நூல் அறிமுகம்: கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைமுறை பற்றி

சமரன்

நூல் அறிமுகம்: கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைமுறை பற்றி

முன்னுரை

இச்சிறு நூல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை முறை பற்றிய மக்கள் யுத்தம் (போல்ஷ்விக்) கட்சியின் ஆவணமாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் கமிட்டி எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை லெனினிய வழியில் இதில் விளக்கப்பட்டுள்ளது. தலைமை முறை பற்றிய இந்தக் கோட்பாடு கட்சியின் தலைமைக் கமிட்டி (மத்தியக் கமிட்டி) எவ்வாறு இயங்க வேண்டும் என்பது பற்றியது மட்டுமே; இது கட்சியின் பிற கமிட்டிகள் இயங்குவது பற்றியதல்ல. அதாவது இக்கோட்பாடு தலைமைக் கமிட்டிக்கு மட்டுமே பொருந்தக் கூடியது; பிற கமிட்டிகளுக்குப் பொருந்தாது.

லெனின் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் கமிட்டி இயங்குவது பற்றி இரண்டுவிதமான காலகட்டங்களுக்கு ஏற்ப இரண்டு விதமான தலைமைமுறைகளை முன்வைத்து வழிகாட்டினார். அவை: 

1. இரண்டு மையம் -  ஒரு கவுன்சில்

2. ஒரே மையம் -  இரு வேலைப் பிரிவினை

இவ்விரண்டு விதமான தலைமை முறையை உருவாக்குவதற்கான நிலைமைகள் குறித்தும், இவ்விரண்டு முறைகளிலும் மார்க்சிய உள்ளடக்கத்தின் அவசியம் குறித்தும் லெனினின் வழிகாட்டுதல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின் மறைவிற்குப் பிறகு குருசேவின் நவீன திருத்தல்வாதம் அமைப்புத் துறையிலும் புகுத்தப்பட்டது. அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ), நடைமுறை அமைப்புக் குழு இரண்டும் சமமானது; அதாவது அரசியல்- தத்துவப் பணி மற்றும் நடைமுறைப் பணி இரண்டும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற வெனினிய வழிகாட்டுதலை குருசேவ் கும்பல் கைவிட்டு பொலிட் பீரோவிற்குத்தான் அனைத்து அதிகாரமும் உண்டு என்பதாக மாற்றியது. மட்டுமின்றி மார்க்சிய உள்ளடக்கத்தின் அவசியத்தை தூக்கியெறிந்துவிட்டு நவீன திருத்தல்வாதத்தை புகுத்தியது. கட்சியை முதலாளித்துவ நிறுவனமாக மாற்றுவதற்கே பொலிட் பீரோவின் ஏகபோக அதிகாரம் எனும் எதேச்சதிகார வடிவம் குருசேவ் கும்பலால் துவக்கி வைக்கப்பட்டது.

குருசேவின் நவீன திருத்தல்வாத வழியை பின்பற்றி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறையைத்தான் பின்பற்றி வருகின்றன. அரசியல் தத்துவப் பணி மேலானது; அரசியல் குழு (பொலிட் பீரோ) உயர்ந்தது. நடைமுறைப் பணி கீழானது எனும் லெனினிய விரோத கண்ணோட்டம் திருத்தல்வாத கட்சிகளில் புரையோடிக் கிடக்கின்றது. இரண்டு பணிகளும் சமமானவை; இரண்டும் இணைந்ததே தலைமை முறை எனும் லெனினியத்தை அவை கைவிட்டுவிட்டன.

தமிழகத்தில் சில எம்.எல். அமைப்புகளில் கூட இந்த குருசேவிய கருத்து செல்வாக்கு செலுத்தி வருகிறது. CPI, CPM கட்சிகள் மட்டுமின்றி சில எம்.எல். அமைப்புகளும் கூட அமைப்பு வடிவத்திற்கு முக்கியத்துவம் தந்து மார்க்சிய உள்ளடக்கத்தை கைவிட்டு முதலாளித்துவ கட்சிகளாக சீரழிந்துவிட்டன. 

மறுபுறம் நக்சல்பாரி அமைப்பு, அழித்தொழிப்பு வழியை பின்பற்றியதாலும், அலைந்து திரியும் குழுக்களாக மாறியதாலும் தத்துவப் பணி, நடைமுறைப்பணி இரண்டிலுமே மார்க்சிய லெனினிய தலைமை முறையை உருவாக்க முடியாத நிலை உருவானது. அழித்தொழிப்பு வழி ஒன்று மட்டுமே ஒரே தத்துவமாகவும் நடைமுறையாகவும் மாறியதால், இடது அராஜக வழிக்கு இட்டுச் சென்றது. 

உலகெங்கிலும் தமிழகத்திலும், எம்.எல். அமைப்புகள் ஒரே மையம் (Single centre) எனும் அமைப்புமுறையை பின்பற்ற துவங்கியபோது, மக்கள் யுத்தம்(போல்ஷ்விக்) கட்சி இரு மையம்- ஒரு கவுன்சில் முறையை ஏன் பின்பற்றியது? தற்போது 'ஒரே மையம்' என்ற அமைப்பு முறைக்கு ஏன் மாறுகிறது? உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 'ஒரு மையம்' எனும் முறையை பின்பற்றினாலும் பெரும்பாலான கட்சிகள்  முதலாளித்துவ கட்சிகளாக மாறிவிட்ட சூழலில், "ஒரே மையம்- இரண்டு வேலைப் பிரிவினை" எனும் அமைப்பு வடிவத்தில் லெனினிய உள்ளடக்கத்தை பேணுவது எப்படி? என்பன போன்ற வினாக்களுக்கு இந்த ஆவணம் கோட்பாடு அடிப்படையில் பதில்களை முன்வைத்துள்ளது.

"அரசியலை ஆணையில் வை" என்ற மாவோவின் சொற்றொடரை வறட்டுத்தனமாக தலைமை முறைக்குப் பொருத்தி "அரசியல் குழுவை ஆணையில் வை" என்று திரித்து பொலிட் பீரோவிற்குத்தான் அனைத்து அதிகாரமும் உண்டு என்று பிதற்றும் டிராட்ஸ்கிய கலைப்புவாதிகளின் கருத்தும், "பொலிட் பீரோவிற்கு ஏகபோக அதிகாரம்" எனும் குருசேவிய திருத்தல்வாதிகளின் கருத்தும் ஒரே புள்ளியில் ஒன்றுபடுகின்றன.

எனவே, 

  1. மார்க்சிய- லெனினிய- மாவோ சிந்தனைகளின் உள்ளடக்கத்தை கைவிட்டு, வடிவத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதும்
  2. அரசியல் பணி, நடைமுறைப் பணி இரண்டும் சமமானவை; ஒன்று மேலானதோ, கீழானதோ இல்லை என்ற லெனினியத்தை கைவிடுவதும் 
  3. பொலிட் பீரோவிற்குத்தான் தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு என்பதும்
  4. நக்சல் அமைப்பின் அழித்தொழிப்புவழி தத்துவப் பணி -  நடைமுறைப் பணி இரண்டையும் புறக்கணிக்கிறது என்பதும்

அமைப்புத் துறையில் திருத்தல்வாதம் என்பதை இந்த ஆவணம் முன்வைத்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகளில் அமைப்புத் துறையில் தோன்றியுள்ள இடது- வலது போக்குகளை விலக்கி, சரியான மா-லெ தலைமை முறையை உருவாக்க இந்த ஆவணம் பயன்படும் என்பதால் இதை சமரன் வெளியிடுகிறது.

சமரன்

நூலினை பெற தொடர்பு கொள்ளவும்: 

90953 65292

சென்னை புத்தக காட்சியிலும் (அரங்கு எண் 535 - புது உலகம்) கிடைக்கிறது.