பாரதியார் தாழ்த்தப்பட்டவர்களோடு கொண்டிருந்த நெருங்கிய நட்பு!

அறம் இணைய இதழ்

பாரதியார் தாழ்த்தப்பட்டவர்களோடு கொண்டிருந்த நெருங்கிய நட்பு!

தன் வாழ்க்கை நெடுகிலும் பாரதியார் எளிய மனிதர்களோடு நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். உண்மையான பாரதியை நம்மில் பெரும்பாலோர் அறியவில்லை. மறைக்கப்பட்ட பாரதியை தாழ்த்தப்பட்டவர்களோடு அவர் கொண்டிருந்த தோழமையின் மூலம் அறிந்து கொள்ளலாம்;

பாரதியார் காற்றைப் போல், நீரைப் போல , நீலவானின் செங்கதிர்போல் அனைவருக்குமானவராய்  வாழ்ந்த மகாகவி.

அப்படிப்பட்ட கவியால் தான்

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும், வானும் ,மலையும் எங்கள் கூட்டம்
நோக்குமிடமெல்லாம் நாமென்றி வேறில்லை
நோக்க, நோக்க களியாட்டமே

என எழுத முடியும்.

1911 ஆம் ஆண்டு பாரதியார் எழுதி வெளியான ஆறில் ஒரு பங்கு என்ற நூலை பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்கிறது. அந்த நூல் ஆங்கிலேயேர்களுக்கு எதிரானது என்பதை காட்டிலும், சனாதனத்திற்கு அதிக எதிர்ப்பு கொண்டிருந்ததும் ஒரு காரணமானது. ஆங்கிலேயர்களுடன் ஒட்டி உறவாடிய பார்ப்பனர்களில் சிலரே, இந்த நூல் தடை செய்யப்பட்டதற்கான காரணம் என்பது அன்றைக்கு அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இந்த நூலின் முன்னுரையில் பாரதியார் இவ்வாறு எழுதியுள்ளார்;

ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம். பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம். பிறவி மாத்திரத்திலே உயர்வு தாழ்வு எண்ணம் கூடாது. மதப் பேதங்கள் இருக்கலாம். மத விரோதங்கள் இருக்கலாகாது. இவ்வுணர்வே நமக்கு சுதந்திரத்தையும், அமரத் தன்மையையும் கொடுக்கும் ‘ என்று கூறியுள்ளதோடு,

பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்த தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு  இந்த நூல் அர்ப்பணம்.

என இந்த நூலையே தாழ்த்தப்பட்ட சமூதாயத்திற்கு அர்ப்பணித்துள்ளார். இது போதாதா? அந்த நூல் தடை அன்று செய்யப்படுவதற்கு!

ஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்.
நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
மற்றோர் கீழோர்

என்றதன் மூலம் பாரதியார் நமக்கு, ‘உயர்ந்தவர்கள் யார்? தாழ்ந்தவர்கள் யார்?’ எந்த மதீப்பபீடுகள் கொண்டு பகுத்தறியலாம் என்றும் புரிய வைக்கிறார்.

சும்மா எழுத்திலே  ஒருவர் சமத்துவ கருத்துக்கள் சொல்வதைக் கொண்டு முழுமையாக நம்பிட முடியுமா? என்றால், அவரோடு பத்தாண்டுகள் நெருங்கி பழகிய பாரதிதாசன் அவர்கள் பாரதியாரைக் குறித்து இவ்வாறு எழுதுகிறார்;

மேலவர், கீழவர் இல்லை- இதை
மேலுக்கு சொல்லிடவில்லை.
நாலு தெருக்களின் கூட்டில் –மக்கள்
நாலாயிரத்தவர் காணத்
தோலினில் தாழ்ந்தவரென்று – சொல்லும்
தோழர் சமைத்ததை உண்பார்.

ஆம், பொதுவெளியில் அன்று தாழ்த்தப்பட்டவர்களை – தீண்டத்தகாதவர்கள் என சமூகம் ஒதுக்கி வைத்திருந்த காலத்தில் – அவர்கள் இல்லம் தேடிச் சென்று அவர்கள் சமைத்ததை உண்டு, அவர்களோடு பாரதி நட்பு பாராட்டியுள்ளார். ”புதுச்சேரியில் பல சாதியார்களிடமும் அவருக்கு  வீடு தேடிச் சென்று உணவருந்தும் அளவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. ..” என்று சொல்கிறார் பாரதிதாசன்.

செல்லம்மாள் அடிக்கடி சொல்வாராம். ”நான் என் அப்பா வீட்டிற்கு போனால் நீங்கள் சாப்பாட்டுக்கு கவலைப்படுவதில்லை. உங்களுக்கு சோறு போட்டு உபசரிக்க இங்க நிறைய பேர் இருக்காங்க…”

இதுமட்டுமின்றி தன் வீட்டிற்கும் அனைத்து சாதியினரையும் அழைத்து விருந்தளித்து மகிழ்ந்த சம்பவம் அவரது மகள் தங்கம்மாள் பூப்பெய்திய சமயம் நடந்துள்ளதும் நினைவுகூறத்தக்கது.

1914 ஆம் ஆண்டு புதுச்சேரியை ஆளும் பிரெஞ்சு அரசு முதல் உலகப் போரையொட்டி போர்க் களத்திற்கு ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அனுப்புகிறது. இந்த ஐவரில் இருவர் பாரதியாரின் நெருங்கிய சகாக்களாகும். ஒருவர் அந்துவென் அர்லோக். இவர் பிரெஞ்சு தேசிய கீதங்களை பாரதிக்கு பாடிக்காட்டுபவர். மற்றொருவர் ஜேம்ஸ் சாமுவேல். பாரதியார் தான் எழுதிய கவிதைகளைப் பாடும் போதெல்லாம் பிடில் வாசிப்பவர். இவர்களைப் பிரிய நேர்வதால், இவர்கள் ஐவரையுமே தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார் பாரதியார்.

அதுவும் எப்படி? இவர்களை மிகவும் உற்சாகமாக வரவேற்று, உள் கூடத்தில்  தன் இரு புறமும் அவர்களை அமர வைத்து மனைவி செல்லம்மாள் பரிமாற  உணவளித்தாராம். இதில் சாமுவேல் கூச்சப்பட்டு தண்ணீரை தூக்கி குடிக்க முயன்று முகத்திலும், மார்பிலும் தண்ணீரை ஊற்றிக் கொண்டதைக் கண்டு பாரதி, ”சாமுவேல் ஏன் தூக்கி குடித்தீர்கள். வழக்கம் போல் குடித்திருக்கலாமே” எனக் கூறி வாய் வைத்துக் குடிக்க வைத்துள்ளார்.

மேலும் விருந்து முடிந்ததும் தாங்கள் சாப்பிட்ட இலைகளை எடுக்க முயன்ற அவர்களை தடுத்துவிட்டு, ”நீங்க யாரும் இலையை எடுக்கக் கூடாது” எனக் கூறிய போது, செல்லம்மாள் அங்கு வந்து மிக இயல்பாக அந்த இலைகளை எடுத்துப் போயிருக்கிறார்.

இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் பாரதியார் வாழ்க்கையில் கொட்டிக் கிடக்கின்றன. மொத்தத்தில் பாரதியார் ஊருக்கு மட்டுமே உபதேசித்தவர் அல்ல. எதைச் சொன்னாரோ, அப்படியே வாழ்ந்தவர் என்பதைத் தான் நாம் உணர வேண்டும்.

மற்றொரு சம்பவம் பாரதிதாசனின் நேரடி அனுபவமாகும்.

பாரதி, பாரதிதாசன், வ.வே.சு ஐயர் மூவரும் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் முத்தியால்பேட்டை கிருட்டிணசாமி அங்கு வருகிறார். அவர் கையில் ஜஸ்டிஷ் பத்திரிக்கை . அது நீதிக் கட்சியின் நாளேடு. அதைக் கேட்டு வாங்கி பார்த்த வ.வே.சு ஐயரின் முகம் மாற்றமடைந்து சுண்டிப் போகிறது.

”ஏ! கிருஷ்ணா பொருளாதாரம், உத்தியோகம் ஆகிய துறைகளில் பிராமணரல்லாதார் முன்னேறி, பிராமணருடன் சம நிலை அடைய வேண்டும் என்பது ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் நோக்கம். அது நினைத்துப் பார்க்க முடியாத பகற்கனவு. அவங்க முன்னேறுவதைப் பார்த்து பிராமணர்கள் சும்மாவா இருப்பாங்க?” என்றார்.

அப்படிச் சொன்னதோடு தன் கருத்தை பாரதியார் ஆதரித்துப் பேசுவார் என்ற நினைப்பில் அவரை பார்த்தார். பாரதியாரோ அந்த கருத்தில் துளியும் ஏற்பின்றி முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டார். ஆக, பாரதியாருக்கு அதில் ஒத்த கருத்தில்லை என்பதை உணர்ந்த பாரதிதாசன் உத்வேகம் பெற்று, ”ஐயரே பிராமணரல்லாதார் மிகப் பெரும்பாலோர். அவர்கள் அடிதடியில் இறங்கிவிட்டால், பிராமணர்களின் கதி என்னாவது..?” என நறுக்கென கேட்டாராம்.

அவ்வளவு தான் வ.வே.சு ஐயரால் பதில் பகர முடியவில்லை. விருட்டென்று புறப்பட்டு வீட்டிற்கு போய்விட்டாராம். அப்போது பாரதியார், ”சுப்பு நீ கேட்டது சரியான கேள்வி. ஆணித்தரமான பேச்சு. அப்படித்தான் இருக்க வேண்டும். மக்களில் பெரும்பாலோர் அபிஷ்டம். அவர்கள் பொங்கி எழுந்து அடிதடியில் இறங்கினால் உண்டாவது தான்புரட்சி. அதை நிலை நிறுத்துவதே மக்கள் வெற்றி” என பாரதிதாசனின் தோளில் தட்டி பாராட்டினாராம்.

ஆகவே தான் பாரதிதாசன் தான் வாழும் காலம் முழுமையும்  மீண்டும், மீண்டும்  அழுத்தமாகக் கூறினார்.

பாரதியிடத்தில் பார்பனத் தன்மை எள்ளவும் கிடையாது.

“சூத்திரனுக்கு ஒரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் – அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம்”

என்று பெரியாருக்கு முன்பே முரசு கொட்டிச் சொன்னவன் பாரதி. நான் புரட்சிக் கவிதைகள் எழுதக் கற்றுக் கொண்டதே அவரிடம் தான். என்னை பாராட்டி, சீராட்டி வளர்த்தெடுத்தவரே பாரதி தான் என்று பாரதிதாசன் சொல்லிக் கொண்டே இருந்தார்.

இது தான் நமக்கு மறைக்கப்பட்ட பாரதி. பாரதியாரை எளிய மக்களுக்கு எதிராக நிறுத்தக் கூடாது. அவர் எப்போதும் எளிய மனிதர்களில் ஒருவராகவே தன்னையும் எண்ணி வாழ்ந்தவர் என்பதற்கு எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றை இன்னும் மேன்மேலும் சொல்வேன்.

கட்டுரை  எழுத துணை நின்ற நூல்கள்;

பாரதிதாசன் பார்வையில் பாரதி – முனைவர் ச.சுஇளங்கோ

என் குருநாதர் பாரதியார் – எஸ்.வையாபுரிப் பிள்ளை

பிள்ளை பிராயத்திலே – தங்கம்மாள் பாரதி ( பாரதியாரின் மகள்)

கட்டுரையாளர்; சாவித்திரி கண்ணன்.

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23820/bharathiar-dalits-friendship/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு