நூல் அறிமுகம்: சோவியத் ஆட்சி என்றால் என்ன?
லெனின்
பெரும்பாலான நாடுகளில் மக்கள் புரிந்து கொள்ளமாட்டாத, அல்லது புரிந்து கொள்ள முடியாத இந்தப் புதிய ஆட்சியின் சாரம் என்ன? எல்லா நாடுகளிலுமுள்ள தொழிலாளர்களுக்கு மேலும் மேலும் அதிகமான கவர்ச்சியை உடைய இந்த ஆட்சியின் சாராம்சம் பின் வருமாறு: முன்பெல்லாம் அரசாங்கம் ஏதாவது ஒரு வகையில் பணக்காரர்களால் அல்லது முதலாளிகளால் நடத்தப்பட்டு வந்தது. தற்பொழுது முதல் முதலாக, அரசாங்கம் - வெகுஜன ரீதியிலும் - முதலாளித்துவத்தினால் ஒடுக்கப்பட்ட அதே வர்க்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் ஜனநாயகமான, மிகவும் சுதந்திரமான குடியரசிலும் கூட, மூலதனம் ஆதிக்கத்தில் இருக்கும் வரையிலும், நிலம் தனிச்சொத்தாக இருக்கும் வரையிலும், அரசாங்கம் ஒரு மிகச்சிறிய சிறுபான்மையோரால் மட்டுமே என்றும் நடத்தப்பட்டு வரும். அவர்களில் பத்தில் ஒன்பது பேர் முதலாளிகள் அல்லது பணக்காரர்கள்.
உலகத்திலேயே முதல் தடவையாக, ரஷ்யாவில் நாம் ஒருவகை அரசாங்க அதிகாரத்தை அமைத்துள்ளோம். அதில் தொழிலாளர்கள் மட்டும் உழைக்கும் விவசாயிகள் மட்டும் - சுரண்டல்காரர்களுக்கு இடமில்லாமல் - சோவியத்துகள் என்ற வெகுஜன ஸ்தாபனத்தில் அங்கம் வகிப்பர். அந்த அமைப்புக்கு முழு அரசாங்க அதிகாரம் உண்டு. இந்தக் காரணத்தினால்தான்-எல்லா நாடுகளிலும் பூர்ஷ்வாக்களின் பிரதிநிதிகள் ரஷ்யாவை எவ்வளவு நிந்தனை செய்த போதிலும் உலகம் முழுவதிலும் எல்லா இடங்களிலும் "சோவியத்" என்ற வார்த்தை புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பது மட்டுமன்றி -அது ஒரு பிரபலமான வார்த்தையுமாகி விட்டது. எல்லாத் தொழிலாளர்களும், எல்லா உழைப்பாளிகளும் நேசிக்கும் வார்த்தையாகவும் உள்ளது. இந்தக் காரணத்திற்காகத்தான், பல்வேறு நாடுகளில் கம்யூனிஸத்தின் ஆதரவாளர்கள் எவ்வளவு அடக்கு முறைகளுக்குள்ளாக்கப் பட்ட போதிலும் சரி, உலக ரீதியில் சோவியத் ஆட்சியின் வெற்றி சமீப எதிர்காலத்தில் ஏற்படுவது தவிர்க்க முடியாததும், ஏற்கனவே நிர்ணயமாகி விட்டதுமான ஒரு முடிவாகும்.
சோவியத் ஆட்சி அமைப்பில் இன்னும் பல குறைபாடுகள் நமக்கு உண்டு என்பதை நாம் நன்கு அறிவோம். சோவியத் ஆட்சி அற்புதங்களை நிகழ்த்தும் ஒரு மாயமந்திர ஆட்சியல்ல. கடந்த காலத்தின் குறைபாடுகளான கல்லாமை கலாச்சாரமின்மை, அநாகரிகமான யுத்தத்தின் விளைவுகள் கொள்ளைக்காரத்தனமான முதலாளித்துவம் விட்டுச் சென்ற கம்புகள், ஆகியவற்றுக்கு ஒரே நாளில் அதனால் பரிகாரம் கண்டு விடமுடியாது. ஆனால் சோஷலிஸத்திற்குச் செல்வதற்கான மாறுதலை அது சாத்தியமாக்குகிறது. ஒடுக்கப்பட்டுக் கீழ் நிலையிலுள்ள மக்கள் தங்களை உயர்த்திக் கொள்வதை அது சாத்தியமாக்குகிறது. அரசாங்கத்தை நடத்திச்செல்லும் வேலை அனைத்தையும், பொருளாதாரத்தை நிர்வகிக்கும் வேலை அனைத்தையும், தொழில்களை நடத்தும் வேலை அனைத்தையும் மேலும் மேலும் அதிகமான அளவில் தங்கள் கைகளிலேயே எடுத்துக் கொள்வதற்கு சோவியத் ஆட்சி அவர்களுக்கு சக்தியைக் கொடுக்கிறது.
சோவியத் ஆட்சி சோஷலிஸத்திற்கான வழியாகும்; உழைப்பாளி மக்களால் கண்டு பிடிக்கப்பட்ட வழியாகும்; இதனால் தான் இது உண்மையான வழியாகிறது; அசைக்க முடியாத வழியாகிறது.
- லெனின்
நூலினை பெற தொடர்பு கொள்ளவும்:
95437 38415
சென்னை புத்தக காட்சியிலும் (அரங்கு எண் 535 - புது உலகம்) கிடைக்கிறது.