளது. 2015ல் அமெரிக்க சபையில் ஒபாமா அரசாங்கத்தால் உலகத்தின் முதல் அண்ட வெளி கனிம வளம் உரிமை பற்றி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி பிளானெட்டிரி ரிசோர்சஸ் (Planetary Resources) மற்றும் டீப் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீயின் (Deep Space Industries) ஆகிய இந்த இரண்டு புதிய தொடக்க நிறுவனங்கள் வளங்களை அபகரிக்கும் நோக்கத்தை அங்கீகரிக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி எந்த நிறுவனம் அந்த வளங்களை கொண்டுவருகிறதோ, அவர்களுக்கே அது சொந்தம். இதனால் விண்வெளியில் உள்ள பல முக்கிய தனியார் நிறுவனங்கள் முக்கியமாக ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் போன்ற பில்லியனர்கள் தங்கள் நிகர மதிப்பில் இன்னும் சில டிரில்லியன்களை சேர்க்க இத்துறையில் தயாராகி வருகின்றனர். டிரம்ப் அரசால் ஏப்ரல் 2020ல் கொடுக்கப்பட்ட நிறைவேற்று ஆணை, விண்வெளி-வளங்கள்-வளர்ச்சி சொத்து உரிமைகளுக்கான அமெரிக்காவின் 2015 சட்டத்தின் சரத்துகளையும் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சந்திரன் சம்பந்தமான பழைய சர்வதேச ஒப்பந்தத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. பிற நிர்வாக நடவடிக்கைகள் விண்வெளி சுரங்கத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்தியது, இதில் கிரக பாதுகாப்பு மற்றும் விண்வெளி அணுசக்தி பற்றிய தேசிய கொள்கைகளும் அடங்கும்.

விண்வெளிப் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது குறித்த பார்வையை வெளிக்கொணரும் நோக்கத்துடன் ஸ்பேஸ் கேபிடல் என்ற நிறுவனம் 2017 ஆம் ஆண்டு விண்வெளி முதலீட்டுச் சஞ்சிகையை அறிமுகப்படுத்தியது. இவ்வறிக்கைப் படி கடந்த 10 ஆண்டுகளில், விண்வெளிப் பொருளாதாரத்தில் 1,688 தனித்துவமான நிறுவனங்களில் 258.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது, இது அமெரிக்கா மற்றும் சீனாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. துவக்க நிறுவன முதலீட்டாளர்கள் (Venture Capital) 2021 இல் 328 விண்வெளி நிறுவனங்களில் 17.1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தன. அதற்கு முந்தைய காலாண்டில் 7.2 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டது. இது மொத்த உலகளாவிய மூலதனத்தில் 3% ஆகும். முந்தைய ஆண்டு 2020ல் செய்யப்பட்ட முதலீட்டு சாதனையான 9.1 பில்லியன் டாலரை முறியடித்துள்ளது.  அமெரிக்க துவக்க நிறுவனங்களுக்கு 40% பங்கும், சீன துவக்க நிறுவனங்களுக்கு 30% பங்கும் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது முழுக்க தனியார் நிறுவனங்கள் விண்வெளித் துறையில் கால் பதிப்பதையும், விண்வெளி தனியார்மயமாவதையும் காண்பிக்கிறது.

இந்த இரு நாடுகளுக்குமான விண்வெளிப் போட்டி என்பது இரண்டு துறைகளிலும் அதாவது சிவிலியன் மற்றும் இராணுவ ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரு நாடுகளின் போட்டி இப்போது விண்வெளியை இராணுவமயப்படுத்துவதில் சென்று முடிந்துள்ளது.

அமெரிக்கா தனது செயற்கைக்கோள் அடிப்படையிலான உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு நீண்ட காலமாக மேலாதிக்கம் செலுத்தி வந்தது என்பது நாம் அறிந்ததே. சீனா ஏற்கனவே தன்னுடைய சொந்த பைடு என்ற வழிசெலுத்தல் மற்றும் நிலை நிறுத்துதல் (navigation and positioning) அமைப்பை உருவாக்கியுள்ளது; இது அமெரிக்க நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் மேப்ஸ் போன்றது. அதேபோல உயர்-தெளிவு பூமி கண்காணிப்பு அமைப்புக்காக (CHEOS) காஃபென் என்ற செயற்கைக்கோளை செலுத்தியுள்ளது.

1996 ஆம் ஆண்டில், சீனா தைவானுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தைவானை எச்சரிப்பதற்காக தைவான் ஜலசந்திக்கு எச்சரிப்பதற்காக அல்லது மிரட்டுவதற்காக மூன்று ஏவுகணைகளை செலுத்தியது. ஏவுகணை கண்காணிப்புக்கு சீனா நம்பியிருந்த பசிபிக் பகுதிக்கான ஜிபிஎஸ் சிக்னலை அமெரிக்கா துண்டித்துவிட்டதாக சீனா கூறுகிறது. இதனால் ஏவுகணைகளின் தடத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. இன்றைய ஏவுகணைகள் அனைத்தும் நிலைப்படுத்துதல் அமைப்புதான் வழித்தடத்தைத் தீர்மானிக்கிறது. இலக்கையும் அதை கொண்டுதான் செலுத்தமுடியும். அமெரிக்காவின் இந்த செயலால் ஏவிய ஏவுகணைபற்றி சீனாவால் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வுக்கு பிறகுதான் சீனா தனது சொந்த உலகளாவிய வழிசெலுத்துதல் மற்றும் நிலைப்படுத்துதல் செயற்கைக்கோள் அமைப்பை உருவாக்க முயன்றது. அதுதான் பைடு என்ற அமைப்பு. இன்று சீனா இதற்காக 35 செயற்கைக்கோள்களுடன் 120 நாடுகளுக்கு தனது சேவைகளை அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவோ இதற்காக 31 செயற்கைக்கோள்களையே ஏவியுள்ளது. இது இன்றைய மிக நவீன ஆயுதங்களின் அவசியத் தேவையாக மாறியுள்ளது. இதை கொண்டுதான் ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏன் டாங்கிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு நாட்டுக்கு சொந்தமாக இல்லையென்றால் எந்த நாட்டின் சேவையை பயன்படுத்துகிறோமோ அந்த நாடு எந்த நேரத்திலும் அந்த ஆயுதங்களை வழிதடமறியாமல் செய்து செய்வதறியாது செயலிழந்த நிலைக்கு சென்றுவிடும்.

மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர், சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவின் ராணுவத் தகவல் தொடர்பு, முன்னெச்சரிக்கை கொடுக்கும் ஆதார செயற்கைக்கோள்கள், உளவு செயற்கைக்கோள்கள் போன்றவற்றை வேண்டியபோது அப்புறப்படுத்த ஏதுவான திறனை உருவாக்கி வருவதாக எச்சரிக்கின்றனர். அப்படி ஒரு திறனுடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நிகழ்வு நிகழ்ந்தது. ஜனவரி 22 அன்று, சீனாவின் ஷிஜியன்-21 செயற்கைக்கோள் (SJ-21), பகலில் சில மணிநேரங்களுக்கு அதன் சுற்றுப்பாதையிலிருந்து காணாமல் போனது, ஆப்டிகல் தொலைநோக்கிகள் மூலம் அவதானிப்பது கடினம். SJ-21 இறந்த BeiDou வழிசெலுத்தல் அமைப்பு செயற்கைக்கோளை அதன் சுழல்வட்டப் பாதையிலிருந்து விலக்கி செயலற்ற அல்லது இறந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப் பாதையில் கொண்டு சேர்த்தது. இத்திறன் படைத்த செயற்கைக்கோளை லாங் மார்ச் 3B-ராக்கெட் (Long March) 2021 அக்டோபரில் ஷிஜியன்-21 ஜி.எஸ்.டி சுற்றுப்பாதையில் செலுத்தியது. SJ-21 மற்றும் பிற விண்கலங்கள் "எதிர்கால அமைப்பில் மற்ற செயற்கைக்கோள்களைப் பிடிக்க பயன்படுத்தப்படலாம்" என்று அமெரிக்க விண்வெளிக் கட்டளைத் தலைவர் ஜேம்ஸ் டிக்கின்சன் கூறுகிறார். அவர் கடந்த ஆண்டு அமெரிக்க காங்கிரஸின் முன் இந்த சிக்கலை முன்னிலைப்படுத்தினார். இதுபோன்ற செயற்கைக்கோள் உலகத்தில் சீனாவிடம் மட்டுமே உள்ளது. இது இராணுவ ரீதியாக நாளை வேறு நாட்டின் செயற்கைக்கோளையும் அதன் சுழல்வட்டப்பாதையிலிருந்து அப்புறப்படுத்தப் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

சீனா வளர்ந்து வரும் ஏகாதிபத்தியமாக பரிணமித்து வருகின்ற காலத்தில், அமெரிக்காவின் தடைகளும், இடையூறுகளும் சீனாவின் மேலாதிக்கத்திற்கு புதிய வாய்ப்புகளாகவும், தன்னிறைவிற்கான கட்டாயமாகவும் மாறியிருக்கிறது. இதில் தொடர்ந்து முன்னேறியும் வருவதை நம் கண்கூடாக பல தரவுகள் மூலம் புரிந்து கொள்ளவும் முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று தன்னுடைய தன்னிறைவையும் தாண்டி, உலக மேலாதிக்கத்திற்கும் புதிய காலனிய மறுபங்கீட்டிற்கும் அமெரிக்காவுடன் போட்டிப்போட இது வழிகோலியிருக்கிறது. விண்வெளித் துறையில் இப்போதைக்கு இரு நாடுகளும் சம பலத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. 

அருமண் தனிமம்: (Rare Earth Elements)

அருமண் தனிமம் நவீன வாழ்க்கையின் அங்கமாக மாறிவரும் அல்லது பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு மின்னணு பொருட்களை உருவாக்க இன்றியமையாத தனிமமாக இருக்கிறது. மக்கள் பயன்பாட்டிலுள்ள வாகனம், இராணுவம், தூய்மையான ஆற்றல் மற்றும் மருத்துவத் தொழில்களில் எலக்ட்ரானிக்ஸ் தேவை வேகமாக அதிகரித்து வருவது ஒரு பக்கம், "இணையத்தின் பொருட்கள்" (Internet of Things) தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளாலும் அருமண் தனிமத்தின் தேவையும் தட்டுப்பாடும் தொடர்ந்து உயரும் என்று வல்லுனர்கள் கணிக்கின்றனர். அவற்றின் சிறப்பு ஒளிர்வு தன்மை, காந்த மற்றும் ஒளியியல் பண்புகள் போன்றவை போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள், வழித்தடம் காட்டும் அமைப்புகள், மின்னணு திரைகள், லேசர்கள், ரேடார்கள், சோனார், தகவல் தொடர்பு அமைப்புகள், ஜிபிஎஸ், செயற்கைக்கோள்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஆட்டோமொபைல் போன்ற பரந்த அளவிலான தயாரிப்புகளில் இந்த அருமண் தனிமங்கள் இன்றியமையாத பொருளாக இருக்கிறது. வாகனத் தொழிற்துறை, எரிபொருள் தாங்கிய செல்கள், விமானத் தொழில், கைப்பேசிகள், கணினி வண் வட்டுகள், காற்றாலைகள், பிளாட் ஸ்கிரீன் மானிட்டர்கள், ஃபைபர் ஆப்டிக்ஸ், எல்இடி, சோலார் பேனல்கள் போன்ற உயர் தொழில்நுட்ப நுகர்வோர் தயாரிப்புகள் மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு பசுமை ஆற்றல் தொழில்நுட்ப பயன்பாடுகளிலும் இந்த அருமண் தனிமங்களின் மிகச் சிறந்த காந்த வலிமை கூறுகளின் அசாதாரணமான பண்புதான், சிறிய வடிவில் வடிவமைக்க இவைகள் பயன்படுகின்றன. ஒரு சாதனத்தில் எடை அல்லது அளவின் அடிப்படையில் இந்த அருமண் தனிமம், அளவு சிறியதாக இருந்தாலும், அவற்றின் செயல்திறனிலும், நீண்ட ஆயுளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அருமண் தனிமம் என்பது யட்ரியம் மற்றும் 15 லாந்தனைடுகள் அடங்கிய வேதியியல் தனிமங்கள் ஆகும். அதாவது லாந்தனம், சீரியம், பிரசோடைமியம், நியோடைமியம், ப்ரோமித்தியம், சமாரியம், யூரோபியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், ஹோல்மியம், எர்பியம், துலியம், யெட்டர்பியம் மற்றும் லுட்டெட்டியம் ஆகியவைகளே.

பெயருக் கேற்றவாறு இந்த தனிமம் அவ்வளவு அரிதான ஒரு பொருளல்ல. இது பரவலாக கிடைத்தாலும், இது மற்ற தனிமங்களோடு சேர்ந்திருப்பதால், இதை பிரித்து எடுப்பது மிகவும் கடினமானது மட்டுமல்லாமல், பொருட்செலவு மிக்கதாகவும், மிகவும் மாசு ஏற்படுத்தும் கழிவுகளை வெளியேற்றுவதாகவும் இருக்கிறது.

அமெரிக்க X சீன மேலாதிக்கப் போட்டியில் உலகு விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மேலாதிக்க போட்டியால் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரின் விளைவு, இந்த அருமண் தனிமத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்த குறிப்பிட்ட தனிம உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கம் ஒட்டுமொத்த உலக சந்தையில் 79% கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதேபோல் ஒட்டுமொத்த உலக இயற்கை இருப்பில், சீனாவில் மட்டும் 55% இருப்பதாகவும் இரண்டாவதாக அமெரிக்காவில் 10%-15% இருப்பதாகவும்  கண்டறியப்பட்டுள்ளது. அருமண் தனிம உற்பத்தியில் சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவின் உள்நாட்டு சுரங்க உற்பத்தியிலும், வெளிநாடுகளிலுள்ள சுரங்க உற்பத்தியில் சீனாவின் நேரடியான முதலீடுகளைக் கொண்டும் சீனா உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகிறது. டெக் நெட் (TECHCET) என்ற அமைப்பு உலகளவில் 62 அருமண் சுரங்க இடங்கள் இருப்பதாக அடையாளம் கண்டுள்ளது, ஆனால் அதில் 28 சுரங்கங்கள் மட்டுமே அடுத்த 3-5 ஆண்டுகளில் (2021-2026) அருமண் உற்பத்தி திறனைக் கட்டியமைக்கும் நிலையில் உள்ளதாக குறிப்பிடுகிறது. சீனாவிற்கு வெளியே எடுத்துக் கொண்டால், அருமண் தனிம படிமங்கள் ஆஸ்திரேலியா, ரஷ்யா, வியட்நாம் மற்றும் இந்தியாவில் உள்ளதாக குறிப்பிடப் படுகிறது. கனடாவில் பல சுரங்க நிறுவனங்களும், அதேபோல் பெரிய படிம இருப்பையும் கனடா கொண்டுள்ளது. ஆனால் அருமண் பிரித்தெடுக்கும் திறனை கனடா உருவாக்கிகொள்ளவில்லை, இதில் மிகவும் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், சீனாவிற்கு வெளியே இயங்கும் உலகின் பல அருமன் சுரங்க நிறுவனங்களும் அருமண் சுத்திகரிப்புக்கு அல்லது பிரித்தெடுப்பதற்கு, தாதுக்களை சீனாவிற்குத்தான் அனுப்புகின்றன. இதனால் உலகளவில் சீனாதான் கிட்டத்தட்ட 95% இத்தொழில் நுட்பத்தில் அதாவது பிரித்தெடுக்கும் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சீனா இப்பொருட்களை உற்பத்தி செய்வதில் உலகத்தின் முன்னணி உற்பத்தியாளராக இருப்பதோடு மட்டுமல்லாமல், அருமண் தனிம நுகர்விலும் சீனாவே ஒட்டுமொத்த உலக நுகர்விலும் முதல் நாடாகத் திகழ்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஜப்பானும், மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.

ஜனவரி 1992ல் அன்றைய சீன அதிபரான டெங்சியோபிங் ஒரு உரையில், "மத்திய கிழக்கில் எண்ணெய் உள்ளது, சீனாவில் அருமண் தனிமங்கள் உள்ளது" மற்றும் "நமது அருமண் தனிம வளங்களை நாம் சரியாக நிர்வகிப்பதன் மூலம், நமது நாட்டின் வளர்ச்சிக்கு சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார். அவரது வார்த்தை இன்று உண்மையாகியுள்ளது. உலகளவில் சீனா இன்று அந்த மூலப்பொருட்களின் விநியோகத்தில் மட்டுமல்லாமல், அருமண் தனிமங்களை பயன்படுத்தும் உயர் தொழில்நுட்ப வளர்ச்சி தொழில்களிலும் பரந்து விரிந்த அதன் உபதொழில்களிலும் உற்பத்தியை கட்டுப்படுத்துவதாக மாறியிருக்கிறது. 

உலகளவில் அருமண் துறையில் சீனாவின் மூலதனம் அமெரிக்க நிறுவனங்களின் மூலதனத்தைவிட பல மடங்கு விஞ்சியுள்ளது. அதாவது சீனாவின், அருமண் தனிமத்தில் முதல் பெரிய நிறுவனமான சீனா நார்தர்ன் ரேர் எர்த் குரூப் (China Northern Rare Earth Group High-Tech Co Ltd.) மூலதனமானது, அமெரிக்க மற்றும் மேற்கத்திய முதல் பத்து அருமண் நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனத்தை ஒப்பிடும்போது, சீனாவின் மூலதனம் ஐந்து மடங்கு கூடுதலாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. எப்படி கச்சா எண்னெய்யில் அரபு நாட்டின் அரம்கோ நிறுவனம் பகாசுர நிறுவனமாக உள்ளதோ அதேபோல் அருமண் தாது உற்பத்தியில் சீனாவின் ஏகபோக நிறுவனம் மிகப்பெரும் பகாசுர நிறுவனமாக திகழ்கிறது.

அருமண் துறையில் சீனாவின் நிறுவனங்கள் ஏகபோக நிறுவனங்களாக இருபதாண்டுகள் எடுத்துக்கொண்டன. சீனாவின் இந்த ஏகபோக நிறுவனங்களின் அவசியத்தை 2012ல் யு.எஸ்.-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறு ஆய்வு ஆணையத்தில் ஜெஃப்ரி ஏ. கிரீன் அளித்த கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். சீனா இந்த அருமண் தனிமத்தின் போட்டியாளர்களுக்கு மூலப்பொருட்களை கிடைக்காமல் செய்வது; அப்படி உற்பத்தி செய்யமுடியாத தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் சந்தையில் சீன அரசின் மானியத்தில் உற்பத்தி செய்த உள்நாட்டு அருமண் தனிமத்தை மிகக் குறைந்த விலையில் சந்தையில் வெள்ளமென பாய்ச்சுவது; இந்த இரு காரணங்களால் அருமண் தொழிலில் இருந்த போட்டியாளர்கள் எப்படி அழித்தொழித்தார்கள் என்பதை நமக்கு நன்கு தெரிவிக்கிறது என்று அவர் கூறினார். இப்படி உலக போட்டி நிறுவனங்களை அடித்து வீழ்த்த நிதி மூலதன ஒன்றுகுவிப்பும் உற்பத்தி ஒன்றுகுவிப்பும் சீனாவிற்கு தேவைப்பட்டது. ஒன்றுகுவிப்புகள் உலகளவில் சீனாவிற்கு உற்பத்தி ஆதிக்கத்தையும் வழங்கு சங்கிலியில் ஆதிக்கத்தையும் பெற்று தந்தது. இத்துறையில் 2010ல் உலகளவில் சீனவின் ஆதிக்கம் உச்சத்தை அடைந்தது. சீனாவே உலகின் அருமண் தனிம உற்பத்தியில் சுமார் 95%  கட்டுப்படுத்துகின்றனர். ஏகபோக ஆதிக்கத்தை பெற்ற சீன நிறுவனங்கள் பல அரிதான அருமண் ஆக்சைடுகளின் விலைகளை அடுத்த சில ஆண்டுகளில் 500%க்கும் மேலாக உயர்த்தியது.

பெங்களூரில் உள்ள முன்னேற்ற ஆய்வுகளின் தேசிய நிறுவனம் (National Institute of Advanced Studies) 2013ம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கை உலகளாவிய அருமண் தனிம விநியோகச் சங்கிலியின் முழு பரிமாணத்தையும் அதன் முழுப் பலனையும் எப்படி சீனா அடைந்தது என்று விவரிக்கிறது. 2005ம் ஆண்டில், சீன நிறுவனம் 'மாலிகார்ப்'இன் ஒரு அங்கமான UNOCALஐ வாங்கியது. ஆஸ்திரேலியாவின் லைனாஸ் (Lynas) மற்றும் அராஃபுரா ரிசோர்சஸ் (Arafura Resources) ஆகியவற்றில் பங்குகளை வாங்கியது சீனா. சாம்பியாவிலுள்ள பலூபா சுரங்கத்தையும் வாங்கினார்கள்.

இப்படி உற்பத்தியை ஒன்றுகுவித்த சீனா 2007ல் அருமண் தனிமத்தில் ரேஷன் கொள்கையை (தட்டுப்பாட்டை சமாளிக்கும், அளவான விநியோகக் கொள்கை) அறிவித்தது. இந்த செயல்பாட்டின் முக்கிய குறிக்கோளே, சீனாவை உலகின் உற்பத்தி ஜாம்பவனாக மாற்றுவதுதான். இந்த கட்டுப்பாட்டின் மூலம் சீனாவில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டது. இந்த தடையினை வைத்து வினையூக்கிகளின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருந்த அமெரிக்காவின் WR கிரேசு நிறுவனத்திற்கு உடனடியாக அருமண் தனிம விநியோகத்தை குறைத்தது. இதன்மூலம் சீனா உலகிற்கு தெரிவிக்க நினைத்த சேதி தெளிவாகவும், உரக்கவும் இருந்தது. அதாவது சீனாவின் அருமண் தனிமத்தை பயன்படுத்த விரும்பினால், உங்கள் (அந்தந்த நாடுகள்) உற்பத்தியை சீனாவுக்கு மாற்றி, முன்னுரிமை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது. WR கிரேசும் உடனடியாக அதைச் செய்து, சீனாவுக்கு தனது உற்பத்தி நிறுவனத்தை மாற்றியது. 

அமெரிக்காவின் உற்பத்தி ஏகபோகம் கேள்விக்குறியாக்கப்பட்டது. இந்த தடையை தகர்ப்பதற்கு அமெரிக்காவில் அருமண் தனிம உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான லாபத்தை உருவாக்கும் நோக்கத்துடன், சீனாவிலிருந்து வரும் அருமண் தனிம மூலங்களின் மீதான வரியை உயர்த்தியது. அதுமட்டுமல்லாமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தும்போது அது அமெரிக்க நிறுவனங்களுக்கு செலவை அதிகரிக்கும் என்றும் கருதப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் உள் நாட்டு உற்பத்தியை சார்ந்து நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையான அருமண் தனிமங்களை உள்நாட்டு நிறுவனங்களால் 20% சதவீதமளவுக்குக் கூட பூர்த்தி செய்ய இயலவில்லை. அதனால் இந்த வரிவிதிப்பால் அமெரிக்க நிறுவனங்கள் இரண்டு சிக்கல்களை எதிர்கொண்டன: ஒன்று இத்துறையில் கட்டுமானத் திறனை மேம்படுத்துவது; மற்றொன்று குறைந்த சந்தை விலையில் உற்பத்தி செய்வது. 

முதலாவது இத்துறையில் கட்டுமானம்: அமெரிக்காவில் 1980 வரை, கலிபோர்னியாவில் உள்ள மவுண்டன் பாஸ் அருமண் பொறியியல் நிறுவனம் உலகளாவிய அளவில் மிக முக்கிய ஆதாரமாக இருந்தது. 1974 இல், இது 19,900 டன்கள் அதாவது உலக உற்பத்தியில் 78% உற்பத்தி செய்தது. ஆனால் 1992ல் உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காகவும், தொடர்ந்து 2002ல் வெறும் 5%மாகவும் சரிந்தது. இந்த உற்பத்தி சரிவுக்கு காரணம் சூழலியல் பிரச்சனை. அதாவது இந்த அருமண் உற்பத்தியில் வெளியேற்றப்படும் அபிரிமிதமான ஆபத்தான கழிவுகளே. மவுண்டன் பாஸ் சுரங்கம், 1990களில் அதன் முழுத் திறனுடன் செயல்பட்டது. இது முழுத் திறனுடன் செயல்பட்ட காலத்தில், இந்த அருமண் உற்பத்தியின் விளைவாக ஒவ்வொரு நிமிடமும் 850 கேலன் உப்புக் கழிவுகளை இது வெளியேற்றியது. இந்த கழிவுகள் பெரிய தலைவலியாக மாறியது. இந்த கழிவுகள் அவ்வப்போது சில நாடுகளின் பாலைவனத்தில் கொட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பிறகு இது அமெரிக்காவின் நீதிமன்றத்தில் பிரச்சனையாக கொண்டு வரப்பட்டது. கலிபோர்னியா மாகாண நிர்வாகம், கழிவுகளை சுத்தம் செய்ய உத்தரவிட்டது. 2002 ஆம் ஆண்டில், இந்த கழிவுகளை சேமிக்கும் இடமாக இருந்த 'மாலிகார்ப்' என்ற  இடமும் நிரம்பியதால், மவுண்டன் பாஸ் கழிவுகளை சேமிக்க இடமில்லாமல் போனது. கழிவுகள் மேலாண்மை செய்வதிலும், அகற்றுவதிலும் சிக்கல் நீடித்ததால் இந்த சுரங்கம் மூடப்பட்டது. ஆனால் 2016ல் மீண்டும் துவங்கப்பட்டது. ஆனால் நீடித்து இயங்க முடியாமல் மீண்டும் ஒரு வருடத்திலேயே அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இந்த முறை மூடியதற்கு காரணம், அந்த நிறுவனத்தால் சர்வதேச சந்தையில் போட்டியிடும் அளவிற்கு சந்தை விலையும் அதன் திறனும் போதவில்லை.

இரண்டாவது பிரச்சினை, சீனாவின் அருமண் தனிமத்தின் விலை, சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. 2010ம் ஆண்டு வரை சுத்திகரிப்பு மற்றும் பிரித்தெடுப்பு தொழில்நுட்பங்களில் நீண்டகால நலன் அடிப்படையில் முதலீடுகள் போடப்பட்டன. சீன நிறுவனங்கள் இத்துறையில் சர்வதேச போட்டியாளர்களை விட தொழில் நுட்ப ரீதியாக திறன் மிகுந்தவர்களாகவும் மிக மலிவு விலையில் வழங்குபவர்களாகவும் வளர்ந்தனர். மலிவு விலையில் வழங்கினாலும் இந்த நிறுவனங்கள் லாபத்துடன்தான் செயல்பட்டு வந்தன.

அருமண் தனிமத்தின் விலைகள் 2011ம் வருடம் உச்சத்தில் இருந்தது. கடந்த 2 வருடங்களாக அதன் விலைகள் 2011ம் ஆண்டைவிட அதிகமாக விற்கப்படுகிறது. டிசம்பர் 2021ல் சீனா அதன் மூன்று பெரிய அருமண் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைப்பது என்று முடிவெடுத்தது. சீனா மின்மெட்டல்ஸ் ரேர் எர்த் (China Minmetals Rare Earth Co. Ltd), சினால்கோ ரேர் எர்த் & மெட்டல்ஸ் (Chinalco Rare Earth & Metals Co. Ltd), சீனா சதர்ன் ரேர் எர்த் குரூப் (China Southern Rare Earth Group Co. Ltd) என்ற மூன்று நிறுவனங்களை இணைத்து சீனா ரேர் எர்த் ரிசோர்ஸ் அண்ட் டெக்னாலஜி (China Rare Earth Resources and Technology Co Ltd) என்ற ஒற்றை நிறுவனத்தை உருவாக்கியது. இதுமட்டுமல்லாமல் கன்சௌ சாங்கியன் ரேர் எர்த் நியு மெட்டீரியல் டெக்னாலஜி மற்றும் ஜியாங்சி கன்சௌ ரேர் எர்த் மெட்டல் எக்சேஞ். இந்த நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலமாக உலகத்தின் இரண்டாவது அருமண் தயாரிப்பு நிறுவனமாகவும், அதாவது சீனாவின் ஒட்டுமொத்த அருமண் தாதுக்கள் உற்பத்தியில் 30%, கனரக அருமண் தாதுக்களில் 60-70% வரை உற்பத்தி செய்யும் சக்தி படைத்த நிறுவனமாக இருக்கும்.

இந்தி புதிய நிறுவனத்தை சீன அருமண் குழுமம் (China Rare Earth Group). இந்த ஒருங்கிணைவு அருமண் துறையில் சீனாவின் ஏகபோகத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைவின் மூலம் உற்பத்தி மற்றும் வழங்கு சங்கிலியின் ஸ்திரத்தன்மைக்கு பெரிதும் பங்காற்றும். அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்வு விலைக் கட்டுப்பாட்டில் தனது ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பெரும் பங்காற்றும். அதாவது கச்சா எண்ணெய்யில் ஓபக் கார்ட்டல்கள் கட்டுப்படுத்துவது போல.

சீன தொழில் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரியான சியாவ் யாக்கிங், "சீனாவின் அருமண் தனிமங்கள் 'அரிய' விலையில் விற்காமல் 'மண்' விலையில் விற்கப்படுகிறது" என்று கவலை தெரிவித்திருந்தார். அதாவது மலிந்த விலையில் விற்கப்படுவதாக கூறியிருந்தார்.

உண்மையில், சீனாவின் தனியார் கம்பெனிகளின் மிகத் தீவிரமான போட்டியின் காரணமாக அருமண் தனிமத்தின் விலைகள் முதல் இரண்டு தசாப்தங்கள் சந்தையில் மிகவும் குறைந்து காணப்பட்டது. பிறகு 2009ல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, அது உலக வர்த்தக கழகத்தால் பிரச்சனையாக்கப்பட்டு பிறகு ஏற்றுமதி கட்டுப்பாட்டிலிருந்து உற்பத்தி கட்டுப்பாடாக சீன அரசு கொண்டுவந்தது. இதற்கிடையில் இதை சாத்தியப்படுத்த சீன அரசு சீன அருமண் தாது உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் ஒருங்கிணைத்து 6 பெரும் நிறுவனங்களாக உருவாக்கி, இப்போது அதில் மூன்றை ஒரே நிறுவனங்களாக ஒருங்கிணைத்ததன் மூலம் சீனாவில் மொத்தம் 4 பெரிய நிறுவனங்களாக மாறியுள்ளன.  இவை எல்லாவற்றுக்கும் காரணம் சர்வதேச சந்தையின் வழங்கு சங்கிலியையும் அதன் விலையையும் கட்டுப்படுத்துவதற்காகத்தான். இதன் மூலம் அந்நிய நிறுவனங்களிடம் தங்களுக்கு சாதகமான விலை ஏற்றிப் பேரம் பேசுவதற்கும், உள்நாட்டு அருமண் உற்பத்தியாளர்கள் இதன் மூலம் பலனடைவதற்கும், சீனாவின் பரந்து விரிந்த ஏகபோக மேலாதிக்கத்திற்கும், குறிப்பாக அருமண் தொழில் துறையை வைத்து மற்ற ஏகாதிபத்திய நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்வாக அமைக்க முயற்சிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அருமண் தனிம உற்பத்தியில் மேலாதிக்கத்தை தக்கவைக்க உலகளவில் விரிவாக்கத்தை செய்ய வேண்டியிருந்தது. அதற்கு பெரிய மூலதனங்கள் தேவைப்பட்டன. இந்த ஒருங்கிணைப்பு அந்த பெரிய மூலதனத்திற்கு வித்திட்டது. இதன் மூலம் சர்வதேச அளவில் அதனால் முதலீடுகள் செய்ய வாய்ப்புகள் அதிகரித்தது. இப்படித்தான் 2021 பிரிட்டன் லித்திய உற்பத்தி நிறுவனமான பாகனோராவை கான்ஃபெங் லித்திய நிறுவனம் வாங்கியது.

2010 வாக்கில், மேற்குலக நாடுகள் சீனாவின் இந்த மேலாதிக்கத்தை சற்று எச்சரிக்கையுடன் அணுக ஆரம்பித்தனர். இந்த அருமண் தனிமத்தின் முக்கியத்துவம் ரேடார் மற்றும் சோனார் போன்ற இராணுவ அமைப்புகளில் உள்ளதால் போட்டி ஏகாதிபத்தியங்களுக்கு இவை பிரச்சனையாக பார்க்கப்பட்டது. 2009ல் ஜப்பான் ஏகாதிபத்தியம் சென்காகு தீவை சொந்தம் கொண்டாடியபோது, சீனா தனது அருமண் தனிம ஏற்றுமதி கட்டுப்பாட்டை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தியதன் விளைவு மற்ற ஏகாதிபத்திய நாடுகள் மேலும் எச்சரிக்கையாக இருக்க உறுதி மேற்கொண்டனர்.

இதனால் சில மேற்குலக நாடுகள் தங்களின் அருமண் சார்ந்த தொழிலை ஊக்குவித்தனர். அதில் அமெரிக்கா துரிதமாக செயல்பட ஆரம்பித்தது.  மூடப்பட்டிருந்த கலிபோர்னிய நிறுவனத்தை 2018ல் மீண்டும் திறந்தது. அருமண் தனிம மூலங்கள் (Rare Element Resources) மற்றும் யு கோர் அருமண் மூலங்கள் (UCore Rare Metals) போன்ற புதிய நிறுவனங்களை டெக்சாசிலும், அலஸ்காவிலும் தொடங்கி இயக்க ஆரம்பித்தது. இதற்கிடையில் சீனாவின் மூலதனத்தில் இயங்கும் அந்நிய நிறுவனமான ஆஸ்திரேலியாவின் லைனாஸ் அருமண் நிறுவனம் டெக்சாசில் தொழில் துவங்க அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அனுமதி அளித்தது. இப்படி சீனாவிற்கு வெளியே பல நாடுகளும் அருமண் தனிம உற்பத்தியில் புதிய மூலதனங்களை தொழில்களையும் கட்டியமைத்தனர். இதனால் சீனாவின் ஆதிக்கம் ஒட்டுமொத்த உற்பத்தியில் 2017ல் 80%லிருந்து 2021ல் 60%ஆக குறைந்துள்ளதாக அமெரிக்காவின் பூகோள சேவைத் துறை தெரிவித்துள்ளது.

மட்டுமல்லாமல், பல்வேறு மேற்குலக நிறுவனங்கள், குறிப்பாக அருமண் தாது உற்பத்தியை அதிகமாக நுகரும் துறையான வாகன உற்பத்தித் துறை, இந்த அருமண் மீதான சார்பை குறைத்துக்கொள்ள வழியை கண்டது. பி.எம்.டபுள்யூ, டயம்ளர், நிசான், டெஸ்லா, டொயோட்டா, போக்ஸ்வேகன் போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் அருமண் தனிமம் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை குறைத்துக் கொண்டனர். ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனம் ஒரு படி மேலே சென்று அமெரிக்காவில் கிடைக்கும் அருமண் தனிமங்களை மட்டுமே பயன்படுத்துவது என்று முடிவு செய்தது. ஜப்பானின் குளிர் சாதனம் தயாரிக்கும் டெய்கின் போன்ற சில நிறுவனங்கள் அருமண் தனிமம் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்தது. இது போன்ற நடவடிக்கைகளால் 2011ல் உச்சத்திலிருந்த அருமண் தனிமத்தின் விலை 2017வரை வீழ்ச்சியடைந்து வந்தது.

உலகம் முழுவதும் அருமண் தனிமத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, அதன் மீதான அறிதலும் அதிகரிப்பதால், சீனாவின் மேலாதிக்கத்திற்கு இது இடையூறாக மாறுகிறது. குறிப்பாக 2007ல் இரண்டு பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் சைனோஹைட்ரோ மற்றும் சீனா ரயில்வே குரூப், முன்னால் காங்கோவின் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சீனாவின் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு மாற்றாக காங்கோவின் கோபால்ட் மற்றும் செம்பு சுரங்கத்தில் 68% பங்கு தருவதாக கையெழுத்தானது. இந்த சுரங்கம்தான் சைக்கோ மைன்ஸ். இந்த இரண்டு சீன நிறுவனத்திற்கும் இது மிகப் பெரும் ஆதாயமாக அமைந்தது. ஆனால் 2017ல் இந்த விதியை இரகசியமாக மாற்றியது. சீனாவும் காங்கோவின் ஆட்சியாளர்களும். அதாவது சீனா உட்கட்டமைப்பு ஏற்படுத்தாமல், அதற்கு பதிலாக சீனாவின் முதலீட்டாளர்களுக்கு இலாபத்தை கொடுத்தனர். 2021ல் மக்களுக்கு இது பொது வெளியில் கசிந்தபோது, சீனாவிற்கு எதிராக மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல 2016ல் சீனாவின் மாலிப்டெனம் நிறுவனம் பகாசுர கோபால்ட் மற்றும் செம்பு சுரங்கமான தென்கே ஃபங்குருமேவுடனான ஒப்பந்தத்தின் சரத்தையும் வெளியிடும்படி தற்போதைய காங்கோவின் அரசிடம் வற்புறுத்தி வருகின்றனர். இப்படி சீனா பல நாடுகளில் அருமண் சுரங்கங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நிகழ்வில், புதிய காலனிய முறையில் சுரண்டலையும் கொள்ளையையும் அரங்கேற்றி வருகிறது.

அருமண் தனிமத் துறையில் சீனாவின் ஆதிக்கமே உள்ளது. இதில் அமெரிக்க நிறுவனங்கள் முன்னேற முயற்சித்து வருகிறது.

தொழில் நுட்ப அரசியல் பொருளாதாரம்:

மேலுள்ள துறைகளில் இந்த இரு நாடுகளும் கடுமையாக போட்டியிட்டு வருவதை பல்வேறு தரவுகள் மூலம் நிறுவியுள்ளோம். அதில் முக்கியமாக கருத வேண்டியது, இந்த தொழில்நுட்ப போட்டியை சாத்தியமாக்குவது அவர்களின் ஒன்று குவிக்கப்பட்ட உற்பத்தி திறன் மற்றும் அதை சாத்தியமாக்கிய ஒன்றுகுவிக்கப்பட்ட மூலதனம். இதுதான் இன்றைய ஏகபோகத்தின் பிரதான அடிகல்லாக இருக்கிறது. இன்னொரு அம்சத்தையும் நாம் முக்கியமாக இதில் கவனிக்க வேண்டும். நாம் இந்த கட்டுரையில் மூலதனங்களையோ, நிதிகளையோ, செலவீனங்களையோ குறிப்பிட்டு பேசும்போது, அதாவது அமெரிக்காவும் சீனாவும் இத்தொழில் நுட்பங்களில் நிதி அளிப்பை குறித்து பேசும்போது இந்த இரு நாடுகளின் நிதி அளிப்பு ஒரே வீதத்தில் பார்க்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் பெரும்பாலான ஊடகங்கள் ஒரு நாட்டை இன்னொரு நாட்டோடு ஒப்பிடும்போது அனைத்தும் டாலர் அடிப்படையிலேயே ஒப்பிட்டு பலத்தை தீர்மானிக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் அமெரிக்கா தனது சொந்த நாட்டில் ஒரு ஆய்வுக்கு செலவு செய்யும் 1 பில்லியன் டாலரிலிருந்து பெறப்படும் பயனும், சீனா தனது சொந்த நாட்டில் அதே ஆய்வுக்கு செலவு செய்யும் 1 பில்லியன் டாலரிலிருந்து பெறப்படும் பயனும் ஒன்றல்ல. அமெரிக்காவும் சீனாவும் ஒரே அளவான

1 பில்லியன் டாலர் செலவு செய்தாலும், சீனாவால் அமெரிக்காவைவிட பல மடங்கு பயன்மதிப்பை கொடுக்க முடியும். ஏனென்றால், சீனாவில் கிடைக்கும் அனைத்து பொருட்களின் விலையும், மனித உழைப்பு விலையும், நிர்வகிக்க தேவைப்படும் விலையும் என்று அனைத்து விசயங்களும் அமெரிக்காவைவிட பல மடங்கு குறைந்த விலையிலேயே கிடைக்கிறது. அதாவது 100 ஆராய்சியாளர்களை கொண்டு ஒரு ஆராய்சி கூடத்தையும் அமைக்க அமெரிக்கர்களுக்கு 1 பில்லியன் டாலர்கள் செலவாகிறதென்றால், சீனாவால் அதே

1 பில்லியன் டாலருக்கு 5க்கும் மேற்பட்ட கட்டுமானத்தை உருவாக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. அதனால் இதை மனதில் வைத்து மேலுள்ள போட்டியில் அவர்கள் செலவு செய்யும் நிதி குறித்த விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் சீனாவின் பலத்தையும் அமெரிக்காவின் பலத்தையும் தவறான மதிப்பீட்டுக்கு வந்தடைய நேரிடும்.

சீனாவிற்கு அமெரிக்காவிற்கும் நடக்கும் இந்த தொழில் நுட்ப போட்டி வெறும் இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும் சாதாரண போட்டியில்லை. இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடக்கும் போட்டி. ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்கள் உலகை ஆள நடத்தும் போட்டி. மறு பங்கீட்டிற்கான உக்கிரத் தாண்டவம். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் சூரியன் மறையாத ஏகாதிபத்தியமாக திகழ்ந்த பிரிட்டனைப்போல, கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்க திகழ்ந்து வருகிறது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் போட்டி ஏகாதிபத்தியமாக ஆரவாரம் இல்லாமல் வளர்ந்து வந்த அமெரிக்காவைப் போல இன்று அமெரிக்காவை எதிர்த்து சீனா வளர்ந்து வருவதையே காட்டுகிறது. இந்தப் போட்டி வெறும் அந்த நாடுகளின் வளர்ச்சியை மட்டும் தீர்மானிக்கும் போட்டியல்ல. மாறாக உலக ஒழுங்கமைவை தீர்மானிக்கிற போட்டியாக மாறியுள்ளது. புதிய காலனிய மறுபங்கீட்டிற்கான போட்டியாக மாறி நிற்கிறது. உலக நாடுகளையும் அதன் வளங்களையும், சந்தைகளையும் தமக்கிடையே பங்கிட்டு கொள்வதிற்கான போட்டியாக மாறியிருக்கிறது. மேலும் இந்த போட்டி, போருக்காக உலக நாடுகளின் அணிசேர்க்கையை தீவிரப்படுத்தும் போட்டியாக மாறியுள்ளது. உற்பத்தியிலும், செல்வாக்கிலும் வீழ்ந்து வரும் அமெரிக்காவிற்கும், மூலதனம், உற்பத்தி மற்றும் தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் தீவிரமான போட்டியாக மாறியுள்ளது. இந்த இரு நாடுகளும் தொழில் நுட்பத்திலும் உற்பத்தியிலும் ஏகபோகத்தை கொண்டு உலகை ஆளத் துடிக்கிறது. இதனால் உலகிலுள்ள மற்ற நாடுகளின் தொழில் துறையும் உற்பத்தியும் இந்த இரு நாடுகளை நம்பியிருக்க அல்லது சார்ந்திருக்க நேரிடும் அவலம் தொடரும். இது மற்ற உலக நாடுகளின் தொழில் வளர்ச்சியை அழித்து, வேலை வாய்ப்பை பறித்து, சுயச்சார்பை ஒழித்து, நாட்டின் வளர்ச்சியை குறைத்து, மக்களை ஒட்டச்சுரண்டும் போக்கிற்கு வழிவகுக்கிறது.

இந்தியா போன்ற நாடுகள் இன்னும் முழுமையான முதலாளித்துவ நாடாக பரிணமிக்க தடையாக இருப்பது ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்களின் சாதகமான அரசியல்-பொருளாதார கொள்கைகளே காரணம். இன்று இந்தியா போன்று அனைத்து நாடுகளிலும் அமெரிக்காவை சார்ந்திருப்பதா அல்லது சீனாவைச் சார்ந்திருப்பதா என்று ஆட்சியாளர்கள் கொள்கை உள்ளதே ஒழிய, இந்திய உள்நாட்டு உற்பத்தியை சார்ந்திருப்பது என்று கொள்கைகள் உருவாக்கப்படவில்லை. மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்களின் உற்பத்தியை இந்திய நாட்டில் உற்பத்தி செய்வதை தாண்டி ஒன்றுமில்லை. பாசிச பாஜக மோடி-அமித்ஷா கும்பலின் இந்த திட்டம்கூட இதுவரை ஒரு பெரிய பலனை பெற்று தரவில்லை என்று ஆளும் தரப்பே கூறி வருகிறது. அப்படி தந்திருந்தாலும் அது ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்களின் செல்வாக்கை வலுப்படுத்தி மக்களை ஒட்டச்சுரண்டுமே ஒழிய, மக்களின் வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும் உள்நாட்டு சுயச்சார்பு பொருளாதாரமே வழி வகுக்கும். அதற்கு இந்திய போன்ற அனைத்து நாடுகளும் அந்நிய தொழில் நுட்பங்களைச் சாராமல், அந்நிய மூலதனங்களை சாராமல் சுயேட்சையாக அனைத்து துறையிலும் வளர வேண்டியது அவசியமாகிறது. ஒரு தமிழ் கவிஞரின் பாட்டு வரிகள் மிக கச்சிதமாக பொருந்துகிறது.

"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்" 

இந்த வரிகளைப்போல் நம் தாய் திரு நாட்டில் இல்லாத வளங்களே இல்லை. ஆனால் இன்று பெரும்பாலான அத்தியாவசிய துறைகளிலும் நாம் அந்நிய தொழில் நுட்பத்தையும், அந்நிய மூலதனங்களை சார்ந்துதான் வளர்கிறோம். இதற்கு ஆளும் வர்க்கம் கொடுக்கும் தீர்க தரிசனம் "இன்றைய உலகம் உலகமயமாக்கலின் உலகம்" என்பதுதான். ஆனால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் நடக்கும் போட்டியே நமக்குத் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது, உலகமயம் என்பது ஒரு சில ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்குமான கொள்கையே என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. இந்த ஏகாதிபத்தியங்களின் தொழில்நுட்ப ஏகபோகத்தை சார்ந்துதான் இந்திய தரகு முதலாளிகள் இந்தியாவின் தொழில் துறையை கட்டமைத்திருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு எள்ளளவும் உதவாது. அது ஏகாதிபத்திய நாடுகளுக்கும் அதன் ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கும்தான் உதவுமே ஒழிய, நமது நாட்டு தொழில் துறை உற்பத்திக்கு கிஞ்சித்தும் உதவாது. அது இந்திய நாட்டை முழுமையான முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு இட்டுச் செல்வதற்கும், உற்பத்தியை பரந்தளவில் கட்டியமைக்கவும் பயன்படாதது மட்டுமல்ல இதை ஏகாதிபத்திய அரசுகளும் ஏகபோக நிறுவனங்களும் அனுமதிப்பதும் இல்லை. இதற்கான நடைமுறை உதாரணமே சீனாவின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு மற்றும் தடைகள். ஏகபோக நிறுவனங்கள் உலகளவில் எந்த ஒரு இடத்திலும் தனது ஆதிக்கத்தை விட்டுக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு நாட்டின் சுயவளர்ச்சியும், தன்னிறைவும் ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்துவதாகவும், வளர்ச்சிக்கு சவால் விடுவதாகவும், அதன் சந்தையை அழிப்பதாகவுமே கருதும். இந்திய நாட்டை அவர்களுக்கான சந்தையாகவும், இங்குள்ள மூலப்பொருட்களை அவர்களின் ஏகபோகத்தை நிறுவும் கருவியாகவும், இங்குள்ள மனித வளங்கள் ஏகபோக நிறுவனங்களின் அடிமை விலையில் வாங்கும் வாங்குபொருளாகவும், அதே மனித வளத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக ஒழுங்கமைவை காக்கும் ஏவல் படையாகவும் பயன்படுத்தி வருகிறது. இந்த ஏகாதிபத்திய ஏகபோக சார்பு இந்திய தரகு முதலாளிகளையும் அதன் அடிவருடிகளான ஆட்சியாளர்களையும், அதிகார கும்பல்களையும் எதிர்த்து நமது சொந்த தொழில் நுட்ப வளர்ச்சியையும், உள்நாட்டு சந்தை தேவைக்கு முக்கியமளிக்கும் உள்நாட்டு தன்னிறைவு உற்பத்தியையும் கட்டியமைக்க ஒன்று திரண்டு போராடுவது அவசியப்படுகிறது. இந்த போராட்டம் பொருளாதார போராட்டமோ பகுதி அளவு போராட்டமாகவோ இருக்க முடியாது. இப்போராட்டமே அனைத்தும் தழுவிய போராட்டமாக இருக்க வேண்டும். இந்த சுதேசிய உற்பத்தி முறைதான், தன்னிறைவு பொருளாதாரத்தை கட்டியமைக்கும். இதுவே நாட்டில் ஜனநாயகத்திற்கும் சகோதரத்துவத்துக்கும் அமைதிக்கும் வழிவகுக்கும். இதை நடைமுறைப்படுத்த இந்த ஆளும் வர்க்க தரகு முதலாளித்துவ கும்பல்களும் அதன் சேவகர்களான அதிகார வர்க்க கும்பல்களும், ஆட்சியாளர்களும் தடைகளாக உள்ளனர். இந்த தடைகளை அகற்ற புரட்சிகர போராட்டங்கள்தான் வழியாக உள்ளது என்பதை வரலாறு நமக்கு காட்டுகிறது. இந்த வரலாற்று பாதையில் நாம் ஒன்றிணைந்து போராடுவோம்! கட்டியமைப்போம்!

                                                (முற்றும்)

சமரன் - ஜனவரி2023 இதழிலிருந்து