நூல் அறிமுகம்: ஊழியர் பயிற்சி
லெனின்
கம்யூனிஸ்டு கட்சி, தொழிலாளி வர்க்கத்தின், உழைக்கும் மாமக்கள் அனைவரின் அரசியல் தலைவனாகவும் ஸ்தாபன அமைப்பாளனாகவும் விளங்குகிறது. (தொழிலாளி வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை உணரவும் தனது அணிகளை ஒருங்கிணைத்து ஸ்தாபன ரீதியாக ஒன்றுபடுத்தவும் கம்யூனிஸ்டு கட்சி துணை புரிகிறது; அதற்கு விஞ்ஞான பூர்வமான செயல்திட்டத்தை வகுத்துக்கொடுக்கிறது. இவ்வாறாகக் கம்யூனிஸ்டு கட்சி வெகுஜன புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தை விஞ்ஞான சோஷலிசத்துடன் இணைக்கிறது.
கடந்த கால சமுதாயப் புரட்சிகளைப் போல் புரட்சிகர கம்யூனிச இயக்கம் தானாகவே நிறைவேற்றப்படவில்லை மாறாக இது சுய உணர்வுடன் விஞ்ஞான ரீதியாக அறிந்துணரப்பட்ட மனித சமுதாய வரலாற்று வளர்ச்சியின் புறவய விதிகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. பல மில்லியன் மக்களை இட்டுச் செல்லும் பரவலான இந்த இயக்கத்திற்கு ஈடு இணையில்லை. இந்தத் தொடர்பில் அரசியல் தலைவர்கள், ஸ்தாபன அமைப்பாளர்கள், உழைக்கும் மாமக்களின் வழி காட்டிகள் ஆகியவற்றுக்கான தொண்டர்களைப் பயிற்றுவிக்கும் பிரச்சினை குறிப்பாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்காகவும் சோஷலிசம், கம்யூனிசத்தின் முடிவான வெற்றிக்காகவும் முக்கியமான வர்க்கப் போராட்டங்கள் வெடித்துள்ள சகாப்தத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கான புரட்சித் தொண்டர்களை உருவாக்கி பயிற்றுவித்ததில் மகத்தான பங்கு லெனினைச் சாரும்.
அவரது படைப்புக்கள் அனைத்திலும் கட்சிக்கான, பொருளாதாரத் துறைக்கான தொண்டர்களைப் பயிற்றுவிப்பது, அவர்களை மேம்படுத்துவது, மக்கள் மத்தியில் அவர்களது பாத்திரத்தையும் செல்வாக்கையும் அதிகப்படுத்துவது ஆகியவற்றைப் பற்றிய அக்கறை தெட்டந்தெளிவாக தென்படுகிறது. தொண்டர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர்களை நடைமுறை ரீதியாகச் சோதித்துப் பார்ப்பதிலும்தான் கட்சியின் மிக முக்கியக் கடமைகளில் ஒன்று அடங்கியுள்ளது என்பதை லெனின் கண்டார். "தேவையானவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள்- இதை மக்கள் மதிப்பிடுவார்கள்" என்றார் லெனின்.
பிரெடெரிக் எங்கெல்ஸ், சமூக-ஜனநாயகக் கட்சியின் வேலைத்திட்ட நகலும் விளக்கமும், ருஷ்ய சமூக-ஜனநாயகவாதிகளின் கடமைகள், என்ன செய்ய வேண்டும்? போன்ற தனது ஆரம்ப காலத்திய படைப்புக்களிலேயே லெனின், உழைக்கும் மாமக்களின் புரட்சிப் போராட்டத்திற்குத் தேவையான தலைவர்களை, குறிப்பாக முழுநேர புரட்சிவீரர்களை இவர்களின் உதவியின்றி தொழிலாளி வர்க்கம் முதலாளிகளை வெற்றி கொள்ளயலாது- உருவாக்குவதை முன்னணியில் வைத்தார். "முழுநேர எழுச்சியாளனாகவும் ஸ்தாபன அமைப்பாளனாகவும் பிரச்சாரகர்த்தாவாகவும் மாற திறமைமிக்க ஒவ்வொரு தொழிலாளிக்கும் உதவி புரிவதே நமது கடமை" என்று அவர் எழுதினார்.
தொழிலாளி வர்க்கத்தின் மத்தியிலிருநதே புரட்சித் தொண்டர்களைத் தேர்ந்தெடுத்து முன்மொழிவது இதில் முக்கியக் கடமையாகும் என்று அவர் கருதினார். கட்சியின் தலைமை ஊழியர்கள் மக்களுடன் இடையறாது தொடர்பு உடையவர்களாயும் தன்னலமற்று புரட்சிக்குத் தம்மை அர்ப் பணித்தவர்களாகவும் மக்களின் எல்லையற்ற நம்பிக்கையை உடையவர்களாகவும் விளங்க வேண்டும்.
ஆனால், அவர்கள் மக்களுடன் கலந்து மறைந்து தொழிலாளர்கள் மத்தியில் தானாகத் தோன்றக் கூடிய கோரிக்கைகளை ஆதரிப்பதுடன் தங்களது பணியை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இதற்குப் பொருளாகாது. ருஷ்யாவில் சென்ற நூற்றாண்டின் இறுதியில் சமூக-ஜனநாயகவாதிகளின் மத்தியில் 'பொருளாதாரவாதம்" என்றழைக்கப் பட்ட சந்தர்ப்பவாத போக்கு தோன்றியது. சமூக-ஜனநாயகம் ஜார்முறைக்கு எதிரான அரசியல் போராட்டத்தையும் தொழிலாளர்களுக்கு புரட்சிக் கல்வி புகட்டுவதையும் விடுத்து வேலை நேரத்தைக் குறைத்தல், ஊதிய உயர்வு போன்ற தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டத்துடன் தனது நடவடிக்கையை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று "பொருளாதாரவாதத்தின்'' பிரதிநிதிகள் கருதினர். லெனின் "பொருளா தாரவாதத்தை" வன்மையாகக் கண்டித்தார். தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான போராட்டத்திலும் தொழிலாளி வர்க்கக்கட்சி பங்கு கொள்ள வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனால், கட்சியின் முக்கியக் கடமை, முதலாவதாக எதேச்சதிகாரத்தையும் பின் முதலாளித்துவத்தையும் முறியடிப்பதற்கான, சோஷலிசப் புரட்சிக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் நடத்தப்படுவதான அரசியல், புரட்சிப் போராட்டமேயாகும். "முக்கியக் கவனம் தொழிலாளர்களைப் புரட்சிவீரர்களாக உயர்த்துவதற்காக செலுத்தப்பட வேண்டுமேயன்றி, .."பொருளாதாரவாதிகள்" கூறும்படி நாமே "தொழிலாளர் வெகுஜனம்" வரை கீழிறங்கும் வகையில் செலுத்தப்படக் கூடாது" என்று லெனின் எழுதினார்.
புரட்சிப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் இருந்தே, முழுநேரப் புரட்சியாளருக்கும் மக்கள் லட்சியத்திற்கான போராட்ட வீரருக்கும் அவசியமான உயர்ந்த தனிக்குணங்களைக் கம்யூனிஸ்டுகளுக்கு புகட்ட வேண்டும் என்று லெனின் போதித்தார். சமூக-ஜனநாயகவாதியின் இலட்சியம் தொழிற்சங்கத்தின் செயலாளனாக இருத்தல் கூடாது; மாறாக, பொதுஜனங்களின் மத்தியில் எப்போதும் இருக்கக் கூடிய மக்கள் மாமேதையாக இருக்க வேண்டும். புரட்சிவீரன்-கம்யூனிஸ்டு தனது பிரஜைக்குரிய கடமையின் முழு முக்கியத்துவத்தையும் ஒட்டுமொத்தமாக புரட்சி இயக்கத்தின் முழுப்பொறுப்பையும் உணருகிறான்.
தொழிலாளி வர்க்கத்தின், மக்களின் நலன்களை, குறுகிய தனிப்பட்ட மற்றும் வேலைக்குழுக்களின் நலன்களுக்கு மேலாக வைக்கும் கம்யூனிஸ்டுகளின் திறமையை லெனின் உயர்வாக மதிப்பிட்டார். உயர்ந்த ஸ்தாபனரீதியான கட்டுக் கோப்பிற்காகவும் ஒழுக்கத்திற்காகவும், எதிர்காலத்தை நோக்கி வீறுநடை போடுபவரின் மீது வரலாற்றால் தவிர்க்க இயலாது சுமத்தப்படும் சோதனைகளையும் இன்னல்களையும் பொறுத்துக்கொள்ளும் திறமைக்காகவும் அவர் போரிட்டார்.
அதே சமயம், பதவிமோகம், தன்னலம் மற்றும் சகதோழர்களுடனான உறவில் மரியாதையின்மை ஆகியவற்றுக்கெதிரான சகியாமையைக் கம்யூனிஸ்டுகளுக்கு புகட்ட வேண்டிய தன் அவசியத்தைப் பற்றி சர்வதேசப் பாட்டாளி வர்க்கத் தலைவன் எச்சரித்தார். கட்சி ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுவதைக் குறிக்கக்கூடிய, உழைப்பாளிகள் விடுதலை இயக்கத்தின் நலன்களுக்கு நலன்களுக்கு பெரும் கேடு விளைவிக்கக்கூடிய கர்வம், "கம்யூனிச கர்வம்" போன்ற "குணங்கள்" வெளிப்படுவதை அவர் கடுமையாகக் கண்டித்தார்.
கட்சித் தொண்டர்களை சரிவரத் தேர்ந்தெடுத்து கல்வி புகட்டுவதற்கான முக்கிய நிபந்தனை ஜனநாயக மத்தியத்து வத்தைப் பற்றிய லெனினியக் கோட்பாடுகளைக் கண்டிபாக பின்பற்றுவதாகும்; இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள லெனினின் பல படைப்புக்கள் இதற்கு அர்ப்பணிக்கப்பட்டவை.
கட்சி கீழிருந்து மேல் வரை ஜனநாயக ரீதியில் கட்டப் பட்டிருப்பதுதான் உள்கட்சி ஜனநாயகத்திற்கு வழிவகை செய்கிறது என்று லெனின் சுட்டிக்காட்டினார். கட்சியின் எல்லா உறுப்பினர்களும் கட்சிப் பணிகளை சம உரிமையுடன் செய்கின்றார்கள் என்பது இதன் பொருள். கட்சியில் எல்லாப் பதவிகளில் உள்ளவர்களும் தலைமை உறுப்புக்களும் மேலிருந்து நியமிக்கப்படுவதில்லை, மாறாக, தேர்ந்தெடுக்கப்படு கின்றனர். அவர்கள் கட்சி உறுப்பினர்கள் முன்னும் மக்களின் முன்னும் தங்களது நடவடிக்கைகளைப் பற்றி அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்க கடமைப்பட்டவர்களாகின்றார்கள். சுட்சித் தலைமைப் பதவிகளுக்கு முன்மொழியப் பட்ட தலைவர்கள் இப்பதவிகளைத் தற்காலிகமாகத்தான் வகிக்கின்றார்கள்; குறிப்பிட்ட காலம் முடிந்ததும் இவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விமரிசன சுதந்திரம், கட்சியால் திட்டமிடப்படும் நட வடிக்கைகளைப் பற்றிய விவாத சுதந்திரம் ஆகியவற்றுக்கும் முடிவுகளை பொதுவாக உருவாக்கி ஏற்பதற்கும் ஜனநாயக மத்தியத்துவம் வழிகோலுகிறது. கட்சித் தலைமையைப்பற்றிய எல்லா விஷயங்களும் பெரும்பான்மை வாக்கின் மூலம் தீர்மானிக்கப்படும். கட்சிக் காங்கிரசுகளால் ஏற்கப் பட்ட எல்லா முடிவுகளையும் நிறைவேற்றுவது கம்யூனிஸ்டுகளுக்கு கட்டாயமானதாகும். நடவடிக்கைகளின், மனவுறுதியின் ஒற்றுமையும் கண்டிப்பான கட்சிக் கட்டுபாட்டு போதனையும் இதன் மூலம் சாத்தியமாகிறது. எல்லாக் கட்சி நடவடிக்கைகளிலும் சுறுசுறுப்பாக பங்கு கொள்ளும் வாய்ப்பையும் மக்களின் உண்மையான தலைவனாக தன்னைப் பயிற்றுவித்துக் கொள்ளும் வாய்ப்பையும் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினனுக்கும் ஜனநாயகம் அளிக்கிறது என்பதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.
பரந்த ஜனநாயகம், திட்டவட்டமான ஸ்தாபனக்கோப்பு, கடுமையான கட்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றின் உள்ளார்ந்த இணைப்பு, விவாத சுதந்திரம், நடவடிக்கைகளின் முழு ஒற்றுமையின் அடிப்படையில் விமரிசனம், சுயவிமரிசனத்தின் பரவலான வளர்ச்சி - இவைகள்தான் கட்சித் தலைவர்களாகப் போகின்றவர்களின் தோற்றத்திற்கும் வெற்றிகரமான சேவைக்கும் உரிய சூழ்நிலைகள்.
தொழிலாளர் கட்சியில் கட்டுப்பாட்டின் உள்ளடக்கத்தை வரையறுத்து லெனின் எழுதுகிறார்: "நடவடிக்கைகளின் ஒற்றுமை, விவாதம் மற்றும் விமரிசனத்திற்கான சுதந்திரம் இதுதான் நமது வரையறை. இத்தகைய கட்டுப்பாடுதான் முற்போக்கு வர்க்கத்தின் ஜனநாயகக் கட்சிக்குத் தகுந்தது."
புரட்சிப் போராட்டத்தின், கம்யூனிசக் கட்டுமானத்தின் எல்லாக் கட்டங்களிலும் கம்யூனிஸ்டுகளை ஸ்தாபனக் கட்டுக் (கோப்பு, உறுதியான கட்சி கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பயிற்றுவிக்க வேண்டுமென லெனின் கோரினார். 'தொழிலாளி வர்க்கத்தின் சக்தி-ஸ்தாபனம், ஸ்தாபனமின்றி பாட்டாளி மக்கள் ஒன்றுமேயில்லை. ஸ்தாபனரீதி யாக அவர்கள் எல்லாமே" என்று லெனின் போதித்தார்.
அதே சமயம், சிந்தனையற்ற சம்பிரதாயமான கீழ்படிதலுக்குப் பாடுபடாமல், மாறாக, செய்யும் காரியங்களின் அவசியத்திலும் சரித்தன்மையிலும் ஒவ்வொரு கட்சி உறுப்பினனும் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படை யிலான, சுயமான கட்டுப்பாட்டிற்காகப் பாடுபட வேண்டுமென லெனின் கூறினார். தொண்டர்களின் உறுதியான சித்தாந்த பயிற்சியின் அடிப்படையில்தான் இத்தநம்பிக்கையை அடைய முடியும்; இது எப்போதுமே கம்யூனிஸ்டு கட்சியின் குறிப்பான அக்கறையை பெற்றதாக இருந்து வந்துள்ளது.
மார்க்சிய-லெனினிய புரட்சித் தத்துவத்தைப் படைப்பாற்றலோடு படிப்பதும் அதை ஆழ்ந்து புரிந்து கிரகிப்பதும்தான் பாட்டாளி வர்க்க புரட்சிவீரனின் முதற் கடமையாக இருந்துள்ளது, இன்னமும் இருக்கிறது. விஞ்ஞான கம்யூனிசம் கனவோ அல்லது ஒருசில தனிமேதைகளின் கற்பனையோ அல்ல; அது ஒரு கட்டுக்கோப்பான உலகக் கண்ணோட்டமாகும் என்று லெனின் எழுதினார். இது எல்லாத் துறைகளிலும் மனித ஞானம் அடைந்துள்ள திட்டவட்டமான
விஞ்ஞான விவரங்களை ஆதாரமாகக் கொண்டது. "எப்போது ஒருவன் மனிதகுலம் உருவாக்கிய எல்லா செல்வத்தையும் பற்றிய ஞானத்தால் தனது ஞாபகசக்தியை வளமூட்டிக் கொள்கிறானோ அப்போதுதான் அவன் கம்யூனிஸ்டாக முடியும்" லெனினின் புகழார்ந்த வார்த்தைகள் அனைவருக்கும் என்ற தெரிந்ததே.
உழைப்பாளிகள் நடைமுறையில் சோஷலிசக் கட்டுமானத்தைத் துவக்கிய சூழ்நிலைகளில் சித்தாந்தப் பயிற்சிப் பணியின் புதிய உள்ளடக்கத்தை லெனின் காண்பித்தார். கம்யூனிஸ்டிற்கு "சாதாரண எழுத்தறிவு போதுமானதல்ல.' "கம்யூனிசத்தைக் கற்க வேண்டும், கம்யூனிச சமுதாயத்தை உருவாக்க" கற்றுக் கொள்ள வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். கம்யூனிசத்திற்கான அன்றாட நடைமுறைப் போராட்டமின்றி, இதை உருவாக்குவதில் நிலையாக தனிப்பட்ட முறையில் பங்குகொள்ளாமல் இதை அடைய முடியாது. "வேலை இல்லாமல், போராட்டமில்லாமல் கம்யூனிசத்தைப் பற்றிய புத்தக அறிவு என்பது... ஒன்றுமே ல்லாததாகும்" என்கிறார் லெனின்.
தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டபின் தொண்டர்களைப் பற்றியப் பிரச்சனை குறிப்பான கடுமை யுடன் முன்நின்றது. போல்ஷிவிக்குகளின் கட்சி நாட்டை நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அதாவது "புதிய அமைப்பை வழிகாட்டி ஒழுங்குப்படுத்த, முதலாளி கள் இன்றி, முதலாளிகளுக்கு எதிரான பொது வாழ்வின் கட்டுமானத்தில் அனைத்து உழைப்பாளிகள், சுரண்டப்படுபவர்களின் தலைவனாக, வழிகாட்டியாக, ஆசிரியராக இருக்க" வேண்டியிருந்தது.
இந்த நேரத்தில் (1917ஆம் ஆண்டு நவம்பர் முதல் 1923 மார்ச் வரை) லெனின், கட்சி மற்றும் அரசு தலைமைப் பதவிகள், சோஷலிசக் கட்டுமானம் ஆகியவற்றில் தொண் டர்களின் பணிகளைப் பற்றிய பிரச்சினைகள் குறித்து எழுதினார். அவர் அரசு நிர்வாக அமைப்பைப் பற்றிய திட்ட வட்டமான செயல்திட்டத்தை தீட்டினார்; தொண்டர்கள் பிரச்சினையின் தீர்விற்கான வழிகளையும் தொண்டர்களை உருவாக்குதல், அவர்களைத் தேர்ந்தெடுத்தல், தக்க இடத்தில் வைத்தல் ஆகியவற்றைப் பற்றியக் கோட்பாடுகளையும் கோடிட்டுக் காண்பித்தார்.
பொறுப்பான கட்சி, அரசுப் பதவிகளுக்கு ஆட்களை முன்மொழியும்போது அவர்களின் அரசியல் மற்றும் காரிய ரீதியான குணநலன்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் லெனின். எந்த ஒரு தலைமைப் பொறுப்பில் உள்ளவரும் திடநம்பிக்கையுள்ள கம்யூனிஸ்டாகவும் அதே சமயம் விசேஷ ஞானம், அனுபவம், திறமைகள் உடையவராயும் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
"...எப்படிப்பட்ட நேர்மையும் எப்படிப்பட்ட கட்சிச் செல்வாக்கும், முக்கியமானதாகிய செய்யும் காரியத்தில் உள்ள அறிவை மாற்றாது" என்று சுட்டிக் காட்டினார் லெனின்.
முக்கிய தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் தேர்தல், அவர்களின் மாற்றம், அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை மக்கள் கண்காணித்தல் போன்ற ஜனநாயகக் கோட்பாடுகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதற்கு அவர் மிகுந்தமுக்கியத்துவம் தந்தார்.
தலைவனின் நடவடிக்கைகளைக் கீழிருந்து மக்கள் பரவலாகக் கண்காணிப்பதில் அதிகாரவர்க்க மனப்பாங்கை அகற்றும் முக்கிய சாதனத்தை லெனின் கண்டார்; அதிகார வர்க்க மனப்போக்கிற்கு எதிரான போராட்டத்திற்கு அவர் பெரும் கவனம் செலுத்தினார். ஜனநாயக அமைப்புக்களால் அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான அதிகாரத்தை தனது கைகளில் குவித்துக்கொள்ளும் நாட்டம், பதவி வேட்கை, மக்களுக்கு கல்விபுகட்டுவதை விடுத்து கண்மூடித்தனமான அதிகாரம் செலுத்தல், கர்வம், மக்களிடமிருந்து தள்ளியிருந்தல் போன்ற அதிகாரவர்க்க மனப்போக்கின் எந்த ஒரு பிரதிபலிப்பையும் லெனின் மிகப்பெரும் குற்றம் எனக் கருதினார்; இவைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் இடையறாது போராட வேண்டுமென்றார். தலைவர்கள் கட்சி யின் கொள்கைகளை விளக்கியும் தங்களது நடவடிக்கைகளைப் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்தும் தொடர்ந்து மக்கள் முன் உரையாற்ற வேண்டும் என்றார் லெனின். அவர்கள் மக்களின் மனப்போக்கை அறிந்திருக்க வேண்டும்; பொது நலன்களை உத்தேசித்து அதன் மேல் தாக்கம் செலுத்தும் திறமையுடையவர்களாயிருக்க வேண்டும்.
முன்னணித் தொண்டர்கள் மார்க்சியத்திலிருந்து பிறழ்வதைச் சகித்துக் கொள்ளாமை, உயர்ந்த கோட்பாட்டு நெறி, புதியதை உணரும் தன்மை, விமரிசனத்திற்கும் சுயவிமரிசனத்திற்கும் தக்க கவனம் செலுத்துதல் போன்ற குணங் களை உடையவர்களாய் இருக்க வேண்டும்.
சோஷலிசக் கட்டுமானத்தில் கட்சிக்குள்ள தலைமைப் பாத்திரத்தை மறுக்கும் கட்சி விரோதிகளின் முயற்சிகளையும் கட்சித் தலைமையை கலாச்சார, கல்வித் துறைகளோடு மட்டுப்படுத்த செய்யப்பட்ட முயற்சிகளையும் தோலுரித்துக் காட்டியதில்தான் லெனினின் மாபெரும் தகுதி அடங்கியுள்ளது. உழைப்பாளிகளின் அரசு மற்றும் சமூக ஸ்தாபனங்களை, உதாரணமாக தொழிற்சங்கங்களை, கட்சிக்கு மேலாக வைக்க விரும்பிய திருத்தல்வாதிகளின் முயற்சிகளை அவர் மறுத்தார். கட்சிக்கும் தொழிற்சங்கங்கள், கூட்டுறவுகள், இளங்கம்யூனிஸ்டு சங்கம் போன்ற உழைப்பாளிகளின் வெகுஜன சமூக ஸ்தாபனங்களுக்கும் இடையேயுள்ள பரஸ்பர உறவுகளுக்கான விஞ்ஞான அடிப்படைகளை லெனின் வகுத்தார். வெகுஜன ஸ்தாபனங்களின் மேல் உள்ள கட்சியின் சித்தாந்த மற்றும் ஸ்தாபனச் செல்வாக்கின் தளர்ச்சி அவற்றின் தலைமையின் ஐக்கியத்தையும் எதிர்காலச் சாத்தியக்கூறுகளையும் இல்லாதவாறு செய்துவிடும்; இது அவற்றின் ஸ்தாபனக் கலைப்பிற்கு மட்டுமே கொண்டுவிடக்கூடும் என்று லெனின் சுட்டிக் காட்டினார்.
சோஷலிசக் கட்டுமானம், அரசிலும் சமுதாயத்திலும் கட்சியின் தலைமைப் பாத்திரம் அப்படியே இருந்தால் மட்டும் போதாது, இன்னமும் வலுப்படுத்தப்பட வேண்டுமெனக் கோருகிறது என்றார் லெனின். இது இல்லாமல், புரட்சியில் வெற்றிவாகை சூடிய தொழிலாளி வர்க்கத்தால் தன் முன் நிற்கக் கூடிய வர்க்கப் போராட்டத்தின், ஆக்கப் பணியின் எந்த ஒரு புதிய பிரச்சினையையும் வெற்றிகரமாகத் தீர்க்க முடியாது.
அனைத்து கம்யூனிஸ்டுகளையும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்திற்கு விசுவாசமான மனப்போக்கில் கல்விபுகட்டுவதற்கு லெனின் குறிப்பான முக்கியத்துவம் அளித்தார். 'மூலதனம் ஒரு சர்வதேச சக்தி. இதை வெல்வதற்குத் தொழிலாளிகளின் சர்வதேச கூட்டும், அவர்களின் சர்வதேச சகோதரத்துவமும் அவசியம். நாம் சர்வதேசியவாதிகள்" என்று லெனின் எழுதினார்.
தனது நாட்டில் புரட்சி இயக்கத்தின், புரட்சிப் போராட்டத்தின் வளர்ச்சிக்கான தன்னலமற்ற பணி, மற்ற எல்லா நாடுகளிலும் புரட்சிப் போராட்டத்திற்கு ஆதரவு என்பதைத் தான் சர்வதேசியவாதம் நடைமுறை ரீதியாகக் குறிக்கிறது என்று லெனின் போதித்தார். இதில் எல்லாவிதமான சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கும் எதிரான போராட்டத்திற்கு அவர் முதன்மையான முக்கியத்துவம் அளித்தார். இந்நூலில் இடம்பெற்றுள்ள சர்வதேசியவாதம், உலகக் கம்யூனிச இயக்கத்தின் ஐக்கியத்தைப் பற்றிய வெனினியக் கோட்பாடுகள் மிக நம்பிக்கையான அளவுகோலாகும்; இதன் உதவியால் ஒவ்வொரு கம்யூனிஸ்டு கட்சியும் தனது அரசியல் கொள்கையை சரிபார்த்துக் கொள்ளலாம்; வலதுசாரி சந்தர்ப்பவாதிகளுக்கும் 'இடதுசாரி' துர்ச்சாகசக்காரர்களுக்கும் பதிலடி தரலாம்.
தொழிலாளர் இயக்கத்தின் தனிப்பட்ட பிரிவுகளில் தோன்றக் கூடிய கருத்து மாறுபாடுகளையும் தவறுகளையும் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தையும், இயக்க ஒருமைப் பாட்டின் நலன்களுக்காக அவற்றை சர்வதேச அளவில் கவனமாக விவாதித்து கருத்துப் பரிமாறிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் லெனின் வலியுறுத்தினார். அதே நேரத்தில் அவர், புரட்சிகர மார்க்சியத்தின் மாபெரும் இலட்சியங்களில் இருந்து விலகுபவர்களுடனும் அதை இழிவுபடுத்துபவர்களுடனும் சமரசம் செய்து கொள்வதை சகித்துக்கொள்ளாத மனநிலையில் கட்சித் தொண்டர்களைப் பயிற்றுவித்தார். ஒற்றுமை என்பது ஒரு மாபெரும் செயலாகும்; ஆனால் 'மார்க்சியவாதிகளின் ஒற்றுமைதான் வேண்டுமே தவிர, மார்க்சிய எதிரிகளுடனும் அதை திரிப்பவர்களுடனுமான ஒற்றுமை தேவையில்லை" என்று லெனின் போதித்தார்.
லெனினிய நம்பிக்கையும் சர்வதேச புரட்சி இயக்கத்தின் ஒருமைப்பாட்டைப் பிளவுபடுத்துபவர்களுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள உற்சாகமும் எந்த ஒரு உண்மையான மார்க்சிய-லெனினியவாதிக்கும் தக்க உதாரணமாகும்.
இந்நூல் பரவலான வாசகர்களுக்கானது. கட்சியை உருவாக்கி அதன் உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி உழைப்பாளர்களின் மேல் உள்ள செல்வாக்கை உறுதிப்படுத்தும் முகமாக லெனின் ஆற்றிய மாபெரும் பணி இந்நூலில் பிரதிபலிக்கிறது. லெனினியப் படைப்புக்கள், புரட்சிகர மார்க்சியத்தின் சரித்திரத்திலும் தத்துவத்திலும் ஆர்வமுள்ள அனைவருக்கும் பெரும் கல்வி புகட்டும், போதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதோடன்றி, எல்லா மார்க்சிய-லெனினியவாதிகளுக்கும், அவர்களின் பணிக்கேற்ற வழி காட்டியாகவும் விளங்குகின்றன.
- அ. மிரோஷ்னிக்கவ்
நூலினை பெற தொடர்பு கொள்ளவும்:
95437 38415
சென்னை புத்தக காட்சியிலும் (அரங்கு எண் 535 - புது உலகம்) கிடைக்கிறது.