மார்கன் நூலில் இரும்பு கண்டுபிடிப்பு பற்றி

தொகுப்பு - அ.கா.ஈஸ்வரன்

மார்கன் நூலில் இரும்பு கண்டுபிடிப்பு பற்றி

5,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு இருந்ததை, அண்மைய அகழாய்வு முடிவுகள் கூறுகிறது. இந்நிலையில் மார்கன் இரும்பு கண்டுபிடிப்பு பற்றி என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம் அதிகம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மனித வரலாற்றில் இரும்பு கண்டுபிடிப்பு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த இரும்பைப் பற்றி மார்கன் கூறுவதைத் தொகுத்துப் பார்ப்போம்.

1)

"டேனிஷ் தொல்லியலாளர்களால் அறிமுகம் செய்யப்பட்ட “கற்காலம்”, “வெண்கலக் காலம்”, “இரும்புக் காலம்” போன்ற சொற்கள் சில நோக்கங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. பண்டைய கலைகளின் பொருட்களை வகைப்படுத்துவதற்கு இனியும் அவை பயன்படும். ஆனால் மனிதகுலத்தின் அறிவு வளர்ச்சியடைந்து கொண்டே போகிறது. இதனால், மற்ற வெவ்வேறு உட்பிரிவுகளும் அவசியமாகிவிட்டது. இரும்புக் கருவிகளும் வெண்கலக் கருவிகளும் அறிமுகம் செய்யப்பட்டதால், கல்லால் செய்யப்பட்ட கருவிகள் முற்றிலுமாக தூக்கிப் போடப்பட்டு விட்டன என்று கூறிவிடமுடியாது. உருக்கும் இரும்புத்தாது கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக ஒரு புதிய இனவாத சகாப்தம் தோன்றியது. ஆனால் வெண்கலம் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இதேபோல் ஒரு புதிய இனவாத சகாப்தம் தோன்றியது என்று கூறிவிட முடியாது. வெண்கலம் மற்றும் இரும்பு யுகத்திலும் கற்களால் செய்யப்பட்ட பாண்டங்களும் கருவிகளும் புழக்கத்தில் இருந்தன. அதேபோல், இரும்பு யுகத்திலும் வெண்கலத்தால் செய்யப்பட்ட பாண்டங்களும் கருவிகளும் புழக்கத்தில் இருந்தன. எனவே, இவை ஒவ்வொன்றையும் தனித்தனியான, வேறுபட்ட, காலங்களாக, தெளிவாக வரையறுத்துவிட முடியாது. நீண்டகால இடைவெளிகளில், தொடர்ந்து ஏற்பட்டுவந்த வாழ்க்கைக் கலைகள், மனிதகுல நிலைமைகளின் மீது பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இவையே மனிதகுலத்தை வகைப்படுத்துவதற்கு, மிகவும் திருப்திகரமான அடிப்படையாக விளங்குகின்றன." (64-65)

2)

"மீன்களை உணவாகக் கண்டறிந்த காலத்திற்கும், மாவுச்சத்து நிறைந்த பொருட்களை உற்பத்தி செய்த காலத்திற்கும் இடையே மிக நீண்ட இடைவெளி இருந்தது. இந்தக் கால இடைவெளி என்பது, மனிதகுலம் விலங்குத்தன காலகட்டத்தில் வாழ்ந்த காலத்தின் மிகப்பெரும் பகுதியாகும். ஆனால், இந்தக் காலகட்டத்தில் உணவு வகைகளும், அளவும் மிகக் கணிசமாக அதிகரித்தன. உணவாகப் பயன்படும் கிழங்குகள், வேர்கள் போன்றவற்றை மண்ணாலான அடுப்புகளில் சமைத்தனர். புதிய கருவிகள் பெருகப் பெருக, குறிப்பாக வில்லும் அம்பும் கண்டுபிடிக்கப்பட்ட பின், வேட்டையாடுதல் *நிரந்தரமாயிற்று. மிக முக்கிய கண்டுபிடிப்பான வில், அம்பு என்பது மனிதகுலத்தின் விலங்குத்தன காலகட்டத்தின் இறுதிக் காலத்தில்தான் வந்தது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு வில்லும் அம்பும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் ஈட்டி, தண்டாயுதம், தடி போன்ற ஆயுதங்களே பயன்பாட்டில் இருந்தன. வில்லும் அம்புமே வேட்டையாடுவதற்கு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட மிக வலிமையான ஆயுதமாகும். மனிதகுலம் விலங்குத்தன காலகட்டத்தில் 'உயர்ந்த நிலையில் இருந்ததற்கு அடையாளமாக வில்லும் அம்பும் கருதப்படுகின்றன. நாகரிக காலகட்டத்திற்கு துப்பாக்கிகள் எப்படியோ அதேபோல் காட்டுமிராண்டித்தன காலகட்டத்திற்கு இரும்பால் செய்யப்பட்ட வாட்களை மனிதகுலத்தின் உயர்நிலைக்கு அடையாளமாகக் கொள்ளலாம்." (பக்கம் - 82)

3)

" காலப்போக்கில், இரும்பு உற்பத்தி தொடங்கியதையடுத்து, உழுவதற்குப் பயன்படும் ஏர் முனையில், இரும்பு பொருத்தப்பட்டது. மண்வெட்டி, கோடரி போன்றவையும் இரும்பினால் செய்யப்பட்டன. இவற்றின் பலனாகவும், முந்தைய தோட்டக்கலையினையடுத்தும், வயல்வெளி விவசாயம் தோன்றியது. இதனால் முதன்முறையாக எந்தவித வரையறையுமின்றி, மனிதனால் வாழ முடிந்தது. விலங்குகளின் சக்தியைப் பயன்படுத்தி உழவுப் பணி மேற்கொள்ளப்பட்டது ஒரு புதிய கலை என்றே கூறலாம். இப்போது, காடுகளைக் குறைத்து, பெரும் நிலப்பரப்புகளில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம், முதன்முறையாக உருவானது." (பக்கம் -89)

4)

"காட்டுமிராண்டித்தன காலகட்டத்தில் இருந்த மனிதன் படிப்படியாக முன்னேறி, இயற்கை உலோகங்களைக் கண்டறிந்தது; உலோகங்களை உருக்குவதற்கான உருக்குக் கலனையும்; அவற்றை அச்சுகளில் வார்ப்பதையும் கண்டறிந்தது; இயற்கைச் செம்புடன் தகரத்தைக் கலந்து வெண்கலம் தயாரித்தது; இறுதியாக இன்னும் சில பெருமுயற்சிகளை மேற்கொண்டு, கொதிகலன் கண்டுபிடித்தது; தாதுக்களிலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்தது என இவை அனைத்தையும் மனிதன் செய்வதற்குள், நாகரிகத்திற்கான போரில் பத்தில் ஒன்பது பங்கு மனிதகுலம் வெற்றியடைந்து விட்டது'. இரும்புக் கருவிகள் உதவியுடன், கூரான ஒரு முனையையும், பக்கவாட்டு விளிம்புகளையும் பிடிக்கக்கூடிய திறனுடன், ஒருங்கிணைந்த ஆற்றலோடு, மனிதகுலம் நாகரிகத்தை அடைவது உறுதியானது… ...

இதற்குப்பின் வந்தவை உலோகத்தாலான சுத்தி, பட்டடை (இரும்புத் தளம்), கோடரி, உளி, இரும்பு முனையுடன் கூடிய ஏர், இரும்பு வாள் ஆகியவை. நாகரிகத்தின் அடிப்படை, இரும்பு என்கிற உலோகம் என்றும் சொல்லலாம். இரும்புக் கருவிகள் இல்லாததாலேயே, நாகரிக தொடக்கக் காலகட்டத்தில் முன்னேற்றம் தடைபட்டு நின்றது. முன்னேற்றத்தில் ஏற்பட்ட இந்த இடைவெளியை நிரப்பத் தவறியிருந்தால், இப்போதுவரை மனிதகுலம் அதே நிலையிலேயே இருந்திருக்கும். இரும்புத் தாதுவை உருக்குவது என்ற எண்ணமும், இரும்புத்தாதினை உருக்கும் முறை பற்றிய சிந்தனையும் மனிதனுக்கு ஒருமுறைதான் தோன்றியிருக்கும் என்றே தோன்றுகிறது. இந்த எண்ணம், எந்தப் பழங்குடியினம் அல்லது, எந்தக் குடும்பத்திற்கு வந்ததோ, அங்கிருந்துதான் நாகரிகமும் தொடங்கியிருக்கும், அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்." (பக்கம் 108-109)

5)

"இப்போது சமுதாயம் மிக நன்றாக, அமைக்கப்பட்டிருந்தது. அதன் செயல்பாடுகள் மிகவும் சிக்கலானவையாக மாறிக்கொண்டிருந்தன. சமமற்ற செல்வ வளங்கள் காரணமாக இரண்டு அரைக்கோளங்களிலும் இப்போது வேறுபாடுகள் நிலவின. ஆனால் மேல்நோக்கிய தொடர்ந்த முன்னேற்றத்திற்கான முக்கிய ஆதாரம் இரும்பு மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த அறிவேயாகும். இந்தக் கட்டத்தைக் கடந்து, அடுத்த கட்டத்துக்குள் மேல் நிலைக்குச் செல்வதற்கு, ஒரு விளிம்பை, ஒரு முனையைப் பிடித்துக் கொள்ளும் உலோகக் கருவிகள் தவிர்க்க முடியாததாயின. இந்தத் தேவைகளுக்கெல்லாம் பதிலளிப்பதாக இரும்பு மட்டுமே அமைந்தது. இந்தத் தடை காரணமாக, நன்கு முன்னேறிய பழங்குடியினர் பலர், இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்போது தனிப்பட்ட சொத்துக்கள் அதிகரித்தன என்பதையும், நிலங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டன என்பதையும் மேற்கூறியவற்றிலிருந்து அறிகிறோம்."(பக்கம் -838)

6)

"அமெரிக்கப் பூர்வகுடிகள், காட்டுமிராண்டித்தன காலகட்டத்தின் 'கடைநிலைக்குச் செல்லவே இல்லை. இரும்பை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் கற்றுக்கொண்ட கிழக்கு அரைக்கோளத்திலேயே அது துவங்கியது. 

ஏற்கனவே வேறோரிடத்தில் குறிப்பிட்டது போல், கண்டுபிடிப்புகளிலெல்லாம் தலையாய கண்டுபிடிப்பு இரும்புத்தாதை ருக்குவதேயாகும். இந்தக் கண்டுபிடிப்புக்கு முன், மற்ற அனைத்து புதிய கண்டுபிடிப்புகளும், ஏற்கனவே உள்ளவற்றைக் கண்டறிந்ததும் கீழானவையாக உள்ளன. மனிதகுலம் வெண்கலம் பற்றிய அறிவைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் மேலும் முன்னேற, சிறந்த திறனுள்ள உலோகக் கருவிகளும், இயந்திரப் பயன்பாட்டுப் பொருட்களுக்குத் தேவையான வலுவும், கடினத்தன்மையும் கொண்ட உலோகம் ஒன்றும் தேவைப்பட்டன. எனவே அவர்களது முன்னேற்றம் தடைபட்டது.

இந்த எல்லாத் தன்மைகளும் முதன்முறையாக இரும்பில் காணப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகுதான் மனித அறிவு துரிதமாக வளர்ச்சியடைந்தது. இந்தப் புராதன காலகட்டம், எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. மனிதகுலத்தின் அனுபவத்தில் மிக அறிவார்ந்ததும், புத்திசாலித்தனமானதும், குறிப்பிடத்தக்கதுமான காலகட்டம் இதுவே. இந்தக் காலகட்டத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு கூறப்படுவதால், ஒருவேளை, இவற்றுள் சில, அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் எழும் வகையில் அவை அதிக அளவிலாக இருந்தன." (பக்கம் -844)

7)

"மனிதகுலத்தை விலங்குத்தன காலகட்டத்திலேயே வைத்திருந்த இடையூறுகள் ஏராளம். இவற்றைக் கடந்து வந்தது மிகக் கடினமானதாக இருந்தது. காட்டுமிராண்டித்தன காலகட்டத்தின் இடைநிலையை அடைந்தபோது நாகரிகம் நடுவில் அந்தரத்தில் நின்று கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் காட்டுமிராண்டித்தன மக்கள், இரும்பை உருக்கும் வழிமுறையை நோக்கி, உள்ளூர் உலோகங்களை வைத்து பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தனர். இரும்பு பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ளும் வரை, நாகரிகம் என்பது சாத்தியமற்றதாக இருந்தது. ஒருவேளை ன்று வரை இந்தக் கட்டத்தை மனிதகுலம் தாண்டியிருக்காவிட்டாலும், அது ஒன்றும் ஆச்சரியப்படும் விஷயமாக இருந்திருக்காது. பூமியில் மனிதன் தோன்றிய நாள் முதல் இதுவரை, வாழ்ந்து வரும் கால அளவைப் பார்க்கையில், விலங்குத்தன, காட்டுமிராண்டித்தன காலகட்டங்களில், மனிதன், பல்வேறு இடர்ப்பாடுகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டு, அவற்றைக் கடந்து வந்து முன்னேற்றமடைந்திருக்கிறான் என்பதைப் பார்க்கும்போது, நாகரிகம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து தாமதமாக நிகழ்ந்திருக்கும். ஆனால் அவ்வாறில்லாமல், அது நிகழ வேண்டிய காலத்தில் நிகழ்ந்தது கடவுளின் நல்லருளால்தான். பல்வேறு தொடர் சூழ்நிலைகளால்தான் அது அந்த நேரத்தில் நிகழ்ந்தது என்ற முடிவுக்கு நாம் வர வேண்டியிருக்கிறது. விலங்குத்தன காலகட்ட முன்னோர்களும், காட்டுமிராண்டித்தன காலகட்ட முன்னோர்களும், பொறுமையாக உழைத்த உழைப்பு, கதாநாயகர்களைப் போல் அவர்கள் மேற்கொண்ட பல சாகசங்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள், அவற்றை எதிர்கொள்ள அவர்கள் நிகழ்த்திய போராட்டங்கள் ஆகியவற்றால்தான், நாம் தற்போது பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் உழைப்பு, முயற்சி, வெற்றி ஆகிய அனைத்தும் உச்சபட்ச அறிவுக்கூர்மையின் ஒரு பகுதியாக இருந்து, விலங்குத்தனமான ஒரு மனிதனிலிருந்து, காட்டுமிராண்டித்தனமான ஒரு மனிதன் வந்தான்; காட்டு மிராண்டித்தனமான மனிதனிலிருந்து நாகரிகமான மனிதன் வந்தான் என்பதற்கான வளர்ச்சியை உறுதி செய்தன." (பக்கம் -859-860) 

 


- அ.கா.ஈஸ்வரன்



Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு