தமிழ்நாட்டில் இளைஞர்கள் எழுச்சி !

தெய்வசுந்தரம் நயினார்

தமிழ்நாட்டில் இளைஞர்கள் எழுச்சி !

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுபற்றிப் பல்வேறு ''கணிப்புகள்'' வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, தற்போதைய ஆளும்கட்சியான திமுக ஆட்சியை மீண்டும் ''கைப்பற்றும்''. இரண்டு, முன்னாள் ஆளும்கட்சியான அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும்.  மூன்றாவது விஜயின் தவெக பெரும்பான்மை பெறும்.

அடுத்து உள்ள ஒரு முக்கியமான கட்சி சீமான் தலைமையிலான நாம் தமிழ் கட்சி. இக்கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதில் அனைத்துக் கணிப்புகளும் ஒன்றுபோல் இருக்கின்றன. 

இங்குத்தான் வேடிக்கை ! முதல் மூன்று கட்சிகளுக்கும் ஆட்சியைக் கைப்பற்றுவதே முதன்மையான, ஒரே நோக்கம்! எனவே அதற்காக 'வாக்குறுதிகளை' போட்டிபோட்டுக்கொண்டு அள்ளிவீசியுள்ளன. அரசியல் பொருளாதாரம், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை போன்றவையெல்லாம் இவற்றிற்கு ஒரு பிரச்சினையே இல்லை! 'இலவசங்களை' போட்டி போட்டுக்கொண்டு அறிவித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றின் 'இந்து பாசிச' 'மோடி பாசிச' எதிர்ப்புகள் எல்லாம் 'உதட்டளவே' ஆகும்! 

சீமான் அவர்களுக்குத் தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என்பதில் ''உறுதியான'' நம்பிக்கை! எனவே வெற்றிபற்றிக் கவலைப்படத் தேவை இல்லை! 'தேர்தல் அரசியலுக்கு' ஏற்ற 'கொள்கைகளை' அவர் முன்வைக்கவில்லை! எனவே 'இலவச வாக்குறுதி' எதையும் அளிக்கவில்லை. மாறாக, அவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால், அவர் தான் முன்வைக்கிற 'கொள்கைகளை' நிறைவேற்றுவதற்குத் தேவையான கட்சி அமைப்பைக் கட்டவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. விஜய் அரசியலுக்கு வரும்வரை, தமிழ்த்தேசிய இன உணர்வுள்ள இளைஞர்கள் சீமானுக்கு ஆதரவாக நின்றார்கள். இவர்கள் சிறுபான்மையினர்தான்! 

ஆனால் விஜய் அரசியலுக்கு வந்தபிறகு . . .  இளைஞர்கள் பெரும்பான்மையினர் (திமுக, அதிமுக கட்சிகளைச் சாராத இளைஞர்கள்) நிபந்தனையின்றி விஜய்க்கு ஆதரவாக 'தேர்தல் அரசியலில்' பங்கேற்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் திமுக, அதிமுக கட்சிகளுக்கு எதிராகத் தேர்தல் அரசியலில் நிற்கிறார்கள்! அரசியல் பொருளாதாரம், தமிழ்த்தேசியம் போன்றவற்றைப்பற்றியெல்லாம் இவர்கள் சிந்திப்பதாகவோ பேசுவதாகவோ தெரியவில்லை! இவர்களின் ஒரே நோக்கம் . . .  விஜயை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதே ஆகும். 

இவர்களிடம் நாம் பார்க்கக்கூடிய ஒரு முக்கிய  அம்சம் . . .  இன்றைய, நேற்றைய ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சியில் அமரக்கூடாது என்பதே ஆகும். இதற்குக் காரணம் . . .  திமுக, அதிமுக கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள் இல்லை! மாறாக, விஜயை அரியணையில் அமர்த்தவேண்டும் என்னும் விருப்பம்மட்டுமே ஆகும். இருப்பினும் கடந்த 50 ஆண்டுகால தேசிய, மாநில ஆட்சியாளர்களின் ஆட்சிமீது ஒருவகை அதிருப்தி உள்ளது. இது வரவேற்கத்தக்கதே. ஆனால் ஏன் எதிர்க்கிறோம் என்பதில் தெளிவு இல்லை என்பது வேதனைக்கு உரியது.  மேலும் எந்தவிதமான அரசியல் பொருளாதாரத் தெளிவும் இல்லாத . . .  விஜய் இறுதியில் ஆளும் சுரண்டும் வர்க்கங்களின் ஒரு பிரதிநிதியே என்பதில் எனக்கு ஐயம் இல்லை! மேலும் விஜயின் 'வளர்ச்சி' இளைஞர்களைச் சரியான அரசியல் பாதையிலிருந்து திசைதிருப்பவே உதவும்! நீண்டகால அடிப்படையில் பார்த்தால், இது உண்மையான  . . . தேவையான சமூக எழுச்சிக்குத் தடையாகவே அமையும்! 

சீமான் அவர்கள் தனது பேச்சில் மக்கள் நலன்சார்ந்த சில பிரச்சினைகளை முன்வைத்தாலும், இன்றைய நேற்றைய ஆட்சியாளர்களின் சுயநலன்களை விமர்சித்தாலும்,  தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தினாலும் . . . இன்றைய அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து நின்று போராடும் ஒரு உறுதியான கட்சி அமைப்பைக் கட்டவில்லை. கட்டப்போவதாகவும் தெரியவில்லை. 1975-இல் இந்தியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட  அவசரநிலை போன்ற சூழல்களிலும் எதிர்த்து நின்று செயல்படும் அமைப்பாக நீடிப்பது கடினமே. சதீஷ்கர் போன்ற இடங்களில் பழங்குடி மக்கள் தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று போராடுகிறார்களே, அதுபோன்று போராடவோ முடியாது.  

இவ்வளவையும் நான் கூறுவதற்கு ஒரே காரணம் . . .  இன்றைய அரசியல் பொருளாதார சூழல் ஒருவகை எதிர்ப்புணர்ச்சியை இளஞர்கள்மத்தியில் உருவாக்கியிருந்தாலும் . . .  தன்னெழுச்சியாக இருந்தாலும் . . . அந்த எழுச்சி தொடர்ந்து சரியான வகையான அரசியல் போராட்டத்திற்கு இளைஞர்களை இட்டுச் செல்லும் வகையில் இல்லை. ஆனால் இதனால் இந்த இளைஞர்களைக் குறை சொல்ல நான் வரவில்லை. மாறாக, இந்த இளைஞர் எழுச்சியைச் சரியாக வழிநடத்தக்கூடிய ஒரு இயக்கம் . . .  அமைப்பு . . .  கட்சி இன்று முழுமையாக உருவாகவில்லையே என்ற ஒரு கவலை அல்லது வேதனைதான்! அப்படிப்பட்ட ஒரு இயக்கம் சரியாக இன்று கட்டப்பட்டிருந்தால், நிலைமையே இன்று வேறுமாதிரி இருந்திருக்கும்! 

இருப்பினும் சமுதாய இயக்கம் விரைவில் அப்படிப்பட்ட ஒரு இயக்கம். . . அமைப்பு கட்டப்படுவதற்கான வளர்ச்சியை - புறநிலைத் தேவையை -  எட்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.  'நூறு பூக்கள் பூக்கட்டும், நூறு சிந்தனைகள் மோதட்டும்'!

தெய்வசுந்தரம் நயினார்

https://www.facebook.com/share/p/19eacihEZr/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு