மார்க்சின் எழுத்துகள் சிறிய அறிமுகம்

அ.கா.ஈஸ்வரன்

மார்க்சின் எழுத்துகள் சிறிய அறிமுகம்

(பேராசான் காரல் மார்க்ஸ் நினைவுநாள் உரை-14-03-2026)

இன்று மார்க்ஸ் நினைவு நாள். மார்க்சின் பிறந்த நாளையும் மறைந்த நாளையும் நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு படுத்திக் கொள்கிறோம். மார்க்சின் சிலையையும் வடிக்கிறோம். இவைகள் எதற்காக, மார்க்சை வழிபாடு செய்வதற்காக அல்ல, மார்க்சை வழிகாட்டியாகக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கே ஆகும். மார்க்சியம் வழிபாட்டு பொருள் அல்ல, இன்றும் நமக்கு  வழிகாட்டும் சித்தாந்தமாக இருக்கிறது.

மார்க்சியம் இன்று செல்லுமா? அப்படியே இன்று பயன்படுத்த முடியுமா? என்கிற கேள்விகள் இன்றும் எழுப்பப்படுகிறது. மார்க்ஸ் பல கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார், அதில் முதன்மையானது என்றால், வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரி மதிப்பு என்று இரண்டை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.

வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்பதே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. இன்றும் இது பொருந்துகிறது. சமூகம் வர்க்கமாகப்  பிளவுபட்டு இருக்கும் வரை இது  பொருந்தக்கூடியதாகவே இருக்கும். உபரி மதிப்பு என்பது முதலாளித்து உற்பத்தி முறையில் காணப்படும் சுரண்டலை வெளிப்படுத்துகிறது. இன்றும் தொழிலாளியைச் சுரண்டுவது மார்க்ஸ் குறிப்பிடுகிற உபரி மதிப்பு மூலம்தான். மனித எந்திரம் அதாவது ரோபோட் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய கண்டுபிடிப்புகளை மார்க்சிய வழியில் புரிந்து கொள்வதற்கு மார்க்சிய அரசியல் பொருளாதாரம் இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

முன்பு எடுத்த முடிவுகள் இன்றைய புதிய சூழ்நிலைக்குப் பொருந்தாது போகலாம் ஆனால் வழிகாட்டுதலைத் தருகிற மார்க்சிய அடிப்படைகள் இன்றும் பொருந்துகிறது. அன்று அவர்களுக்கு எது வழிகாட்டியதோ, அது இன்றும் நமக்கு வழிகாட்டுகிறது. அதுதான் மார்க்சிய அடிப்படை.

புதுப்புதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வை மார்க்சியம் நம் கையில் கொடுத்திடவில்லை, அந்தத் தீர்வை நோக்கிப் பயணப்படுவதற்கான அணுகுமுறையைத் தந்துள்ளது. அதன் வழியில் தீர்வைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை ஆகும். அதற்கு மார்க்சிய அடிப்படைகளை நாம் அறிந்திருக்க வேண்டும்.

மார்க்சின் நினைவு நாளான இன்று நாம் மார்க்சிய அடிப்படைகளை விளக்கின்ற, மார்க்சின் முதன்மையான சில நூல்களைப் பார்ப்போம். 

தத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக, "இயற்கைத் தத்துவத்தில் டெமாக்கிரிட்டிசுக்கும் எபிகூரசுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்" என்கிற தலைப்பில் தமது ஆய்வை  மார்க்ஸ் 1841ஆம் ஆண்டு சமர்ப்பிக்கிறார். இந்த ஆய்வை எழுதும் போது மார்க்ஸ் இன்னும் முழுமையாகக் கருத்துமுதல்வாதச் சிந்தனையிலிருந்து வெளியே வரவில்லை. ஆனால் ஹெகலின் கருத்துமுதல்வாதத்திலிருந்து விலகி, நாத்திகக் கருத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். இந்த முனைவர் பட்ட ஆய்வில் அவர் மதத்தையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து எழுதியுள்ளார்.

"ரைனிஷ் பத்திரிகை" பத்திரிகையின் ஆசிரியராக மார்க்ஸ் இருந்த போது, அறநெறி என்பதைத் தத்துவத்தின் உட்பிரிவாக மட்டுமே பார்த்தார். அதாவது அறநெறி என்பது தத்துவத்துக்கு மட்டும் உரியதாகப் பார்த்தார். காட்டு விறகுகள் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப்படுவதையும், நிலச் சொத்துடைமை துண்டுதுண்டாகப் பிரிக்கப்படுவதையும் பற்றி பத்திரிகையில் எழுத வேண்டியநிலை ஏற்பட்டது. அப்போது மார்க்ஸ், பொருள்சார்ந்த நலன் என்பதைப் பற்றிய புரிதலின் அவசியத்தை உணர்ந்தார்.

சட்ட உறவுகள், அரசியல் வடிவங்கள், மனித அறிவு போன்றவற்றின் வளர்ச்சிப்போக்குக்குப் பொருளாதார நிலைமைகளே அடிப்படை என்பதை மார்க்ஸ் கண்டு கொண்டார். இந்தக் காலத்தில்தான் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் அதை மாற்றவும் தத்துவப் புரிதல் மட்டும் போதாது; அரசியல் பொருளாதாரத்தை அறிவதும் அவசியம் என்பதை மார்க்ஸ் உணர்ந்தார். அதுமுதல் அரசியல் பொருளாதாரத்தின் மீது அதிகக் கவனம் செலுத்தினார். 

அரசியல் பொருளாதாரப் புரிதலோடு, ஹெகலின் தத்துவத்தை மறுபரிசீலனைக்கு மார்க்ஸ் உட்படுத்தினார். ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய கருத்துகளை மார்க்ஸ் 1843ஆம் ஆண்டு மீண்டும் படிக்கிறார், அதன் மீதான விமர்சனத்தை நூலாக எழுதுகிறார், அந்த நூலுக்கு ஒரு முன்னுரையை 1844ஆம் ஆண்டு எழுதி முடிக்கிறார். இந்த நூலில் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில் இருந்து முழுமையாக விடுபட்டுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை மார்க்ஸ் அடைந்துள்ளதை அறிந்த கொள்ள முடிகிறது. இந்த முன்னுரையில் தான் மதத்தைப் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டமான மதம் மக்களின் அபினியாக உள்ளது என்பதைக் கூறியுள்ளார்.

இந்த மார்க்சின் கருத்தைப் பலர் திருத்திக் கூறுகின்றனர், அதில் கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்பவர்களே அதிகம். 

வர்க்கமாகப் பிரிந்துள்ள சமூகத்தில், மனிதன் மதத்திடம் கற்பிதமான உதவியைத் தேடுவதாகவும், தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணமாக இருக்கிறதோ அதே போல மதமும் மனிதனுக்குத் தற்காலிகமான நிவாரணம் அளிப்பதாகவும் திருத்தல்வாதிகள் மார்க்சின் கூற்றைத் திரிக்கின்றனர்.

கட்சிக்குக் கலைப்புவாதிகள் எப்படித் தடையாக உள்ளார்களோ, அதே போல மார்க்சிய அடிப்படை புரிதலுக்குத் திருத்தல்வாதிகள் தடையாக உள்ளனர்.  இவைகளைக் கடந்து தான் கம்யூனிஸ்டுகளாகிய நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. மதத்தை மார்க்ஸ் அபின் என்று கூறியதற்கு அடுத்துக் கூறுவதைத் திருத்தல்வாதிகள் மறைத்து விடுகின்றனர்.

மக்கள் உண்மையான மகிழ்ச்சியை அடைய வேண்டுமெனில், அவர்களுக்கு மாயையான மகிழ்ச்சியைத் தரும் மதத்தை நீக்க வேண்டும். மக்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகள் பற்றி கொண்டுள்ள தவறான நம்பிக்கைகளை விட்டுவிட வேண்டும் என்று கூறுவது, அந்தத் தவறான நம்பிக்கைகள் உருவாகும் சமூக நிலைமைகளையும் மாற்ற வேண்டும் என்பதையே குறிக்கிறது. எனவே மதத்தை விமர்சிப்பது, மனிதர்களின் துயரமான வாழ்க்கை நிலைமைகளை விமர்சிப்பதற்குச் சமம் என்கிறார் மார்க்ஸ்.

மார்க்சோ, எங்கெல்சோ , லெனினோ மதத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் திசை விலக்கும் தன்மையினையும் மக்களுக்குத் தவறான போதையாகவும் இருக்கிறது என்பதே கம்யூனிஸ்டுகளின் மதம் பற்றிய அடிப்படைக் கருத்தாக இருக்கிறது.

இந்த முன்னுரையில் மேலும் பல கருத்துகளை மார்க்ஸ் நமக்குத் தருகிறார்.

ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய விமர்சனம் சாராம்சத்தில் நிறைவடைந்துவிட்டது. மதத்தைப் பற்றிய விமர்சனம் அனைத்தும் பற்றிய விமர்சனத்தின் முன்நிபந்தனையாக உள்ளது என்கிறார்.

மதக் கருத்துகள் மக்களிடைய அதிகம் தாக்கம் பெற்றுள்ள நமது நாட்டில் மதத்தின் மீதான விமர்சனம் செய்ய வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. ஆனால் போதுமான அளவுக்கு நாம் செய்யவில்லை. நம் நாட்டில் உள்ள அனைத்து மதங்களின் மீதான மார்க்சிய வழிப்பட்ட விமர்சனத்தை வைக்க வேண்டும். இது நம்முன் இருக்கும் மிக முக்கியமான கடமையாக இருக்கிறது.

மனிதனே மதத்தை உண்டாக்குகிறான், மதம் மனிதனை உண்டாக்குவதில்லை என்கிறார் மார்க்ஸ்.

தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்துவத்திடம் காண்கிறது என்கிறார். இது ஒரு மிகமிக முக்கியமான கருத்தாகும். மார்க்சியத் தத்துவம் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்நிலையில் இருந்தே தோன்றுகிறது என்பதையும், அந்த மார்க்சியத் தத்துவமே பாட்டாளி வர்க்கத்துக்கு அறிவார்ந்த ஆயுதமாக இருக்கிறது என்பதையும் இந்த முன்னுரை நமக்குப் போதிக்கிறது.

1844ஆம் ஆண்டு, ஆடம் ஸ்மித், ரிக்காடோ ஆகிய அரசியல் பொருளாதார அறிஞர்களின் நூல்களையும் ஹெகல், ஃபாயர்பாக் என்கிற தத்துவ அறிஞர்களின் நூல்களையும் மார்க்ஸ் படிக்கிறார். அதனை விமர்சித்துக் குறிப்பெடுக்கிறார், அந்தக் குறிப்பேடு, “1844ஆம் ஆண்டு பொருளாதார-தத்துவ கையெழுத்துப்படி” என்கிற பெயரில் மார்க்ஸ் மறைந்த பிறகு நூலாக வெளிவருகிறது. மார்க்சியத்தின் படிநிலை வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு இந்த நூலைப் படிக்க வேண்டும். அதுமட்டுமில்லாது மார்க்சின் அந்நியமாதல் என்கிற கருத்தாக்கம் இந்த நூலில்தான் பேசப்படுகிறது.

நான்கு அந்நியமாதலைப் பற்றி இந்த நூலில் மார்க்ஸ் விளக்குகிறார்.

1) உற்பத்தியிலிருந்து அந்நியப்படுத்தல்

2) உழைப்புச் செயலிலிருந்து அந்நியப்படுத்தல்

3) மனித இயல்பிலிருந்து அந்நியப்படுத்தல்

4) மற்ற மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தல்

தொடக்கக் காலத்தில், குறிப்பாக அரசியல் பொருளாதாரம் பற்றிய ஆய்வை முடிக்காத காலத்தில் மார்க்ஸ் அந்நியமாதலைப் பற்றி பேசியுள்ளார். இது ஒரு தவறான கோட்பாடு கிடையாது. ஆனால் இதற்கான தீர்வு அந்நியமாதலைக் கொண்டு வைக்கும் போது அறநெறியை நாடி செல்ல வேண்டியிருக்கிறது. இது பிற்கால மார்க்சின் கண்ணோட்டமான அரசியல் பொருளாதாரத்துக்கு எதிராக உள்ளது.

இந்த நூலில் காணப்படும் கண்ணோட்டத்தை இளம் மார்க்சின் கண்ணோட்டம் என்று கூறப்படுகிறது. பலர் இந்த இளம் மார்க்சுடன்  நின்றுவிட்டு, அரசியல் பொருளாதாரத் தீர்வை புறக்கணிக்கின்றனர். இந்த இளம் மார்க்சின் அந்நியமாதல் கருத்தை முன்வைத்து மனிதநேய மார்க்சியம் பேசுகின்றனர். வர்க்கச் சமூகத்தில் மனிதநேயத்தால் எந்தத் தீர்வையும் கொடுக்க முடியாது, என்பதைப் புரிந்து கொண்டுதான் மார்க்ஸ் “மூலதனம்” நூலில் அரசியல் பொருளாதார அடிப்படையில் தீர்வை வைத்துள்ளார். 

அந்நியமாதல் என்கிற கோட்பாடு தவறானது கிடையாது, ஆனால் அதைக் கொண்டு வைக்கும் தீர்வு அறநெறிப்பட்டதாகவும் கற்பனாவாதமாகவும் இருக்கிறது. மார்க்ஸ் பிற்காலத்தில், அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படையில் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு எதிரான தீர்வை வைக்கிறார். இதுவே சமூக அறிவியல் முறையில் வைக்கப்படும் மார்க்சியத் தீர்வு. முதிய மார்க்சைப் புறக்கணித்து இளம் மார்க்சைப் பிடித்துக் கொண்டு அந்நியமாதலை முன்வைத்து வைக்கின்ற தீர்வு, கற்பனாவாதமாகவே இருக்கிறது. திருத்தல்வாதிகள் இளம் மார்க்சைப் பிடித்துக் கொண்டு கற்பனையில் மிதக்கின்றனர், இவர்களை, நாம் அரசியல் பொருளாதார ஆய்வை முடித்த முதிய மார்க்சின் கருத்தின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும்.

1845ஆம் ஆண்டு ”ஜெர்மன் சித்தாந்தம்” என்கிற நூலை மார்க்ஸ், எங்கெல்சுடன்  சேர்ந்து எழுதுகிறார். ஹெகலை ஒட்டிய செவ்வியல் ஜெர்மன் கருத்துமுதல்வாதத் தத்துவத்துடன் கணக்குத் தீர்ப்பதற்கு எழுதியதே ஜெர்மன் சித்தாந்தம்”. அப்படிக் கணக்கு தீர்க்கும் போது, மார்க்சியத் தத்துவத்தை மார்க்சும் எங்கெல்சும் விரிவுபடுத்தினர். 

ஜெர்மன் கருத்துமுதல்வாதத் தத்துவத்தை விமர்சித்தல், சமூக வளர்ச்சியைப் பொருளாதார அடிப்படையில் விளக்குதல்,  வரலாற்று பொருள்முதல்வாதத்தின் அடிப்படை கருத்தை முன்வைத்தல் என்பதே இந்த நூலில் காணும் அடிப்படைக் கருத்தாகும்.

மனிதச் சமூகத்தின் வளர்ச்சியைக் கருத்துகள் தீர்மானிப்பதில்லை; பொருளாதார வாழ்க்கை மற்றும் உற்பத்தி முறைகள்தான் சமூகத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன என்று மார்க்ஸ் இதில் கூறுகிறார்.

இந்த “ஜெர்மன் சித்தாந்தம்” என்கிற நூலுக்கு முன்பே மார்க்ஸ் ஃபாயர்பாக் பற்றிய பதினொன்று குறிப்பை எழுதி வைத்திருந்தார். இந்தக் குறிப்புகள் மார்க்ஸ் காலத்தில் பதிப்பிக்கவில்லை, ஏன் யார் கண்ணில் படாமலேயே இருந்தது. மார்க்சின் மறைவுக்குப் பிறகு எங்கெல்ஸ், மார்க்கின் பழைய கையெழுத்துப்படிகளில் கண்டுபிடித்தார், “லுத்விக் ஃபாயர்பாக்கும்  செவ்வியல் ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்கிற தமது நூலுக்குப் பிற்சேர்க்கையாக ”ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்” என்ற தலைப்பில் அதை இணைத்தார். 

இந்தக் குறிப்புகள், விரிவாக எழுதுவதற்காக மார்க்சால் எழுதப்பட்டதாகும். இதனை அப்படியே படித்தால் தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும் என்று எங்கெல்ஸ் சில திருத்தங்களைச் செய்து வெளியிட்டார். இருந்தாலும் திருத்தல்வாதிகள் இந்த மார்க்சின் குறிப்புகளை வைத்தே திருத்தங்களை இன்றும் செய்துவருகின்றனர். ”ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்” என்பதை நாம் சரியாகப் புரிந்து  கொள்ள வேண்டும்  என்றால்,  “ஜெர்மன் சித்தாந்தம்”, “லுத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்கிற நூலைப் படிக்க வேண்டும். இந்த இரு நூல்களின் அடிப்படையில் மார்க்சின் குறிப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டு திருத்தல்வாதிகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

இந்தக் குறிப்புகளில்தான் மார்க்சின் புகழ்பெற்ற கருத்து இடம் பெற்றுள்ளது. "தத்துவவாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் விளக்கப்படுத்தி  (interpreted) உள்ளனர், ஆனால், விஷயம் என்னவோ அதை மாற்றி (change) அமைப்பதாகும்."

சமூகம் தற்போது இருப்பதை விளக்கப்படுத்திக் கொண்டிருக்காமல், தத்துவமானது இருக்கின்ற நிலைமையின் காரணத்தை அறிந்து மாற்ற வேண்டும் என்கிறார் மார்க்ஸ். மார்க்சின் எழுத்துகள் அனைத்தும் சமூகத்தை மாற்றுவதற்கான தத்துவத்தையும் அரசியல் பொருளாதாரத்தையும் அரசியலையும் நமக்கு வழங்கியுள்ளது. அதனால் தான் இன்றும் மார்க்சின் எழுத்துகள் படிக்கப்படுகிறது.

1847ஆம் ஆண்டில் மார்க்ஸ், “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலை எழுதினார். இந்த நூலில், குட்டி முதலாளித்துவச் சிந்தனையாளரான புரூதோனை விமர்சிக்கிறார். புரூதோன், முதலாளித்துவப் பொருளாதாரச் சிந்தனையின் தாக்கத்தில் இருந்தார். முதலாளித்துவம் முற்றிலும் அழிந்து போகாது; எனவே தொழிலாளர்கள் அதை எதிர்த்துப் போராடுவதால் எந்தப் பயனும் இல்லை என்ற கருத்தைக் கொண்டவராகப் புரூதோன் இருந்தார். அதனால் முதலாளித்துவத்தில் உள்ள கெட்ட அம்சங்களை நீக்கி, நல்ல அம்சங்களை மட்டும் காக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இந்தக் கருத்தை மார்க்ஸ் இந்த நூலில் கடுமையாக விமர்சிக்கிறார்.

“தத்துவத்தின் வறுமை” என்கிற நூல் வெளிவருகிற வரை மார்க்ஸ் ஒரு சிறந்த தத்துவவாதியாகக் காணப்பட்டார். இந்த நூலுக்குப் பிறகு, அவர் ஒரு சிறந்த பொருளாதார அறிஞரும் ஆவார் என்பதை உலகம் அறிந்து கொண்டது.

இதே ஆண்டில் (1847) பெல்ஜியத்தில் வாழ்ந்துவந்த ஜெர்மன் தொழிலாளர்களுக்கு “கூலியுழைப்பும் மூலதனமும்” என்கிற தலைப்பில் மார்க்ஸ் உரை நிகழ்த்தினார். இந்த உரையே பின்பு நூலாக வெளிவந்தது.

இந்த நூல் மிகமிகச் சிறியது என்றாலும் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில் உள்ள பலவற்றை விளக்குகிறது. இதில் காணும் தலைப்பே இதனை வெளிப்படுத்திவிடுகிறது.

1. கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

2. ஒரு சரக்கின் விலை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது?

3. கூலி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது?

4. மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும்

5. கூலியுழைப்புக்கும்  மூலதனத்துக்குமுள்ள உறவு

6. கூலி, இலாபம் இவற்றின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும் பொது விதி

7. மூலதனம், கூலியுழைப்பு இவற்றின் நலன்கள் நேரெதிரானவை -உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி கூலியின்மீது ஏற்படுத்தும் விளைவுகள்

8. முதலாளித்துவ வர்க்கம், நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம் இவற்றின்மீது முதலாளித்துவப் போட்டியின் விளைவு

இந்தத் தலைப்புகளைப் பார்க்கும் போதே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய  அரசியல் பொருளாதாரக் கருத்துகளைப் பற்றியே இந்த நூல் பேசுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை அறிவதற்கு இந்த நூலில் இருந்தான் தொடங்க வேண்டும். அந்த வகையில் இந்த நூல் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த நூலை மறுபதிப்பு செய்யும் போது எங்கெல்ஸ் ஒரு முன்னுரையை எழுதியிருப்பார், அதனை முதலில் படிக்க வேண்டும். எங்கெல்ஸ் எழுதிய முன்னுரை இந்த நூலைப் படிப்பதற்கு வழிகாட்டியாக இருக்கிறது.

1849ஆம் ஆண்டில், மார்க்ஸ் எங்கெல்சுடன் சேர்ந்து “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்கிற உலகப் புகழ்பெற்ற ஆவணத்தை எழுதினார். ஒர் ஆவணம் எதைச் சாதிக்கும் என்பதற்குச் சான்றாக இந்த ஆவணம் இருக்கிறது.

இந்த நூலை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும், முதல் வாசிப்பில் இந்த ஆவணத்தின் முழுப் பொருளையும் புரிந்து கொள்ள முடியும் என்று கூறிடமுடியாது. இருந்தாலும் நாம் அடைந்துள்ள அரசியல் தெளிவுக்கு ஏற்பப் புரிதல் கிடைக்கும். அதனால் இந்த ஆவணத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டும். நமது புரிதல் வளரும் அளவுக்கு அறிக்கை பல புதிய போதனையை நமக்குத் தரும்.

இந்த ஆவணம் நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. 1. முதலாளிகளும் பாட்டாளிகளும், 2. பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும், 3. சோஷலிச இலக்கியமும் கம்யூனிச இலக்கியமும், 4. தற்போதுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் குறித்துக் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு.

முதலாளித்துவ உற்பத்தி முறையினைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலாளிகளைப் பற்றியும் பாட்டாளிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கு இந்த முதல் அத்தியாயம் உதவிடுகிறது.

பாட்டாளிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன உறவு என்பதை அறிந்து கொள்வதற்குப் பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் என்கிற இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்க வேண்டும்.

கம்யூனிச இலக்கியத்துக்கு மாறான  சோஷலிசக் கருத்துகள் பற்றி மூன்றாம் அத்தியாயம் பேசுகிறது.

நான்காவது அத்தியாயம் அன்றைய எதிர்க்கட்சிகள் குறித்துக் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன என்பதைப் பேசுகிறது.



கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த ஆவணத்தின் இரண்டாம் அத்தியாயமான பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் என்பதை ஆழ்ந்து படிக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் வெறும் கட்சியின் ஆதரவாளர்கள் அல்ல, அவர்களுக்கு என்று கடமை இருப்பதை இந்த அத்தியாயத்தைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1850ஆம் ஆண்டு "பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை" என்கிற நூலை எழுதினார். 1848ஆம் ஆண்டு ஐரோப்பாவில் பல நாடுகளில் புரட்சி ஏற்பட்டன. பிரான்சில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டுக் குடியரசு அறிவிக்கப்படுகிறது. இந்தப் புரட்சியை மார்க்ஸ் வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடாக இந்த நூலில் விளக்குகிறார். இது ஒரு முதலாளித்துவப் புரட்சிதான், இதனை மார்க்ஸ் விரிவாக ஆய்வு செய்து இந்த நூலில் எழுதியுள்ளார்.

1859ஆம்ஆண்டில், மார்க்ஸ், தமது அரசியல் பொருளாதாரக் குறிப்புகளில் இருந்து, ஒரு நூலை வெளியிட்டார், “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்பதே அந்த நூலின் தலைப்பு. “மூலதனம்” என்கிற நூலைப் படிப்பதற்கு முன்பு இந்த நூலைப் படிக்க வேண்டும். இந்த நூலுக்கு எழுதிய முன்னுரையில்தான் மார்க்ஸ், தாம் பின்பற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றி சுருக்கமாக வரையறை கொடுத்துள்ளார். அடித்தளம் மேற்கட்டமைப்பு  என்கிற கோட்பாட்டு விளக்கமும் இந்த முன்னுரையில் இடம் பெற்றுள்ளது. இந்த முன்னுரையை ஆவணம் போல் கருதிக் கம்யூனிஸ்டுகள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். 

“மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டப்பூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

… ….

எந்தச் சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்திச் சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள், பழைய சமூகத்தின் சுற்று வட்டத்துக்குள்  தாம் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனிதக் குலம் தன்னால் சாதிக்கக்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாத படி விதித்துக் கொள்கிறது.”

முன்னுரையை மட்டுமல்ல, இந்த நூலையும் படிக்க வேண்டும். “மூலதனம்” நூலில் கூறப்படாத கருத்துகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

மார்க்சியத் தத்துவத்தைப் பல நூல்களிலும் கட்டுரைகளிலும் தேடித்தேடி படிக்க வேண்டும். ஆனால் அரசியல் பொருளாதாரத்தைக் குறிப்பிட்ட நூல்களின் மூலம் படித்திட முடியும். அப்படிப் படிக்க வேண்டிய நூல்களில் ஒன்று “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு”

1865ஆம் ஆண்டு மார்க்ஸ் “கூலி விலை லாபம்” என்கிற நூலை எழுதினார். இந்த நூலும் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்வதற்கு உதவிடும் நூலாகும்.

கூலி உயர்வுப் போராட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்கிற கருத்து அன்று பலரிடம் இருந்தது, அதனை மறுத்து மார்க்சியப் பொருளாதார அடிப்படையில் மார்க்ஸ் இந்த நூலில் விளக்கம் கொடுக்கிறார். மேலும், உழைப்பு சக்தியைப் பற்றியும் உழைப்பின் மதிப்பைப் பற்றியும் உபரி மதிப்பு படைப்பது பற்றியும் உபரி மதிப்பு எவ்வாறு சுரண்டலாளர்களிடையே பகிரப்படுகிறது என்பது பற்றியும் இறுதியாக மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே உள்ள போராட்டமும் அதன் விளைவும் பற்றி எழுதியுள்ளார். 

வர்க்கப் போராட்டம் என்பது அன்றைய சமூகத்தின் பொருளாதார நிலைமையின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நூல்களைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

இது மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய சிறு நூல் என்றாலும் இதனை அனைத்துக் கம்யூனிஸ்டுகளும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இந்த நூலில்தான் மார்க்ஸ் முதன் முறையாக உபரி மதிப்பு என்கிற கோட்பாட்டைப் பெயரிட்டு அழைத்து விளக்கியிருக்கிறார். 

1867ஆம் ஆண்டு “மூலதனம்” நூலின் முதல் தொகுதியினை மார்க்ஸ் வெளியிட்டார். இரண்டாம் (1885), மூன்றாம் (1894) தொகுதிகள் மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு எங்கெல்ஸ் வெளியிடுகிறார்.

“மூலதனம்” நூலில் மார்க்ஸ் முதலாளித்து உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறார். மேலும் சரக்கு எப்படி உருவாகின்றன, தொழிலாளியின் உழைப்பு எவ்வாறு மதிப்பைப் படைக்கிறது. அந்த மதிப்பில் இருந்தே முதலாளி லாபத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாடே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் ஆகிறது என்பதையும், இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு என்பது சோஷலிச உற்பத்தி முறைக்கு மாறுவதே ஆகும் என்பதையும், இதனை எத்தகைய புரட்சியின் மூலம் நிகழ்த்த வேண்டும் என்பதையும் பற்றி, மார்க்ஸ் இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

மூலதனம் நூலின் நான்காம் பகுதியாக “உபரி மதிப்பு கோட்பாடு” என்கிற நூல் இடம் பெறுகிறது.

இந்த நூலில் மார்க்ஸ் செவ்வியல் அரசியல் பொருளாதார அறிஞர்களான ஆடம் ஸ்மித், ரிக்காடோ போன்றோர்களின் பொருளாதாரக் கருத்தின் மீதான விமர்சனத்தை வைக்கிறார். தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தின் மதிப்பைவிட அதிகமான மதிப்பைப் படைக்கின்றனர். அதில் இருந்தே முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

முந்தைய பொருளாதாரச் சிந்தனைகளை மார்க்ஸ் ஆய்வு செய்து, அவற்றின் குறைகளைச் சுட்டிக்காட்டி, இறுதியில் தமது உபரி மதிப்பு கோட்பாட்டை இதில் விளக்கியுள்ளார்.

மூலதனம் நூலின் நான்காம் பகுதி என்று அழைக்கப்படுகிற “உபரி மதிப்பு கோட்பாடு” என்கிற நூலைப் படித்துவிட்டு மூலதனத்தின் மூன்று தொகுதிகளையும் படிக்க வேண்டும். ஆனால் இதனை அனைவராலும் படித்திட முடியாது, மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே படித்திட முடியும். அவ்வாறு படித்தவர்கள் மற்றவர்களுக்குச் சுருக்கமாகப் புரிய வைக்க வேண்டும். இணைய வழியாகவோ நேரடியாகவோ பல வகுப்புகள் இதைப் பற்றி எடுக்க வேண்டும். கடினமான  நூல்களை அனைவராலும் படித்திட முடியாது, அதனால் அந்த நூலின் சாரத்தைச் சுருக்கித் தர வேண்டும்.

ஆங்கிலத்தில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய நூல்கள் என்று 50 தொகுதிகள் இருக்கின்றன. அனைத்தையும் ஆய்வாளர்கள் படிப்பார்கள், அனைவரும் படித்திட  வேண்டும் என்று கூறிட முடியாது. ஆனால் மார்க்சின் முக்கியமான நூல்களைக் கண்டிப்பாகக் கம்யூனிஸ்டுகள்  படிக்க வேண்டும், படிப்பதற்குக் கடினமாக உள்ள நூல்களைக் கட்சியில் உள்ள தலைவர்கள் மற்றும் தோழர்கள் வகுப்பாக எடுக்க வேண்டும்.  ஆனால் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” போன்ற நூல்களைப் படிக்காமல் நாம் சிறந்த கம்யூனிஸ்டாகச் செயல்பட முடியாது.

“பாரிசில் உள்நாட்டு போர்” என்கிற நூலை மார்க்ஸ் 1871ஆம் ஆண்டு எழுதினார். 1871 ஆம் ஆண்டு பிரான்சில் புரட்சியின் மூலம் உருவானது பாரிஸ் கம்யூன்.  இது உலக வரலாற்றில் முதலாவது தொழிலாளர் அரசாகும். இந்த அரசு 72 நாட்கள் தான் நிலைபெற்றது. ஆனால் அதன் அனுபவம் தொழிலாளர்களுக்குப் பெரும் படிப்பினையைத் தந்தது. பாரிஸ் கம்யூன் அனுபவத்தின் மூலம் மார்க்ஸ் தமது கோட்பாட்டை வலுப்படுத்தினார். அதனை நூலாக எழுதினார், அந்த நூலின் பெயர் “பாரிசில் உள்நாட்டு போர்.” தோல்வியும் கம்யூனிஸ்டுகளுக்குப் பாடம் கற்பிக்கும் என்பதை இந்த நூல் நமக்குச் செல்கிறது.

1875ஆம் ஆண்டு ஜெர்மனியில் இரண்டு கட்சிகள் இணையும் போது கோத்தா வேலைத்திட்டம் வகுக்கப்பட்டது, அதன் மீதான விமர்சனத்தை மார்க்ஸ் எழுதினார். இந்த விமர்சனத்தை மார்க்ஸ் “கோத்தா வேலைத்திட்டத்தின் மீதான விமர்சனம்” என்ற பெயரில் எழுதி வெளியிட்டார். இந்தச் சிறு நூலின் மூலம் மார்க்ஸ் ஒவ்வொன்றையும் எவ்வளவுத் துல்லியமாகப் பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. முதலாளித்துவத்தை வீழ்த்திய பிறகு கம்யூனிசச் சமூகம், முதல் கட்டம் உயர் கட்டம் என இரண்டு கட்டங்களாகச் செயல்படும் என்பதை, இந்த நூலில்தான் முதன்முறையாகக் குறிப்பிடுகிறார். முதல் கட்டத்தில் தொழிலாளியின் அரசு, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

மார்க்சின் இது போன்ற நூல்களைப் படித்து, மார்க்சியத்தை அறிவியல் முறைப்படியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சியம் கற்பனையாகக் கம்யூனிசச்  சமூகத்தைப் பற்றி கூறவில்லை, முதலாளித்துவச் சமூகத்தை வீழ்த்திக் கம்யூனிசச் சமூகம் எப்படி வரும் என்பதைச் சமூக அறிவியல் முறைப்படி விளக்கியுள்ளது. கம்யூனிசச் சமூகம் என்பது நம்பிக்கைவாதம்  அல்ல, அது சமூக வளர்ச்சியின் விதிப்படி, சமூக அறிவியல்படி கூறப்படுகிறது. ஆனால் அது தானாக வருவதில்லை, கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிடலிலும் உழைக்கும் மக்களின் வர்க்க உணர்விலும் அடங்கியிருக்கிறது.

மார்க்ஸ் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார், அனைத்தையும் நாம் படித்திட முடியாது, ஆனால் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் எது என்பதைத் தெரிந்து கொண்டு, அதனைப் படிக்க வேண்டும். மார்க்சின் நூல்களை மறுபதிப்பு செய்யும் போது எங்கெல்ஸ் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அந்த முன்னுரையில் அந்த நூல் என்ன பேசுகிறது, எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை எழுதியிருப்பார். எங்கெல்சின் முன்னுரை மார்க்சின் நூலைப் படிப்பதற்கு வழிகாட்டியாக இருக்கிறது.

செந்தளம் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன், ஆசான்களின் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகளில் ஒரு பேச்சாளரை ஆசான்களின் ஒரு நூலைப் பற்றி பேசு வைக்க வேண்டும். மற்ற பேச்சாளர்கள் தற்போதைய அரசியலைப் பற்றியும் மற்றதைப் பற்றியும் பேசலாம். ஒரு பேச்சாளர் மார்க்சிய அடிப்படைகளை வெளிப்படுத்தும் நூலைப் பற்றி பேச வைக்க வேண்டும்.

இன்று நாம் மார்க்ஸ் எழுதிய மிகமிக முக்கியமான நூல்களின் அறிமுகத்தை மட்டுமே பார்த்தோம், ஆனால் ஒரு குறிப்பிட்ட நூலின் சாரத்தைப் பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.

மார்க்சிய அடிப்படைகளை மார்க்சிடம் இருந்து கற்போம், கம்யூனிசச் சமூகத்தைப் படைப்போம் என்று கூறி விடைபெறுகிறேன்.



அ.கா.ஈஸ்வரன்


Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு