கிரேட் நிகோபார்: சீனாவுக்கு சவால் தரும் இந்தியாவின் ரூ.74,000 கோடி திட்டம் என்ன? அதற்கு எதிர்ப்பு ஏன்?

பிபிசி நியூஸ்

கிரேட் நிகோபார்: சீனாவுக்கு சவால் தரும் இந்தியாவின் ரூ.74,000 கோடி திட்டம் என்ன? அதற்கு எதிர்ப்பு ஏன்?

அந்தமானை ஒட்டி இருக்கும் கிரேட் நிகோபார் தீவுகளில் இந்தியா மேற்கொள்ள இருக்கும் திட்டங்களால் அங்குள்ள பழங்குடி இனம் அழிந்துவிடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

கிரேட் நிக்கோபார் தீவுகளில் இந்திய அரசாங்கம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. இத்திட்டங்கள் மூலம் கிரேட் நிக்கோபார் தீவுகள் வளர்ச்சியடையுமென இந்திய அரசு கூறுகிறது.

ஆனால் இத்திட்டத்தால் கிரேட் நிக்கோபார் தீவுகளில் வாழும் ஷோம்பென் பழங்குடி சமூகம் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் அத்தீவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ செவ்வாய்கிழமையன்று பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவின் இந்த தொலைதூரத் தீவு, கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய மையமாகவும், பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் விரைவில் மாறும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், PRESIDENT OF INDIA/X

படக்குறிப்பு,

கிரேட் நிக்கோபார் கட்டமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு விளக்கப்படுகிறது

'ஷோம்பென் இனமே அழியும்'

இந்த மாத தொடக்கத்தில் 39 நிபுணர்கள் குடியரசுத் தலைவர் முர்மூவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கிரேட் நிக்கோபாரின் தெற்குப் பகுதியை 'இந்தியாவின் ஹாங்காங்' ஆக மாற்றும் திட்டத்தால் ஷோம்பென் பழங்குடியினர் ஒரு இனப்படுகொலையை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது" என்று எச்சரித்துள்ளனர்.

இந்த கடிதம், உலகின் முக்கியமான செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியாக மாறினாலும் கூட, இந்திய அரசாங்கம் அதன் திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தவறிவிட்டதோ என்ற அச்சம் இருக்கிறது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக முர்மு இருக்கிறார், ஆனால் அவருக்கான அதிகாரங்களை அவர் பயன்படுத்துவதில்லை.

"குடியரசுத் தலைவர் முர்முவின் வருகை, கிரேட் நிக்கோபார் மெகா திட்டத்தை அரசாங்கம் விரைவில் நிறைவேற்றுவதற்கான ஒரு சமிக்ஞை என்றால், அது ஷோம்பென் பழங்குடி மக்களுக்கான ஒரு சாவுமணியாகத் தான் பார்க்க வேண்டும்" என்று சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பின் (Survival International) செய்தித் தொடர்பாளர் கேலம் ரஸ்ஸல் எச்சரித்தார்.

சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பின் கருத்துப்படி, 100 முதல் 400 என்ற எண்ணிக்கையில் தீவின் மழைக்காடுகளில் வாழும் நாடோடி வேட்டைக்காரர்கள் தான் இந்த ஷோம்பென் பழங்குடியினர்.

மொத்த நிக்கோபார் மற்றும் அந்தமான் தீவுகளில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஐந்து பழங்குடியினரில் ஷோம்பென் இனமும் ஒன்று.

பட மூலாதாரம், INDIA PORTS MINISTRY/X

படக்குறிப்பு,

புதிய திட்டம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் விளம்பரம்

அபகரிக்கப்படும் ஷோம்பென் இனக் காடுகள்

ஷோம்பென் இனத்தவர்களில் மிகச் சிலரே வெளி உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், கிரேட் நிக்கோபார் தீவின் குறைவான மக்கள் தொகை. இந்தியப் பெருங்கடலில் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தீவில் 8,000 சாதாரண மக்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

இருப்பினும், அரசாங்கத்தின் 9 பில்லியன் டாலர் (சுமார் 74,606 கோடி ரூபாய்) திட்டத்தின்படி, ஒரு புதிய நகரம், கப்பல் துறைமுகம், சர்வதேச விமான நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்ட பிறகு 6,50,000 பேர் இந்த தீவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவின் இருப்பிடத்தைக் சுட்டிக்காட்டி, சர்வதேச கப்பல் வர்த்தகத்தைப் பயன்படுத்திக் கொள்ள இது தான் சரியான இடம் என்று வாதிடுகிறது அரசுத் தரப்பு. பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்க்கவும் இது உதவும் என்பதைத் தனியாக குறிப்பிட தேவையில்லை.

இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் பகிரப்பட்ட ஒரு விளம்பர வீடியோவில், புதிய துறைமுகத்திற்குப் பின்னால் வானளாவிய கட்டிடங்களும், பிரமாண்ட சுற்றுலா விடுதிகளும் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

புதிய கப்பல் துறைமுகம் மற்றும் பிற கட்டுமானங்கள், கிரேட் நிக்கோபாரின் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று அந்த வீடியோ கூறுகிறது.

ஆனால் இந்த புதிய திட்டங்கள், ஷோம்பென் மக்கள் வாழும் மற்றும் வேட்டையாடும் நிலங்களை அபகரித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், சாதாரண மக்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ளும் அபாயத்தையும் அதிகரிக்கும் என்று சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.

பட மூலாதாரம், ANTHROPOLOGICAL SURVEY OF INDIA

படக்குறிப்பு,

ஷோம்பென் பழங்குடியினர்

'பழங்குடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு'

மனிதர்களுடான எந்தவொரு தொடர்பும் பழங்குடியினருக்கு ஆபத்தாக அமையும் என எச்சரிக்கின்றனர் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மார்க் லெவன் தலைமையிலான வல்லுநர்கள்.

அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், "ஒரு எளிய மனிதத் தொடர்பு ஏற்பட்டால் கூட, அந்த இனம் மக்கள்தொகை வீழ்ச்சியை சந்திப்பது உறுதி. ஏனெனில் ஷோம்பென் பழங்குடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. மனிதர்களிடமிருந்து பரவும் சாதாரண நோய்கள் கூட மிகவும் ஆபத்தாக மாறும்" என்று கூறியுள்ளார்கள்.

மனிதத் தொடர்பு ஏற்படாவிட்டாலும் கூட, தீவின் புதிய வளர்ச்சியின் தாக்கம் அந்த பழங்குடியினரிடையே ஒரு "கூட்டு மனநல முறிவை" ஏற்படுத்தக்கூடும்.

அரசாங்கத்தின் அறிக்கை கூட "அவர்கள் வசிக்கும் இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்பில் ஏதேனும் இடையூறு அல்லது மாற்றம் ஏற்பட்டால், அது அவர்களின் இருப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்" என்பதை ஒப்புக்கொள்கிறது.

மற்ற குழுக்களிடமிருந்தும் ஷோம்பென் பழங்குடிகள் பற்றிய எச்சரிக்கைகள் மட்டுமல்லாது, தீவின் தனித்துவமான சூழலியலுக்கும் சேதம் ஏற்படக்கூடும் என்பதை வலியுறுத்தியும் கூட, இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷோம்பென் இனத்தைக் காப்பாற்றுவதற்காக இந்த கொடிய திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று தாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக சர்வைவல் இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கேலம் ரஸ்ஸல் பிபிசியிடம் கூறினார்.

"தீவிற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இந்த மாற்றத்திலிருந்து ஷோம்பென் பழங்குடியினர் தப்பிப்பிழைக்க எந்த வழியும் இல்லை. அவர்களின் ஒரே வீடு இந்த தீவு தான். இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் தெளிவாக எச்சரித்துள்ளனர்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இந்த பிரச்னை குறித்து இந்திய அரசை தொடர்பு கொண்டு கருத்து கேட்டுள்ளது பிபிசி.

(ஃப்ளோரா ட்ரூரி)

பிபிசி நியூஸ் தமிழ்

www.bbc.com /tamil/articles/c28llr02eleo

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow