டீசல் தட்டுப்பாடு உலகம் முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது
நியூயார்க் டைம்ஸ்
வெப்பநிலை 104 டிகிரியாக உயர்ந்த நிலையில், நூற்றுக்கணக்கான கிராமவாசிகளின் கூட்ட நெரிசலில் அவர் மூன்று நாட்களாக எரிபொருள் நிலையத்தில் காத்திருந்தார். மக்கள் வரிசையை மீற முயன்றதால் மோதல்கள் வெடித்தன, இதைக் கட்டுப்படுத்த லத்திகளுடன் காவல்துறையினர் வந்தனர். டீசல் வாங்குவதற்கான ஒரு வாய்ப்பிற்காக துலால் ஹொசைன் இதையெல்லாம் சகித்துக்கொண்டார். தனது வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமான நெற்பயிர்களைப் பற்றிய கவலைகள் அவரை வாட்டியெடுத்தன. ஒரு வழியாக அவர் தனது மிதிவண்டியின் கைப்பிடியில் தொங்கவிடப்பட்ட ஒரு கேனில் கொண்டு வந்த டீசல், நிலத்தடி நீரைக் கொண்டு அவரது வயல்களுக்குப் பாய்ச்சும் இறைப்பானுக்கு (pump) எரிபொருளாகப் பயன்படும். அந்த இறைப்பான் காலியாக இருந்தது.
அது மார்ச் மாதத்தின் பிற்பகுதி, மேற்கு வங்கதேசத்தில் வறண்ட காலம், மேலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு இச்சம்பவம் நடந்தது. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், உலகம் முழுவதும் எரிசக்தி விலைகள் உயர்ந்தன. தெற்காசியாவில் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது, இதனால் பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனது. 68 வயதான திரு. ஹொசைன், தனது இறைப்பானுக்கான எரிபொருளைச் சுமந்துகொண்டு எரிபொருள் நிலையத்திற்கும் தனது வயல்களுக்கும் இடையே ஆறு வாரங்களாக மிதிவண்டியில் அலைந்தார். நோய்வாய்ப்பட்ட குழந்தையைக் கவனிக்கும் பெற்றோரைப் போல அவர் தனது நெற்பயிர்களைப் பார்த்துப் பார்த்து கவனித்தார். அவற்றின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கின; தண்டுகள் வெடித்த மண்ணை நோக்கிச் சரிந்தன.
அவரால் அந்தப் பேரழிவைத் தடுக்க முடியவில்லை. கடந்த மாதம் அவர் நெல் அறுவடை செய்தபோது, வழக்கமான அளவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே அவருக்குக் கிடைத்தது. அது அவரது குடும்பத்திற்கு உணவளிக்க போதுமானதாக இருந்தது, ஆனால் விற்பனை செய்வதற்கு அவரிடம் எதுவும் மிஞ்சவில்லை. பணத்தட்டுப்பாடு காரணமாக, அவர் இறைச்சி மற்றும் மீன் உணவுகளைக் குறைத்துக் கொண்டார். காய்கறிகளைப் பயிரிடுவதற்கான விதைகளை வாங்குவதற்கு அவர் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். “நான் பின்னோக்கிச் செல்கிறேன்,” என்று அவர் கூறினார். மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் உலகளவில் எரிசக்தி விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதால், மில்லியன் கணக்கான விவசாயிகள் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதிக விலையினால் அவதிப்படுகின்றனர்; இது அவர்களின் பாசன வசதியைத் தடுப்பதோடு உணவு விநியோகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. அறுவடை குறைந்த நிலையில், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல கிராமப்புறக் குடும்பங்கள் சாகுபடிச் செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கி வருகின்றன, இது எதிர்காலத்தில் அவர்கள் பயிர் செய்யும் திறனைச் சவாலுக்கு உள்ளாக்குகிறது.
https://www.nytimes.com/2026/07/23/business/bangladesh-farmers-diesel-water-iran.html
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு